என் நூல்கள் சில...
வல்லமை தாராயோ

Friday, April 20, 2007

குறிப்புகள்




குறிப்புகள்


மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் பல மாநிலங்களில் கல்வி பெற்று, திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் இயற்பியல் பட்டம் பெற்றவர். 1995 ஆம் வருடத்திலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள இவர் 1990 முதல் சிங்கப்பூரில் பொறியாளரான கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ருசியுண்டு. ஓர் எழுத்தாளராகத் தான் உருவாக முக்கிய காரணம் தனது தொடர்ந்த வாசிப்பும் அதற்கு உறுதுணையாக அமைந்த சிங்கப்பூரின் நூலகக் கிளைகளுமே என்பார். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவர் சிங்கப்பூர் வாசிகளின் இருப்பையும் வாழ்வையும் சிறுகதைகளாகவும் நெடும்புனைவுகளாகவும் எழுவதன் மூலம் அவற்றை உலக அனுபவங்களாக்குவார். தனது சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரின் ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் சிங்கப்பூரின் தமிழர்களின் முகத்தை அதன் அத்தனை எழில்களுடனும் நிரந்தரமாகப் பொறித்து வருகிறது. இலக்கியத்தில் தொடர்ந்தும் இயங்கி வரும் இவர், தான் எழுதுவதுடன் தமிழிலக்கியத்தில் சிங்கையின் எதிர்கால எழுத்தாளர்களுக்கான இடத்தை மேலும் ஆழமும் அகலமுமாக்கி வருகிறார். சிங்கப்பூர் மக்களை, குறிப்பாக தமிழ்ச் சமூகத்தை வெறும் தகவல்களாகவும் புள்ளி விபரங்களாகவும் அறிந்து வந்த உலகத் தமிழ் வாசகனை பிரபஞ்ச வாழ்வனுபவமாக உணர வைப்பதே இவர் எழுத்தின் வெற்றி. சிறுவயது இடப்பெயர்வுகளூடாக கற்றதும் இழந்ததுமான வாழ்வனுபவம் வாய்க்கப் பெற்று, பின்னர் சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்தினை உள்வாங்கிக் கொண்டு இவர் எழுதியிருக்கும் டிசம்பர் 2007 வரையிலான 13 நூல்களும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வையைத் திருப்பக் கூடியவையும் கூட. நிறைய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் மற்றும் நாவல் போன்றவற்றை எழுதியுள்ள இவர் ஏராளமான பரிசுகள் வாங்கியுள்ளார். 2006ஆம் வருடம் பிரசுரமான 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006'ல் சிறப்புப் பரிசு பெற்றது. உலகளாவிய வாசகர்களைப் பெற்றுள்ள இவர் சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட இவரின் எளிய எதார்த்த நடைக்காகப் பரவலாக அறியப் பெறுபவர். பல்வேறு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சில சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சில தொகுப்புகளில் இவரின் சிறுகதைகள் இடபெறவுமுள்ளன. இவரின் சிறுகதைகள் வேற்று மொழியில், குறிப்பாக ஹிந்தியில் மொழிபெயர்ப்பும் காணவிருக்கின்றன. பாரதிய வித்யா பவனின் நவ்னீத் ஹிந்தி டைஜஸ்ட்டில் ஜனவரி 2008 இதழில் இவரின் 'திரிசங்கு' சிறுகதை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.







வாசிப்பு


சிறுவயதில் இலக்கியச் சூழல் அமைவது பெரிய ஒரு வரம் என்று நினைக்கும் இவருக்கு சிறுவயதில் நூல்கள் படிக்கத் தூண்டும் ஊக்கங்கள் இருக்கவில்லை. இவருக்கு அதில் கொஞ்சம் வருத்தமுண்டு. பாடப்புத்தத்தோடு உறவாடியதுடன் முடிந்துவிட்டிருந்தது. ஆனால், பொறியாளரான தந்தையார் விகடனிலிருந்து பக்கங்களைக் கிழித்துத் தான் படிக்கச் சேகரித்த அகிலனின் 'சித்திரப்பாவை' மற்றும் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' போன்ற மிகச்சிலவற்றை மட்டும், அதுவும் மேம்போக்காக மிகச் சிறுவயதில் வாசித்திருக்கிறார். அதைப்பற்றி விவாதிக்கும் சூழல் இவருக்கு இருந்திருக்கவில்லை. கல்கி அவர்களின் சரித்திரப் படைப்புக்களை விட அவரது சமூகக் கதைகளையே அதிகம் விரும்புவார். தேவனின் நகைச்சுவை பிடிக்கும். தி.ஜானகிராமன் சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன், ஆதவன், அ.முத்துலிங்கம் போன்றவர்களின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். இவர்கள் தவிர வாஸந்தியின் ஆணாதிக்கத்தை அழகாகச் சொன்ன 'அம்மணி' பிடித்திருந்தது. ஜெயமோகனின் குறுநாவல்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் 'தாவரங்களின் உரையாடல்', சுராவின் 'ஆண்கள் பெண்கள் குழந்தைகள்', மற்றும் திஜாவின் மோகமுள்'/ செம்பருத்தி, அ.முத்துலிங்கத்தின் 'மகாராஜாவின் ரயில்வண்டி' போன்ற பல நூல்களை பலமுறை மீள்வாசிப்பு செய்வது இவர் வழக்கம்.


தொடக்கம்


சிங்கப்பூர் வந்தபுதிதில் (1990) கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தார். அப்போது தான் வகைவகையான எழுத்துக்கள் பரிச்சயமாகின. ஆனால், சின்னக் குழந்தையின் திணறல் இருந்து கொண்டேயிருந்தது. எல்லாமே பிடித்த மாதிரியும், எல்லாவற்றையும் பறூத்துவிட வேண்டும் என்ற தீவிர ஆர்வமும் எழுந்தது. சிங்கையின் நூலகங்கள் இவரின் வாசிப்புப் பசிக்கு நல்ல தீனி வழங்கின. 1990ல் ஆரம்பித்தது இவரின் எழுதும் முயற்சி. சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு. வை. திருநாவுக்கரசு அவர்கள் இவரின் முதல் சிறுகதையை வாரயிறுதியில் பிரசுரித்த பிறகு தொலைபேசியில் அழைத்து ஊக்கப் படுத்தியுள்ளார். தமிழ் முரசு, முன்பிருந்த சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர் போன்றவை எழுத்துச் சோதனைகளுக்கு நல்ல தளங்கள். திண்ணை, திசைகள் தவிர சாமாசார், இ-சங்கமம், தமிழோவியம், தட்ஸ் தமிழ், பதிவுகள் நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்களிலும் இவரின் சிறுகதைகள் /கட்டுரைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. உள்ளூர் அச்சிதழ்களில் தொடங்கி, இணையத்தில் தொடர்ந்து, ஜூன் 2004 முதல் தமிழகத்தின் பிரபல அச்சிதழ்களில் எழுத ஆரம்பித்துள்ளார். அது மட்டுமில்லாது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பல வாய்ப்புக்களை இவருக்கு நல்கியுள்ளது. 'முத்தமிழ் விழா'வில் பல போட்டிகளில் பங்கு பெற்றுப் பல பரிசுகளும் பெற்றிருந்தாலும், 2001ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை 'நொண்டி' இரண்டாம் பரிசு (S$ 750) பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே கதை 'நுடம்' என்று பெயர் மாற்றப்பட்டு 'சிங்கைச்சுடர்' மற்றும் மின் சஞ்சிகையான 'திண்ணை' போன்றவற்றில் பிரசுரம் கண்டது. இது மட்டுமல்லாது இக்கதையிலிருந்து சில பகுதிகள் அதே வருடம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் மாநாட்டில் திரு.மாலன் அவர்களால் படிக்கப்பட்டு சிலாகிக்கப் பட்டது. சிங்கப்பூரின் நூலகங்கள், தமிழ் முரசு, உள்ளூர் இதழ்களான சிங்கை எக்ஸ்பிரஸ் மற்றும் சிங்கைச்சுடர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தேசிய கலைகள் மன்றம் போன்ற அமைப்புக்கள், களங்கள் மற்றும் போட்டிகள் அமைத்துக் கொடுத்து இவரின் தொடக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன.


பரிசுகள்


சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 1998ல் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 2000 ல் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசும் 2001ல் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற குறுநாவல் முதல் பரிசு (30gm தங்கம்) பெற்றது குறிப்பிடத்தக்கது. முத்தமிழ் விழா 2004 ல் ‘சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்’ மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் 'பொம்மை' கதை இரண்டாம் பரிசு பெற்றது. இதைத் தவிர 'தெளிவு', 'கீரை' போன்ற கதைகள் ஆரம்பத்தில் ஆறுதல் பரிசுகள் பெற்றதுடன் சிங்கை வானொலியில் ரே. சண்முகம் அவர்களால் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன. 'சேவை' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 யில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'மழலைச்சொல் கேளாதவர்' என்ற கதை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக தரவில் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுசிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா 2005) ஊக்கப்பரிசு. தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது 2005-கௌரவக் குறிப்பு- ‘ வேண்டியது வேறில்லை ‘ (குறுநாவல்). கோவை ஞானியின் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி 2005 - ‘கடைசிக் கடிதம்’ முதல் தகுதி. 'தமிழ் நேயம்' அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம். பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் நடத்தும் ''தமிழ் நேயம்' அமைப்பின் ஏற்பாட்டில் திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 2006ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் 'சொல்லாத சொல்' என்ற சிறுகதை முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற (அமைப்பின் ஒன்பதாவது) தொகுதியில் பிரசுரம். 2006 சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.


