Monday, December 20, 2004

வூ குங்க் ஸன் -- பாகம் - 1


டங்க்ஷெங்க் என்றொரு மாநிலம் உண்டு சீனாவில். அங்கு பூக்களும் பழங்களும் நிறைந்த ஒரு மலை. அதன் பெயர் அவோலை. முற்காலத்தில் அங்குதான் ஒரு மாயப்பாறை இருந்ததாக நம்பப்படுகிறது. இந்தப்பாறை கோடிக்கணக்கான ஆண்டுகளை இயற்கையின் பற்பல சீற்றங்களைக் கண்டுவந்தது. ஒருநாள், பாறை பிளந்து உடைந்து ஒரு கல் முட்டையை இட்டதாம். அதனின்று வந்தது ஒரு கல் குரங்கு.

பூக்களும் பழங்களும் நிறைந்த ஒரு மலையில் இருந்த மற்ற மந்திகளோடு சேர்ந்தது இந்தக்குரங்கு. ஒரு நாள் அவை விளையாடிக ்கொண்டிருந்தன. நீர்த்திரையால் மறைக்கப் பட்ட ஒரு குகைக்கு அருகே வந்தன. அந்த நீரைக்கடந்து குகைக்குள் போகத் துணிபவர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. அவ்வாறு போகும் குரங்கு அவர்களின் அரசனாவான் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்லப் பட்டது. மற்ற குரங்குகள் தயங்கி நிற்க கல்குரங்கு மட்டுமே குகையினுள் போகத் துணிந்தது.

குகைக்குள் கல்லினாலான பானை, சட்டி, படுக்கை, இருக்கை போன்றவை இருந்தன. குகையின் மத்தியில் பிரம்மாண்டமான கல்தூண் ஒன்று இருந்தது. அதில் 'நீர்த் திரையினால் மறைக்கப்பட்டிருக்கும் இந்தக்குகை சொர்க்கலோகத்திற்கு அழைத்துச ்செல்லும்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அந்தநாள் முதல் நாளெல்லாம் விளையாடி விட்டு இரவில் குகைக்குள் சென்று உறங்க ஆரம்பித்தன குரங்குகள். கல்குரங்கைத் தன் அரசனாக ஏற்கொண்டன மற்ற குரங்குகள். கல்குரங்கு தன்னை அப்போதிலிருந்து 'கல்' என்ற அடைமொழியை நீக்கிக்கிக் கொண்டு 'குரங்கரசன்' என்று கூறிக்கொண்டது.

ஒரு நாள் குரங்கரசன் கவலைகொண்டது. ஒருநாளைக்கு இறந்துவிடுவோமே, என்றென்றும் வாழ்க்கையின் இன்பங்களைத் துய்க்கமுடியாதே என்பதே அதன் அன்றைய கவலை. அருகிலிருந்த ஒரு குரங்கு," இவ்வுலகில் முனிவர்கள், புத்தர்கள் மற்றும் சிலரே என்றென்றும் உயிர் வாழ்வர்", என்றது. இதைக்கேட்டதுமே குரங்கரசனின் கவலை மறைந்தது. "நானும் 'சாகாவரம்' பெறுவேன். நாளைக்கே கிளம்புவேன்", என்றது.

அடுத்த நாளே குரங்கரசன் ஒரு கட்டுமரத்தில் ஏறி கடலைக் கடக்கத்துவங்கியது. பல வருடங்கள் கடந்தும்கூட குரங்கரசனால் 'சாகாவரம்' கிடைக்கும் வழியைக ்கண்டுபிடிக்கமுடியவில்லை. குரங்கரசன் ச்சன்பூ மாநிலத்தைக் கடந்து மேற்குக் கடலைக் கடந்தது. கடைசியாக மேற்கு நியூஹே மாநிலத்தின் எல்லையை அடைந்தது.

அந்த வட்டாரத்திலேயே பல வருடங்களைக் கடத்தியும்கூட சாகாவரம் பெற்ற ஒருவரையும் குரங்கரசனால் பார்க்கமுடியவில்லை. கொஞ்சமும் மனந்தளராமல் தொடர்ந்து பயணப்பட்டது. பிறகுதான், ஒருவரால் வழிகாட்டப்பட்டு உயரமான மலை ஒன்றை அடைந்தது. அடர்ந்த காட்டினுள் ஒரு குகையை அடைந்தது. அந்தக் குகையின் வெளிப்புறத்தில்,' சாய்ந்த நிலா மற்ரும் மூன்று நட்சத்திரங்கள் குகை' என்று எழுதப்பட்டிருந்தது.

குகை மூடப்பட்டிருந்தது. குரங்கரசன் காத்திருந்தது. கொஞ்சநேரம் கழித்து உள்ளேயிருந்து ஒரு குழந்தைத் தேவதை வெளியே வந்தது. "குகை வாயிலில் பௌத்தத்தைப் பின்பற்ற விழையும் ஒருவர் நிற்கிறார் என்றார் என் ஆசான், பூடி. அது நீங்கள்தானா?",என்று கேட்டது. குரங்கரசன் கொஞ்சமும் யோசிக்காமல், "ஆமாம், நாந்தான் அது", என்று சொன்னது.

குரங்கரசனை தேவதை ஆசாரியரிடன் அழைத்துச் சென்றது. ஆசாரியர் 'அநாதை' அன்று கூறிக்கொண்ட குரங்கரசனைப் பார்த்துப் பரிதாபம் கொண்டார். தந்தைவழிப் பெயர் ஏதும் அதற்கு இல்லாததால், அவரே குரங்கரசனுக்கு 'வூ குங்க் ஸன்' என்று பெயர் சூட்டினார்.

ஆசாரியர் வூ குங்க் ஸன் என்றழைக்கப்பட்ட குரங்கரசனையும் மற்ற சீடர்களைப ்போலவே தரையைக் கூட்டுவது, களை எடுப்பது, செடி,மரம் நடுவது, நீர் இரைப்பது போன்ற சில வேலைகள் செய்யச்சொன்னார். வூ குங்க் ஸன் மிகவும் கீழ்படிதலுடன்தான் நடந்துகொண்டது. இப்படியே ஏழு ஆண்டுகள் கழிந்தன.
தொடரும்,....

No comments: