Tuesday, February 07, 2006

சந்திர ஆண்டு

உலக மக்கட்தொகையின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சந்திரஆண்டினைப் பின்பற்றுகின்றனர். இதில் சீனர்கள் தவிர, கொரிய ஜப்பானிய மக்களும் கூட அடங்குவர். சீனர்களின் சந்திரப் புத்தாண்டுப் பிறப்பு நமது தை மாத அமாவாசையன்று வரும். சீனப் பஞ்சாங்கத்தையும் நாட்காட்டியையும் வெகுநுணுக்கமாகக் கணக்கிட்டு உருவாக்கியது ஆடம் ஷால் (1591-1666) எனும் அக்கால அரசவை வானியல் வல்லுனர்.



4000 வருடப்பழமை கொண்டது சீன நாகரீகம். ஆகப் பழங்குடியான 'பீங்க் மனிதன்', இன்றைய பேய்ஞ்சின்கின் அருகில் சௌகௌட் என்ற இடத்தில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததற்கான குறிப்புகள் உண்டு. 10000 வருடத்திற்கு முந்தைய காலத்தின் குறிப்பேடுகள் நாடு முழுவதும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன.


இவர்களின் பஞ்சாங்கம் சந்திரனை அடிப்படையாகக் கொண்டபடியால், ஒவ்வொரு சந்திரமாதமும் அமாவாசையன்று தான் துவங்கும். ஆங்கில ஆண்டில் 'லீப்' ஆண்டில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒரு நாளைச் சேர்த்துக்கொள்வதைப் போல, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமாதம் ஒன்றைக் கூடுதலாகச் சேர்த்து அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆங்கில வருடமும் சந்திரவருடமும் சமத்துவத்துக்கு வரமுடிகிறது. வழக்கத்தில் இருக்கும் ஆங்கில ஆண்டைவிட சந்திர ஆண்டு 11 நாட்கள் குறைவானது. ஏனென்றால், சந்திர மாதம் சுமார் 29.5 நாட்களை மட்டுமே கொண்டது. மொத்தம் வருடத்திற்கு 354 நாட்கள். ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைவிட சுமார் 11 நாட்கள் (சில சமயம் 9 அல்லது பத்து) முன்னதாகவே சீனப் புத்தாண்டு பிறக்கிறது. இதை ஈடுகட்டத்தான் 'லீப்' மாதத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தகைய லீப் வருடங்களில் புத்தாண்டு கிட்டத்தட்ட 19 நாட்கள் தாமதமாகப் பிறக்கும்.


கிராமமக்கள் கிழவனின் பரிந்துரைகளின்படியே நடந்தனர். நியான் வரவேயில்லை. அதற்காகத் தான் புத்தாண்டுக்கு முன் இரண்டு வாரமும் பின்னர் இரண்டு வாரமும் கோலாகலம் நீடிக்கிறது இன்றும். புத்தாண்டை 'குவோ நியான்' என்கிறார்கள், நியானைக் கடந்து என்று பொருள்பட. சிவப்பு அலங்காரங்களுக்கும், வெடியோசைக்கும் குறைவேயிருக்காது. சிங்க நடனம் ஆடும் குழுக்களை ஆங்காங்கே பதினைந்து நாட்களுக்குப் பார்க்கலாம். சிங்கத்தின் வாயிற்குள் இருப்பவன் தலையை திறந்து மூடியும், ஆட்டியபடியும் செல்வான். வண்ணமயமான கண்கொள்ளாக் காட்சி இந்த நடனம். பெரிய முரசு வகைத் தாள வாத்தியத்துக்கேற்றவாறு ஆடிக்கொண்டே உயரமான குச்சியின் மீதேறி உச்சியில் வைத்திருக்கும் பணப்பையை எடுக்கும் சாகசமும் நடத்துவார்கள்.



'சௌவாங்க்' என்பவர்தான் சமையலறைக் கடவுள். இவர் நெருப்பைக் கண்டுபிடித்தவர். வீட்டைவிட்டு கடைசி மாதத்தின் 23ஆம் நாள் மேலுலகம் சென்று அக்குடும்பத்தைப்பற்றி சொல்வார். அவர் கொடுக்கும் 'அறிக்கை'யை வைத்துதான் குடும்பத்தின் அடுத்த வருட செழுமை அமையும். ஆகவே, அவரைத் திருப்திப்படுத்தவும், மகிழ்விக்கவும் அச்சமயத்தில் முடிந்ததையெல்லாம் செய்வார்கள் மக்கள். அந்நாளில் இவருக்குப் பலவகையான உணவுவகைகள் படைக்கபடுகிறது. இவர் மீண்டும் புத்தாண்டின் முதல் நாள் குடும்பத்தில் வந்து இணைந்துகொள்வார்.