அச்சு இதழ்கள்


அமுதசுரபியின் ஜூன் 2004ல் வந்த 'உலகநாடுகளில் கல்வி' , செப்டம்பர் இதழில் 'ஆடை மொழி' ஆகிய கட்டுரைகளுக்கு ஆய்வு செய்ததும் கிடைத்த பின்னூட்டங்களும் மிகுந்த திருப்தியளித்தன. அமீர தமிழ்ச் சங்கம் ஆண்டு மலரில் (2004) 'புரட்சி'க் கவிஞர் என்ற கட்டுரை பிரசுரம் கண்டுள்ளது. திசைகள் August இதழில் பிரசுரமாகி, பின் Fetna 2004 நியூஜெர்ஸி ஆண்டிதழிலும் பிரசுரமான 'ஈரம்' என்ற சிறுகதை ஏராளமானோரின் மனதை நெருடியது தெரியவந்தது. நிறைய மின்மடல்களும் பின்னூட்டங்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிறைத்தன. டூந்தக் கதையைப் படித்தவர்களும், தமிழோவியம் மின்னிதழில் ஆகஸ்டு 2004 வெளியாகத் தொடங்கிய கட்டுரைத் தொடர் படித்தும் அச்சிதழாசிரியர்கள் கதை மற்றும் கட்டுரை கேட்டு இவரை அணுகினர். அக்டோபர் 2004 'உயிர்மை' இலக்கிய இதழில் வந்த 'ஆவிகள் புசிக்குமா?' என்ற கட்டுரை வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே தொலைபேசி மற்றும் மின்மடல்களின் வழி பல பின்னூட்டங்களைக் கொணர்ந்தது. 'தென்றல் முல்லை' வாஷிங்டன் (2004 -நான்காம்) காலாண்டிதழில் 'நுடம்' என்ற (மீண்டும் பிரசுரம் கண்டு) சிறுகதையும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இதே கதை ஸ்விஸ் நாட்டின் தமிழ் FM 'நிலா'வில் 25/26-09-05 அன்று 'இசையும் கதையும்' ல் ஒலிபரப்பானது. 2004 ஜூலையில் கல்கி தீபாவளி மலருக்கென்று கதை ஒன்றைக் கேட்டு கல்கி ஆசிரியர் எழுதியிருந்தார். மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் அடைந்து, உடனே 'நாலேகால் டாலர்' என்ற கதை எழுதியனுப்பி, 4-5 நாட்களில், 'மிகச் சிறப்பாக இருக்கிறது', என்று பதிலும் வந்தது. 2004 நவம்பர் 8 வெளியான தீபாவளி மலரில் இக்கதை பிரசுரமாகியுள்ளது. (பாரிஸ்)பெண்கள் சந்திப்பு 2005 மலரில் 'தையல்' (பெண்ணே நீ அக்டோபர் 05 மறுபிரசுரம்) என்ற கதையும், ந்யூயார்க்கின் 'த தமிழ் டைம்ஸ்' (the tamil times) டிசம்பர் 2004 இதழில் பெரானாகன் என்ற கட்டுரையும், அமுதசுரபி பிப்ரவரி 2005இதழில் 'பேஜர்' என்ற கதையும் ஜனவரி 2005 அமுதசுரபி இதழில் வெற்றித் திருமகள் பகுதிக்கு நேர்காணலும், உயிர்மை மார்ச் 2005 இதழில் 'ஹினா மட்சுரி' என்ற கட்டுரையும், 'தென்றல்' வட அமெரிக்க இதழில் (மார்ச் 2005) 'அம்மா பேசினாள்' என்ற கதையும், கல்கி 13-03-05 இதழில் 'பின் சீட்' என்ற கதையும் பிரசுரமானது. கனடாவின் 'குவியம்' இதழிலும் இவரின் சிறுகதை பிரசுரம் கண்டுள்ளது. ஜூன் 2005 'உயிர்மை' இதழில் 'கருணைக் கடவுள் குஆன்யின்' என்ற கட்டுரை பிரசுரமானது. 'சேவை' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 ல் பிரசுரத்துக்குத் தர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. 'அவள்' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2006 ல் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2006 கல்கி தீபாவளி மலரில் 'நான்கிலக்கம்' சிறுகதை பிரசுரம் கண்டது.


இதுவரை வெளியாகியுள்ள நூல்கள் ( டிசம்பர் 2007 வரை )




சிறுகதைத் தொகுப்புகள்



1. நாலேகால் டாலர்

2. பின் சீட்

3. நியாயங்கள் பொதுவானது

4. மனுஷி



குறுநாவல் தொகுப்பு



5. முடிவிலும் ஒன்று தொடரலாம்



நாவல்



6. வாழ்ந்து பார்க்கலாம் வா



7. நெய்தல்



கட்டுரைத் தொகுப்புகள்




8. ஏழாம் சுவை


9. பெருஞ்சுவருக்குப் பின்னே
- சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்


10. சிங்கப்பூர் வாங்க
- விகடன் பிரசுரம்




ஆய்வு+மொழிபெயர்ப்பு


11. மிதந்திடும் சுரபிரதிமைகள்
- சீனக் கவிதைகள் ஆய்வு+மொழிபெயர்ப்பு+தொகுப்பு(ஆங்கிலத்தினூடாக)




மொழிபெயர்ப்பு



12. சூரியனுக்கு சுப்ரபாதம்



வாழ்க்கை வரலாறு


13. இசையும் வாழ்க்கையும் (காற்றினிலே வரும் கீதம் - எம். எஸ். சுப்புலட்சுமி +சங்கீத பிதாமகர் - செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் +நாத யோகி - மதுரை மணி ஐயர்+நாதப்பிரமம் - அரியக்குடி ராமானுஜ ஐங்கார்)







2006 சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று ( ஜூன்-ஆகஸ்ட்) மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.