Wednesday, November 30, 2005

கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)



மகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி 'சுபாஷிதம்' என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா. ஆகஸ்டு மாதத்திலேயே நூல் வந்து விட்டிருக்கிற விஷயம் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ செய்தியாக என்னை எட்டியது. அதைத் தொடர்ந்து 'உலக நாயகர்(ன்)' புரட்டிப் பார்த்துவிட்டு, நூலினால் ஈர்க்கப் பட்டு ஒரு பிரதியை போகிற போக்கில் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்ற நம்பத் தகுந்த நபர் கூறக் கேட்டேன். ஏற்கனவே நூலைப் படிக்க வேண்டும் என்றிருந்த ஆவல் இன்னும் மிகுந்தது.


ஒரு வாரத்திற்கு முன் தான் கைக்கு நூல் வந்து சேர்ந்தது. முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன். நல்ல மொழிப் புலமை மற்றும் விமரிசனப் பார்வையுடைய அறிஞர் இந்நூலுக்கு விமரிசனமாகவோ மதிப்புரையாகவோ எழுதுவது தான் பொருத்தம். இருப்பினும், ஒரு அறிமுகமாகவேனும் எழுதிவிட என் கை பரபரத்தது. எழுத முடிவெடுத்தேன். முடிவு சரி தானாவென்று ஐயம் மட்டும் ஓரத்தில்.


'சுபாஷிதம்' நூலின் முகப்பு அட்டை வடிவமைப்பு டிராட்ஸ்கி மருது. பொருத்தமாக கோயில் சிற்பங்களைப் பின்னணியில் கொடுத்து, நாட்டியப் பெண்ணின் ஒரு சிற்பத்தினை முன்னணியில் அமைத்து அமரிக்கையாகச் செய்துள்ளார். கெட்டி அட்டையில் வரத்தகுதி கொண்ட நூல் இது என்பதில் மறுகருத்து இருக்க வழியில்லை. இந்த அட்டையும் சோடையில்லை தான். பளபளப்போடு (glace) கவர்ச்சியாகவேயிருக்கிறது. காகிதம் வெள்ளை என்பது ஒன்றும் பெரிய குறையில்லை. இருப்பினும், தாள் மெலிதாக இருக்கிறது என்பதை மட்டும் வாசகர்கள் உணர்வார்கள்.


மதுமிதா நூலைத் தன் பாட்டனாரான சுதந்திர போராட்ட தியாகி காந்தி அரங்கசாமி ராஜா அவர்கட்கும் சமுதாயத் தத்துவச் சிந்தனையாளரான தந்தை ரகுபதி ராஜா அவர்கட்கும் அர்ப்பணித்துள்ளார்.


பாராட்டுரை கொடுத்திருப்பது ஜெயகாந்தன். ஒரு பக்கத்திற்கு அவரது கையெழுத்திலேயே தட்டச்சாமல் போட்டுவிட்டார்கள். சுருக்கமாக இல்லாமல், கொஞ்சம் ஆழமாக, அதாவது சில கவிதைகளைப் படித்துவிட்டு ஒரு அணிந்துரையாக எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. காரணம், ஓரளவிற்கேனும் வடமொழி பரிச்சயமானவர். மொழிபெயர்ப்பின் சிறப்பினை மட்டுமில்லாமல் வேறு ஏதேனும் குறையாகத் தோன்றியிருந்தாலும் ஓரளவிற்காவது சொல்லியிருக்கலாமே என்று படிப்பவருக்குத் தோன்றும்.மதுமிதாவின் 'நன்றியுரை'யைத் தொடர்ந்து பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களின் முன்னுரை. 'சுபாஷிதம்' குறித்த தகவல்கள் பலவற்றைக் கொடுத்து மதுமிதாவின் மொழியாக்கம் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து 'என்னுரை'யில் பர்த்ருஹரினால் எவ்வாறு கவரப்பட்டு மொழிபெயர்க்கும் செயலில் இறங்கினார் என்று சுருக்கமாகச் சொல்கிறார் மதுமிதா.


அடுத்த ஆறு பக்கங்களின் நூலாசிரியர் பர்த்ருஹரியின் வரலாறைக் கொடுத்திருப்பது பயனுள்ளது. ஏனெனில், மூல நூலின் ஆசிரியரைப்பற்றி எல்லா வாசர்களும் அறிந்திருக்க வழியில்லை. இப்பகுதியில் உள்ள கவிதை படிப்பவரை நிச்சயம் மிகவும் கவரும்.


நான் எப்பொழுதும்
யாரை என்னுடையவளென
நினைத்துக்கொண்டிருக்கிறேனோ
அவள் என்னை விரும்பவில்லை
அவள் அதிகமாக யாரை நேசிக்கிறாளோ
அவன்
வேறொரு பெண்ணை
விரும்புகிறான்
என்னிடம் மகிழ்ச்சி காண்கிறாள்
வேறொரு பெண்
இந்தப்பெண்ணையா
நான் விரும்பும் பெண்ணையா
அவள் விரும்பும் அவனையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்கு
யாரை
நொந்து நிந்திப்பது ... !


இந்தக் கவிதை ஒரு முழுப்புத்தகத்தின் ஒரு சோற்றுப் பதம்.


அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்று வள்ளுவர் மூன்றாகப் பிரித்ததைப்போல பர்த்ருஹரியும் 'நீதி சதகம்', 'சிருங்கார சதம்' மற்றும் 'வைராக்ய சதகம்' என்று மூன்று பகுதியில் வகைக்கு நூறு பாடியிருக்கிறார். ஒவ்வொன்றிலும் பத்து தலைப்புகள். தலைப்புக்கு பத்து பாட்டு. ஆக மொத்தம் முந்நூறு.


முதல் பகுதி நீதி சதகம். இக்கவிதைகளில் பெரும்பான்மையானவை நடைமுறை வாழ்க்கைக்கும் பொருந்தி வருவதாக உணர்ந்தேன்.பக்கம் 24ல் இருக்கும்

அறிவில்லாதவரை எளிதாக
சமாதானப்படுத்திவிடலாம்
நன்கு கற்றறிந்தவரை சுலபமாக
ஒத்துக் கொள்ளச் செய்யலாம்
அறைகுறையாகக் கற்று
ஆணவத்துடன் இருப்பவனை
பிரம்மனாலும்
மகிழ்விக்கமுடியாது


என்ற கவிதையைப் படிக்கும் போது, அரைகுறை விஷயத்துடன் இருக்கும் ஆணவக்கார்களை இதை விட அழகாகக் கணித்துச் சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது.


பிறந்த பிறப்பிற்குப் பெருமை சேர்க்கா விட்டால் பிறக்கவேண்டாம் என்றாரே வள்ளுவர் 'தோன்றிற்ப் புகழொடு தோன்றுக' என்று இதமாகச் சொல்லி. 'அ·தலின் தோன்றலின் தோன்றாமை நன்று' என்று நறுக்கென்று குட்டுவது நினைவுக்கு வருகிறது பக்கம் 46ல் உள்ள கவிதையைப்படிக்கும் போது.
ஒரு நாட்டின் தலைவன் செய்யவேண்டிய தலையாய கடமை சொல்லப்பட்டிருப்பதால் (பக்கம் 59), எக்காலத்திற்கும் பொருந்தும்.


ஆகா! ஒரு மேட்டுக்குடியைச் சேர்ந்த கவி எத்தனை அழகாக வேலையாளின் இடத்திலிருந்து யோசித்தெழுதியிருக்கிறார் என்றே வியக்க வைக்கிறது? (பக்கம் 69) அற்புதம்.


காவல்/சட்டம் போன்ற துறையினருக்கு வேண்டிய பண்பு வலியுறுத்தப் படுவதால் (பக்கம் 68) , இக்காலத்தும் மிகவும் பொருந்துகிறது. நல்லாருக்குள் உரைந்திருக்கும் நற்பண்புகளைச் சொல்லும் இக்கவிதை (பக்கம் 78/79) கச்சிதம் கருத்திலும் வடிவத்திலும்.சிறந்த மனிதர்களின் நட்பு குறித்துப் பேசும் கவிதையில் (பக்கம் 88) துருத்திக் கொண்டிராமல் பின்னிப் பிணைந்து கிடக்கும் உவமை எனக்குப் பிடித்தது. நட்பின் மேன்மையை இதைவிட அழகாகச் சொல்லிட முடியாது என்றே நினைக்கிறேன். பக்கம் 105ல் இந்தக் கவிதை சொல்லும் உவமை அருமை.இருப்பினும், அக் காலத்திலேயே BOUNCE ஆகக்கூடிய பந்துகளும் இருந்திருக்கின்றன (வா?!) என்ற செய்தி சுவாரஸ்யமாயிருக்கிறது.


அடுத்த சதகமான 'சிருங்கார சதகம்' அக் மார்க் காமத்துப்பால். மொழிபெயர்ப்பினை சிலாகிக்காமல் இருக்க முடியாது. சிருங்கார சதகத்தில் வரும் சில சொற்கள் மொழிபெயர்ப்பில் தவிர்க்க முடியாதது. கொடி பிடிப்பவர்கள் பர்த்ருஹரியை எதிர்த்துக் கொடி பிடிக்கலாம். ஆனால், பர்த்ருஹரி ஒரு பெண்ணில்லை என்ற காரணத்தால், தமிழினம் நிச்சயம் அவ்வாறு செய்யாது என்று நம்பலாம்.ஒரு கவிதை மட்டும் (பக்கம் 137) இங்கே உதாரணத்திற்கு,


தீபம் உண்டு
நெருப்பு உண்டு
சூரிய
சந்திர
நட்சத்திரங்கள் உள்ளன
ஆனால்
மான் விழியாள்
இல்லாது
இவ்வுலகத்தில்
இருள் சூழ்ந்துள்ளது



கடைசி சதகம் வைராக்ய சதகம். ஆசையைப் பழித்தல், விட இயலா விருப்பம், ஏழ்மையும் மானமும், கால மகிமை, இன்ப நுகர்வு, துறவியும் மன்னனும், மனதிற்கு அறிவுரை,உண்மை அறிதல், சிவ அர்ச்சனை, பற்றறுத்தல் என்ற பத்து பிரிவுகளில் வைராக்ய சதகம் வகைக்கு பத்து கவிதைகளைப் பெற்றுள்ளது.


'பற்றறுத்தல்' பகுதியில் (பக்கம் 317) உள்ள


பிரம்மாண்ட் உலகம்
குழப்பாது
யோகியை
சிறு மீனின் துள்ளலால்
கலங்காது கடல்


என்னும் கவிதையில் உள்ள எளிமையைப் பாருங்கள். மொழிபெயர்ப்புபோலவே தோன்றுவதில்லை. வியக்காமலிருக்க முடியவில்லை.'ஆசையைப் பழித்தல்' பகுதியில் இன்னொரு கவிதையைப் பாருங்கள் ( பக்கம் 233).

முகத்தில் சுருக்கங்கள்
நரைகண்ட தலைமுடி
நடுங்கும் உடல்
ஆசை மட்டும்
இன்னும் ஓயவில்லை.


கடைசி ஆறு பக்கங்களில் சில கவிதைகளுக்கு மட்டும் விளக்கம் கொடுத்துள்ளா நூலாசிரியர். இவை வாசகன் கவிதைகளை மேலும் சிறப்பாக ரசிக்க உதவும்.


முழுநூலையும் படித்து முடித்ததும், வடமொழியில் கவிதைகளைக் கொடுத்து தமிழில் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. இருமொழி அறிந்தவர்கள் மூலத்துடனான ஒத்திசை தனை உணரவும் ரசிக்கவும் முடியுமே.


சிற்சில தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பிழைகளே இல்லாத நூல் தமிழில் இல்லை என்பது அடிக்கடி பலர் சொல்லக் கேட்டிருந்தாலும், ஏனோ முடியும், செய்யவேண்டும் என்று மட்டும் எப்போதும்போலத் தோன்றியது. குறித்து வைத்து இரண்டாம் பதிப்பில் சரி செய்துவிடலாம். நிச்சயம் இத்தகைய நூல்கள் இரண்டாம் பதிப்பு வரும்; வரவும் வேண்டும்.


பன்மொழித்திறன் படைத்த மதுமிதா தொடர்ந்து இத்தகைய மொழிபெயர்ப்புக்களை செய்யவேண்டும்.


-----------------------------
'சுபாஷிதம்'
ஆசிரியர்: பர்த்ருஹரி
தமிழில் : மதுமிதா
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்

முகவரி: சந்தியா பதிப்பகம்
57 A, 53 வது தெரு,
அஷோக் நகர்
சென்னை - 83
தொ.பே- 24896979,55855704
------------------------------

------ஜெயந்தி சங்கர்

Saturday, July 09, 2005

கருணைக் கடவுள் குஆன்யின்

'

பௌத்தம்'தான் இந்தியநாடு உலகிற்களித்த மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டு வருகிறது. அவலோகிதேஸ்வராவின் (Avalokitesvara) பெண் வடிவமே கருணை தெய்வம் குஆன்யின் (Guanyin). மஹாவிஷ்ணு மோகினியாக வந்தகதை நினைவிற்கு வருகிறது இல்லையா!? ஆசியாவின் தாவோ (Tao) மற்றும் பௌத்த ஆலயங்களில் காணப்படும் அன்பும் இரக்கமும் உடைய குஆன்யின் சந்திர ஆண்டின் இரண்டாம் மாதத்தில் 19ஆம் நாள் அவதரித்தாள். சீன நாட்டில் மூன்று பெரும் சரிவுகளைக் கடந்து வந்துள்ளது பௌத்தம். ஆனால், எப்போதுமே கருணை தெய்வமான குஆன்யின் மட்டும் மறக்கபட்டதேயில்லை. குஆன்யின் மதம், நாடுகளின் எல்லை போன்றவற்றைக்கடந்து இறைமைபெற்ற கலாசாரச் சின்னமாகவே உருவெடுத்திருக்கிறாள். பல மதங்கள் மற்றும் கலாசாரத் தாக்கங்கள் பெண்மை வடிவம் கொண்ட கருணைத் தெய்வமான குஆன்யினின் உருவப் பரிணாமத்தில் இருந்திருக்கின்றன.

கிட்டத்தட்ட எல்லா சூத்திரங்களும் கருணை அன்னையின் புகழ் பாடினாலும் மஹாயன சூத்திரத்தின் முக்கிய பகுதியான சத்தர்ம புண்டரிக சூத்திரம் ஒரு தனி அத்தியாயம் முழுக்கவே குஆன்யினின் இயல்புகளைச் சொல்கிறது. ஒரு முறை சீன அரசன் ஒருவனுக்கு உடல் நலமில்லை. அப்போது அவனை இந்த அத்தியாயத்தை ஓதச்சொன்னார்கள். அவனின் உடல் உபாதை பறந்தோடிவிட்டது. அப்போதிலிருந்து இந்த அத்தியாயம் அவலோகிதஸ்வர சூத்திரா என்ற அந்தஸ்த்தைப் பெற்றுப் பலராலும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து போதிசத்வரும் சீனாவில் இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றார்.

பௌத்த சூத்திரங்கள் பல போதிசத்வர்களைப் பற்றிப் பேசினாலும் அவலோகிதேஸ்வரா (Avalokitesvara) தான் ஹினன்யாவைப் பின்பற்றுபவர்களாலும் மஹாயனபௌத்தர்களாலும் கலையார்வலர்களாலும் அதிகம் ஆராதிக்கப்படுகிறவர். புத்தரையும் மிஞ்சிவிடும் முக்கியத்துவம் பெற்றவர் இவரே. இந்தியாவில் அவலோகிதேஸ்வரர் இந்து தெய்வங்களின் இயல்புகளைக்கொண்டவராயிருந்தார். சீனாவிலோ ஆதி பௌத்தப் பெண் தெய்வங்களான தாரா மற்றும் ஹரிதி போன்றவர்களின் குணங்கள் மற்றும் தோற்றங்களிலிருந்து ஒருசில கூறுகளைக் கொண்டிருந்தார். இந்தியா, நேபாளம், சீனா மற்றும் திபெத் போன்ற நாடுகளில் அவலோகிதேஸ்வரருக்கு ஆங்காகே விதவிதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன.

பௌத்தப் புராணக்கதையின்படி, சம்சாரசாகரத்தில் தத்தளிக்கும் மானிடர்களைக் கடைத் தேற்றாது ஓயமாட்டேன் என்று அவலோகிதேஸ்வரா சபதமிட்டார். கடும் முயற்சிகளுக்குப் பின்னும் அவரால் முழுமையாக நிறைவேற்றமுடியாததால், அவர் தலை ஆயிரம் துண்டு களாக உடைந்தது. ஆனால், புத்தர் அவரது தலையை ஒட்டவைத்துவிட்டார். 11 தலைகள் எல்லாத்திசைகளிலும் பார்த்துக்கொண்டிருப்பதால், இவரால், எல்லா இடங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியும். கஷ்டப்படுபவர்களுக்கு உதவவும் முடியும்.

அவலோகிதேஸ்வரா பிரபலமானது கருணை மற்றும் ஞானம் மூலம். ஞானம் போதிசத்வரான அவலோகிதேஸ்வரரை மனித மனதுக்கு நெருக்கம் கொள்ளவைக்கிறது. கருணையின் மூலம் குஆன்யின் மனித உள்ளத்தில் குடிகொள்கிறாள். நமது அர்தநாரீஸ்வர உருவமாகவும் குஆன்யினை சிலர் காண்கிறார்கள், தாயும் தந்தையுமான சிவசக்தி வடிவம் போல! முதல் பார்வையில் பெண்ணைப்போன்ற உருவம் குஆன்யினுக்குக் கொடுக்கப் பட்டிருந்த போதிலும் குஆன்யின் ஆணுமில்லாது பெண்ணுமில்லாத உருவமேயாம். 'அன்னை' யாகத்தான் பெரும்பாலும் வழிபடுகிறார்கள். மணமான தம்பதியர் குழந்தைப்பேறு வேண்டுவதும் குஆன்யினிடம்.

'டாங்க்' முடியாட்சி வரிசையில் வந்த ராணி 'வூ ஜெதியான்' தான் இந்தக் கருணைதெய்வம் உருவாக அதிக பங்காற்றியிருக்கிறார். கிமு 479 ல் பக்தன் பெங்க் ஜுஜியாய் என்பவனைக் காப்பாற்றவே குஆன்யின் அவதரித்ததாக நம்பப்படுவதுமுண்டு. ஆனால், அதற்குமுன்பு மன்னர் வென் செங்க் என்பவரின் உடல் உபாதையைக் குறைக்க வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

குஆன்யினின் தொடக்கம் இந்து தெய்வமான ஹரிதி என்பதும் ஒரு நம்பிக்கை. சம்யுக்தவத்ஸ¤ என்னும் புராணக்கதையின்படி இந்தப்பெண் தெய்வம் அரசகுடும்பத்தின் குழந்தைகளைத் தின்றுவிடுவாள். மற்ற குழந்தைகளும் தொடர்ந்து மறைந்துபோகவே பெற்றோர்கள் பெரும் கவலையடந்து புத்தரை அணுகி, ஹரிதியை அடக்கவேண்டினர். அமைதியாகவிருந்த புத்தரோ, அடுத்தநாள் காலையில் 'பி¨க்ஷ'யை முடித்துக்கொண்டு ஹரிதியின் இருப்பிடம் சென்றார். அங்கு 500வதும் ஹரிதியின் ஆக அதிக பாசத்தைப் பெற்றவனுமான ப்ரியங்கராவைத் தன் பி¨க்ஷப்பாத்திரத்தில் மறைத்துக்கொண்டார். இதை யறியாத ஹரிதி எல்லா இடங்களிலும் மகனைத்தேடிவிட்டு புத்தரிடம் வந்து வணங்கி வேண்டினாள். அரசகுடும்பம் மற்றும் உலகின் எல்லாக் குழந்தைகளையும் காக்கும் தெய்வமாய் மாறிவிடும்படி உத்தரவிட்டு உறுதிமொழியும் வாங்கிக்கொண்ட பின்னரே புத்தர் அவளின் மகனைக்கொடுத்தார். ஆகவே, அன்றிலிருந்து அவலோகிதேஸ்வரரின் மறு அவதாரமான குஆன்யின் கர்பத்திலிருக்கும் குழந்தையைக்காக்கும் தெய்வமாகவும், பிறந்த குழந்தைகளைக் காக்கும் அன்னையாகவும் வணங்கப்படுகிறாள். ஆண் மகவை நாடும் பெற்றோர்/பெண்கள் அவலோகிதேஸ்வரரை வேண்டினால் நிச்சயம் மகன் பிறப்பான் என்கிறது தாமரை சூத்திரம்.

கிமு 2590 ல் ஓர் அரசன் இருந்தான். முற்பிறவியின் ஊழ்வினையின் பயனாக இவ்வரசனுக்கு ஒரு மகன் பிறக்கவில்லை. தன் மூன்று மகள்களின் வயிற்றுப்பேரன்களில் ஒருவனையே தன் வாரிசாக ஏற்க நினைத்து அவர்களுக்குத் திருமணமும் முடிக்க எண்ணினான். மியாஓ ஷான் என்ற கடைக்குட்டிப்பெண் பருவம் எய்தியவுடனேயே தான் ஒரு சன்யாசினி ஆகவே ஆசைப் படுவதாகவும், அதற்கு அனுமதியளிக்கும்படியும் வேண்டவே, மன்னனும் அப்போதைக்குச் சரியென்று சொல்லிவிட்டான். எப்படியும் மடத்தின் கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாயிருக்கும், மகள் மனம் மாறிவிடுவாள் என்று மிகவும் நம்பினான். பலவிதமான துன்பங்களைத் தானே மகளுக்கு ஏற்படுத்தியும் பார்த்தான். மடத்து பிக்குகளிடம் அவளுக்கு அதிக வேலை கொடுக்கும் படி சொன்னான். மற்ற எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க அவள் மட்டும் இரவெல்லாம் விழித்து வேலைசெய்தாள். ஒருமுறை அவள் தூக்கிக்கொண்டிருந்த கோவிலுக்குத் தீ மூட்டிக்கூடப் பார்த்தான். தீயைத்தன் கையாலேயே அணைத்துவிட்டாள் சிறுமி. மடத்திலிருந்து அவளை இழுத்து வந்து சிறை வைத்தான். ஆனால், அவனின் எண்ணம் மட்டும் ஈடேறவேயில்லை. மனதை மாற்றிக்கொள்ளவேயில்லை அவள். 'இத்தகைய கீழ்படிதலில்லாத மகள் எதிர்காலத்தலைமுறைக்கே ஒரு தீய உதாரணம். ஆகவே இவளைக் கொன்றுவிடுங்கள்', என்று மன்னன் ஆணையிட்டான்.

இந்தகட்டத்திலிருந்து தான் கதை பல்வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. தலையை வெட்ட வந்தவனின் மனம் இரக்கத்தால் இளகியது. அவனது கையிலிருந்து வெட்டரிவாள் ஆயிரம் துண்டுகளாக உடைந்து சிதறியது என்று கதை சொல்கிறார்கள். நரகவாசலை அவள் அடைந்ததுமே அங்கு எரிந்துகொண்டிருந்த தீ ஜ்வாலைகள் பட்டென்று அணைந்தன. பூக்கள் கொல்லென்று பூத்துக்குலுங்கின. எமன்(Yama) செய்வதறியாது வாய்பிளந்து நின்றான். தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடப்போகிறது என்று பயந்து அவளை உயிர்ப்பித்து பூலோகத்திற்குத் திருப்பியனுப்பினான். அவள் நறுமணம் கமழ்ந்த தாமரையில் ஏறி 'புடௌஷன்' என்னும் தீவையடந்தாள்.

புடௌஷன் என்னும் தீவு சேஜியாங்க் கரையோரத்தில் நிங்க்போவிற்கு அருகில் இருக்கிறது. இதுதான் குஆன்யினுக்கான புனிதத்தலம். இங்கு அன்னை குஆன்யின் ஒன்பது வருடங்கள் இருந்திருக்கிறாள். இத்தீவு இன்றும் ஏராளமான புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை ஈர்த்து வருகிறது. வாணவேடிக்கைகள் இசைக்கருவிகள் போன்றவற்றைக் கொண்டு அன்னையை மகிழ்வித்துக் கோலாகலமாக வழிபடுகிறார்கள். கி.பி 847ல் குஆன்யினுக்கு முதல் கோவில் இத்தீவில் கட்டப்பட்டது. 1702 ஆம் ஆண்டிற்குள் 400 கோவில்களையும், 3000 புத்துபிக்குகளையும் எண்ணிலடங்கா பக்தர்களையும் தீவில் காணமுடிந்தது. ஆனால், 1947லோ 140 மடங்களும் கோவில்களும் தான் இருக்கின்றன.

வேறு ஒரு கதையும் உண்டு. சிறுமி மியாஓ ஷானின் தலைதுண்டிக்கப்படும் நேரத்தில் பிரம்மாண்டமான உருக்கொண்ட புலியன்று சட்டென்று சிறுமியைத் தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த மலைக்குக் கொண்டு சென்றது. பிறகு மியாஓ ஷான் போதிசத்வரைக் கண்டு பின் தவத்தின் மூலம் தானே ஒரு போதிசத்வராகி நாட்டிற்குத்திரும்பினார். தாய் தந்தையரையும் காணச்சென்றார். தந்தை குருடாகியிருந்ததைப் பார்த்ததும், யாரோ அந்நியராகத் தன்னை உருமாற்றம் கொண்டு அவரிடம் சென்று,' உங்களின் ஒரு பிள்ளையின் கண்முழிகளை நீங்கள் விழுங்கிவிட்டல் உங்களுக்குக் கண்பார்வை கிடைக்கும்", என்று சொன்னார். ஆனால், அரசரின் பிள்ளைகளில் ஒருவர்கூட 'தியாகம்' செய்ய முன்வரவில்லை. பிற்காலத்தில் குஆன்யின் என்று போற்றப் படவிருந்த மியாஓ ஷான் தான் செயற்கையாக கண் முழிகளை உண்டாக்கித் தன் தந்தையை அவற்றை விழுங்கச் செய்து அவரின் கண்பார்வையை மீட்டுக்கொடுத்ததாக போகிறது கதை.

'டிராகன்' அரசன் குஆன்யினுக்கு உதவும் எண்ணத்தில் தன் மகனைப் பணிந்தான், பின் மகன் ஒரு மீனின் உருவெடுத்து மீனவனின் வலையில் சிக்கி சந்தையில் விற்கப்பட்டான், அவனின் 'முழி' இதற்குப் பயன்பட்டது என்றும் ஒரு புராணக்கதையுண்டு. மியாஓ ஷான் தன் பெற்றோரை பௌத்தத்தைதழுவப் பணித்தார். இவரே குஆன்யின் என்பது நம்பிக்கை. உலகில் துன்பங்கள் முழுவதும் அகலும் வரை மேலுலகிற்குத் தான் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டிருந்தார். இன்றும்கூட குஆன்யினை வணங்குபவர்கள் புலாலைத் தவிர்த்துச் சைவ உணவை மட்டுமே உட்கொள்வர்.

ஒரு நாள் தந்தை மிகவும் உடல்நலம் குன்றிப்போனார். அப்போது மகள் மியாஓ ஷான் தன் கையிலிருந்து சதையைவெட்டி எடுத்து மருந்து தயாரித்தாள். தந்தை உடல் நலம் பெற்று நன்றியுணர்ச்சியில், 'முழுமையான கரங்கள் மற்றும் கண்களோடு' (சீனமொழியில்) அவளின் சிலையை வடிக்கச் சொன்னான். சிற்பிகள் அதை 'பல தலைகள் மற்றும் கரங்களோடு' என்று தவறாகப்புரிந்துகொண்டு அப்படியே சிலை வடித்தனராம். பெரும்பாலும் குஆன்யினின் சிலை தனி மேடையில் சாக்யமுனியின் சிலைக்குப் பின்னால், வடவாசலை நோக்கியே வைக்கப் பட்டிருக்கும். தாவோ இனத்தவரும்கூட பௌத்தர்களின் முறையையே பின்பற்றுகின்றனர். ஆரம்பகாலங்களில் குஆன்யினின் சிலைகள் ஜேட் என்றறியப்படும் பச்சைப்பவளத்தினால்தான் செய்யப்பட்டன. கப்பலில் பயணிப்பவர்களைப் புயல் மற்றும் சூறாவளிபோன்ற இயற்கை இடர்களிலிருந்து குஆன்யின் காக்கிறாள் என்பது பரவலான நம்பிக்கை. குழந்தைகளைக் காப்பாற்றுபவள், தாய்மையை நல்குபவள், துன்பங்களைக் களைபவள் என்றெல்லாம் போற்றப்படும் குஆன்யின் இன்றும் வீடுகளை அலங்கரித்துவருகிறாள்.

சீனப்புராணங்களில் வேறு எந்தத் தெய்வத்திற்கும் குஆன்யின் அளவிற்கு விதவிதமான அவதார உருவங்களும் பரிமாணங்களும் இல்லை. பொதுவாகவே குஆன்யின், கையில் சிறுகலயத்தைச்சுமக்கும் வெள்ளை உடையணிந்த உயரமான, மெலிந்த, நளினமான பெண்ணுருவமாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால், சில சீன மற்றும் திபெத்திய வெண்கலச் சிலைகளில் முழு நிர்வாணமாகவும் காணப்படுகிறாள். எப்படியிருந்தாலும், அன்பும் கருணையும் ததும்பும் அன்னையின் திருவுருவம் அனைவரது உள்ளத்தையும் ஈர்க்கும். சிலவேளைகளில் யானையின் மீது வீற்றிருப்பாள். மீனின் மீது நின்றுகொண்டு, குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு அல்லது கூடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு என்று பலவித உருவத்தில் குஆன்யின் வணங்கப் படுகிறாள். துயருருவோரின் துன்பம் களைய ஆறு ,நான்கு, நாற்பது அல்லது ஆயிரம் கரங்களோடு, ஒரு முகம் அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக எட்டு முகம் என்று பல்வேறு வடிவங்கள் வழிபடுபவரின் மனதிற்கேற்ப கொடுக்கப்பட்டு வந்துள்ளன. கிட்டத்தட்ட சிங்கத்தை ஒத்திருக்கும் 'ஹௌ' என்றழைக்கப்படும் சீனப் புராண விலங்கின் மீது சவாரி செய்வதாயும் அன்னை காணப்படுகிறாள் சில இடங்களில். தாமரையிலிருந்து பிறந்தவள் எனும் பொருள்பட 'பத்மபாணி' என்றும் அழைக்கப்படும் குஆன்யின் பல இடங்களில் கையில் குழந்தையோடும் காணப்படுகிறாள். கிருஸ்தவர்களின் 'கன்னி மேரி' யோடும் சிலர் குஆன்யினை ஒப்பிடுகிறார்கள்.இரு புறங்களிலும் இரு துவாரபாலகர்கள் இருப்பர். வலப்புறத்தில் மேல் சட்டையணியாத 'ஷன்ட்சை' எனப்படும் வாலிபன் இருப்பான். இடப்புறம் பவ்யமாகத் தன் ஆடையினுள் தன் இரு கரங்களையும் மறைத்துக்கொண்டிருக்கும் அழகிய யுவதி நின்றிருப்பாள்.

பௌத்தத்தில் 'பெற்றோரிடம் அன்பு செலுத்துதல்' என்ற ஒரு சூத்திரமே உண்டு. புத்தர் சில போதனைகளைக்கூறும்போது தாயின் அன்பையும் கருணையையும் போற்றி அவளுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய் என்கிறார் மனிதனிடம். தந்தையின் விந்திலிருந்து ஆன்மாவையும் தாயின் கர்ப உதிரத்திலிருந்து உடலையும் அவன் பெறுகிறான். அவனது பிறப்பிற்குக் காரணம் அவனது 'கர்மா' வாக இருந்தாலும்கூட அவனது தொடக்கம் அவனது தாயும் தந்தையும் தான். தாய் குழந்தையைச் சுமக்கும் ஒன்பது மாதமும் பலப்பல இன்னல்களை அனுபவிக்கிறாள். பிரசவம் நல்லபடியாக நடக்கவே அவள் கவலைப்படுகிறாள். உணவின் மீதும் மற்றவற்றின் மீதும் அவளுக்குச் சாதாரணமாக இருக்கும் விருப்பு மறைகிறது. இடுப்பு எலும்புகள் பிரசவத்தின் போது நொருங்கிவிடுவதுபோல வலிக்கிறது. அவளின் கர்மாவைக்கரைக்க அவளுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாகவே கருதப்படுகிறது. பிள்ளை பிறந்ததுமே அளவிலா ஆனந்தம் அடைந்து அவன் பேசும்போதும் மகிழ்கிறாள். தான் பட்டினி கிடக்க நேர்ந்தாலும்கூட குழந்தைக்குத் தன் ரத்தத்தையே பாலாக ஊட்டுகிறாள்.

வடசீனாவை விட தென்சீனாவில் குஆன்யின் அதிகப் பிரபலம். சந்திரவருடத்தின் இரண்டாம், ஆறாம், ஒன்பதாம் மாதங்களின் 19வது நாளில் குஆன்யினை சிறப்பாக வழிபடுகிறார்கள். அந்நாட்களில் தான் அவளின் வெவ்வேறு அவதாரங்கள் நிகழ்ந்தன. இன்றும் மணமான மகள் ஓராண்டிற்குள் ஒரு மகனைப்பெற்றிராவிட்டால் அவளுக்குப் பிறந்த வீட்டுச் சீதனமாகச் சில பொருட்களை அனுப்பிவைக்கிறார்கள். சந்திர வருடத்தின் ஐந்தாம் நாளுக்கும் பதிநான்காம் நாளுக்கும் இடையில் ஒரு நல்லநாளில், ஒரு மண்பானை, அரிசியில் செய்த கேக், ஆரசுப்பழங்கள் மற்றும் வெள்ளைப்பூண்டு ஆகியவை அனுப்பப்படும். இவற்றோடு காகிதத்தினால் செய்யப்பட்ட விளக்கு (lantern) ஒன்றும் நிச்சயம் இருக்கும். அதில் குஆன்யினின் திருவுருவம் வரையப்பட்டிருக்கும். அதோடு அதன்மேல் சீனமொழியில் 'குஆன்யின் உனக்கு ஒரு மகனைத் தந்தருள்வாள்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருக்கும்.

பொதுவாகவே பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஆணாதிக்க சீன சமுதாயத்தில் குஆன்யினுக்குக் கிடைத்த அந்தஸ்து சீனர்களுக்கேகூட ஆச்சரியமளிக்கின்றது. சீனர்களுக்கேற்ற பெண் உருவம் இந்தியாவின் அவலோகிதேஸ்வரருக்குக் கொடுக்கப்பட்டது என்றும் சில சீனர்களால் நம்பப்படுகிறது. புத்தரின் வலக்கண்ணிலிருந்து வெள்ளையான ஒளியுருவில் உதித்தவள் இவள். குஆன்ஷியின் என்பதன் சுருக்கமே குஆன்யின். இதன் பொருள் - உலகின் குரலைக் கேட்பவள்/காண்பவள். இது அவலோகிதேஸ்வரா என்ற வட மொழிச் சொல்லிலிருந்த வந்ததாகவும் கருதப்படுகிறது. அவலோகிதஸ்வரா என்றால் 'கஷ்டப் படும் குரலைக்கேட்பவர்' என்று கொள்ளலாம்.


உயிர்மை - ஜூன் 2005

---ஜெயந்தி சங்கர்

Wednesday, June 08, 2005

Book MEME --- தொடரும் புத்தகச் சங்கிலி !

அமைப்பு விடுத்ததற்கு மிக்க நன்றி நிர்மலா.

என்னிடம் இருக்கும் புத்தகங்கள்

அதிகமில்லை. தமிழும் ஆங்கிலமும் சேர்ந்து 100+.
ஆனால், சிங்கை நூலகம் தான் அட்டகாசமாக வாரிவழங்குகிறதே, பிறகென்ன கவலை,..
ஏராளமாகப் படிக்கக் கிடைக்கிறது.

எதை எழுத எதை விட,..ம்,. சரி இந்தத் தருணத்தில் மனதில்/நினைவில் தோன்றியவற்றை மட்டும் கொடுக்கிறேனே,.

இந்த புத்தக ஆட்டம் அழகாவும் பயனுள்ளதாவும் இருக்கு இல்ல? ரொம்ப சுவாரசியமாகவும் இருக்கு.

படித்ததில் பிடித்த தமிழ்ப் புத்தகங்கள்

1) மோகமுள் - திஜா - நூலகம்
2) குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி - நூலகம்
3) புலிநகக்கொன்றை - ஏ.பி. கிருஷ்ணன் - வாங்கியது
4) செம்பருத்தி - தி.ஜா - வாங்கியது
5) காடு - ஜெயமோகன் - நூலகம்
6) சிலநேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் -நூலகம்
7) தண்ணீர் - அசோகமித்ரன் - நூலகம்
8)பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா - நூலகம்
9) முதல் ஆட்டம் -இரா.முருகன் -நூலகம்
10)தாவரங்களின் உரையாடல்கள் - எஸ்.ராமகிருஷ்ணன் -நூலகம்

படித்ததில் பிடித்த ஆங்கிலப் புத்தகங்கள்

1) If Tomorrow comes - ஸிட்னி
) God of small things- அருந்ததி ராய்
3) The Life of Pi - Yan Martel
4) The Client - John Grisham
5) Ladies Coupe - Anitha Nair

என்னைப் பாதித்த புத்தகங்கள்

1) ஏழாவது உலகம் - ஜெயமோகன்
2) மால்கம் எக்ஸ் - ரவிகுமார்
3) நாளை மற்றொரு நாளே - ஜி நாகராஜன்
4) அம்மா வந்தாள் - தி.ஜா
5) தோட்டியின் மகன் - ( தகழி ) தமிழில் சுந்தர ராமசாமி

படிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்

1) காகிதமலர்கள் - ஆதவன்
2) உபபாண்டவம்/துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
3) Da Vinci Code - Dan Brown
4) Opel of Deception - Eoin Colfer
5) Who moved my cheese

தற்சமயம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள்

1) எழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா
2) கருவறை வாசனை - கனிமொழி கருணாநிதி
3) A house for Mr. Biswas - V. S Naipaul


அண்ணா கண்ணன்
மதுரபாரதி
சந்திரவதனா
மானசாஜென்
எம்.கே.குமார்
பாலு மணிமாறன்

ஆகியோரை நான் இந்தப் புத்தக விளையாட்டுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

Monday, April 25, 2005

ஹினா- மட்சுரி


நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் 'கொலு' கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் 'ஹினா-நோ-செக்கு' அல்லது 'ஹினா-மட்சுரி' எனப்படும் ஜப்பானிய 'கொலு' கொண்டாடப் படுகிறது. ஹினா என்றால் பொம்மை, மட்சுரி என்றால் விழா . இதை 'சிறுமிகள் விழா' என்றும்கூடச் சொல்கிறார்கள். 'மோமோ-நோ-செக்கு' (Peach blossom's Festival) என்றும் அழைக்கப் படும் இந்த விழா பழம் சீனாவிலிருந்து வந்திருக்கிறது. உண்மையில் பீச் பூக்கள் மார்ச் மாதத்தொடக்கத்தில் முன்பெல்லாம் பூத்தன. ஆனால், இப்போதெல்லாம் பீச் பூக்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் பூக்கின்றன. அப்போது ஆரம்பித்த விழா இன்றும் மார்ச் மாதமே தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.1603-1867 கால கட்டத்தில் இது ஜப்பானுக்குப் பரவியது. 'காடா' (Kada) கோவில் தான் இந்த விழாவிற்கான கோவில். 'கொடோ நோ ஹி' என்னும் சிறுவர்கள் தினத்திற்கு ஜப்பானில் பொதுவிடுமுறை உண்டு. ஆனால், 'ஹினா மாட்சுரி' என்னும் சிறுமிகள் தினத்திற்கு பொதுவிடுமுறை கிடையாது.

பழங்காலத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என்று எல்லோருமே காகிதங்களை உபயோகித்து அவரவருக்குத் தோன்றிய பொம்மைகளைச் செய்தனர். அப்படிச்செய்யும்போது அவரவர் பொம்மைக்குள் அவரவரின் துரதிருஷ்டங்களையும் நோய்களையும் ஏற்றிவிடுவதாக நம்பப்பட்டுவந்தது. அந்த பொம்மைகளை பக்கத்தில் இருக்கும் ஆறுகளில் 'விசர்ஜனம்' செய்துவிடுவர். ஜப்பானின் கலை மற்றும் கலாசாரச்சேர்க்கையில் 'மோமோ-நோ-செக்கு' விழா உருவம் கொண்டது. படகுகளில் பொம்மைகளை ஏற்றி இன்றும் கடலை நோக்கிச் செலுத்தி சிறுமிகளின் துரதிருஷ்டம் மற்றும் திருஷ்டி போன்றவற்றைத் துரத்துகின்றனர். அவர்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வளர இந்தச் சடங்கு உதவும் என்பது நம்பிக்கை. மாலையில் அழகிய உடைகள் அணிந்த சிறுமிகள் விளக்குகள் (lanterns) ஏந்தி நடப்பதைப்பார்க்க அழகாய் இருக்கும். இன்றும் பெரியளவில் கொண்டாடப்படுகிறது. வேறு ஒரு நாட்டுப்புறக்கதையும் உண்டு. அதில் பொம்மை செய்பவன் மாடலாக இருந்துவந்த பெண்மீது காதல் கொள்கிறான். அதை நினைகூறவே விழா என்பதும் ஒரு நம்பிக்கை. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாகவும் அமைந்த இந்த விழாவில் விருந்துக்கும் கோலாகலத்திற்கும் குறைவேயில்லை. 'சூஷி' (Sushi) எனப்படும் வினீகர் சேர்க்கப்பட்டும் செய்யப்படும் மீன் மற்றும் சாதத்தினால் ஆன பண்டம்தான் வழக்கம்போல விழாவின் முக்கிய உணவு. இதுதவிர பலவித மதுவகைகளும் உண்டு.

சிறுமிகள் தங்களின் எதிர்கால மகிழ்ச்சிக்காக விழாவை வீட்டில் கொண்டாடி மகிழ்வர். 'ஹினா நிங்க்யோ' என்னும் பொம்மைகளை அலங்கரித்து 'கொலு' வைக்கிறார்கள். அன்றாடம் கூடத்தை அலங்கரிக்கும் பொம்மைகளில்லை இவை. தலைமுறை தலைமுறையாய் வீட்டின் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு, வழிவழியாக வரும் பொம்மைகள். சில நாட்கள் இருக்கும் இந்தக்கொலு முடிந்ததும், அழகாகவும் பாதுகாப்பாகவும் அவற்றிற்குரிய பெட்டிகளில் அடுத்த வருடம் வரை வைத்துவிடுவர். ஒவ்வொரு வருடமும் வசதியுள்ளவர்கள் புது பொம்மைகள் வாங்குவதுமுண்டு. இந்தப் பொம்மைகள் ஹினமட்சுரி விழாவின் போதுதான் பார்வைக்கு வைக்கவேண்டும். மற்றநேரங்களில் வெளியே எடுத்தால், வீட்டுப் பெண்குழந்தைகளுக்கு கணவன் கிடைக்கமாட்டான் என்று நம்பப்படுகிறது.

பொம்மைகள் ஜப்பானில் அலங்காரப்பொருளாக மட்டுமில்லாமல், விளையாட்டுப்பொருட்களாகவும், தாயத்து போலவும், பஞ்சபூதங்களாகவும்கூட கொண்டாடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான வருடங்களாக பொம்மைகள் மாற்றங்கள் பலகண்டு வந்துள்ளன. இப்போதும் நவீன பொம்மைகளுக்கு நிகராக பாரம்பரிய பொம்மைகளுக்கும் வரவேற்பு இருக்கிறது. மார்ச் 3ஆம் தேதிக்கு முன்னர் கடைகளில் பொம்மை விற்பனை நடைபெறும். ஹினா பொம்மைகள் பெரும்பாலும் ஸெட்டாகவே விற்கப்படும். குறைந்தது 15 பொம்மைகளிருக்கும் ஒரு ஸெட்டில். அதில் குட்டிக்குட்டி வீட்டுச் சாமான்களும் அடங்கும். நுணுக்கமான தேர்ந்த கலைத்திறனோடு கூடிய வேலைப்பாடுகள் அமைந்திருக்கும் இந்த பொம்மைகளில். மிகவும் உயர்ரகமெனக் கருதப்படும் ஸேட், டைரி-சாமா என்னும் ஸெட்டாம். இதில் டைரி- பினா என்னும் அரச தம்பதியர் உயரகப் பட்டினால் ஆன அரசவை உடையில் இருப்பர். இரண்டு மந்திரிகள் மற்றும் மூன்று தோழிப்பெண்களோடு ஐந்து இசைக் கலைஞர்களும் இதில் அடங்குவர். பெரும்பாலும் ஐந்து அல்லது ஏழு படிகளில் அடர் சிவப்புத்துணியைப்போர்த்தி பொம்மைகள் அடுக்கப்படுகின்றன. படிகளுக்கு ஹினா-தன் என்று பெயர். அரசகுடும்பம் முதல் படியில் இருக்கும். தோழிப்பெண்கள், மரங்கள், தேநீர் பாத்திரங்கள் (டீ செட்) உணவுப்பொருட்கள் போன்றவை இரண்டாவது படியிலும், மற்ற பொம்மைகள் மற்றபடிகளிலும் அடுக்கப்படுகின்றன. சீர்வரிசைகளைக்குறிக்கும் வகையில் சின்னச்சின்ன பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும்.

ஆரம்ப நாட்களில் வைக்கோல், மற்றும் குச்சிகளால் பொம்மைகள் செய்யப்பட்டன. ஆனால், நவீன காலங்களில் பெருமளவில் கண்ணைக்கவரும் பொம்மைகள் உற்பத்தியாகின்றன. விலையுயர்ந்த பொம்மைகளும் சந்தையில் வந்துவிட்டன. மிகப் பிரபலமான பொம்மை கிமோனோ உடையணிந்த ஒடைரி-சாமா என்னும் இளவரசனும் ஓஹினி-சாமா என்னும் இளவரசியும் தான். கொகேஷி என்னும் வகை பொம்மை தனியாகக் கை மற்றும் கால்களில்லாமல் உடலோடு ஒட்டி வரையப்பட்டிருக்கும் எளிய வடிவம் கொண்டது. பெரிய தலையும் உடலும் கொண்டது. மரத்தாலான இந்தவகை பொம்மைகள் டொஹோகு என்றறியப்படும் வடக்கு ஹோன்ஷ¤வில் தயாராகிறது. கிட்டத்தட்ட நமது மரப்பாச்சி பொம்மையை ஒத்திருக்கும். ஆனால், மேடுபள்ளமில்லாமல் மொழுமொழுவென்று இருக்கும். இவை டோகுகாவா சகாப்தத்தில் வசந்த ஊற்றுக்களுக்கு வருகை தந்த சுற்றுப்பயணிகளுக்கு நினைவுச் சின்னங்களாகப் பரிசளிக்கப்பட்டனவாம். பெரும்பாலும் சிறுமிகளையே குறிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. ஹகடா பொம்மை மண்ணால் ஆனது. இவ்வகை பொம்மைகள் க்யூஷ¤விலிருக்கும் ·புகுஒகுவால் தயாரிக்கப்படுகின்றன. இவை நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும். புன்ராகு பொம்மை பாரம்பரிய பொம்மலாட்ட வகை. தாருமா பொம்மை உருண்டை வடிவம் கொண்ட சிவப்பு பொம்மை. இதற்குக் கண்களில் கருவிழி இருக்காது. இது போதிதர்மரைக் குறிக்கும் பொம்மை. இவர் நீண்ட நாட்களுக்குத் தவம் செய்ததில் கால்கள் பயனற்றுப்போயினவாம். டகசகியில் இருக்கும் கும்மா என்னும் நிறுவனத்தினரால் கையாலேயே செய்யப்படும் பொம்மைகள் இவை. பெரும்பாலும் புதுவருடத்தில் மனதில் ஒரு வேண்டுதலோடு இந்த பொம்மைக்கு ஒரு கண்ணில் கருவிழி வரைவர். அந்த வேண்டுதல் நிறைவேறினால், அடுத்து வரும் புதுவருடப்பிறப்பன்று மற்றொரு விழிக்கும் கருவிழி வரைவார்கள். பூனைபொம்மைகள் பணப்பெட்டிக்கு அருகில் இருந்தால் காசு கொட்டும் என்பது நம்பிக்கை. கொலுவைச்சுற்றி இருக்கும் மற்ற அலங்காரங்கள் நவீனமாகிக்கொண்டு வருகின்றன. எப்போதும் பீச் பூக்களும் அலங்காரத்தில் உண்டு.

உலகப்போருக்குமுன் ஜப்பானியச் சிறுமிகள் தங்கள் சிநேகிதிகளை அழைத்து விருந்துவைக்க இந்த விழாவை ஒரு சந்தர்பமாகக் கருதினர். சிறுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்து படைக்கும் இந்தச் சடங்கு உண்மையில் சிறுமிகளுக்குக் கொடுக்கப்படும் 'விருந்தோம்பல்' பயிற்சி என்றே கொள்ளப் பட்டுகிறது. சிலவேளைகளில் அவர்களே சமைத்து பொம்மைகளுக்குப் படைத்தனர். விருந்தில் ஷிரோஜாக்கே என்னும் இனிப்பு அரிசி வய்ன் குடித்தனர். பொம்மைகளுக்குப் படைத்தவற்றில் முக்கியமானவை அரிசிமாவில் செய்த டைமண்ட் வடிவ கேக், பழவடிவ பர்பி, சிவப்புப்பயறு சேர்த்த சாதம் போன்றவை. சின்ன சொப்புகளில் விருந்தினராய் வந்திருக்கும் மற்ற சிறுமிகளுக்கு இந்த உணவு வழங்கப்பட்டது. சிறுமிகளின் வண்ணவுடைகளும் கொலுவின் அழகிய வண்ணமும் விழாவைக்கோலாகலமாக்கின. இன்றும் கிராமப் புறங்களில் ஹினமட்சுரி பொம்மைகளையும் படிகளையும் பாதுகாத்து வைத்துக்கொள்கிறார்கள். மணமாகிப் புக்ககம் போகும்போது பெண் இவற்றைத் தன் புக்ககத்திற்குக் கொண்டு செல்கிறாள்.

பெண்குழந்தைகள் இல்லாதவர்களும் கூட ஆர்வம் காரணமாக சிறிய அளவிலேனும் கொலு வைக்கிறார்கள். ஒரு சிறுமியின் முதல் ஹினா மாட்சுரியை (கொலுவை) 'ஹட்சு- ஜெக்கு' என்றழைக்கிறார்கள். சிறுமியின் தாத்தாபாட்டி அவளுக்கு கொலுப்படிகளோடு ஒரு ஸெட் பொம்மையைப் பரிசளிப்பர். பிப்ரவரி மத்தியிலேயே கொலு வைக்க ஆரம்பித்து மார்ச் 3 ஆம் தேதி எடுத்து வைத்துவிடுவர். எடுத்து வைப்பதில் தாமதிக்கும் வீட்டுப்பெண்களுக்குத் திருமணம் தடை படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. விழா சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் மேன்மைக்காகவென்று நம்பப்படும் இந்த விழாவைப்பற்றி மற்றும் பலவிதமான நம்பிக்கைகளும் அர்த்தங்களும் நிலவுகின்றன. பெற்றோரைக்காத்தல்/பேணுதல், மூதாதையரை வணங்குதல் போன்ற நன்னெறிகளை வலியுறுத்துவதாகவும் சொல்லுப்படுகின்றது. ஜப்பானியர்களுக்குக் குழந்தைகளிடமிருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விழாவாகவும் கொள்கிறார்கள்.

க்யோட்டோவிலிருக்கும் அருங்காட்சியகம் பொம்மைகளைப்பற்றியும் 'ஹினா மட்சுரி' பெற்ற பரிணாம வளர்ச்சி பற்றியும் விவரிக்கும் படங்களைக்கொண்டுள்ளது. ரிங்கியா என்றழைக்கப்படும் ஏலக்கடை இவ்விழா தொடர்பான பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்போனது. 1990 ல் வெளியான அகிரா குரோசவாவின் 'யுமே' (Yume) என்னும் திரைப்படத்தில் இந்த ஹினா என்னும் கொலு மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஜப்பானியக் கலாசாரத்தையும் ஜப்பானின் இயற்கைச்சூழலையும் மையமாகக்கொண்டு இரண்டின் தொடர்பைக் குறித்துப்பேசும் காவியம். சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தின் பீச் தோட்டம் பறிபோனதைக் குறித்து வருந்திக் கொண்டிருப்பான். அப்போது தன்னையே உற்சாகப் படுத்திக் கொள்ள தன் சகோதரி படிகளில் அலங்கரித்து வைத்துள்ள 'ஹினா- மாட்சுரி' பொம்மைகளில் சில உயிர்பெற்று நடமாடுவதாகக் கற்பனை செய்வான்.

ஜனவரி 1927 ல் மிஸ். அமெரிக்கா மற்றும் 48 அமெரிக்க மாநிலங்களைக்குறிக்கும் 48 பொம்மைகளும் பொம்மைத் தூதுவர்களாக அமெரிக்காவிலிருந்து நல்லெண்ண அடிப்படையில் தோக்கியோவிற்கு அனுப்பப்பட்டன. இம்பீரியல் எடுகேஷன் மியூசியம் என்னும் அரச அருங்காட்சியகத்தில் இருக்கும் இரட்டை மாடி பொம்மை வீட்டில் வசிக்கின்றன இந்த பொம்மைகள். இவற்றிற்குக் கோலாகல வரவேற்பு நடந்தது ஜப்பானில். இந்தப்பொம்மைகளை வரவேற்கவென்று ஒரு 'நல்வரவுப் பாடல்' போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் கொரியச்சிறுமி வென்றாள். வென்ற பாடல் ஜப்பானிய இசைஞர்களால் இசையமைக்கப்பட்டுப் பாடப்பட்டது. நீலவிழிகளுடைய இந்தப் பொம்மைகள் பார்க்கவும் தொடவும் அற்புதம். நேர்த்தியோட வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. அமெரிக்க நட்பு பொம்மைகள் கிடைத்துவுடன் ஜப்பான் நன்றி தெரிவிக்கும் வகையில் அமெரிக்கக் குழந்தைகளுக்கு 12,000 திற்கும் மேற்பட்ட பொம்மைகளை அனுப்பியது. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் மேலும் 12,739 அமெரிக்க பொம்மைகள் ஜப்பானின் ஒசாகாவை வந்தடைந்தன. ஒவ்வொரு பொம்மையும் சின்ன பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் வைத்திருந்தன. அதோடு அமெரிக்கக்குழந்தைகளின் செய்தியடங்கிய மடலும்.

விழாமுடிந்தபிறகு பொம்மைகள் நாடெங்கும் இருக்கும் பாலர் மற்றும் தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டன. தங்களுடைய சொந்த பொம்மைகளைக்கொண்டுவந்து அவற்றையும் படிகளில் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிச் சிறார்கள் ஜப்பானியக் குழந்தைகளைப் பிரதிநிதித்து விழாவில் கலந்துகொண்டனர். அதே எண்ணிக்கையில் அமெரிக்கக் குழந்தைகளும் விழாவில் பங்கேற்றனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் முழுமையான புரிந்துணர்வு மற்றும் நட்பு நீடிக்க இந்த விழா மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று எல்லோரும் நம்பினர். அவ்வகையுணர்வுகளை இளையதலைமுறையிடையே தோற்றுவிக்கும் நோக்கமும் இதில் அடங்கும். உலகின் மற்ற விழாக்களைப் போலவே காலத்திற்கு ஏற்றாற்போல ஹினா-மாட்சுரியின் நோக்கங்களும் அர்த்தங்களும் மாற்றங்களைக் கண்டு வருகிறது.

(முற்றும்)

நன்றி: உயிர்மை மார்ச் 2005
& திண்ணை

-----ஜெயந்தி சங்கர்

Sunday, April 03, 2005

பெரனாக்கான்

(Peranakans)

பெரனாக்கான் என்றாலே 'கலந்த ரத்தம்' என்று பொருள். மலாய் மொழியிலும் இந்தோனீசிய மொழியிலும் 'வாரிசுகள்' என்ற பொருள்கூட வரும். ஆண் வாரிசுகள் 'பாபா' என்றும் பெண் வாரிசுகள் 'ந்யோந்யா' என்றும் அழைக்கப் படுகின்றனர்.17 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அன்றைய மலேயாவிற்கு வந்த சீனர்களுக்கும் மலேயாவின் மக்களுக்குமிடையே நடந்த கலப்பு மணங்களில் பிறந்தது இவ்வினம். பெரும்பாலும் தென்சீனாவிலிருந்து தென் கிழக்காசியவிற்கு வந்த வணிகர்களே இதில் அடங்குவர். இதுதவிர, போர்ச்சுக்கீசிய மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் தாக்கமும் இதற்குண்டு. இந்தக் கலாசாரம் மலாக்காவில் தான் தொடங்கியதாக நம்பப்படுகிறது. மெதுவாக வட்டராமெங்கும் பரவி அந்தந்த மண்ணின் மணத்தோடும் சிற்சில மாற்றங்களோடும் ஆங்காங்கே நிலவிவந்தது. இதனாலேயே இது (Peranakan culture) தனித்துவம் வாய்ந்து வந்துள்ளது.

சீனாவின் அமோய் (Amoy) மற்றும் ·பூகேன் (Fukien) ஆகிய பகுதிகளிலிருந்து 'திரவியம்' தேடி வந்தவர்கள் இவர்கள். ஆண்கள் வரும்போது சிலகாரணங்களுக்காகத் தனியே வந்துவிட்டு பிறகு உள்ளூர் பெண்களை மணம் புரிந்துகொண்டனர். மலேயாவில் நிரந்தரமாகத்தங்கும் எண்ணம் இல்லாதிருந்ததால் பணமீட்டும் ஒரே குறிக்கோளுடன் தான் கிளம்பினார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கடற்பயணத்தில் சிரமப்படுத்த வேண்டாமென்ற எண்ணமும் நிலவியது. அதுவும் தவிர, அந்தக்காலத்தில் சீனஅதிகாரிகள் பெண்களை நாட்டைவிட்டுக் கூட்டிக்கொண்டு போவதைத் தடுத்துவந்தனர். மலேயாவிற்கு வந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றிகண்டால் உள்ளூரில் ஒரு குடும்பத்தையும், சொந்தநாட்டில் ஒரு குடும்பத்தையும் எளிதாகப் பராமரித்தனர். சம்பாத்தியம் பெரிதாய் இல்லாவிட்டால் மீண்டும் திரும்பிப்போய் குடும்பத்தைச் சந்திக்கும் துணிவில்லாமல் மலேயாவிலேயே சம்பாதித்த சொற்பத்தைக்கொண்டு உள்ளூரில் குடும்பம் நடத்தினர். பொதுவாய் பினாங்கைச் சேர்ந்தவர்கள், மலாகாவைச்சேர்ந்தவர்கள் என்று இரண்டு பிரிவினருண்டு.

சிங்கப்பூரைச்சேர்ந்த பெரனாக்கான் இனத்தவர்கள் மலாக்காவிலிருந்து வந்தவர்களே. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சர் ஸ்டாம்போர்ட் ரா·பிள்ஸ் சிங்கப்பூரில் புதிய வணிக துறைமுகம் ஒன்றை நிறுவத்திட்டமிட்டதும் பினாங்கு மற்றும் மலாகாவில் இருந்த பெரனாக்கான் குடும்பங்கள் தெற்குநோக்கிக் குடிபெயர்ந்தனர். இப்படியாகக் கால ஓட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளெங்கும் இவ்வினத்தினர் பரவினர். 19ஆம் நூற்றாண்டில் பெரனாக்கான் சமூகத்தினருக்குப் பெரும் செல்வாக்கும் பொருளாதார வசதியும் கொண்டிருந்தனர். ஏனென்றால், அவர்கள்தான் முதன் முதலில் குடியேறிய வணிகர்கள்.

பிறந்தநாள் என்றால் இவ்வினத்தினருக்கு 'முதல் மாதம்', மற்றும் 61 வயது முடியும் பிறந்தநாள் ஆகிய இரண்டும் தான் மிகமிகமுக்கியமானவை. குழந்தைக்கு ஒருமாதம் ஆகும்போது முதல் முடியிறக்கி, நகங்களை வெட்டி, இரண்டு மெழுகுவத்திகள் ஏற்றிவைத்து மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, வணங்கி நன்றி தெரிவித்தனர். விருந்தும் உண்டு. 61 வயதிற்கு முன்னர் இறந்தவர் முழுமையாக வாழவில்லை என்று நம்பினர். உயர்ந்த நாற்காலியில் அமரவைத்து, சிறியவர்கள் அவரை நமஸ்கரித்து ஆசிபெற்றனர். சிகப்பு உறைகளில் பணமும் அவரவர் வசதிக்கேற்ப அன்பணிப்பாக வழங்கப்பட்டது. 'பாஜங்க் பாஜங்க் உமோர்' என்று சுற்றியுள்ளவர்கள் அனைவரும் 'வாழ்த்தி' கோஷித்தனர்.

பெண்களே சமையல்வேலை முழுவதை பார்ப்பதாலேயே, ந்யோந்யா உணவு என்றோ பெரனாக்கான் உணவு என்றோ இவர்களின் உணவு அறியப்படுகிறது. கலப்பு மணத்தில் விளைந்த இச்சமூகத்தின் உணவுக்கலாசாரமும் ஒரு கலவையே. மலேசியர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். ஆகவே இவர்கள் பன்றிக்கறியை உட்கொள்வதில்லை. ஆனால், பெரனாக்கான் உணவில் பன்றிக்கறி தாராளமாகப் பயன்படுகிறது. இவர்களின் உணவில் தேங்காய், மஞ்சள் மற்றும் எலும்பிச்சை போன்றவை இன்றியமையாதவை.

ந்யோந்யாவினர் சமையலை ஒரு கலையாகவே நினைக்கின்றனர். தங்கள் உணவுக்கலாசாரத்தில் அவர்களுக்கு மிகுந்த பெருமையுண்டு. மலேசிய அடையாளங்களுடன், இந்திய, தாய், இந்தோனீசிய மற்றும் சீன வழக்கங்கள் உணவில் தெரியும். ஒவ்வொரு சமூகத்தின் உணவுசமைக்கும் முறைகளின் சிறப்பையும் எடுத்துக்கொண்டுள்ளது பெரனாக்கான் உணவு முறை. வெட்டியோ அப்படியே முழுசாகவோ ஒரு வகை எலுமிச்சை இலைகள் (லிமௌ புருட்) பெரும்பாலான உணவுவகைகளில் சேர்க்கப்படுகின்றன. கொத்துமல்லித் தழைகளும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வாழையிலையில் கட்டிய சாதம், இறைச்சி போன்றவற்றை ஆவியில் சமைப்பது இவர்கள் வழக்கம். சிலவேளைகளில் பொரித்தும் எடுப்பார்கள். வாழையிலையின் மணம் இவர்களின் சிலவகை உணவுகளில் பிரசித்தம். ந்யோந்யாவினரது கொழுக்கட்டை வகைகள் தென்கிழக்காசிய நாடுகளில் மிகவும் பிரபலம்.

இவர்களது சாப்பாட்டு மேசையில் தவறாமல் இடம் பெறுவது 'சாலட்'(Salad). இதில் உலர்ந்த வகை, ஈரப்பதமுடைய வகை என்று இரண்டு உண்டு. ஈரவகை சாலடில் தேங்காய்ப்பால் சேர்க்கிறார்கள். காரமும் இனிப்பும் எலும்பிச்சையின் புளிப்பும் சேர்த்திருக்கும். உலர்ந்த வகையிலோ துருவி வறுத்த தேங்காய் சேர்த்திருக்கும். இது சுமத்திராவிலிருந்து வந்த வழக்கம். மீன்வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளோ உலர்ந்த நெத்திலி மீனில் செய்யப்பட்ட சாஸ் (sauce) அல்லது வேர்கடலையில் செய்யப்பட்ட சாஸ் (sauce) சேர்க்கப்பட்டிருக்கும்.

பங்கா ரம்பே (screwpine) என்னும் இலைகளை பிறப்பு முதல் இறப்பு வரையில் எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் உபயோகிக்கிறார்கள். பலவாரங்கள் முடியை அலசாத கிழவிகள் இந்த இலையைக் கொண்டைக்குள் வைத்துக்கொள்வராம். இதன்மூலம் முடியை நாற்றமில்லாமல் வைத்துக் கொள்ளமுடியும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு வகைப் பூவைப் பயன்படுத்துகிறார்கள். பழங்கால சிங்கப்பூரில் இச்சமூகத்தினரது வீடுகளின் பின்புறத்தோட்டத்தில் உணவிற்குத் தேவையான கீரை மற்றும் மூலிகை வகைகள் வளர்க்கப்பட்டன. இப்போதெல்லாம் அடுக்குமாடிகளில் இந்த வழக்கம் தொடர வழியில்லாதுபோனது. மலேசியாவிலிருந்து வரவழைக்கப்படும் மூலிகைகள் இப்போதும் கடைகளில் வாங்கக் கிடைக்கும்.

உணவில் மட்டுமில்லாமல் உடை, ஆபரணங்கள், கட்டடவியல் ஆகிய எல்லாவற்றிலுமே பெரனாக்கான் சமூகம் தனித்துவம் கொண்டிருக்கிறது. இவர்களது மரச்சாமான்களின் வேலைப்பாடுகள் கண்ணைக்கவரும். சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கம் பெண்களிடம் இருந்திருக்கிறது. இவர்கள் மிகவும் உல்லாசப்பேர்வழிகள். சூதாட்டம் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

மூத்தவர்கள் தொளதொள சட்டையும் பேண்டும், துணியாலான காலணியும், தலையோடு பொருந்திய சிறிய குல்லாயும் தான் பாரம்பரியமென்று நம்பினர். ஆனால், பெரானகன் இனத்தவரின் உடை பலமாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலப்பில் பிறந்த ஆண் குழந்தைகள்/இளையர்கள் மேல்நாட்டுப் பாணி கோட்டும் பேண்டும் காலணிகளும் தொப்பியும் அணிய ஆரம்பித்தனர். வேலைக்குப் போகும்போது அரைக்கை பனியனுக்குமேல் 5 பட்டன்கள் வைத்துத் தைத்த கோட்டு அணிந்தனர். பனியன் பேண்டுக்குள் இழுத்துவிடப்பட்டிருக்கும். கணுக்காலுக்கு அருகில் குறுகிய கால்சட்டையையே அணிந்தனர்.

ந்யோந்யா என்றழைக்கப்படும் இவ்வினப் பெண்கள் கணுக்கால்வரை நீண்டிருக்கும் 'சரோங்க்' அணிந்து முழங்கால் வரை நீண்டிருக்கும் ஜம்பர் வகை மேலுடை அணிந்தனர். சிறிய உருண்டைக்கொண்டையோ, நத்தை வடிவிலான கொண்டையோ போட்டுக்கொண்டனர். பின்னல்வேலைசெய்யப்பட்ட கைப்பை இவர்களின் இடுப்பு வாரிலிருந்து (belt) தொங்கும். வலதுதோளில் முக்கோணமாக மடிக்கப்பட்ட கைக்குட்டை குத்தப்பட்டிருக்கும். 'கஸொத் மனேக்' என்றழைக்கப்பட்ட மணிகளால் அலங்கரிக்கப்பட்ட காலணி அணிந்திருப்பர்.

1920 களில் நேர் வகிடு எடுத்து இரண்டாகப்பிரித்து கூந்தலை இரட்டைப்பின்னிச்சுற்றி, காதுகளையட்டி இரண்டு கொண்டைகள் போட்டுக்கொண்டனர். பிறகு மெதுவாக கொண்டையைவிட்டுவிட்டு ஹேர்பின் போட்டுக்கொள்ளும் பழக்கம் வந்தது. மேல்சட்டையின் உயரம் இடைவரை குறைந்தது. 'கெரோசங்க்' எனப்படும் பெண்களுடையில் பல மாற்றங்கள் வந்தது. சில 1930களில் குட்டைப்பாவாடைகூட அணிய ஆரம்பித்தனர். குதியுயர்ந்த வகைக்காலணிகளும் வந்தன.

பெரனாக்கான் உடையில் 'கெபாயா' தான் மிகமிகப் பிரபலம். இதில் நுணுக்கமான அழகிய தையல்வேலைதான் (embroidery) சிறப்பு. இதற்குத் தான் வேலையும் அதிகம், கூலியும் அதிகம். மணிகளையும் இதற்குப் பயன் படுத்துகிறார்கள். சுற்றுப்பயணிகள் மிகவும் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். இன்றும் ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளிலிருந்து இதற்காகவே சிங்கப்பூருக்கு வந்து அளவுகொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். தயாரானதும் அனுப்பிவைக்கப்படுகின்றதாம்.

ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணங்கள் தான் பெரும்பாலும் நடந்துவந்துள்ளது. நிழற்படத்தை மட்டுமேபார்த்து நிச்சயயிக்கப்பட்ட திருமணங்களுமுண்டு. ஜாதகப்பொருத்தம் நட்சத்திரப்பொருத்தம் போன்றவற்றைப்பார்த்து நிச்சயித்தார்கள். 12 நாட்களுக்குக் கோலாகல ஏற்பாடுகள் நடக்கும். பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்ளும் பழக்கம் இந்தியர்களிடமிருந்து பெற்றது. நிச்சயமானபிறகும் கூட மணப்பெண்ணின் கன்னித்தன்மையிலோ கற்பிலோ மாப்பிள்ளைக்கோ அல்லது மாப்பிள்ளையின் அம்மாவிற்கோ சந்தேகம் வந்தால் திருமணம் நிற்கும். ஆகவே நடக்கும் வரை நிச்சயமில்லாத ஒரு ஐயம் நிலவியது. ஒவ்வொரு சடங்கும் பொருள் பொதிந்தது. பெற்றோருக்கும் மூத்தவர்களுக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தல் ஒரு முக்கிய சடங்கு. இப்போதெல்லாம் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது.

பெரும்பாலும் பாபாமலாய் மொழியோ 'ஹொக்கெயின்' என்னும் ஒருவகைச் சீனமொழியோ பேசினார்கள். மூத்த பெரனாக்கான் இனத்தவர்கள் பாபா மலாய் மொழியைப் பேசினார். அதன்பிறகு சீனமொழிகள் இடம்பிடித்தன. ஆணாதிக்கம் தூக்கலாய் இருக்கும் இந்தச்சமூகத்தில் மொழியிலும் வேற்றுமை. சில தகாத வார்த்தைகளை ஆண்கள் உபயோகிக்கலாம். பெண்கள் உபயோகிக்கக்கூடாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பெரானகன் சமூகத்தினர் மலாயாவின் பல பகுதிகளிலும் சொத்து பத்துக்களை விற்கவேண்டியிருந்தது. அதனால், பலவிதமான கலாசார அடையாளங்கள் காணாமல் போய்விட்டன.

'மூத்தோரை மதித்தல்' எனும் பண்பே இவர்களுக்கு மிகமுக்கியமானது. 'பஹாசா பாபா' என்றழைக்கப்படும் இவர்களது மொழி மலாய் மொழியும் இல்லாமல் சீன மொழியும் இல்லாமல் ஒரு கலவையாக இருக்கும். பயணக்கட்டுரைகளையும் சீன இலக்கியங்களையும் பாபா மலாயில் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களுக்கு மூட நம்பிக்கை அதிகம். துடைப்பத்தால் பெண்ணின் கால்களைத் தொடுதல் அபசகுனம். வீட்டில் 'அழகி' என்று புகழப்படும் பெண்குழந்தைகளை 'குரூபி' என்றழைப்பர். அந்தப் பெண்குழந்தை ஒருகட்டத்திலிருந்து வளர்ந்து மனமுதிர்ச்சிபெற உதவுமென்று நம்புகின்றனர். ஆரம்பகால பெரானகன் இனத்தவர் பௌத்தம் மற்றும் தாவோ மதத்தைப் பின்பற்றினர். பாபா கோவில்களில் இஸ்லாமிய மற்றும் தாவோ மதவழக்கங்களின் விநோத கலவை புலப்படும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் கிருஸ்தவமதத்திற்கு எதிராகவே இருந்தது. ஆங்கில ஆட்சியின் போது இவர்களில் அதிகபேர் கிருஸ்தவமதத்தைத் தழுவினார்கள்.

ஒருமாதம் முதல் மூன்று வருடங்கள் வரை இறந்தவருடனான உறவின் நெருக்கத்திற்கு ஏற்றாற்போல் இறந்தவருக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வினத்தினரின் ஆண்கள் கரண்டி மற்றும் முட்கரண்டி உபயோகித்தும் பெண்கள் கையை உபயோகித்தும் உணவுண்பர். இருப்பினும் ஈமச்சடங்கில் போது 'சாப் ஸ்டிக்' குகள் (chop sticks) வைக்கப்படும். ஈமச்சடங்கின் போது கருப்பு, வெள்ளை நிறங்களிலான உடையிலோ இல்லையானால் சாக்கினாலான உடையிலோ மிகநெருங்கிய உறவினர்களைப்பார்க்கலாம். 'பிகின் சது தாஹ¤ன்' என்றழைக்கப்படும் முதல் திதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பௌத்த பிக்குவை அழைத்து சீனர்களின் வழக்கப்படி காகிதத்திலான வீடு, பணம் போன்றவற்றை எரிப்பர். முதலாமாண்டு திதியைவிட இரண்டாம் ஆண்டுத்திதியின் போது படைக்கப்படும் சோற்றின் அளவு அதிகமாயிருக்கும். ஓராண்டிற்குள் இறந்தவரின் மேலுலக வாழ்வில் அவருக்கு அதிக நண்பர்கள் சேர்ந்திருப்பராம். இறந்தவரின் வீட்டிற்குச் சென்று வந்ததுமே முகம்கழுவும் பழக்கமுண்டு. அதன்மூலம் தீட்டுவிலகித் தூய்மையடைவதாக நம்பப்படுகிறது. துக்கத்தை அகற்ற ஒரு ஜோடி குட்டி சிவப்பு மெழுகுவத்தி மற்றும் சிறிய சிவப்பு நூல் ஈமச்சடங்கிற்கு வந்தவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

தற்காலத்தில் பெரனாக்கான் சமூகம் தன் அடையாளத்தைக் கிட்டத்தட்ட தொலைத்துவிட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். பெரனாக்கான் தோன்றக்காரணமாயிருந்த கலப்பு மணங்களே இதன் மறைவுக்கும் காரணமாகிவருகின்றன. வெவ்வேறு இனத்து ஆண்பெண்களை மணம் செய்துகொண்டு 'பெரனாக்கான்' அடையாளத்தை இழந்துவருகின்றனர். சிங்கப்பூரின் அதிநவீன வளர்ச்சியும் இச்சமூகத்தை அழித்துதான் வருகிறது. இருப்பினும் சிங்கப்பூர், தீபகர்ப மலேசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆங்காங்கே பெரனாக்கான் குடும்பங்களை இன்றும் பார்க்கலாம். சிறுபான்மையினரான இவர்கள் அவ்வப்போது சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நாடகங்கள், விருந்து மற்றும் நடனம் போன்றவற்றை ஏற்பாடுசெய்து தங்கள் கலாசாரத்தை உயிர்ப்பிக்க முயன்று வருகிறார்கள்.

சிங்கப்பூரில் 2002ல் 23,198 திருமணங்களில் 2,842 இரண்டு வேறு இனங்களிடையே நடந்திருக்கின்றன.வெவ்வேறு இனத்தில் மணம் புரிவோரின் விகிதம் 1982 ல் இருந்த 6.3% யிலிருந்து 2002ல் 12.3%க்கு வந்துள்ளது.சிங்கப்பூரின் மக்கட்தொகை 4.1 மில்லியன். 75% சீனர்கள். 14% மலாய்க்காரர்கள். 8% இந்தியர்கள். இதில் தமிழர்களே பெரும்பான்மை. 3% மற்ற இனத்தவர்கள். இந்த மூன்றில் ஒரு சதவிதம் தான் பெரனாக்கான் இனத்தவர்கள். இந்தோனீசியாவில் 1990 ல் இருந்த தொகை 8,259,266. இது 1997ல் 9,341,400 ஆக உயர்ந்தது. 2000ல் 15 மில்லியனாக உயர்ந்தது. இதில் ஒரு மில்லியன் பேர் வந்துபோவோர்.

1980களிலிருந்தே சிங்கப்பூர் அரசாங்கம் தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கென்று பெரனாக்கான் கலாசாரத்தின் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொடுக்கும் நோக்கத்தோடு நிரந்தர மற்றும் தற்காலிக அருங்காட்சியகங்களை ஏற்படுத்தி வருகிறது. கலாசார கட்டடவியலைக்காட்டும் கட்டடங்களைப் பராமரிக்கிறது தேசிய கலாசாரக்கழகம். கலாசாரவிழாவை ஊக்குவித்தும் வருகிறது. ஆனால்,இவ்விழாக்களில் மூத்தவர்களே கலந்துகொள்கிறார்கள். இவ்வட்டாரத்தில் வசிப்போரில் சிலருக்கே பெரனாக்கான் சமூகத்தைப்பற்றித் தெரிவதில்லை. இப்படியிருக்க, சுற்றுப்பயணிகளாக வருபவர்களுக்கு சீனக்கலாசாரத்துக்கும் பெரனாக்கான் கலாசாரத்துக்கும் வேறுபாடு தெரிவதும் கடினமே. இளைய தலைமுறைக்கு இக்கலாசாரத்தை எடுத்துச்செல்ல இன்னும் அதிக நடவடிக்கைகள் தேவையென்றே தோன்றுகிறது.


(நிறைவு)

நன்றி: 'The Tamil Times' from New York -டிசம்பர், 2004

thinnai

- ஜெயந்தி சங்கர்

Wednesday, March 23, 2005

நூல் அறிமுகம்


-------------------------------
'Ladies Coupe'
by Anita Nair
அனிதா நாயர்
எழுதிய 'லேடீஸ் கூபே'


First published by
Penguin Books India 2001
-------------------------------



'ஒரு பெண், ஓர் ஆணின் துணையின்றி தனியே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாதா (கூடாதா)?'

கதாநாயகி நாற்பத்தைந்து வயது அகிலா என்றழைக்கப்படும் அகிலாண்டேஸ்வரி. வீட்டின் மூத்த பெண். அவளின் கேள்விதான் அது.

இதற்கான 'தேடல்' அவளில் தீப்பொறியாகக் கிளம்பிப் பின் கனன்று எரிந்த படியிருகிறது அவளது இளம் வயதுமுதலே. அவள் திடீரென்று ஒரு பையைத் தூக்கிக்கொண்டு கன்யாகுமரியை நோக்கிக் கிளம்புகிறாள். தேடல் பயணம், இரயில் பயணத்தில் தீவிரம் கொள்கிறது. மொத்தத்தில் சுதந்திரத்தையும் மனோபலத்தையும் தேடும் ஒரு பெண்ணின் கதை இந்த 276 பக்கங்கள் கொண்ட நாவல்.

நாவலின் தலைப்பே கதையின் களத்தைச் சொல்கிறது. ஆமாம், கன்யாகுமரிக்குச் செல்லும் இரயிலின் ஒரு லேடீஸ் கூப்பே தான் களம். உண்மையில் அப்படியும் சொல்லவிடமுடியாது. காரணம், அங்கே அகிலா உடன் பயணிக்கும் ஐந்து பெண்களைப் பரிச்சயப்படுத்திக்கொண்டு அவரவர் கதையைக்கேட்கிறாள். ஆகவே, பாத்திரங்கள் சந்திக்கும் இடம் தான் இரயிலின் லேடீஸ் கூபே. மற்றபடி அவரவர் கதை சென்னை, கொடைக்கனால், பெங்களூர், காஞ்சீபுரம் என்று போய் மீண்டும் லேடீஸ் கூபேவுக்கே திரும்புகிறது. உள்ளங்கையில் தாங்கும் கணவன் உள்ள குழம்பிய மனைவி ஜானகி, அசாதாரண புரிந்துணர்வுடடனான 14 வயதான ஷீலா, தன் தேவையென்னவென்றே புரிந்துகொள்ளாத கெமிஸ்ட்ரி டீச்சர் மார்கரெட் ஷாந்தி, ஒரே இரவில் தன் வெகுளித்தனத்தை மொத்தமாய்த் தொலைத்த மரிக்கொழுந்து மற்றும் நல்ல மகளாயும் மனைவியாயும் விளங்கும் ப்ரபாதேவி ஆகிய ஐவரின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை தான். ஒவ்வொன்றும் தன் கதையைப்போன்றே இருப்பதைப்போலவும் அதே சமயம் தன்னுடையதிலிருந்து வேறுபட்டிருப்பதைப்போலவும் உணர்கிறாள் அகிலா.

'Ladies Coupe' - A Novel In Parts என்று தான் இரண்டாம் பக்கத்தில் தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அனிதா நாயர் நூலின் கடைசி பக்கத்தில் 1998 க்குப்பின் இந்திய இரயில்களில் லேடீஸ் கூபே இல்லாமல் இருப்பதாய் ஒரு குறிப்பும் கொடுத்துவிடுகிறார். அனிதா வசிப்பது பெங்களூர். இவரின் இன்னொரு நாவல் 'The Better Man' னாம். தேடிப் படிக்கவேண்டும்

86 வது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும், 'From the Gurukula stage of life, she had moved directly to Vanaprastha. And she wanted no part of some one else's karmic flow', என்ற வரிகள் அகிலாவை மிகவும் நன்றாகவே வாசகனுக்குப் பரிச்சயப் படுத்துகின்றன. ஒரு தாயின் தவிப்போ ஒரு பதின்மவயதுப் பிள்ளையின் மனநிலையோ அவளுக்குக் கொஞ்சமும் பிடிபடாதிருக்கின்றது. காரணம், அவளின் வாழ்க்கை முறை. குடும்பத்திற்காக உழன்று உழன்று அகிலாவுக்கு வெளியுலகைப்பார்க்கும் எண்ணமும் அனுபவங்கள் சேகரிக்கும் துடிப்பும் வலுக்கின்றன. இலக்கில்லாமல் எங்கேயாவது போகவேண்டும் என்று தான் முதலில் நினைக்கிறாள். 'எங்கேயாவது போனால் போதும்' என்ற நிலைக்கு வந்தபின் பெரிதாய் யோசிக்காமல் சட்டென்று கன்யாகுமரியைத் தேர்ந்தெடுத்துவிடுகிறாள்.

திடீரென்று கிளம்பும் போது அகிலாவைப்பார்த்து அவளைவிடப் பத்து வயதுக்கும் மேல் இளையவளான அவளுடையை தங்கை பத்மா கேட்கிறாள்." நாராயணன் அண்ணா, நரஸி அண்ணா வந்தா நீ திடீர்னு தனியாக கிளம்பிப்போறதப்பத்தி என்ன சொல்லுவாளோ?,.." பெண் தனியே கிளம்பினால், நடுத்தர பிராமணக்குடும்பத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களும் பயங்களும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவளின் வயது, முதிர்ச்சி,அறிவு,பதவி ஆகியவை கடந்து கேள்விகள் முளைக்கவே செய்கின்றன. பலநாட்கள் யோசித்து யோசித்துக் களைத்திருந்த அகிலா கூட்டிலிருந்து கிளம்பும் பறவையின் உணர்வோடு, தங்கையின் கேள்விக்கு ஒருவித எதிர்வினையும் செய்யாது ஒற்றைப் பார்வையை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறிவிடுகிறாள்.

கண்டோன்மெண்டில் தோழி நிலோ·பர் டிக்கெட்டுடன் காத்திருக்கிறாள். அங்கே டிக்கெட் கௌண்டர்கள் பற்றி விவரிக்கும் போது -

Akhila read the board above the line,' Ladies, Senior citizens and Handicapped Persons". She did not know if she should feel angry or venerated. There was certain old fashioned charm, a rare chivalry in this gesture by the Railway Board that pronounced a woman shouldn't be subject to the hustle and bustle, leacherous looks and grouping hands, sweaty armpits and swear words that were part of the experience of standing in the General Queue. But why spoil it all by clubbing woman with senior citizen and handicapped persons?Akhila stifled and looked for Niloufer.

இதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் ஆழமான வரிகள் ரசிக்கும்படி நாவலெங்கும் வருகின்றன.

சீரான கதையோட்டம். அகிலாவோடு நாமும் தேடலில் நம்மையறியாது பங்குகொள்வதைத் தவிர்க்கமுடியாது போகிறது. நீண்ட வாசகபயணம் என்றபோதிலும் சோர்வு தெரியவில்லை . ஓவ்வொரு அத்தியாயத்திலும் அகிலவுக்கு 'விடை' கிடைத்திருக்கிறதா என்ற 'விடை' தேடும் ஆவல் வாசகனையும் தொற்றிக்கொள்கிறது.

ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளும்போது, திருமணம் குழந்தைகள் போன்ற பேச்சு எழும் போது, அகிலா தான் மணம் புரியாத காரணத்தைச் சொல்லநேர்கிறது. சகபயணிகளிடம் அகிலா மனம் திறக்கிறாள். அத்துடன் தன் கேள்வியையும் அவர்கள் முன் வைக்கிறாள். உண்மையில் இதெல்லாமே மிக இயல்பாக ஆரஞ்சுப்பழங்களைப் பகிர்ந்துண்ணும் போதே நடந்துவிடுகிறது. ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை என்று எல்லோருமே சொல்லிக்கொள்கிறார்கள். இருந்தாலும், அவரவர் கருத்தாகச் சொல்லாமல் அவரவர் வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம் தன் சிந்தனைக்கு உதவ முடியும் என்று அகிலா விடாமல் வற்புறுத்திக் கேட்கும் போது மற்றவர்களும் 'இரயில் சிநேகம் தானே, நாம் தான் இனிமேல் சந்திக்கப்போவதில்லையே', என்ற எண்ணத்துடன் தைரியமான மனம் திறந்து அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தன் இயல்புக்கு எதிராய்த் தானே வலியபோய் பேசி, மற்றவரையும் பேசவைப்பதைப்பார்த்துத் தானே வியந்து கொள்கிறா¡ள் அகிலா உள்ளுக்குள்ளே. ஆரஞ்சின் மணமும் இரயில் ஜன்னலில் இருந்த 'துரு' மணமும் பிற்காலத்தில் தன் நினைவுகளோடு சேர்ந்து வரும் என்றும் நினைத்துக்கொள்வாள்.

ஆபீஸ்போய் மட்டுமே பழக்கப்பட்ட தன்னால் இத்தனை வயதிற்குமேல் ஒரு வீட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம் அகிலாவிற்குள் எழுகிறது. ஒவ்வொரு விநாடியையும் கட்டினவனுக்காகவே வாழ்வது சலிக்காதா, அதுதான் ஒற்றுமையைப் பலப்படுத்துமா என்றெயெல்லாம் அப்பெண்களிடம் கேட்கிறாள்.

எப்போதும் தான் உழைக்க மற்றவர் இளைப்பாறியதுபோக, இரயில் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்க தான் உறங்குவது சுகமென்று உணர்கிறாள். பாதுகாப்பாகக்கூட உணரமுடிகிறது அவளால். விநோத கனவொன்றும் காண்கிறாள்.

அகிலா வளர்ந்த சமூகத்தில் பெண்ணின் நிலையும் அவளில் புகுத்தப்படும் எண்ணங்களும் அவளை கிட்டத்தட்ட ஒரு ஜடப் பொருளாக்கிவிடுகிறது. மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டு, பெண்ணைவிட ஒரு படி உயர்ந்தவன் ஆண் என்று அவள் உள்ளத்தில் பதியவைக்கப்படுகிறது. முதிர்ச்சியடையும் நிலையில் அவ்வெண்ணங்களுக்கு எதிராகத் தன் சிந்தனை விரிவதை அவள் உணர்கிறாள். நடைமுறை என்று வரும்போது பழமையிலிருந்தும் சமூகப்பார்வையிலிருந்தும் விலகிவிடமுடியாது என்றுணர்ந்து திணறுகிறாள். ஆகவேதான் அகிலாவுக்குத் தன்னைப்பற்றி சிந்திக்கும்போதெல்லாம் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன

Amma had her own theories on what a good wife ought to be like. First of all no good wife could serve two masters- the masters being her father and her husband. A good wife learnt to put her husband's interest before anyone else's, even her father's. A good wife listened to her hasband and did as he said. "There is no such thing as equal marriage," Amma said. " It is best to accept that the wife is inferior to the husband. That way, there can be no strife, no disharmony. It is when one wants to prove one's equality that there is warring and sparring all the time. It is so much easier and simpler to accept one's station in life and live accordingly. A woman is not meant to take on a man's role. Or the gods would have made her so. So what is this about two equals in marriage?

இப்படிச்சொன்ன அம்மாதான் அகிலாவின் அப்பா இறந்ததும் அந்த இடத்தில் அவளை வைத்துப்பார்க்கிறாள். அதில் அம்மாவுக்கு உறுத்தலில்லை. அவளை ஒரு பெண்ணாகப் பார்ப்பதையே நிறுத்திவிடுகிறாள். இத்தனைக்கும் எதிர்பாராது நிகழும் அப்பாவின் சாவுவரை, அதாவது அகிலாவின் பதின்மவயதின் இறுதி வரை அம்மா அவளைத் திருமணத்திற்குத் தயார்செய்யும் வகையில் தான் வளர்க்கிறாள். பார்க்கிறாள். அம்மாவின் பார்வையிலும் குடும்பத்தின் மற்றவர் பார்வையிலும் அதன்பிறகுதான், வீட்டிற்கு உழைத்துப்போடும் ஆணாகிவிடுகிறாள் அகிலா. தனியாக வசிக்க நினைத்தாலோ, பிரயாணம் செய்ய நினைத்தாலோ மட்டும் அகிலா பெண் என்ற நினைவும் குடும்பத்திற்கும் தங்கள் சமூகத்திற்கும் கெட்டபெயர் வந்துவிடும் என்ற அக்கறையுடனான எதிர்ப்புகள் கிளம்பும்.

ஆங்காங்கே அகிலாவின் சிறுவயது சம்பவங்கள் நினைவலைகளாக வருகின்றன. படிக்க மிகவும் சுவையாக இருக்கின்றன. அகிலாவின் அப்பா மரணம், இரயில்வே ஸ்டேஷன், கோடை நாள், குடும்பத்தின் ஞாயிறு என்று ஏராளமான சுற்றுச்சூழலை விவரிக்கும் விதம் காட்சிகள் அப்படியே நம் கண்முன் விரிகின்றன. அப்பா லஞ்சம் வாங்குவது கிடையாது. தன் கொள்கையில் தீவிரமாயிருக்கிறார். அதுவே அவரைச்சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இந்தப் பின்னணியின் காரணமாய் அப்பாவின் சாவு சாலை விபத்தில்லையோ, ஜோடிக்கப்பட்டு செய்த கொலையோ என்று சந்தேகிக்கிறாள் அகிலா.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது ஆங்கிலப்புத்தகத்தைப்படிக்கும் உணர்வே எழுவதில்லை. தமிழ் புத்தகம் படிக்கும் உணர்வே எழும். அதற்குக்காரணம் எளிய ஆங்கிலம் மட்டுமல்ல, கத்தயின் களம் தமிழ்நாடு என்பது மட்டுமல்லாது பாத்திரங்கள் எல்லோருமே பெரும்பாலும் மிகச்சாதாரணமாக நாம் சந்திக்கும் தமிழ்ப்பெண்களே. 'கரு' வேண்டுமானால் கனமானதாய் இருக்கலாம். ஆனால், மொழி ஒரு தொடக்கநிலைப் பள்ளி மாணவனுக்கும் புரியக்கூடியது.

முக்கிய கிளைக்கதையான சரசா மாமியும் மகள்கள் மற்றும் சக பயணிகளான பெண்களின் தனிக்கதைகள், சிறுசிறு கிளைக் கதைகள் பற்றியெல்லாம் எழுதினால் கிட்டத்தட்ட முழுநாவலையும் கொடுத்ததுபோன்ற தோற்றம் வரக்கூடிய அபாயம் இருப்பதால், இங்கு அவற்றின் உள்ளே போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நாவலின் முக்கிய பகுதிகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நாவலாசிரியர், கதை மாந்தரின் இயல்புக்கேற்றவாரு மொழியை மாற்றிக்கொள்வது ரசிக்கும் படியுள்ளது. அகிலா உட்பட எல்லோரது கதையும் படர்கையில் கூறப்பட்டிருக்கிறது. மரிக்கொழுந்து மற்றும் மார்கரெட் ஷாந்தி ஆகியோரது கதைகள் மட்டும் தன்மை ஒருமையில் கூறப்பட்டிருக்கின்றன. இதன் சூக்ஷமம் ஆராய்ச்சிக்குரியது என்றே தோன்றுகிறது. மார்கரெடின் மொழியும் ரசாயனம் சார்ந்தது. தன்னைச்சுற்றியுள்ள ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான கெமிகல் பெயர் கொடுத்துப் பேசுகிறார். இது பாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்திற்கு வலுச்சேர்ப்பதுடன் கையோட்டத்திற்கு நகைச்சுவை சேர்க்கவும் செய்கிறது.

காதல் மற்றும் திருமணம் பாதுகாப்பானது என்று ஜானகியும், அவை மாறக்கூடியது என்று மார்கரெட்டும் அகிலாவுக்குச் சொல்கிறார்கள். ஜானகி இரயிலைவிட்டு இறங்குமுன், "எது செஞ்சாலும் ரொம்ப நல்லா யோசிச்சு செய். அதுக்கப்புறமா இறந்தகாலத்தை நினைத்து ஏங்காதே," என்று சொல்கிறார். மார்கரெட், " Just remember that you have to look out for yourself. No one will", என்கிறாள் கடைசியாக இறங்கும்முன்.

அகிலா வளர வளர அவளுக்குத் தன் பெற்றோரிடையே நிலவும் அதீத 'அன்யோன்யம்' அசௌகரியத்தைக்கொடுக்கிறது. ஒரு வித பாதுகாப்பின்மையைக் கொடுக்கிறதாம். The children of lovers are no better than orphans என்கிறார் படைப்பாளி அகிலாவின் மூலம். எத்தனை யோசித்தும் 'இப்படியும் தோன்றுமா என்ன?' என்றுதான் தோன்றியதே தவிர கதாசிரியரின் கூற்று மட்டும் எனக்குப் புரியவில்லை.

வருமானவரித்துறையில் க்ளார்க்காகப் பணியாற்றும் அகிலா பதின்மவயதில் தன் தந்தையை இழந்ததும், குடும்பச் சுமையை ஏற்று தங்கை தம்பிகளுக்கு வாழ்க்கைப்பாதைகளை வகுத்துக் கொடுத்துவிட்டு தன்னைப்பற்றி நினைக்கும்போது வயதாகிவிடுகிறது. அப்பா இறந்ததும் அவரது இலாகாவிலேயே அதே பதவி அவளுக்குக் கிடைத்துவிடுகிறது. அம்பத்தூரிலிருந்து தினமும் ஆபீஸ் போகிறாள் இரயிலில்.

ஆபீஸ் போகும் போது அகிலா கட்டும் கஞ்சிபோட்ட பருத்திப்புடைவைப்பற்றி கூறும் போது நாவலாசிரியர் மிகவும் சுவைபட எழுதுவது-

When she tucked the last pleat in at the waist and flung the pallu over her shoulder, the bottom of the sari hiked up her legs playfully, so that the last thing Pama did before Akhila left home was to crouch at her feet and teach the sari the laws of gravity. Tug, tug, what goes up has to come down and stay there. By evening, the sari had neither the vitality nor the starch to resist the pull of the earth.

மாலைக்குள் வியர்வையிலும் இரயில் கூட்டத்திலும் இடிபட்டுக் கசங்கித் துவண்டுவிடுமாம். இதுபோன்ற லேசான நகைச்சுவை இழையும் இடங்கள் ஏராளமாய் நாவலில் உண்டு.

சின்னத்தம்பி நரஸிம்மன் தானே தேர்ந்தெடுத்த பெண்ணை மணக்க நினைக்கும்போது பெரிய தம்பிக்குப் பெண் பார்க்க நினைக்கிறாள் அகிலா. ஆனால், அவளின் திருமணம் பற்றியோசிக்க யாருக்கும் தோன்றுவதேயில்லை. கடைக்குட்டி பத்மா பெரியவளாகும்போது அகிலாவிடமே பெண்ணின் பெருமையையும் அழகையும் அலங்காரத்தையும் பறைசாற்றும் அம்மா, அகிலாவை ஒரு பெண்ணாகவே நினைக்கத்தவறிவிடுகிறாள். வீட்டுத் தலைவன் பதவி ஏற்றுக்கொள்ளும் அகிலாவை அவள் அம்மா பேர் சொல்லிக்கூப்பிடாமல் 'அம்மாடி' என்றழைக்க ஆரம்பித்திருந்ததையும் ஆபீஸில் 'மேடம்' என்றழைப்பதையும், வீட்டில் தங்கை தம்பிகள் 'அக்கா' என்றழைப்பதையும் யோசித்துப்பார்க்கும் 'அகிலா' என்ன ஆனாள்?, 'அகிலாண்டேஸ்வரி என்ன ஆனாள்?' என்றெல்லாம் யோசித்துத் தன்னையே தேடுகிறாள். ஒருமுறை தன் அம்மாவோடு தமிழ் படம் ஒன்றைப்பார்க்கிறாள். படைப்பாளி, 'அவள் ஒரு தொடர் கதை' என்று படத்தின் பெயரைச் சொல்லாமலே படிக்கும் நமக்குப்புரிந்துவிடுகிறது. அன்று முழுவதும் படக்கதாநாயகியில் தன்னைப்பொருத்திக்கொண்டு யோசிக்கிறாள். அம்மாவோ அன்று முழுவதும் பெண்ணின் பார்வைத் தவிர்த்துவிடுகிறாள்.

இரயில் சிநேகமாகத் தொடங்கிக் காதலாகும் அகிலாவின் ஹரியும் கதையில் வருகிறான். அவன் தன் இளைய சகோதரனைவிட இளையவன் என்பதை அறிந்தே காதலிக்கிறாள். மணம் முடிக்கவும் நினைக்கிறாள். வீட்டில் அலுவலக நண்பர்களோடு மைசூர் போவதாய்ச் சொல்லிவிட்டு மஹாபலிபுரம் சென்று அவனுடன் கூடவும் செய்கிறாள். கிளம்புமுன் தம்பியாகவே இருந்தாலும் ஆண் என்ற காரணத்தால் அவனிடம் சொல்லி அனுமதிபெற்றுத்தான் போகவேண்டும் என்று அம்மா சொல்கிறாள். அகிலாவிற்கு இதுபோன்ற தருணங்களில் கோபமும் எரிச்சலும் வருகிறது.

ஹரியுடன் அவள் இருக்கும்போது மற்றவர்களின் கேள்வி ஏந்திய 'பார்வை' அகிலாவை அசௌகரியமாக்குகிறது. இருவரிடையே இருக்கும் வயது வித்தியாசம் பற்றி யோசிக்கிறாள்.பிறகு ஞானோதயம் வந்து, வயது வித்தியாசம் திருமணத்திற்குச் சரி வராது, பிரிவோம் என்று பிரிந்தும் விடுகிறாள். சமூகத்தின் பார்வையைச் சகிக்கமுடியுமா என்று பயந்தே அம்முடிவுக்கு வருகிறாள். ஹரி மட்டும் விடாமல் வருடக்கணக்கில் முகவரி, தொலைபேசியுடன் புத்தாண்டு வாழ்த்தட்டைகளை அனுப்புகிறான். அவனையே நினைத்துக் கொண்டிருந்தாலும், தொடர்புகொள்வதில்லை. பெங்களூருக்குக் கிளம்பும் முன் முகவரி தொலைபேசி எண்ணை மட்டும் எதற்கும் இருக்கட்டும் என்று குறித்துவைத்துக் கொள்கிறாள்.

அப்பாவைப் பறிகொடுத்ததையும், சரசா மாமியின் கணவர் இறந்ததையும் நினைத்துக்கொள்ளும்போது மரணம் குறித்த அலசல் அகிலாவினுள் நிகழ்கிறது. மிகவும் இயல்பாக எந்த ஒரு சாமான்யருக்கும் தோன்றும் விதமாயுள்ளது. மரணத்தின் காரணம் தான் என்ன?, அதன் பின்புலம் என்ன?, அதன் பின்விளைவுகள் என்ன? அம்போவென்று குடும்பத்தை விட்டுவிட்டு விடுதலை பெறுவதுதான் மரணமா? அதுதான் அதன் நோக்கமா? என்றும் பலவாறாகச் சிந்திக்கறாள் அகிலா. மாற்றங்களை ஏற்கமறுக்கும் மனித மனம் பற்றியும் அகிலா சிந்திக்கும்போது தோன்றும்.

அம்மா இறந்ததும் தம்பியோடு திருச்சியிலா இல்லை தங்கையோடு பெங்களூரிலா என்று தன் வாழ்க்கையைத் தொடர குழம்புகிறாள். அம்மாவின் மரணம் அவளின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அவளை அம்பத்தூரிலிருந்து பெங்களூருக்குத் துரத்துகிறது.

ஒன்பது மாதங்களுக்கு தங்கை பத்மாவின் குடும்பத்தோடு வாழ்ந்த பிறகு தனக்கென்று குவார்ட்டர்ஸ் அல்லாட் ஆனதும், அங்கே குடி போக நினைக்கிறாள் அகிலா. பத்மா ஊர் ஊராய் சுற்றவேண்டிய தன் கணவனின் வேலையைக் காரணம் காட்டி கூடவே குடும்பத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். அப்போது அகிலாவிற்கு தான் தனியாக வாழநினைப்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், பத்மா அகிலாவின் நலனுக்காகத்தான் அவர்கள் அவளோடு வசிப்பதாய் சொல்லிக்கொண்டு திரிகிறாள். பல இடையூறுகளிடையே அகிலா சகித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பத்மா தான்தான் அவளைச் சகித்துக் கொள்வாய்ச் சொல்லிக்கொள்கிறாள்.

சந்திராவின் மகள், நாராயணனின் அக்கா, ப்ரியாவின் பெரியம்மா, மூர்த்தியின் மச்சினி என்று மற்றவர் சார்ந்தே இருந்துவரும் தன் முகவரியில் அகிலா சலிப்பு கொள்கிறாள். தன்னை யாரேனும் தனி மனுஷியாக, முழுமனுஷியாகப் பார்க்கமாட்டார்களா என்று ஏங்குகிறாள்.

ஒரு நாள் ஷாப்பிங்க் செய்யும்போது தன் பால்ய சிநேகிதி கற்பகத்தைச் சந்திக்கிறாள். அவள் கணவனை இழந்தபின்னும் பூவும் பொட்டுமாய் இருப்பதைப் பார்க்கிறாள். கற்பகம் தான், அகிலாவைத் தனியே வசிக்கச் சொல்லித் தூண்டுகிறாள். 'மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்' என்று கவலைப்படுவதை நிறுத்து என்கிறாள். " Happiness is choosing one's own life: to live it the way one wants. Happiness is knowing one is loved and having someone to love. Happiness is being able to hope for tomorrow," என்று அகிலாவின் மனதில் பதியும்படி சொல்கிறாள்.

வீட்டில் இந்தப் பேச்சை எடுக்கும்போது தான் புது வீடு வாங்க நினைப்பதாய்ச் சொல்கிறாள் அகிலா. பத்மா மீண்டும் அகிலாவோடு ஒட்டிக்கொள்ள தன் கணவனின் குறைந்த வருமானம் மற்றும் இரண்டு மகள்களின் திருமணம் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறாள். பத்மாவின் சுயநலம் அகிலாவுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது. ஆனால், அகிலா இம்முறை மிகவும் உறுதியாக இருக்கிறாள். தம்பி நரஸிம்மன் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் தன் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்றும் கேட்கிறான். பத்மா அகிலாவுக்கு யாரோடோ தொடர்பு என்று கூறி அக்காவிடம் அறை வாங்குகிறாள். பத்மாவின் மௌன யுத்தம் தொடங்கிவிடுகிறது வீட்டில். நாராயணன் மட்டும் அக்கறையும் பயமும் கலந்து பேசுகிறான். சிலரிடம் தனியே வசிப்பதைப்பேசி முடிவெடுக்கச் சொல்கிறான். அகிலாவும் அவனது யோசனையை ஏற்கிறாள்.

அப்போதுதான் அகிலாவின் தேடல் தொடங்குகிறது.

சக பயணிகள் ஒவ்வொருவராய் விடைபெற்று கோழிக்கோடு, கோவை, நாகர்கோவில் என்று இறங்கிவிட, ஒவ்வொருவரின் கதையையும் கேட்டபின் பயணத்தின் முடிவில் உள்ளே தான் தளர்ந்த மாதிரியும், தனக்கென்று வாழவேண்டும் என்ற எண்ணம் தன்னுள் வளர்வதை உணர்கிறாள் அகிலா.

கதையின் முடிவு ஒன்றும் பிரமாதமான எதிர்பாராத திருப்பம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. இருப்பினும், அகிலாவின் தேடல் பயணம் இருக்கிறதே அதுவே சுகமான அனுபவம். நாமும் எதையாவது, குறிப்பிட்டு எதுவுமில்லாவிட்டாலும் பலவித அனுபவங்களையாவது தேடிக்கிளம்பிவிடுவோமா என்றே படிக்கும் நம்மை நினைக்கவைக்கிறது.

சிறுவயதில் அகிலா குடும்பத்தோடு ராமேஸ்வரம் பிக்னிக் போகும்போது மைசூர் பாக், தேங்காய் சாதம், புளியஞ்சாதம், சீடை, முறுக்கு மட்டுமில்லாமல் பச்சைமிளகாய், மாதுளம்பழம் மற்றும் பச்சைக்கொத்துமல்லி போட்ட தயிர் சாதம் என்று நினைவு கூறும் இடங்களில் கூட பேசாமல் தமிழிலேயே எழுதியிருக்கலாமென்றும் தோன்றவேயில்லை தெரியுமா. மொழி அத்தனை அழகாகவும் இயல்பாகவும் பொருந்தியிருக்கிறது. அவ்வகையில் ஆர்.கே.நாராயணனின் ஆங்கிலம் தான் என் நினைவுக்கு வந்தது.

வாழ்வோடு இணைந்த 'ஹிந்து' நாளிதழ், Wordsworth இன் daffodils பூக்களை இகழ்ந்து தமிழ் மக்களின் மல்லிகைப்பூவைப் புகழ்ந்து பேசுவதோடு தினமும் பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளைப் படித்து, மனனம் செய்து வந்து, வகுப்பில் அகிலாவைச் சொல்லச் சொல்லும் தமிழாசிரியர், கோலம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் அதன் கலாசாரப்பின்னணி, ஜவ்வரிசி வடாம் போடும் சரசா மாமி, எம் ஜீ ஆரின் மரணம் மற்றும் அதன் பின்விளைவாய் ஏற்படும் கலவரம்/குழப்பம் போக்குவரத்து நிறுத்தம், அகிலாவீட்டு ஊஞ்சல், மதுரை சுங்குடி சாரி, ஞாயிறுகளில் அப்பாவிற்காக அம்மா செய்யும் கத்தரிக்காய் பஜ்ஜி, அம்மா கட்டிக்கொள்ளும் மடிசார்,மற்றும் பலவிதமான பிராமணக் குடும்பத்திற்கே உரிய வழக்கங்கள் என்று ஆங்காங்கே விரியும் ஏராளமான நுணுக்கங்கள் போதாதா இது எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அப்பட்டமான தமிழ் நாவல் என்று உணர. ஆனாலும், துளியும் நெருடவேயில்லை.

படித்து முடித்ததும் இந்நாவலுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்தமாதிரித் தெரியவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் கவிந்தது.

'Ladies Coupe' by Anita Nair -First published by Penguin Books India 2001

வாசகியாக - ஜெயந்தி சங்கர்

நன்றி: திசைகள் மார்ச் 2005

Monday, March 07, 2005

கல்கி தீபாவளி மலர் 2004



ஒரு பக்கத்தையும் தாவிக்குதிக்காமல் வரிசையாகவே படித்து வந்தேன். நான் படித்த அதே வரிசையில் எல்லாப் படைப்புகளையும் பற்றி சின்னச்சின்ன அறிமுகமாகயிருக்கும் இந்தக்கட்டுரை. ஆனந்தவிகடன் மலரைவிடப் பெரியது. ஒப்புநோக்க நீளத்தில் கல்கி ஒண்ணேகால் பங்கு இருக்கும். அகலத்திலும் அதேபோல ஒண்ணேகால் பங்கு. அதன் அளவிற்கு இதில் ஈர்க்கக்கூடிய வர்த்தக அம்சங்களும் இல்லை. கொஞ்சம் குறைவே. தாளின் தரம் பளபளப்போ வழவழப்போ இல்லாத சாதாரண தரமான தாள். ஏறக்குறைய அதே விலையில் அதே எண்ணிக்கையில் பக்கங்கள்.

அட்டையில் நான்கு ஓரங்களிலும் கடுகளவும் இடைவெளி விடாத முழுப் பரப்பளவிலும் 'வேதா'வின் அற்புத ஓவியம். தனது டிரேட் மார்க் மாலை, இடதுகொண்டை அணிந்துள்ள ஆண்டாள் வலக்கையில் வெண்சங்கும் இடக்கையில் பச்சைக்கிளியும் ஏந்திக்கொண்டு, இடதுபுறம் தலையை சற்றே ஒடித்து குழலூதும் கண்ணனை ஒயிலாகப் பார்ப்பது போல. மிக நளினமான, அதிகம் மஞ்சளும் பச்சையும் சேர்த்த வண்ண ஓவியம். ஆண்டாளின் ஒருகாதில் சங்கு மற்றொரு காதில் சக்கரம் ! இந்த ஓவியத்தின் பின்னணியில் துளசிமாடம், முழுநிலா, கோவில், கோபுரம் என்று சிலவும் இருக்கின்றன. பளிச்சென்ற அட்டைப் படமே மனதில் பச்சக்கென்று பதிந்துவிடுகிறது.

முதல் எட்டு பக்கங்களுக்கு விளம்பரங்கள் இருக்கின்றன. தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்குப் பொருளடக்கம் வருகிறது. அதைத் தொடர்ந்தும் ஐந்து பக்கங்களுக்கு விளம்பரங்கள் தான். முதலில் காஞ்சி மாஹாப்பெரியவரின் படம். சாம்பல் மற்றும் பழுப்பு வண்ணக்கலவையில் அமைந்த ஒரு நிழற்படம். அந்தக் கண்களின் தீட்சண்யம் வழக்கம்போல என்னை என்னவோ செய்தது. ஜெயேந்திரரின் 'விவேக ஒளி பரவட்டும்' ஒரே பக்கம். இது வழக்கமாகச் சொல்லும் தீபாவளிச் செய்தி வகைதான்.

அது முடிந்ததும் அட்டைப் படத்தையட்டிய சுகி சிவம் அவர்களின் 'அதிசய துளசி' கட்டுரை நான்கு பக்கங்களுக்கு. இங்கும் கருப்பு வெள்ளையில் 'வேதா'வின் ஆண்டாளின் வேறு ஓர் ஓவியம் வலப்பக்கத்தை அலங்கரிக்கிறது. ஆண்டாளின் வரலாறு மற்றும் இலக்கியத்தைத் தொட்டு, துளசியின் பெருமைகளைச்சொல்லி விட்டு, ஆண்டாள் இறைவனை அடைய காமயோகத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டது அவளின் சாதனை என்கிறார் கட்டுரையாசிரியர் முத்தாயிப்பாக.

ஜி.ஏ. பிரபாவின் 'சிலபார்வைகள் சில மௌனங்கள்' என்ற கதை (கட்டுரை?!) இரண்டு பக்கங்களுக்குப் போகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்த்தும் ஒரு படைப்பு. கொஞ்சம் மிகைபடச் சொல்லியிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து நான்கு பக்கங்களுக்கு 'கம்யூனிசம் நிலைப்பது ஏன்?' என்ற என். சங்கரய்யாவின் கட்டுரை. இதில் எனக்குப் புரியாதவை நிறையவே இருந்தது.

சுவாமி ரங்கநாதானந்தர் அவர்களின் 'இல்லறத்தில் ஆன்மீகம்' சன்யாசத்தைவிட இல்லறம் எப்படி உயர்வானது என்றுரைக்கிறது. மனு ஸ்ம்ருதியில் 'ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய தலைமுடி நரைத்ததையும், பேரன், பேத்தி முகத்தையும் பார்த்தால் காட்டுக்குப்போய் விடவேண்டும்' என்று சொல்லியிருக்கிறதாம். இப்போதெல்லம் தலைமுடி சீக்கிரமே நரைத்துவிடுகிறது. ஆனால், பேரன் பேத்தியெடுப்பதோ லேட்டாகிறதே, என்றெல்லாம் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. தற்காலத்திற்கேற்றவாறு வாழும் வீட்டையே தபோவனமாக மாற்றிக்கொண்டு வானப்ரஸ்தம் மேற்கொள்ளலாம் என்கிறார் சுவாமிஜி.

விஜயேந்திரர் ஜெயேந்திரரை வாத்சல்யத்தோடு சிரித்துக்கொண்டே பார்க்கும் ஒரு வண்ண நிழற்படம். இதைத் தொடர்ந்து வந்த மூன்று பக்கக் கட்டுரையான 'மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி' என்ற டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் வேளாண்கட்டுரை 'காட்டாமணக்கு காப்பாற்றுமா?' என்ற கேள்வியையு முன்வைத்து விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது. பயனுள்ள கட்டுரைதான். அடுத்து வரும் இரண்டு பக்கங்களில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல்தலைவர்கள் கொண்டாடும் 'தீபாவளிகளை' கருப்பு வெள்ளைக் கார்ட்டூன்களாகத் தெளித்துள்ளார்கள். அரசியல்தான்!

இனியன் அவர்களின் மிக எளிமையான கருப்புவெள்ளை ஓவியத்துடன் ஹிந்தியில் 1960ல் கமலேஷ்வர் எழுதிய 'பாழடைந்த பேட்டை' கதை பிரசுரமாகியிருக்கிறது. சௌரி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கமலேஷ்வரின் கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் அவரைப்பற்றிய சின்ன அறிமுகம் கதை முடியும் நான்காவது பக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். விக்டோரியா மஹாராணியின் காலத்தையும் சுதந்திரம் பெற்ற காலத்தையும் மாற்றிமாற்றித் தொடுகிறது கதை. இந்தப் பக்கங்களில் இரண்டு ஜோக்குகள் மற்றும் கருப்புவெள்ளை புகைப்படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து வரும் ஒரு பக்கம் முழுக்க இரா.சண்முகசுந்தரம் மற்றும் ஸ்ரீஹரி ஆகியோரின் 'க்ளிக்'குகள்.

இருள் நீக்கியான் என்பவரின் 'முத்தங்கி நாதன் !' என்ற குறுங்கட்டுரையில், வருடத்தில் ஆறரைநாட்கள் மட்டுமே ஸ்ரீரங்கம் அரங்கன் அணியும் முத்தங்கியைப் பற்றிய சிறுவரலாறு மற்றும் அதைச் சுத்தம் செய்யும் பணி பற்றியும் கூறுகிறார். வருடத்திற்கு ஒரே ஒருநாள் காண்பிக்கப்படும் கற்பூரப்படியைக் காணத்தவறியதால் 1706 ஆம் ஆண்டு விஜயரெங்க சொக்க நாயக்க மன்னர் எப்படி ஒரு வருடம் அங்கேயே தங்கி கற்பூரப்படியைக் கண்டுகளித்தார், முத்தங்கியையும் ஊருவாக்கிக் கொடுத்தார் என்பது மிகவும் சுவாரசியம். கருப்புவெள்ளையே ஆனாலும் நிழற்படத்தில் முத்தங்கியின் அழகு ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

இரண்டு பக்கங்களுக்கு நீளும் கட்டுரையான 'நவக்கிரஹங்கள் அங்கும் இங்கும்', பௌத்தத்தில் இருக்கும் நவக்கிரஹ மூர்த்திகளின் தோற்றங்களையும் நமது ஹிந்துமத நவக்கிரஹங்களின் தோற்றங்களையும் ஒப்பிட்டு ஒற்றுமை, வேற்றுமைகளை அலசுகிறது. ஹிந்துமத நவக்கிரஹங்கள் கருப்புவெள்ளையிலும் பௌத்தமத நவக்கிரஹங்கள் பலவண்ணங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்புள்ள பூதக்குடி என்னும் புண்ணியத் தலத்தைப்பற்றிய வரலாறை, 'விமானம்' என்னும் தலைப்பில் விஷ்வக்ஸேனன் என்பவர் எழுதியிருக்கிறார். மூலவரின் கருப்புவெள்ளைப் புகைப்படம் ஒன்று கொடுத்திருக்கிறார்கள். இங்கு ராமன் சங்கு சக்கரத்தோடு வில்லும் ஏந்தி லக்ஷ்மியுடன் நிற்கிறான். ஏன்? அதுதான் கதையே. ஜடாயுவுக்கு அந்திமக்கிரியைகள் செய்யவேண்டும் என்று நினைக்கும் இராமன், உடன் சீதா இல்லாமல் எப்படிச்செய்வது என்று நினைத்து, மஹாவிஷ்ணுவாக மாறி லக்ஷ்மியோடு காரியங்களைச் செய்து முடிக்கிறானாம். இதற்கு எளிமையான வண்ண ஓவியம்.

அமரர் கல்கி அவர்களின் 'டாகூர் தரிசனம்' நகைச்சுவையான ஒன்பதுபக்கத்துக்கு நீளும் நீண்ட கட்டுரை. ஷாந்திநிகேதனின் ஆரம்பகாலம், வளர்ச்சி, அதில் ராஜாஜி அவர்களின் பங்கு போன்றவற்றைச் சொல்லிவிட்டு 1940 களின் பிற்பகுதியில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். அப்போதுதான் கல்கி, ராஜாஜியவர்களின் பரிந்துரையின்பேரில் சுமார் ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களை ரசிகமணியவர்களுடன் சேர்ந்து ஷாந்திநிகேதனுக்குக் கொண்டுபோய் கொடுத்துள்ளார். 1947 ல் இந்தக்கட்டுரை பொங்கல் மலர் கல்கியில் பிரசுரமாகியிருக்கிறது. பல சின்னச்சின்ன சுவையான தகவல்கள், சம்பவங்கள் என்று தனக்கே உரிய நடையில் சொல்லியிருக்கிறார் கல்கி. அடுத்து இரண்டு பக்கங்களுக்கு பாரிஸ் நகரின் வண்ணப்புகைப்படங்களும் தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்கு இன்றைய ஷாந்திநிகேதன் வளாகத்தின் புகைப்படங்களும்.

கருப்பு வெள்ளையில் கார்ட்டூன் போன்ற படத்துடன் பிரசுரிக் கப்பட்டுள்ளது ஆரண் யுவராஜ் 'எலியால் வந்த கிலி' என்கிற நகைச்சுவைக் கதை. இந்த இரண்டு பக்கக் கதை பரவாயில்லை, கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. 'உயிர் எடுக்க உரிமை உண்டா?' என்ற சட்டம் தொடர்பான பி.ஹெச்.பாண்டியனின் 4 பக்கக்கட்டுரை அறியாதபல தகவல்களைத் தருகிறது. ஆம்! தனஞ்செய் சட்டர்ஜியின் தூக்குதண்டனையுடன் தான் தொடங்குகிறது கட்டுரை.

தொடர்புடைய வண்ண ஓவியங்களை நான்குபக்கங்களுக்குக் கொண்டுள்ளது சுதா சேஷய்யன் எழுதிய 'அநுபூதி ஆனந்தம்' எனும் 4 பக்கக்கட்டுரை. சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிக அழகு. திருவண்ணாமலையில் ஆட்சி செய்த பிரபுதேவராயன் அருணகிரிநாதரின் மீது பொறாமைகொண்டு அவரை வாதுக்கு அழைத்த சம்பவம், அருணகிரிநாதரின் சந்தச் சிறப்பு, அவரின் கந்தரநுபூதியின் மேன்மை என்று படித்துப் பாதுகாக்கவேண்டிய அருமையான கட்டுரை.

'கீழாநெல்லிக்கு மேலான காப்புரிமை' யினை வலியுறுத்தி, செய்யாவிட்டால் நாட்டுக்கு எந்தவிதத்தில் நட்டம் என்பதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரையினை பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் (சென்னைப் பல்கலைத் துணைவேந்தர்) எழுதியுள்ளார். முகில் 'மரப்பாச்சி' என்ற கவிதை எழுதியுள்ளார்.

அடுத்த ஒருபக்கக்கட்டுரை ந.ச.நடராசன் எழுதிய 'அன்னமய்யா'. இதில் 1408 ஆம் வருடம் பிறந்த ஸ்ரீ அன்னமாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. கர்நாடகசங்கீதப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஸ்ரீ அன்னமாச்சாரியாரைப் பற்றித் தெரிந்திருக்கும். இவரின் மனைவி திம்மக்க அம்மையாரும் சுபத்ரா கல்யாணம் எனும் காவியத்தை எழுதிய தெலுங்கின் முதல் பெண் கவிஞர் என்ற சிறப்புத்தகவல் எனக்குப் புதியது.

விஷ்வக் எழுதிய 'நகரத்தார் நாகரிகம்' ஒருபக்கக் குறுங்கட்டுரை. ஆனால், நான்கு பக்கங்களுக்கு அவர்களின் கலாசார சமூக வாழ்வின் பிரதிபலிப்பாய் அழகிய வண்ணப்புகைப்படங்கள் பளிச்பளிசென்று கொடுக்கப்படிருக்கின்றன. ஜே.எஸ் ராகவனின் 'ஹெல்ப் ஆண்டி' இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் கேள்வி பதில் பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் எட்டு கேள்விகளும் அதற்கு பதில்களும்.

ஹரி பக்தியைச் சிலாகிக்கும் பண்டரிபுரம் பற்றி 'பண்டரிபுரம் ஆகும் கோவிந்தபுரம்' என்ற சுப்ர.பாலன் அவர்களின் கட்டுரை ஸ்ரீஹரியில் காமராவில் பிறந்த புகைப்படங்களுடன் மெச்சும்படி இருக்கிறது. பாண்டுரங்கனைப்பாடும் பஜனைப்பாடல்களையும் 'அபங்க்' என்றறியப்படும் கீதங்களையும் பற்றிப் பிரஸ்தாபிக்கிறது இந்த மூன்று பக்கக்கட்டுரை. 'அபங்க்' என்று படித்ததுமே பாடகி அருணா சாய்ராம் தான் என் நினைவுக்கு வந்தார்!

'அள்ளி அள்ளிப் பருக ஒரு கொல்லி' என்ற அடுத்த கட்டுரை கொல்லிமலையின் சிறப்பை நிறைய கருப்புவெள்ளை நிழற்படங்களின் உதவியோடு மூன்று பக்கங்களில் சொல்கிறது. சித்தர்கள், காளி வனம், கலப்படமிளகு, செம்மேடு என்று பலவறைச் சொல்லி பழமையையும் புதுமையையும்கூடச் சொல்கிறது. ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசுவின் உபயம் இந்தக் கட்டுரை.

அடுத்ததுதான் 'மகளிரும் சிறுவரும்' என்ற பா.ராகவனின் நான்கு பக்கக்கதை. கருப்பு வெள்ளையில் வேதாவின் அழகிய பொருத்தமான ஓவியம். முதியவர் ஒருவர் கண்சரியாகத் தெரியாததால் தவறுதலாக லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் ஏறிவிட்டுப் பிறகு படும் சில அனுபவங்கள், அவரின் சிந்தனை ஒட்டங்கள் என்று மிகக் கச்சிதமான கதை. இவரின் ஆனந்த விகடன் தீபாவளி மலர் கதையைவிட இந்தக் கதையே எனக்குப் பிடித்தது.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/8238

ஸ்ரீ ஹரி எடுத்துள்ள 2 குழந்தைகளின் கருப்பு வெள்ளைப் போட்டோக்கள் கடைசிப் பக்கத்தில் பாதிக்குமேல் அடைத்துக்கொண்டிருக்கின்றன.

'வினாடிகளும் வாழ்வும்' என்ற தமிழவன் அவர்களின் கவிதை. பாடுபொருள் 'வாழ்க்கை' என்றபோதிலும் 'குடை'யைச் சுற்றியே சொல்ல ஆரம்பித்து பாதிக்குமேல் காற்று, நதி என்று தொட்டு இறுதியில் நேரடியாகவே உணர்வுகளைச் சொல்லி முடிக்கும் அவரது பாணி எனக்குப் பிடித்திருந்தது.

பேராசிரியர் அ.சினிவாச ராகவன் அவர்களின் நூற்றாண்டு அக்டோபர் 23, 2004 அன்று தொடங்கியுள்ளதாம். இதையட்டி அ.சீ.ராவின் 'வீடும் வெளியும்' பிரசுரித்துள்ளார்கள். பழைய சிதிலமடைந்த வீட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு கற்பனைச் சிறகை விரித்து பாரதியையும், அவது 'எந்தையும் தாயும்' வரிகளை உயர்த்தி, தேசபக்தியைச் சொல்லும் அவனது பாடல்களையும் பாராட்டிச் சிலிர்த்து, மயானம் வரை போகிறார் அ.சீ.ரா. ஆஹா! எத்தனை அழகான நடை! கடைசி வரியைப் பாருங்களேன். << வீடு கவிஞனுடைய கற்பனையின் மூலம் வெளியாகிவிடுகிறது. இல்லை. வெளி முழுதும் வீடாகவே நம்முடைய வாழ்க்கையின் உயிர்தத்துவமாக மாறிவிடுகிறது>> வீட்டைப் பற்றி உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளவற்றைப் படிக்கும்போது நமது ஹரியண்ணா அவர்களின் 'தம்மக்கள்' கட்டுரையில் வருமே வீடு, அது சொல்லும் கவித்துவம் நிறைந்த செய்தி, அதுதான் நினைவுக்கு வந்தது எனக்கு!

http://www.maraththadi.com/article.asp?id=605

அடுத்தது சில 'கோகுலம் பக்கங்கள்'. சுட்டிகளின் வண்ணப்புகைப்படங்களோடு அவர்களின் தீபாவளிப் பெருமைகள் ! மேலும் இரண்டு பக்கங்களுக்கு எஸ்.சுஜாதாவின் 'அண்டை நாட்டுப் பண்டிகைகள்'. தொடர்ந்து பா. முருகேசனின் 'சிதறி விழுந்த நட்சத்திரங்கள்'

அருண் சரண்யாவின் 'துப்பாக்கி சொல்லாத கதை' யில் கதாநாயகனின் அக்கா தம்பிமேல் அதீத பாசம் வைத்ததால், பொஸசிவ்நெஸ் காரணமாக அவனது காதலியையே கொல்ல முயற்சிக்கிறாள். மர்மக் கதையாக்கம் நல்ல முயற்சி. அடுத்தது. ஜெ. பாக்யலக்ஷ்மியின் 'கலைக்க முடியாத வேஷம்'. பரம்பரையாக தர்மம் செய்தே பழகிய பணக்காரன் நொடிந்துபோய் பிச்சையெடுத்தாலும்கூட வேறொருவனுக்குப் பிச்சைபோடவே நினைப்பான் என்கிறது கதை. பரவாயில்லை.

சௌந்தரா கைலாசம் அவர்களின் 'துருவாசர்' மரபுவகையில் எழுதிய கவிதை. அடுத்தது ஆர். சூடாமணியின் 'தண்ணீர் குடம்'. தண்ணீர் பிடிக்கும் இடத்தின் சச்சரவுகள், வம்புகள் போன்றவற்றை இயல்பாகச்சொல்லும் நல்ல கதை. பெற்றபிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ முதிய தம்பதியர் எப்படி உள்ளூரில் இருக்கும் எளியோரிடம் அன்பாகப்பழகி அவர்களைத் தங்கள் உற்றாராய்ப் பாவிக்கிறார்கள் என்பதே மையக்கருத்து. அவர் டாக்டர். சிகிச்சைக்கு வரும் ஒரு பெண்ணுக்கு இலவசமாக மருந்துகொடுத்து உதவுகிறார். அவளோ தண்ணீர் பிடிக்க அந்த முதிய தம்பதிக்கு உதவுகிறாள்.

அடுத்துவரும் பக்கங்கள் கவிதை மடல் பகுதி. 'கண்ணசைவில்' என்னும் ச.சவகர்லால் அவர்களின் கவிதை மாருதியின் வண்ண ஓவியத்தோடு துல்லியமாகச் ஸ்ருதி சேர்த்துள்ளது. 'வன்முறை' என்ற மருதனின் கவிதை எனக்குப்பிடித்தது. ஏனென்று தான் சொல்லத் தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து 'வாசிப்பு' என்ற மு. முருகேஷின் கவிதை. கடைசியில் 'நிழல்' என்ற பூவை அமுதனின் கவிதை. ஆனந்தியின் 'ஞான சரஸ்வதி' மூன்று பக்கங்களுக்கு விரியும் கலைவாணியின் மேன்மைகளை எடுத்தியம்பும் நல்ல கட்டுரை.

அடுத்து, ஜெயந்தி சங்கரின் : ) 'நாலேகால் டாலர்' கதை வண்ணப்பக்கங்களில், ஜெயராஜின் வண்ண ஓவியத்துடன் 4 பக்கங்களில் பிரசுரமாகியுள்ளது.

கல்கி இதழாசிரியர் சீதா ரவி அவர்களின் 'ஷ்யாம கிருஷ்ணன்' என்று ஒரு கதை. கோபுலுவின் வண்ண ஓவியங்கள் கதைக்கு நல்ல பக்கவாத்தியம் ! பாடகர் ஒருவர், நினைத்தால் திருவையாற்றுக்குக் கிளம்பிச் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்புவார். இவரின் பழக்கம் அவரது மனைவி லலிதாவுக்குப் புதிதல்ல. பசியோடு காத்திருந்து பழக்கம். பக்கத்து வீட்டு தர்மா வந்து அவளின் வாயைப் கிளறி, 'தனிமை' உன்னை வாட்டவில்லையா என்று கேட்டு அவளைப் பேசவைக்கிறாள். அதற்கு லலிதா கூறும் விளக்கமும் பதிலுமே கதையின் ஜீவன். கதை என்று பெரிதாக இல்லாவிட்டாலும் விவரிப்புகள், கதையின் மொத்த உருவம், செய்தியின் உண்மை ஆகியவை எனக்குமிகவும் பிடித்தது.

அடுத்தது 'பார்க்கும் மரங்களெல்லாம்' என்ற மதிவண்ணனின் கவிதை. அடுத்தது சுபா எழுதியது. இது கதையல்ல, கட்டுரை. 'சொல்லச்சொல்ல இனிக்குதடா' என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும், அவரது மார்க்கம் அவர்களிருவருக்கும் கொடுத்த அனுபவம் பற்றியும் கூறி, தியான லிங்கம், தியான வகுப்புகள், அவற்றினால் பெறக்கூடிய பலன்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்கள்.

'மங்கைய மலர்' பக்கங்களில் முதலில் ரேவதி சங்கரன், 'ஆசை ஆசையா', ஓமலேகியம், சுக்கு லேகியம், இங்கி லேகியம் போன்றவற்றைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறார். அடுத்த இரண்டு பக்கங்களுக்கு பாரதி பாஸ்கர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை 'குகையும் மலையும்'. இதில் பெண்கள் அடங்கிய பட்டிமன்ற கோஷ்டி ஒன்று மலேசியாவிற்குப் பயணப்படுகிறது. பத்துமலைக்குச் செல்லும் இவர்களிடையே இந்தியாவிலிருந்து கிளம்பியது முதல் திரும்புவது வரை நடக்கும் தமாஷான உரையாடல்கள், ஏற்பாட்டாளர் பழனிச்சாமி படும்பாடு என்று கொஞ்சம் சிரிக்கவைக்கிறது. பொருத்தமான கார்ட்டூன் சித்திரங்கள் ரசிக்கும்படியுள்ளன.

'சுமை' என்ற சாயா எழுதிய கவிதை சும்மாடு கட்டாமல் சுமைதூக்கிப் போகிறவளைப் பார்த்து கேள்வியுடன் ஆரம்பிக்கிறது. கவிதை நன்று. அடுத்த இரண்டு பக்கங்களுக்கு சைனீஸ் பிரஷ் பெயிண்டிங்க் பற்றி லக்ஷ்மி ராமநாதன் விளக்குகிறார். சிங்கப்பூர், இந்தோனீசியா போன்ற நாடுகளில் வசித்தபோது கற்றுக்கொண்டாராம். அவரது ஓவியங்கள் பார்ப்பவரையும் கற்றுக்கொள்ளத் தூண்டும்வண்ணம் அழகாக இருக்கின்றன. மாண்புமிகு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் 'பெண்ணுக்கொரு நீதி' பகுதியில் இரண்டு பக்கங்களுக்கு ஆணாதிக்க நோக்கு, அதனை வளர்க்கும் ஊடகங்கள் போன்ற எல்லாவற்றையும் சாடுகிறார். உண்மையில் அத்தனையும் நியாயமான விவாதங்களே.

'வானவன் மாதே ஈஸ்வரம்' என்ற தேவமணி ர·பேலின் அழகிய புகைப்படங்களுடன் கூடிய கட்டுரை இலங்கையின் வடமத்தியப் பகுதியில் உள்ள ஆலயத்தைப்பற்றிய வரலாறு பேசும் கட்டுரை. சிதிலமடைந்த நந்தி மற்றும் சிங்களக் கல்வெட்டுப் புகைப்படங்கள் குறிப்படவேண்டியவை. இலங்கை சிலகாலம் சோழர்காலத்தில் இருந்ததாம். 'அவதாரம்' என்ற சு. வேணுகோபால் எழுதிய 5 பக்கக்கதை தம்பதியரிடையே இருக்கக்கூடிய 'ஈகோ' எப்படியெல்லாம் கதாநாயகனை ஆட்டிவைக்கிறது என்று சொல்லி அவனின் மனமாற்றத்தையும் சொல்கிறது. நல்லகதைதான். நடுப்பக்கங்களில் நீள்கட்டம் கட்டி சில ஜோக்குகளைக் கொடுத்துள்ளார்கள்.

'கல்கி அவதாரம் எப்போது?' என்ற பழ.பழநியப்பன் அவர்களின் இருபக்கக்கட்டுரையில் பல தெரிந்த தெரியாத தகவல்களைக் கொடுத்து 'இந்த யுகத்திலே பிறக்கப்போகிற பத்தாவது அவதாரம் நாமே! நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே சேர்ந்துள்ள அரக்கத்தனத்தை எல்லாம் விரட்டிவிட்டு, ஒழித்துக்கட்டிவிட்டு, நம்மைநாமே புதுப்பித்துக் கெள்ளவேண்டும்', என்கிறார். சித்தார்த் எழுதிய 'ஒன்றுக்கும் உதவாதவர்கள்' நகைச்சுவை நாடகம் 4 பக்கங்களுக்கு நீள்கிறது. இது 'மீண்டும்' பாட நினைக்கும் 'பெண்'ணின் கதை. பரவாயில்லை.

ஒருபக்கத்திற்கு காஞ்சிகாமாக்ஷ¢ ( தனுஸ¤) அம்மன் வண்ணப்படம் ! 'ஆயு புவான்' ( ஸ்ரீலங்காவுக்கு வாருங்கள்! ) என்ற சாருகேசியின் கட்டுரை 7 பக்கங்களில் பலபுகைப்படங்களுடன் சுற்றுலாத்துறையின் மொழியோடு கொஞ்சம் வாரலாற்று மொழியும் கலந்து கொடுக்கிறது. பயனுள்ள கட்டுரை. தொடர்ந்து 4 பக்கங்களுக்கு ஸ்ரீலங்காவின் வண்ணவண்ணப் புகைப்படங்கள் !

என்.சொக்கன் எழுதிய 'பொதி' மாருதியின் கருப்புவெள்ளை ஓவியத்துடன் 5 பக்கங்களுக்குப் போகிறது. சின்னப் பெண்குழந்தை எப்படித்தன் அம்மாவின் ஆங்கில மோகம் மற்றும் தேவைக்கதிகமான புறப்பாட நடவடிக்கைகளின் பளுகாரணமாகத் தன் இயல்பான சின்னச்சின்ன ஆசைகளையும் கனவுகளாகவே வைத்துக்கொள்ள நேர்கிறது என்பதுதான் கதை.

'ஓவிய மூவர்' ஸ்ரீனிவாசன், பாலசுப்ரமணியன், நாகேந்திரபாபு ஆகியோரது வாழ்க்கை, ஓவியப்பாணி என்று சொல்லிவிட்டு அடுத்த 2 பக்கங்களுக்கு அவர்களது வண்ண ஓவியங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஓவியங்கள் தான் எத்தனை நேர்த்தி ! 'கோவில் மணி சொன்ன செய்தி'யில் கலைத் தம்பதியர் தாஸ், உஷாவைப் பற்றியது. கணவர் சிற்பி. மனைவி ஓவியர். பொதுவான இவர்களது படைப்புகளின் அம்சம் பிள்ளையார். இரண்டு பக்கங்களுக்கு இவர்களின் அற்புதக் கைவண்ணம்!

திருப்பூர் கிருஷ்ணன் 'கண்ணன் வந்தான்' என்ற தலைப்பில் நீண்ட கவிதை எழுதியுள்ளார். அடுத்து ரம்யா நாகேஸ்வரனின் 'ஒரு துண்டு சாக்லேட்' இருபக்கங்களில் 'டையடிங்க்' இருக்கும் ஒரு பெண்ணின் மனவோட்டங்களைச் சொல்லியிருக்கும் நகைச்சுவைக் கதை. 'திருபுடை மருதூர் அற்புதங்கள்' கட்டுரை, சிற்பங்களின் மிக அழகிய நிழற்படங்களுடன் ஸ்தலவரலாறு சொல்லிவிட்டுச் சிற்பங்களைப்பற்றியும், மூர்த்திகளைப்பற்றியும் சொல்கிறது. திருநெல்வேலியிலிருந்து பக்கமாம் இந்தத்தலம். மு.மாறனின் 'ஜானி' என்ற நாயைப்பற்றிய கதை ஏற்கனவே படித்த சில கதைகளை நினைவூட்டியது.

'நீச்சல் தெரியாத நீச்சல் சாம்பியன்' கௌதம் ராம் எடுத்த நேர்காணல். எண்பத்தைந்து வயதாகும் கோமதி சுவாமிநாதன் அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அவரது நினைவலைகளைத் தொகுத்துள்ளார்கள். நகைச்சுவையாகப் பத்திரிக்கைகளில் எழுத ஆர்வங்கொண்டு இவர் தனது மூன்றாம் படிவ ஆசிரியர் ஒருவரையே பல ஆண்டுகள் கழித்து ஒரு பாத்திரமாக்கி நகைச்சுவைக் கதையெழுதி சுதேசமித்ரனுக்கு அனுப்பிவிட்டார். அவரே எதிர்பாராமல் பிரசுரமானது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதி அனுப்பினாராம். கதைக்கு ஏழு ரூபாய் சன்மானம் வந்ததாம். இன்னும் சுவையான பல சம்பவங்கள் தகவல்கள் உள்ளன.

'ஒற்றுமைக்கு ஒரு விழா' என்ற மாதா அமிருதானந்தமயி தேவியின் கட்டுரையை ஆ.வை.சி.மூர்த்தி தமிழாக்கியுள்ளார். இதில் மாதாஜி 'மன்னிப்போம், மறப்போம்',என்ற தத்துவத்தின் மூலம் பூலோகத்தையே சொர்க்கமாக்கலாம் என்கிறார்.
வாஸந்தியின் 'வாக்குமூலம்' கண்முன் நடந்த கொலைகளைப்பார்த்த பெண்ணைப்பற்றியது. சட்டத்தைத் தட்டி அடக்கிவிட்டுத் தங்களுக்குச் சாதகமாக வாக்குமூலம் கொடுக்கும்படி சொல்கிறது ரௌடிக்கும்பல். அந்தப்பெண்ணும் உயிருடன் இருக்கும் தம்பி மற்றும் அம்மாவையாவது காப்பாற்றிவிட எண்ணி 'வாக்குமூலம்' கொடுத்துவிடுகிறாள்.

ஆர்.சி.ஜெயந்தன் எழுதியுள்ள 'கமல் எம்புட்டு அழகானவன்' என்ற மூன்று பக்கக்கட்டுரை பல நிழற்படங்களோடு கமல்புகழ் பாடுகின்றது. நிறைய தெரிந்ததெரியாத செய்திகள். அவற்றைத்தொடர்ந்து வரும் 4 பக்கங்களில் களத்தூர் கமலிலிருந்து வசூல்ராஜா, ஏன், நிலுவையிலிருக்கும் சரித்திரக்கமல் வரை முக்கிய பல வண்ணப்புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

யுகபாரதியின் 'ஜாதகக் குறிப்பு' கவிதை நன்றாகவேயிருக்கிறது. த. க நீலகண்டன் 'கடன் தீர்க்கும் கடம்பூர்' கட்டுரையை கருப்புவெள்ளை நிழற்படங்களுடனும் தனுஸ¤வின் அழகிய கருப்புவெள்ளக் கோட்டோவியங்களுடனும் தந்திருக்கிறார். பொன்னியின் செல்வன் வரலாற்றுக் களமாக அமைந்துள்ள தேவாரப் பாடல்பெற்ற ஸ்தலமான கடம்பூர் கரக்கோயில் என்றும் வழங்கப்படுகிறதாம். வரலாறு இந்தக்கட்டுரையில் சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

மூன்று வெள்ளிக்கிழமைகளாகப் பிரித்து 'தாஜ் மகால்' கதையை ந.காவியன் எழுதியுள்ளார். ஷாஜஹான் மும்தாஜ் கதைதான் என்றாலும் ரசிக்கும்படி எழுதியுள்ளார் கதாசிரியர். 'அன்பின் ஈரம்' கட்டுரை, ரன் இவன் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ள புகைப்படக்கலைஞர் சண்முகசுந்தரம் பற்றியது. ஒருபக்கமேயானாலும் புகைப்படங்களோடு சுவாரஸ்யமாயிருக்கிறது. அடுத்துவரும் 4 பக்கங்களிலும் இவரின் கலைக்கண்ணோடு வறுமையைச் சொல்லும் புகைப்படங்கள். கேவாக் கலரில் அழகாக இருக்கின்றன.

'கிளியே கிளியே' பொன்மணி வைரமுத்துவின் கவிதை. மனசாட்சியைத் தான் கிளியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளார் என்று நான் புரிந்துகொள்கிறேன். நான் தவறாகவும் இருக்கலாம். கவிதை புதுமாதிரி நன்றாகவேயிருக்கிறது. மருதனின் 'லவ்வரை லவ்வுவது எப்படி?' என்று இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் போட்டிருக்கிறார்கள்.

'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நெடுங்கதையை 11 பக்கங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதில் சிறப்பம்சம் என்றால், லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்த 'திக்கற்ற பார்வதி' திரைப்படத்தின் ஸ்டில்களைக் கருப்பு வெள்ளையிலும், கோபுலுவின் பொருத்தமான வண்ண ஓவியங்களையும் மாற்றி மாற்றி ஆங்காங்கே கொடுத்திருப்பதுதான். நான் இன்னும் முழுவதும் படித்து முடிக்காத இந்தக்கதையின் கடைசிப் பக்கத்தில் (இது மலரின் கடைசிப்பக்கமும்கூட) பாதிப்பக்கத்துக்கு பழனி.இளங்கம்பன் அவர்களில் 'எழுதாக்கவிதைகள்' என்னும் கவிதை வெளியாகியுள்ளது. மிக எளிமையான கவிதை. அதிகம் முதிர்ச்சியில்லை.

வெளிநாடுகளில் தீபாவளி மலர்களைப் படிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்காக மலர் முழுவதையும் சுருக்கமாகவேயானாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட எண்ணித் தான் விளம்பரப்பக்கங்கள், ஜோக்ஸ் தவிர மற்றவற்றைத் தொட்டிருக்கிறேன்.

(நிறைவு)

thanks:
marathadi e groups
marathadi.com

Friday, February 25, 2005

ஏழாம் சுவை

தமிழர்களிடையே அறியப்படும் உறைப்பு, துவர்ப்புச் சுவைகளையும் சேர்த்து சுவைகள் ஆறு உண்டு. இனிப்பு, கசப்பு, கரிப்பு, புளிப்பு, காரம் மற்றும் துவர்ப்பு ஆகியவைவையே அவை. அறுசுவை சரி, இதென்ன ஏழாம் சுவை?! ம்,. இருக்கிறதே.

உலகளவில் புளிப்பு, இனிப்பு, உப்பு (கரிப்பு) மற்றும் கசப்பு மட்டும் சுவைகளாகக்கொள்கிறார்கள். அதன்படி இது ஐந்தாவது சுவையாக இருந்தாலும் நமக்கு இது ஏழாம் சுவை தான்.மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) எனப்படும் MSG.

'அஜினோமோடோ' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவே உப்புபோன்ற ஒரு பொருளின் பெயர் என்றே பலரும் நினைக்கின்றனர். அஜினோமோடோ என்பது சும்மா ஒரு ப்ராண்ட் (brand name) தான். உண்மையில் அது மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) என்னும் பொருள். இதை ஒரு இரசாயனம் என்றே இத்தனை நாட்களாக நினைத்துவந்தேன். ஆனால், இது கரும்பு அல்லது பீட் ரூட் போன்றவற்றிலிருந்து பெறப்படும் சர்க்கரைப்பாகைப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிறது. இதை 'பீர்' (beer), வைன்( wine), வினீகர் (vinegar) போன்றவற்றைப் போலவே புளிக்க வைத்துத் (fermentation) தயாரிக்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் மோனோசோடியம்க்ளூடமேட் (MSG) வெள்ளை நிறத்தில் சர்க்கரை, உப்பு போன்று இருக்கும். இது நீரில் கரையக்கூடியது. மோனோசோடியம்க்ளூடமேட் 78.1% க்ளூடமேட், 12.3 % சோடியம் மற்றும் 9.6 % நீர் ஆகியவற்றைக் கொண்டது. உணவில் சமைக்கும்போதோ சமைத்தபிறகோ இதனைச் சேர்த்து உணவின் சுவையைக் கூட்டுகிறார்கள். டின்களில் அடைக்கப்பட்ட உணவு, உறைய வைக்கப்பட்ட உணவுகள், திடீர் நூடில்ஸ் போன்றவற்றிலும் உலகெங்கும் உணவகங்களிலும் உபயோகிக்கிறார்கள்.

சிறுவர்களில் பலர் மெக்டோனால், கெண்டகி, பிட்ஸா ஹட், சைனீஸ் போன்ற உணவகங்களின் உணவிற்கு அடிமையாகும் நிலையைப்பார்க்கும்போதெல்லாம் தோன்றும். ஏதோ ஒரு விதத்தில் இவர்களைக் கவரும் பொருள் அதில் சேர்க்கப்படுகிறது என்று. இவ்வகை ·பாஸ்ட் ·புட் வகை உணவுகளிலும் வேறு சில உணவுகளிலும் இந்த மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) சேர்க்கிறார்கள்.

க்ளூடமேட் இருவகைப்படும். ஒன்று புரதத்துடன் இணைந்துள்ள (bound)க்ளூடமேட் ஒருவகை. இணையாது (free) தனித்திருக்கும் க்ளூடமேட் இரண்டாம் வகை. இதில் இரண்டாவது வகைதான் உணவிற்குச் சுவையைக் கூட்டும். இது காய்கறிகளில் பெரிதும் காணப்படுகிறது.

க்ளூடமேட் இயற்கையாகவே உணவில் இருக்கிறது. இறைச்சி, முட்டை, மீன், காய்கறிகள், பாலாடைக்கட்டி(cheese) போன்றவற்றில் இது இருக்கிறது. மனித உடலில் 1.4 kg தசைகளிலும், மூளை, சிறுநீரகங்கள் போன்ற பிறபாகங்களிலும் பரவலாகக்காணப்படுகிறது. தினமும் சுமார் 41 கிராம் உடலில் உற்பத்தியாகி அது பல்வேறு உடலியக்கங்களுக்குச் செலவிடப்படுகின்றது. இயற்கையாகவே உணவிலிருக்கும் இது தினமும் நம்மால் சராசரி 17கிராம் உட்கொள்ளப் படுகிறது. இதுதவிர உணவில் செயற்கையாகச் சேர்க்கப்படும் MSG சுமார் 0.35- 3 கிராம் வரை சேர்கிறது. தினமும் சுமார் 14 கிராம் க்ளூடமேட் மலம், சிறுநீர், வியர்வை போன்ற உடல் கழிவுகள் வழி வெளியேறுகிறது.

இது சுவைக்கு மட்டுமில்லாமல் வாசனைக்கும் உபயோகிக்கப்படுகிறது. உணவின் முழுச் சுவையையும் வாசனையையும் இது வெளிக்கொணர்வதாக நம்பப்படுகிறது. உணவுண்ணும் சுகத்தைக்கூட்டி பசியைக்கூட்டுவதோடு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது என்கிறது அஜினோமோடோ நிறுவனம்.

1908 ஆம் ஆண்டு ஜப்பானிய இம்ப்பீரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ப்ரொ·பெஸர் கிகுனே இகிடா என்பவர் 'கோம்பு' என்ற கடல் களை(sea weed)யிலிருந்து முதல்முதலாக க்ளூடமேட் எனும் பொருளை ஆராய்ந்து அறிந்து வெளியுலகுக்கு எடுத்து அறிமுகப் படுத்தியிருக்கிறார். அன்றிலிருந்து உணவின் சுவை மற்றும் மணம் கூடுவதற்கு இது ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் 'சூப்' செய்வதற்குப் பெரும்பாலும் உபயோகிக்கப் பட்டுவருகிறது. உணவகங்களில் இதன் உபயோகம் பற்றிய செய்தி ரகசியமாகவே இருந்து வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தான் இது பகிரங்கமாக அறியப் பட்டிருக்கிறது. க்ளூடமேட்டை ஜப்பானியர்கள் 'உமாமி' என்றழைக்கிறார்கள்.

ஜப்பானியர்களைப் பொருத்தவரை இனிப்பு, புளிப்பு, கரிப்பு மற்றும் கசப்பைத் தொடர்ந்து 'உமாமி' ஐந்தாவது சுவையாகிறது. இயற்கையன்னை நம் நாக்கின் உணர்வை (taste buds) இவ்வகைச்சுவைகளின் சமச்சீரான கலவையை ருசிக்கும் படியமைத்துள்ளாள். பிட்ஸா மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளில் பாலாடைக்கட்டி (சீஸ் - cheese ) அதிகம் சேர்க்கப்படுவதும் ·பெரெஞ்ச் ·ப்ரைய்ஸ் (french fries), பர்கர் (burger)போன்றவற்றில் தக்காளிசாறை (tomatoe sauce) ஊற்றிக்கொள்வதும்கூட அந்தச் சமச்சீரான சுவையைக் கொண்டுவரத்தான். எப்படி இனிப்பு கார்போஹைடிரேட்டையும், கசப்பு நச்சுத்தன்மையையும் உப்பு தாதுப்பொருள்களையும் உணவில் நமக்கு உணர்த்துகிறதோ அதேபோல உமாமி அல்லது க்ளூடமேட் 'புரதம்' (protien) உணவில் இருப்பதைக் காட்டுகிறதாம். இதற்குக்காரணம் க்ளூடமேட் உணவிலுள்ள புரதத்திலிருக்கும் அமினோ ஆசிட்டுடன் இணைந்துள்ளது. அமினோ ஆசிட்டினால் ஆனா புரதம் சதைகளுக்கு மிகமுக்கியம்.

தக்காளி, பாலாடைக்கட்டி, 'மஷ்ரூம்' (mushrooms) எனப்படும் காளான் போன்ற பல உணவுப் பொருள்களில் க்ளூடமேட் நிறைந்துள்ளது. பழங்கள் இயற்கையாகப் பழுக்கும்போது அதிலிருக்கும் க்ளூடமேட் கூடுகிறது. அதனால்தான் மரத்திலேயே பழுக்கும் பழங்களுக்கு ருசியதிகம். பசும்பாலைவிட தாய்ப்பாலில் பத்துமடங்கு இயற்கையான க்ளூடமேட் இருக்கிறது.

புளிக்கவைத்த (fermented) மீன் இறைச்சி மற்றும் காய்கள் அதிக சுவையுடையதாய் பல வருடங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஜப்பானின் 'ஷோட்சுரு'( shottsuru), பர்மாவின் 'ங்கான்- ப்யா -யே'( ngan-pya-ye) , ·பிலிபைன்ஸ் 'படிஸ்'(patis), ரோம் நகரின் 'கரும்'(garum), தாய்லந்தின் 'நம் ப்ளா'(nam pla), வியெட்நாமின் 'nuoc mam tom chat', போவ்ரில், வெஜிமைட், மார்மைட் மற்றும் வோர்செஸ்டர்ஷையர் சாஸ் (sauce) போன்றவை இதற்குச் சிறந்த உதாரணங்கள். இவை தவிர சோயா சாஸ், பட்டாணி, பழுத்த தக்காளி போன்றவற்றிலும் க்ளூடமேட் ஏராளமாய் இருக்கிறது.

ஒரு தேக்கரண்டி (3.8g)MSG யில் 467mg சோடியம் இருக்கிறது. உப்பைக்குறைக்க நினைக்கும் மக்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள்.மோனோ சோடியம் க்ளூடமேட் (MSG/Monosodium Glutamate) எனப்படும் MSG ஒரு உப்பு இல்லை. ஆனாலும் கூட மோனோசோடியம்க்ளூடமேடை சிறிதளவு உபயோகித்தாலே உணவில் 30-40% உப்பைக் குறைக்க முடியும். ஆனால், 0.1-0.8% தான் உணவில் இது சேர்க்கப்படவேண்டும். அதற்கு மேல் அதிகமானாலும் உணவின் சுவை குன்றுமே தவிர கூடவேகூடாது.

இயற்கையாக இருக்கும் க்ளூடமேட்டைப் போலவேதான் உற்பத்திசெய்யப்படும் க்ளூடமேட்டும் செய்யப்படுகிறது. உணவை கெட்டுப்போகாமல் வைத்திருக்க இது உதவுவதில்லை. சிலர் அப்படி நினைக்கிறார்கள். தவிர இதை உணவில் சேர்த்துக்கொண்டால் ஒவ்வாமை வரும், முடி உதிரும், ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கெடுதல், தலைவலி வரும் போன்ற எண்ணங்கள் நிலவுகின்றன. இவை விஞ்ஞானரீதியாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை. மனிதக் குடலுக்குத் தேவையான இயங்குசக்தி க்ளூடமேட்டிலிருந்து தான் பிரதானமாகக் கிடைக்கிறது.

மிகவும் அதிகமான ஆய்வுகட்குட்படுத்தப்பட்ட உணவுகளில் ஒன்றே MSG. அமெரிக்க உணவு மற்றும் மருந்து அலுவலகம் (U.S. Food and Drug Administration) 1958 ஆம் ஆண்டிலிருந்து இதனை பொதுவாய் பாதுகாப்பானது (Generally Recognized as Safe (GRAS)) என்கிறது. இதை சர்க்கரை, மிளகு, வினீகர் மற்றும் பேகிங் பௌடர் போன்றதே என்று வரையறுக்கிறது. இது தவிர, 1991ல் உலகச்சுகாதார நிறுவனம் (WORLD HEALTH ORGANISATION (WHO)), 1992ல் JECFA(The Council on Scientific Affairs of the American Medical Association) எனப்படும் அறிவியல் மற்றும் மருந்துக் கழகம் மற்றும் 1995ல் (The Federation of American Societies for Experimental Biology) FASEB எனப்படும் MSG யின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

பழங்கள், காய்கறிகள், பாலாடைக்கட்டி, பால், டொமேடோ சாஸ், காளான்கள், நூடில்ஸ், சைனீஸ் மற்றும் அசைவ உணவுகள் பலவற்றிலும் இருக்கும் இந்த ஏழாவது சுவையை இதுவரை அதுவும் ஒரு 'சுவை' யே என்று அறியாமலேயே நம்மில் பலர் சுவைத்து வந்திருக்கிறோம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லை?!

அன்புடன் ------ஜெயந்தி
---------------------------------------------------------


thanks:
marathadi e groups
marathadi.com


----------------------------------------------------------

கட்டுரைக்கு பின்னூட்டமாக ரமேஷ் அப்பாதுரை அவர்கள் எழுதியது-----

நன்றி ஜெயந்தி. முன்பு ஒரு கட்டுரையில் சுவைகள் ஆறு என்றாலும் அவைகள் ஏழாக இருக்கவேண்டும் என அனுமானித்து மரத்தடியில் கேட்டு
எழுதியிருந்தேன். கட்டுரையின் அடிப்படை நம் புலன்கள் உணர்வது எல்லாம் ஏழு வகைகளாக பிரிக்கலாம் என்பதே. ஏழு ஒலிகள்,ஏழு ஒளிகள் .ஏழு சுவைகள் என.... இதனை மேலும் வகைப்படுத்தினால் அவைகள் மேலும் 12கூறுகளாக இருக்க கூடும் என்பதே அந்தக்கட்டுரை.அதன் அடிப்படை ஒரு திருக்குறள்...

சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்ற ஐந்தின்
வகை தெரிவன் கட்டே உலகு
-(திருக்குறள்)

சுவைத்தல்,பார்த்தல்,தொட்டு உணர்தல்,கேட்டல்,முகர்தல் இந்த ஐம்புலன்களை ஆராய்ந்து அறிந்தவன் உலகை அறிந்தவனாகிறான் என்பதாக இந்த குறளின் விளக்கமாக நான் எடுத்துக்கொள்கிறேன். அப்படியானால் இந்த ஐம்புலன்களின் மூலம் மனிதன் என்ன செய்கிறான் என்பதனை இன்றைய விஞ்ஞானம் அறிந்த காரணிகள் மூலம் விளக்கமளிப்பதே இக்கட்டுரையாகும்.

இந்த ஐம்புலன்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சுவைத்தல் ஏழு - புளிப்பு, இனிப்பு, உரைப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவைகளை நாம் உண்கிறோம். அறுசுவை எனக்கூறிப் பிட்டாலும் ஏழாவதாக ஒரு சுவையும் இருக்க வேண்டும். இதுவே அந்தக்கட்டுரையின் வரிகள்

அன்புடன்
ரமேஷ் அப்பாதுரை


-----------------------------------------------------------
என்னடா இது மூளையைப்பதிக்கும் என்றெல்லாம் சொல்கிறார்களே, இந்தப்பசங்க (my sons) ரெண்டும் கொஞ்சமும் கேட்காமல் சாஸ் என்ன, நூடில்ஸ் என்ன என்று ஒரு கைபார்க்கிறார்களே என்று ஆராயவே இணையத்தை மேய்ந்தேன். ஆராய்ச்சியில் அறிந்தது, MSG மூளையையோ இல்லை வேறு எந்த உறுப்பையோ பாதிப்பதாக விஞ்ஞானப்பூர்வமாய் இன்னமும் நிரூபிக்கப் படவில்லையாம். இதுவே என் தேடல் கொடுத்த பதில். நான் அறியாது இல்லை படிக்காது விட்டுப்போன சங்கதிகள் இருக்கலாம். யாரும் அறிந்தவர்கள் அறியத் தந்தால் நன்றியுடையவளாவேன்.

-------------------------------------------------------------


------ஜெயந்தி சங்கர்

Wednesday, February 02, 2005

மலேசிய மகுடம்


க்வாலலம்பூர் நகர மையத்தை (Kaula Lumpur ஸிடி ஸெண்டர்) அடைய 'எல் ஆர் டீ' அன்றழைக்கப்படும் விரைவுரயிலில் போகலாம். அங்கிருந்து நடக்கும் தூரத்தில் 'பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம்' . கட்டடத்திற்கு வெளியில் ஒரு பூங்கா இருக்கிறது. அங்கு மெதுவோட்டத்தடம் (jogging track), ஒளியூட்டப்பட்ட ஒரு நீரூற்று, குளம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல் இருக்கின்றன. திங்கள் தவிர மற்றநாட்களில் காலை 8.30 மணியிலிருந்து இலவச நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்படுகின்றன. 1300 டிக்கெட்டுகள் வரை கொடுக்கிறார்கள். 41வது மாடிக்குமேலே போகப் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. வான்பாலத்திலிருந்து பார்த்தால், பள்ளிவாசல்கள், உயர்ரக விடுதிகள் போன்றவற்றைக் காண முடியும். வான்பாலத்தில் ஒரே நேரத்தில் அதிகபேர் போகாதிருக்க நேரக்கட்டுப்பாடு இருக்கிறது. இருப்பினும், நன்றாகப் பார்த்து ரசிக்கும் நேரம் நிச்சயம் நமக்குக் கிடைத்தேவிடுகிறது.

க்வாலலம்பூரை தலைநகராகவும், கலாசாரத் தலைமையகமாகவும், வணிக மையமாகவும் உலகுக்கு அறிவிக்கும் ஓர் உயர்ந்த கட்டமைப்புடைய கட்டடத்தைத்தான் அர்ஜெண்டீனக் கட்டடக்கலை வல்லுனர் செஸர் பெல்லியிடம் மலேசிய அரசாங்கமும் பெட்ரோநாஸ் நிறுவனமும் வேண்டினர். வல்லுனர் பணிபுரிவது ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கீழ். சிகாகோவின் 'சியர்ஸ் டவரை'விட உயரமாக இருக்கவேண்டும் என்ற நோக்கங்கள் எதுவுமே யாருக்கும் அப்போது இருக்கவில்லை. ஆனால், திட்டமிட்டு வரைபடம் தயாரித்த செஸர் பெல்லியே எதிர்பாராத அளவில் கட்டுமானத்தில் தனித்துவத்தையும் 'உலகின் ஆகஅதிக உயரமான' கட்டடம் என்றபெருமையும் 'பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம்' 1996 ஏப்ரல் 15 அன்றே பெற்றுவிட்டது.

இதன் வடிவமைப்பை திட்டமிட்டு வரைபடமாகக் கொடுக்க 1991 ஆம் ஆண்டு ஜூலையில் 8 கட்டுமான நிறுவனங்களிடம் கேட்கப்பட்டது. அது அனைத்துலக கட்டுமானவடிவமைப்புப் போட்டியாகவே உருவெடுத்தது. தனித்தவம் வாய்ந்த க்வாலலம்பூர் நகரின் வாயிலாக தோன்றக்கூடிய நவீன கலைநயத்தோடு கூடிய கட்டட அமைப்பையே எதிர்பார்த்தனர். மலேசியாவின் இறந்தகாலம் மற்றும் எதிர்காலங்களைப் பிரதிபலிப்பதாகவும் வரும்காலத்தில் மலேசிய அடையாளத்தோடு க்வாலலம்பூரின் சின்னமாகவே திகழும் என்று செஸர் பெல்லி அப்போதே நம்பிக்கையோடு தெரிவித்திருந்தார்.

இரண்டு கோபுரத்திற்கும் தனித்தனி கட்டுமான நிறுவனங்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருகுழுக்களுக்குமே 300 மீட்டருக்குமேல் உயரக்கட்டடவேலையில் முன் அனுபவம் இல்லை. ஆரோக்கியமான போட்டியுடன் திறம்பட உழைத்திருக்கின்றனர். நினைத்த செலவில் குறித்த நேரத்தில் முடிக்கவேண்டிய சவால் இருந்தது. 37 மாதங்கள் ஆயிரக்கணக்கானோரின் கடுமையான உழைப்பில் நினைத்ததைவிடச் சீக்கிரமே கட்டுமானப்பணிகள் முடிந்திருக்கின்றன.

அஸ்திவாரத்திற்கு நிலத்தைத் தோண்டும் பணி 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதுவரையில் மலேசியாவில் பயன்படுத்தாத முறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. தோண்டுவதற்கு பைலிங்குடன் ரா·ப்ட்டிங்க்கையும் இணைத்துச் செயல்பட்டனர். ஒவ்வொரு கோபுரத்தின் கீழும் 32,550 டன் எடையுள்ள கிரேட் 60 ஜல்லிக்கலவை (காங்கிரீட் ) இடப்பட்டுள்ளது. 60-115 மீட்டர் நீளங்களில் 104 பாரெட் பைல்களும் 4.5 மீட்டர் தடிமனுள்ள ரா·ப்டும் அஸ்திவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மாத இடைவெளியில் மார்ச் 1994 முதல் கோபுரத்திற்கும் அதனை அடுத்து இரண்டாவது கோபுரத்திற்கும் அஸ்திவாரப்பணிகள் தொடங்கியது. 300,000 மெட்ரிக் டன் எடையுள்ள கோபுரத்தைத் தாங்கும்படி 21 மீட்டர் ஆழமுள்ள அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. 75 அடி நீளமும் 75 அடி அகலமும் உள்ள அஸ்திவாரத் தூண்களும் உபயோகிக்கப் பட்டுள்ளன. அஸ்திவாரப்பணிக்கு மட்டுமே ஒருவருடம் எடுத்தது.

1998 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட 1,483 அடி உயரம் கொண்ட 'பெட்ரோநாஸ்' கோபுரங்களைக் கட்ட 36,910 டன் இரும்பு (ஸ்டீல்) தேவைப்பட்டது. இது 3000 யானைகளைவிட அதிக எடை ! இந்த இரட்டைக்கோபுரத்தில் இருக்கும் 32,000 ஜன்னல்களை ஒருமுறை துடைத்துச் சுத்தம் செய்யவே ஒரு மாதமெடுக்கிறதாம். 1.6 பில்லியன் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்தப் உலகப்பிரசித்திபெற்ற இரட்டைக்கோபுரம் 'எண்ட்ராப்மெண்ட்' என்ற படத்தில் வந்திருக்கிறது. 14,000-22,000 சதுரஅடி ஆபீஸ் இடம் ஒவ்வொரு தளத்திலும் உள்ளது. இது கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலப்பரப்பில் அடங்கும் பரப்பளவு ஆகும்.

சாதாரணமாக 30 அல்லது 40 கிரேட் ஜல்லிக்கலவைதான் கட்டடங்களுக்கு உபயோகிக்கப்படும். ஆனால், மெலிந்த அதே சமயம் உயரமான உருவம் கொண்ட இக்கட்டடத்தைக் கட்ட பெரும்பாலும் உயருறுதிகொண்ட உயர் ரகமான 80 கிரேட் ஜல்லிக்கலவையை (காங்கிரீட் ) உபயோகித்துள்ளனர். முக்கிய ஜல்லிக்கலவைச் சுவரை எழுப்பியபிறகு 16 அடுக்குக் கம்பி மற்றும் பலகை (ஸ்லாபுகள்) அமைக்கப்பட்டு, பிறகு தரை மற்றும் மாடிப்படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.

கட்டடக்கலைக்கே ஓர் அதிசயமான இந்த இரட்டைக் கோபுரக்கட்டடங்கள், எட்டுமூலை கொண்ட நட்சத்திர அமைப்பைக் கொண்டுள்ளன. இரண்டு சதுரங்கள் ஒன்றன்மீது ஒன்று வைத்தால் வருமல்லவா அத்தகைய எட்டுமூலை நட்சத்திரம் ! இது இஸ்லாமிய கட்டமைப்பு வகையில் வருகிறது. நட்சத்திரவடிவம் கட்டடத்தின் உயரம் வரை தொடர்கிறது. இது பாரம்பரிய மலேசிய இஸ்லாமிய வடிவத்திலிருந்து எழுந்த யோசனை. உறுதியையும் நளினத்தையும் பிரதிபலிக்கும் வகையில், இஸ்லாமிய வாஸ்த்துமுறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரத்தின் ஒரு முனை கூர்மையாகவும், அடுத்தமுனை மழுங்கலகவும், அதற்கடுத்தமுனை மறுபடியும் கூர்மையாக என்று மாற்றிமாற்றியமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததுமே வண்ண அலங்கார விளக்குகளுடன் இந்த புதுவிதவடிவமும் கூடத்தின் தரை மற்றும் சுவர்களில் தெரியும். 88 தளங்களையுடைய இந்த இரட்டைக்கோபுரம் 42வது தளத்தில் இடையில் ஒரு பாலத்தைக் கொண்டிருக்கிறது. இரட்டைத் தளங்களைக் கொண்ட இந்தப்பாலம் 192 அடி நீளம் கொண்டது. இது இரண்டு கட்டடங்களுக்கிடையே மக்களுக்குப் போக்குவரத்து வசதியை அளிக்கிறது. கட்டடங்களில் இருக்கும் இரண்டு வானம்பார்த்த மொட்டைமாடிகளை இணைக்கிறது. நகருக்குச் செல்லும் வாயிலைப்போன்ற தோற்றம் வேறு ! 493 பாகங்கள் கொண்ட இந்தப்பாலம் கொரியநாட்டில் சாம்சங்க் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. முழுவதும் பொருத்திச்சரிபார்த்து, பின்னர் மீண்டும் பாகங்கள் கழற்றப்பட்டு கப்பலில் க்வாலலம்பூருக்கு அனுப்பப்பட்டது.

தயாராகக் கட்டிமுடித்த நிலையில் இந்த வான்பாலம் கொரியநாட்டிலிருந்து 1995 மேமாதம் கட்டடத்தளத்தை அடைந்தது. அதே வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அதனை உயரத் தூக்கும் பணி தொடங்கியது. இத்தகைய பாலங்கள் பற்றிய ஐம்பதாண்டு ஆய்வறிக்கைகளில் காணப்படும் எடைதாங்கும் திறன், காற்று போன்ற வானிலை மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை ஒருவருடகாலம் அமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளில் பலவிதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காகவே VSL ஹெவி லி·ப்டிங்க் என்னும் தேர்ந்த நிறுவனம் ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பாலத்தை 41வது மாடிக்குத்தூக்கிப் பொருத்தும் பணியையும் மேற்கொண்டது.

இரட்சத பாரந்தூக்கியின் (கிரேன்) உதவியால் மேலேதூக்கி உரிய இடத்திற்குக்கொண்டுபோனதும் கண்ட்ரோல் கம்பிவடத்தின் (கேபில் -cable) உதவியோடு 29 வது மாடியில் இருக்கும் பேரிங்குகளில் பொருத்தப்பட்டது. மூன்றுநாட்களில் உரிய இடத்தில் பொருத்தப்பட்டது. 41வது மாடியில் இருக்கும் 750 டன் எடைகொண்ட இந்தப் பாலத்தைத்தாங்குவதற்கு 29வது மாடிகளில் இரண்டு கால்கள் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலும் 42.6 மீட்டர் நீளமும் 60 டன் எடையும் கொண்டவை. இந்தக்கால்கள் தங்கள் இருமுனைகளிலும் பால்பேரிங்குகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று நெருங்கியும் விலகியும் அசைந்துகொடுத்து எடையைத் தாங்குகிறது. வான்பாலத்திலிருந்து கீழேபார்ப்பது புத்தம்புது அனுபவம். அங்கிருந்து கட்டடத்தைப்பார்த்தால், அது வெள்ளிக் கோபுரமாய் மின்னுகிறது. புகைப்படப்பிரியர்கள் விதவிதமாகச்சுட்டுத் தள்ளலாம்.
73 வது தளம் வரை வடிவத்திலும் தளத்தின் தரத்திலும் மாற்றமே இல்லை. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுவரை கட்டுமானப்பணியில் பெரியசவால்கள் இருக்கவில்லை. அதன்பிறகுதான் அளவு குறைந்துகொண்டே வரும். நிழலுக்கென்று கட்டடத்தின் வெளிச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் நிழற்சட்டங்கள் (சன் ஷேட்கள்) வெள்ளிநாடா (ரிப்பன்) கட்டிய அழகான தோற்றத்தைக்கொடுக்கின்றன. 1994ல் தொடங்கிய பூச்சுப்பணிகளின் போதுதான் 83,500 சதுரமீட்டர் இரும்புத் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) தகடுகள் மற்றும் 55,000 சதுரமீட்டர் கண்ணாடிகள் பயன்படுத்தி செஸர் பெல்லியின் கற்பனையில் உதித்த 'சூரிய ஒளியில் மின்னும் வைரமாக'க் கட்டடத்தை உருவாக்கியுள்ளனர்.

உச்சி கோபுரத்தைப்பொருத்தும் வேலையைத்தவிர மீதிவேலைகளெல்லாம் பிப்ரவரி 1996ல் முடிந்தது. அதன்பிறகு இரண்டு கட்டடங்களுக்கும் ஒருமாதத்தில் கோபுரமும் பொருத்தப்பட்டு, பூச்சுவேலை தொடங்கியது. 1996 ஜூனில் அது நிறைவுற்றது. எண்களிடப்பட்ட 24 பகுதிகள் இரட்சத பாரந்தூக்கியின்(கிரேன்) மூலம் ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டபிறகு வெவ்வேறு அளவிலான 14 வளையங்களை ஏற்றிக் கடைசியில் அலைவாங்கியையும் (ஆண்டெனா) ஏற்றிப் பொருத்தியுள்ளனர். உச்சிக்கோபுரம் செஸர் பெல்லியின் கற்பனையின் அடிப்பையில் மின்னும் வெள்ளி வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதன்மேல் விழும் ஒளி நேர்கோட்டில் பிரதிபலிக்கும். இது கட்டடங்களை இன்னும் அதிக உயரமாகக்காட்டுகிறது.
28 ஆகஸ்ட் 1999 அன்றுதான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. வாணவேடிக்கைகளுடன் கோலாகலமான விழாவாக அது அமைந்தது. நாலுகால்ப் பாய்ச்சலில் இருந்த நாட்டின் பொருளியல் வளர்ச்சியையும், அடுத்த ஆயிரத்தில் நாடு சாதிக்கவிருக்கும் இலக்குகளையும் பிரதிபலிக்கும் படியிருந்தது இரட்டைக்கோபுரம். ஆயிரம் வெளிநாட்டு விருந்தினர்கள் கூடியிருந்தனர். பலநிலையிலிருந்தும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் ஜலான் அம்பங்க் மற்றும் ஜலான் பி.ராம்லி ஆகிய சாலைகளில் திரண்டனர். மேலே அண்ணாந்து பார்த்ததில் வந்த கழுத்துவலியையும் பொருட்படுத்தாது கூடியிருந்தனர். கோவில் கும்பாபிஷேகவிழாவைப்போலவே இங்கும் கோபுர வான்பாலத்தில்தானே முக்கியக் கோலாகலம். அங்குதான் லேசர் ஒளிக்கதிர்களால் ஆன அலங்காரங்கள் வேறு. பாலத்திலிருந்து பார்த்தால், க்வாலலம்பூரே கண்முன் விரிகிறது. சிறிய அளவில் தலைகள் மட்டுமே தெரிகின்றன. இரவிலோ மின்விளக்குகளின் சிதறல்களோடு நகரம் காணக் கண்கொள்ளாக்காட்சி ! 2001 செப்டம்பர் 11 வாக்கில் பாதுகாப்பிற்காகக் கொஞ்சகாலம் பொதுமக்களின் பார்வைக்கு மூடிவைக்கப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதமர் டத்தோசிரி டாக்டர். மஹாதிர் மொஹமத் கட்டடத்தைத் திறந்துவைத்தார். வேளாண்மையையும், டின் சுரங்கங்களையும், ரப்பர்தோட்டங்களையுமே நம்பியிருந்த நாடு கடந்துவந்தபாதையையும் அதன் பொதுவளர்ச்சியையும் தொழில்வளர்ச்சியையும் பிரதிபலிக்கும்வகையில் தேசியதினத்தன்று திறந்துவைத்தார். 'A Vision Realized' என்ற ஐந்து நிமிட ஒலிஒளிகளைக்காட்சி நாட்டின் பெருமைகளை நினைவூட்டியது. இருகரங்கள் கோர்த்ததுபோன்ற மின்விளக்காலான சிற்பம் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. முக்கிய மூன்று இனங்களான மலாய், சீன, இந்திய இனங்களைக் குறிக்கும்வகையில் மூன்று துடுப்புகள் போன்ற வடிவங்கள் அதிலுள்ளன. ஒரு மின்விளக்கை அதில் பொருத்தி கட்டடத்தைத் திறந்தார் பிரதமர். இராட்சதத் திரையில் பிரதமரின் கையொப்பம் மக்களுக்குக் காட்டப்பட்டது. விழாவிற்காகவே புகழ்பெற்ற மலாய் கவிஞர் ஏ. சமாட் சையத் எழுதிய கவிதை பெட்ரோநாஸ் ஊழியர் ஒருவரால் வாசிக்கப்பட்டு, பள்ளிக் குழந்தைகளின் ஆடல்பாடலுடன் விழா களைகட்டியது. தேசபக்திப் பாடல்களும் பாடப்பட்டன.

மதம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக நம்பப்படும் இந்த உலக அதிசயத்தின் உரிமையாளர் க்வாலலம்பூர் ஸிடி ஹோல்டிங்க்ஸ் செண்டிரியன் பெர்ஹாட் என்னும் நிறுவனம். இரட்டைக்கோபுரத்தின் பெரும்பகுதியை பெட்ரோநாஸ் என்னும் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவலகங்கள் நிறைத்துள்ளன. எஞ்சிய பகுதிகள் மட்டுமே மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சில வர்த்தகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பிரபல மைக்ரோச·ப்ட் நிறுவனம் இரண்டாவது கட்டடத்தின் 30 வது மாடியில் இயங்குகிறது.
864 இருக்கைகளைக்கொண்ட பெரிய அரங்கம், அங்காடிக்கடைகள், பெட்ரோநாஸ் அறிவியல்கூடம், ஓவியக் காட்சிக்கூடம் போன்ற பல்வேறு இடங்களையும் கண்டுகளிக்கலாம். கட்டடம் கட்டப்பட்டுள்ள பரப்பளவு 341,760 சதுர அடிகள். ஆனால், உள்ளே 88 தளத்திலும் சேர்த்து மொத்தப்பரப்பளவு எட்டு மில்லியம் சதுர அடிகள். இந்தக்கட்டடத்தில் ஒரு பெட்ரோலியம் அருங்காட்சியகம், ஒரு பள்ளிவாசல், நூலகம், ஒரு இசைக் (சிம்·பனி) கூடம், 4500 கார்களை நிறுத்தக்கூடிய பாதாள வாகனநிறுத்துமிடம் ஆகியவையுமுண்டு. இங்கு இருக்கும் இசைக்கூடத்தில் 'க்ளைஸ் பைப் ஆர்கன்' என்னும் இசைக்கருவியிருக்கிறது. இது 4740 குழல்களையுடையது.

சிகாகோவின் 'சியர்ஸ் டவரை'விட 33 அடிகள் உயரம் அதிகம் கொண்டிருக்கிறது இந்த இரட்டைக்கோபுரம். ஆனால், இதிலும் ஒரு சர்ச்சையுண்டு. 88 வது தளத்திற்குப்பிறகு உருண்டைவடிவ உச்சிகோபுரம் மற்றும் அலைவாங்கி (ஆண்டெனா) இருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டால்தான் பெட்ரோநாஸ் இரட்டைக்கோபுரம் உலகின் மிக உயரமான கட்டடமாகும். ஆனால், உபயோகிக்கக்கூடிய தளரீதியில் பார்த்தால், அதற்கு அந்தப்பெருமை கிடைக்காது என்பதே இவர்கள் வாதம். சிகாகோவின் 'சியர்ஸ் டவரின்' உபயோகிக்கப்படும் தளம் பெட்ரோநாஸின் உபயோகிப்படும் தளத்தைவிட உயரம் அதிகம் என்கிறார்கள் இவர்கள். ஆனால், இதே சர்ச்சையாளர்கள் இந்த இரட்டைக்கோபுரத்தின் கட்டுமானம் மற்றும் அழகை மனந்திறந்து பாராட்டுகிறார்கள்.
குறைந்த இடத்தில் நிறைந்த சேவையாற்றும் நோக்கில் இந்தக் கட்டடத்திலிருக்கும் 76 மின்தூக்கிகளில் 58 இரட்டைத்தள மின்தூக்கிகள். ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு மின்தூக்கிப் பெட்டிகள் இருக்கும். ஒவ்வொன்றும் 26 ஆட்களை ஏற்றிச்செல்லும். கிட்டத்தட்ட 3.5 முதல் 7 வினாடிகளில் மேல்தளத்தையடையக் கூடியவை இந்த மின்தூக்கிகள்.

அழைபேசி (இண்டர்காம்), எச்சரிக்கை மணி கொண்ட பாதுகாப்புவலை(செக்யூரி அலார்ம்), மூடிய மின்சுற்று(க்ளோஸ் சர்க்யூட்) தொலைக்காட்சிவழிப் பாதுகாப்பு, நிழற்படங்களை அடையாளம் காணக்கூடிய சாதனங்கள் போன்றவற்றைக்கொண்ட குறும்பரப்பு வலையமைப்பு (LAN-local area network) எனப்படும் அதிநவீனப் பாதுகாப்பு வசதிகள் இரட்டைக்கோபுரத்தில் உண்டு. இது தவிர, குளிசாதன இயக்கக் கட்டுப்பாடு, ஒளிக்கட்டுப்பாடு, தீச்சம்பவங்கள் போன்றவற்றிலிருந்து மக்கள் தப்பிக்க உயிர்ப்பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவையும் சிறந்தமுறையில் செய்யப்பட்டுள்ளன. புகையைக் கட்டுப் படுத்தும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு தளம் தீயினால் பாதிக்கப்பட்டால், மற்ற தளங்களுக்குப் பரவிவிடாமல் தகுந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்தி தீ பரவாது தடுக்கப்படும்.

ஏர்கண்டிஷனுக்கு மட்டும் 30,000 டன் குளிர்விக்கப்பட்ட நீர் உபயோகப்படுத்துகிறார்கள். நீர்மறுபயனீட்டுமுறை கையாளப்படுகிறது. இதற்கு இயற்கை எரிவாயுகொண்டு இயக்கும் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தளவாரியாக இந்த குளிர்சாதனத்தை இயக்குவதால், இயந்திரக் கோளாறுகளோ, மின்தடையோ ஏற்பட்டாலும் துல்லியமாகக்கண்டறிந்து சீர்செய்யவும் பழுதுபார்க்கவும் முடியும். மொத்தக் கட்டடமே பாதிப்படையும் சாத்தியத்தையும் தவிர்க்கமுடிகிறது. மின் இணைப்புகள் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கேற்றாற்போலவே வடிவமைத்திருக்கிறார்கள். ஒளிக்காட்சிக் கருத்தரங்கு(வீடியோ கான்·பரன்ஸிங்க்), தொலைபேசி, மின்மடல் போன்ற எல்லா வசதிகளும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பத்தின் ஆகநவீனங்கள் எல்லாவற்றையும் இங்கு காண முடியும்.

விண்ணைத்தொட நினைக்கும் மனிதனின் ஆர்வம் உலகெங்கிலும் உள்ள உயரமானபல கட்டடங்களில் தெள்ளத்தெளிவாகத் புலப்படுகின்றது. வடிவமைக்கவும் திட்டமிடவுமே பெருமுயற்சியும் கற்பனைத்திறனும் தேவை. கட்டிமுடித்துக் கண்முன்னே நிறுத்துவது என்பது மிகமிகப்பெரிய சவால். இதுவரை மனிதன் சாதிக்காத சாதனையாகியிருக்கிறது மலேசியாவின் இரட்டைக்கோபுரமான 'பெட்ரோநாஸ் ட்வின் டவர்'. கட்டட அமைப்பின் ஆகப்புதிய தொழில்நுட்பங்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்த நவீன அதிசயம். மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் கட்டமைப்பாக அமைந்துள்ளது. உயரமான கட்டடங்களில் ஏறிப்பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு ஒருவேளை உயரத்தினால் பெரிய 'அனுபவம்' கிடைக்காது போகலாம். ஆனால், வெயிலிலோ, மின்விளக்கிலோ பனிக்கட்டியினால் செய்யப்பட்டதுபோன்று மின்னும் இரட்டைக்கோபுரங்கள் மனதைக்கொள்ளை கொள்ளத்தவறாது.

அதிவேகவிமானம் (ஜும்போ ஜெட்), நுண்சில்லு (மைக்ரோச்சிப்), செயற்கை இருதயம் என்று அறிவியலும் தொழில் நுட்பமும் ராக்கெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் உலகில் கட்டட அமைப்பில் அற்புதம் நிகழ்த்துவது மிகப்பெரும் சவாலாக இருந்தது சமீபத்தில். அந்தச் சவாலை செஸர் பெல்லியின் 'பெட்ரோநாஸ் இரட்டைக் கோபுரம்' வென்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.

----- ஜெயந்தி சங்கர்

அமுதசுரபி- நவம்பர்-2004/திண்ணை