குறிப்புகள்----
மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் பல மாநிலங்களிலும் பள்ளிகளிலும் பள்ளிப் படிப்பை முடித்து திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் இயற்பியல் பட்டம் பெற்றவர். 1995 ஆம் வருடத்திலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள ஜெயந்தி சங்கர் 1990 முதல் சிங்கப்பூரில் பொறியாளரான கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ருசியுண்டு. ஓர் எழுத்தாளராகத் தான் உருவாக முக்கிய காரணம் தனது தொடர்ந்த வாசிப்பும் அதற்கு உறுதுணையாக அமைந்த சிங்கப்பூரின் நூலகங்களுமே என்கிறார். எளிய எதார்த்த நடையில் எழுதும் இவர் சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நிறைய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் மற்றும் நாவல் போன்றவற்றை எழுதியுள்ள இவர் ஏராளமான பரிசுகள் வாங்கியுள்ளார். உலகளாவிய வாசகர்களைப் பெற்ற இவர் சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட இவரின் புனைவுகளுக்காக பரவலாக அறியப் பெறுபவர். 2006 வரை வெளியான இவரின் 8 நூல்கள் - 'நாலேகால் டாலர்', 'முடிவிலும் ஒன்று தொடரலாம்', 'ஏழாம் சுவை', 'பெருஞ்சுவருக்குப் பின்னே', 'பின் சீட்', 'வாழ்ந்து பார்க்கலாம் வா' மற்றும் 'நியாயங்கள் பொதுவானவை', 'சிங்கப்பூர் வாங்க'. இவரின் ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வையைத் திருப்பக் கூடியவை. 'தமிழ்க்கொடி 2006' என்ற ஆழி பதிப்பகத்தின் ஆண்டு மலர் போன்ற பல்வேறு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
வாசிப்பு
சிறுவயதில் இலக்கியச் சூழல் அமைவது பெரிய ஒரு வரம் என்று நினைக்கும் இவருக்கு சிறுவயதில் நூல்கள் படிக்கத் தூண்டும் ஊக்கங்கள் இருக்கவில்லை. இவருக்கு அதில் கொஞ்சம் வருத்தமுண்டு. பாடப்புத்தத்தோடு உறவாடியதுடன் முடிந்துவிட்டிருந்தது. ஆனால், பொறியாளரான தந்தையார் விகடனிலிருந்து பக்கங்களைக் கிழித்துத் தான் படிக்கச் சேகரித்த அகிலனின் 'சித்திரப்பாவை' மற்றும் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' போன்ற மிகச்சிலவற்றை மட்டும், அதுவும் மேம்போக்காக மிகச் சிறுவயதில் வாசித்திருக்கிறார். அதைப்பற்றி விவாதிக்கும் சூழல் இவருக்கு இருந்திருக்கவில்லை. கல்கி அவர்களின் சரித்திரப் படைப்புக்களை விட அவரது சமூகக் கதைகளையே அதிகம் விரும்புவார். தேவனின் நகைச்சுவை பிடிக்கும். தி.ஜானகிராமன் சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன், ஆதவன், அ.முத்துலிங்கம் போன்றவர்களின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். இவர்கள் தவிர வாஸந்தியின் ஆணாதிக்கத்தை அழகாகச் சொன்ன 'அம்மணி' பிடித்திருந்தது. ஜெயமோகனின் குறுநாவல்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் 'தாவரங்களின் உரையாடல்', சுராவின் 'ஆண்கள் பெண்கள் குழந்தைகள்', மற்றும் திஜாவின் மோகமுள்'/ செம்பருத்தி, அ.முத்துலிங்கத்தின் 'மகாராஜாவின் ரயில்வண்டி' போன்ற பல நூல்களை பலமுறை மீள்வாசிப்பு செய்வது இவர் வழக்கம்.
தொடக்கம்
சிங்கப்பூர் வந்தபுதிதில் (1990) கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தார். அப்போது தான் வகைவகையான எழுத்துக்கள் பரிச்சயமாகின. ஆனால், சின்னக் குழந்தையின் திணறல் இருந்து கொண்டேயிருந்தது. எல்லாமே பிடித்த மாதிரியும், எல்லாவற்றையும் பறூத்துவிட வேண்டும் என்ற தீவிர ஆர்வமும் எழுந்தது. சிங்கையின் நூலகங்கள் இவரின் வாசிப்புப் பசிக்கு நல்ல தீனி வழங்கின. 1990ல் ஆரம்பித்தது இவரின் எழுதும் முயற்சி. சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு. வை. திருநாவுக்கரசு அவர்கள் இவரின் முதல் சிறுகதையை வாரயிறுதியில் பிரசுரித்த பிறகு தொலைபேசியில் அழைத்து ஊக்கப் படுத்தியுள்ளார். தமிழ் முரசு, முன்பிருந்த சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர் போன்றவை எழுத்துச் சோதனைகளுக்கு நல்ல தளங்கள். திண்ணை, திசைகள் தவிர சாமாசார், இ-சங்கமம், தமிழோவியம், தட்ஸ் தமிழ், பதிவுகள் நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்களிலும் இவரின் சிறுகதைகள் /கட்டுரைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. உள்ளூர் அச்சிதழ்களில் தொடங்கி, இணையத்தில் தொடர்ந்து, ஜூன் 2004 முதல் தமிழகத்தின் பிரபல அச்சிதழ்களில் எழுத ஆரம்பித்துள்ளார். அது மட்டுமில்லாது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பல வாய்ப்புக்களை இவருக்கு நல்கியுள்ளது. 'முத்தமிழ் விழா'வில் பல போட்டிகளில் பங்கு பெற்றுப் பல பரிசுகளும் பெற்றிருந்தாலும், 2001ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை 'நொண்டி' இரண்டாம் பரிசு (S$ 750) பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே கதை 'நுடம்' என்று பெயர் மாற்றப்பட்டு 'சிங்கைச்சுடர்' மற்றும் மின் சஞ்சிகையான 'திண்ணை' போன்றவற்றில் பிரசுரம் கண்டது. இது மட்டுமல்லாது இக்கதையிலிருந்து சில பகுதிகள் அதே வருடம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் மாநாட்டில் திரு.மாலன் அவர்களால் படிக்கப்பட்டு சிலாகிக்கப் பட்டது. சிங்கப்பூரின் நூலகங்கள், தமிழ் முரசு, உள்ளூர் இதழ்களான சிங்கை எக்ஸ்பிரஸ் மற்றும் சிங்கைச்சுடர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தேசிய கலைகள் மன்றம் போன்ற அமைப்புக்கள், களங்கள் மற்றும் போட்டிகள் அமைத்துக் கொடுத்து இவரின் தொடக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன.
பரிசுகள்
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 1998ல் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 2000 ல் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசும் 2001ல் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற குறுநாவல் முதல் பரிசு (30gm தங்கம்) பெற்றது குறிப்பிடத்தக்கது. முத்தமிழ் விழா 2004 ல் ‘சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்’ மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் 'பொம்மை' கதை இரண்டாம் பரிசு பெற்றது. இதைத் தவிர 'தெளிவு', 'கீரை' போன்ற கதைகள் ஆரம்பத்தில் ஆறுதல் பரிசுகள் பெற்றதுடன் சிங்கை வானொலியில் ரே. சண்முகம் அவர்களால் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன. 'சேவை' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 யில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'மழலைச்சொல் கேளாதவர்' என்ற கதை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக தரவில் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுசிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா 2005) ஊக்கப்பரிசு. தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது 2005-கௌரவக் குறிப்பு- ‘ வேண்டியது வேறில்லை ‘ (குறுநாவல்). கோவை ஞானியின் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி 2005 - ‘கடைசிக் கடிதம்’ முதல் தகுதி. 'தமிழ் நேயம்' அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம். பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் நடத்தும் ''தமிழ் நேயம்' அமைப்பின் ஏற்பாட்டில் திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 2006ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் 'சொல்லாத சொல்' என்ற சிறுகதை முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற (அமைப்பின் ஒன்பதாவது) தொகுதியில் பிரசுரம். 2006 சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.
அச்சு இதழ்கள்
அமுதசுரபியின் ஜூன் 2004ல் வந்த 'உலகநாடுகளில் கல்வி' , செப்டம்பர் இதழில் 'ஆடை மொழி' ஆகிய கட்டுரைகளுக்கு ஆய்வு செய்ததும் கிடைத்த பின்னூட்டங்களும் மிகுந்த திருப்தியளித்தன. அமீர தமிழ்ச் சங்கம் ஆண்டு மலரில் (2004) 'புரட்சி'க் கவிஞர் என்ற கட்டுரை பிரசுரம் கண்டுள்ளது. திசைகள் August இதழில் பிரசுரமாகி, பின் Fetna 2004 நியூஜெர்ஸி ஆண்டிதழிலும் பிரசுரமான 'ஈரம்' என்ற சிறுகதை ஏராளமானோரின் மனதை நெருடியது தெரியவந்தது. நிறைய மின்மடல்களும் பின்னூட்டங்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிறைத்தன. டூந்தக் கதையைப் படித்தவர்களும், தமிழோவியம் மின்னிதழில் ஆகஸ்டு 2004 வெளியாகத் தொடங்கிய கட்டுரைத் தொடர் படித்தும் அச்சிதழாசிரியர்கள் கதை மற்றும் கட்டுரை கேட்டு இவரை அணுகினர். அக்டோபர் 2004 'உயிர்மை' இலக்கிய இதழில் வந்த 'ஆவிகள் புசிக்குமா?' என்ற கட்டுரை வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே தொலைபேசி மற்றும் மின்மடல்களின் வழி பல பின்னூட்டங்களைக் கொணர்ந்தது. 'தென்றல் முல்லை' வாஷிங்டன் (2004 -நான்காம்) காலாண்டிதழில் 'நுடம்' என்ற (மீண்டும் பிரசுரம் கண்டு) சிறுகதையும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இதே கதை ஸ்விஸ் நாட்டின் தமிழ் FM 'நிலா'வில் 25/26-09-05 அன்று 'இசையும் கதையும்' ல் ஒலிபரப்பானது. 2004 ஜூலையில் கல்கி தீபாவளி மலருக்கென்று கதை ஒன்றைக் கேட்டு கல்கி ஆசிரியர் எழுதியிருந்தார். மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் அடைந்து, உடனே 'நாலேகால் டாலர்' என்ற கதை எழுதியனுப்பி, 4-5 நாட்களில், 'மிகச் சிறப்பாக இருக்கிறது', என்று பதிலும் வந்தது. 2004 நவம்பர் 8 வெளியான தீபாவளி மலரில் இக்கதை பிரசுரமாகியுள்ளது. (பாரிஸ்)பெண்கள் சந்திப்பு 2005 மலரில் 'தையல்' (பெண்ணே நீ அக்டோபர் 05 மறுபிரசுரம்) என்ற கதையும், ந்யூயார்க்கின் 'த தமிழ் டைம்ஸ்' (the tamil times) டிசம்பர் 2004 இதழில் பெரானாகன் என்ற கட்டுரையும், அமுதசுரபி பிப்ரவரி 2005இதழில் 'பேஜர்' என்ற கதையும் ஜனவரி 2005 அமுதசுரபி இதழில் வெற்றித் திருமகள் பகுதிக்கு நேர்காணலும், உயிர்மை மார்ச் 2005 இதழில் 'ஹினா மட்சுரி' என்ற கட்டுரையும், 'தென்றல்' வட அமெரிக்க இதழில் (மார்ச் 2005) 'அம்மா பேசினாள்' என்ற கதையும், கல்கி 13-03-05 இதழில் 'பின் சீட்' என்ற கதையும் பிரசுரமானது. கனடாவின் 'குவியம்' இதழிலும் இவரின் சிறுகதை பிரசுரம் கண்டுள்ளது. ஜூன் 2005 'உயிர்மை' இதழில் 'கருணைக் கடவுள் குஆன்யின்' என்ற கட்டுரை பிரசுரமானது. 'சேவை' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 ல் பிரசுரத்துக்குத் தர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. 'அவள்' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2006 ல் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2006 கல்கி தீபாவளி மலரில் 'நான்கிலக்கம்' சிறுகதை பிரசுரம் கண்டது.
இதுவரை வெளியாகியுள்ள நூல்கள் (டிசம்பர் 2006) .
- நாலேகால் டாலர்- சிறுகதைத் தொகுப்பு
- முடிவிலும் ஒன்று தொடரலாம் - குறுநாவல் தொகுப்பு
- ஏழாம் சுவை - கட்டுரைத் தொகுப்பு
- சிங்கப்பூர் வாங்க - விகடன் பிரசுரம்
- பின் சீட் - சிறுகதைத் தொகுப்பு
- வாழ்ந்து பார்க்கலாம் வா - நாவல்
- பெருஞ்சுவருக்குப் பின்னே - (சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்)
- நியாயங்கள் பொதுவானவை - சிறுகதைத் தொகுப்பு
2006 சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று ( ஜூன்-ஆகஸ்ட்) மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
9 comments:
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
வீரமணி இளங்கோ
வணக்கம் ஜெயந்தி,
நீங்கள் FeTNA 2004 விழா மலரில் எழுதினீர்கள் இல்லையா? அந்த விழா மலரின் ஆசிரியர்க் குழுவில் நானும் இருந்தேன். உங்களுடைய 'ஈரம்' கதை எங்கள் மனதை மிகவும் நெகிழ்த்தியது. நீங்கள் ரொம்ப நன்றாக
எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
தாரா.
ஆகா!
'வல்லமை தாராயோ?'
நச்சுன்னு வெச்சிருக்கீங்க. மீசை நாயகன் படம்! ரொம்ப நல்லாயிருக்கு. இனிமேதான் எல்லாம் படிக்கணும். எழுதுங்க.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
எம்.கே.குமார்.
வாங்க வாங்க. ரொம்ப நாளா எதிர்பார்த்தேன், நல்ல நாள் இப்ப வந்திருக்கு.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
இர.அருள் குமரன்
Congrats jayanathi.
Keep writing
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
அன்புள்ள ஜெயந்தி சங்கர் அவர்கட்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
தமிழ்மொழியில் எனது கவிதைக்கான தங்களது பாராட்டுரைக்கு மிக்க நன்றி. உங்களுடைய ஆற்றொழுக்கான எழுத்தோட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. தற்போது நான் வலைப்பதிவில் எழுதுவதே இல்லை.
எனக்கும் ஒரு வலைப்பதிவு இருக்கிறது அவ்வளவே. தற்போது ஒரு மின்னிதழின் பொறுப்பாசிரியன் இழை:
www.pudhucherry.com
நீங்களும் அதில் எழுதவேண்டுமென விழைகிறேன்.
அன்புடன்
இராஜ.தியாகராஜன்.
நிச்சயமா நீங்க பெரிய எழுத்தாeர்தான்.
நான்கூட இப்போதான் எழுத ஆரம்பிச்சு 10 வரும் ஆகுது.
3 நூல்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உள்e சிவகங்கை மாவட்டத்தில் உள்e திருப்புத்தூர் என்ற ஊரில் சிகரம் என்கிற பெயரில் சிற்றிதழ் நடத்தி வருபவன் நான்.
தங்களின் எழுத்துக்கçe வரவேற்கிறேன்.
சிங்கப்பூரில் வெளிவரும் பத்திரிகையில் நானும் எழுத ஆவல் கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்குமா?
arumai. thodarattum ungkal pani
Post a Comment