புத்தாண்டிற்கான ஏற்பாடுகள் எல்லாமே சந்திரவருடத்தின் கடைசி மாதத்தில் துவங்கும். எப்படியும் ஒரு புத்தாடையும் ஒரு புதுக்காலணியும் வாங்கப்படும். வசதியைப்பொருத்து அதிகமாகவோ, விலையுயர்ந்ததாகவோ வாங்குவார்கள். விதவிதமான பலகாரவகைகளும் சமைக்கப்படும். போகிக்கு முதல் நாள் நாம் செய்வதைப்போலவே, புத்தாண்டுக்கு முன்னர் சீனர்கள் பழைய பொருள்கள் முதலியவற்றைச் சுத்தம் செய்து குவித்து எரித்துவிடுவார்கள். இதற்கும் பஞ்சாங்கத்தின்படி நேரம் குறித்துத்தான் செய்கிறார்கள். இவ்வாறு சுத்தம் செய்தபின்னர் நாற்பத்தியெட்டு மணிநேரத்திற்கு வீட்டைக்கூட்டக்கூடாது. அப்படிச்செய்வது, அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கூட்டிவிரட்டுவதாகும். அன்று முழுமையும் கூத்தும் கும்மாளமும் சிரிப்புமாக மகிழ்வுடன் இருப்பார்கள். புத்தாண்டை வரவேற்க 'லேண்டர்ன்' என்றறியப்படும் சிவப்பு விளக்குகளை வீட்டின்முன் பக்கம் தொங்க விடுவார்கள். சர்ப்பம்-சிங்க முகமூடி அணிந்து ஆடும் நடனம் மற்றும் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள். வெடிகள் கொளுத்திக் கொண்டாடுவது தோஷங்களைக் களைவதற்கு. பெரும் ஓசைகளை எழுப்பினால் பேய்களும் துரதிர்ஷ்டமும் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. சிவப்புத் துணியில் கருப்பில் எழுதிய மங்கள வாசகங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்கும். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் முதல் இரண்டுநாட்களும் பொதுவிடுமுறை. சிங்கப்பூரில் பொதுமக்கள் வெடிகள் கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால், மத்தாப்புகள் மட்டும் கொளுத்துகின்றனர். வெடிகொளுத்தும் ஆர்வமுள்ளவர்கள் இதற்காகவே மலேசியாவில் புத்தாண்டைக் கொண்டாடவென்று மூட்டைகட்டிக்கொண்டு கிளம்பிப்போவதுமுண்டு.



'ஸின்யென் தாவ் ஸின்யென் தாவ், தாவ் ஸின்யென் தாவ்ஸின்யென்' என்ற பாட்டுக்களை இவ்விழாக்காலங்களில் கேட்கமுடியும். 'மிகுந்த நலமுண்டாகட்டும்' என்னும் பொருளில், 'கொங்ஸீ ·பா ச்சாய்' என்று சொல்லி ஒருவர்க்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்வார்கள். புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை நெருங்கிய உறவினர் அனவரும் யாராவது ஒரு மூத்த குடும்ப உறுப்பினர் வீட்டில் கூடி விருந்துண்பார்கள். Reunion Dinner என்றறியப்படும் இவ்விருந்தில் வெளியார் கலந்துகொள்ள முடியாது. இரண்டாம் நாளன்று, மணமான பெண்கள் பெற்றோர் வீட்டிற்கு வருவார்கள். புதியதாக மணமானவர்களென்றால், நம்மூர் தலைத் தீபாவளி மாதிரி கணவருடனும், பரிசுப் பொருட்களுடனும் வரவேண்டும். வாங்கிய கடன்கள் அடைக்கப்படும். இன்றிரவு புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்கதவு, சாளரங்கள் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான், பழைய வருடம் வெளியேறும்.



ஒரே குழந்தை பெற அனுமதிக்கப்படும் சீனாவின் குடும்பங்களில் திருமணமான இளம்தம்பதிகளுக்கு யார் வீட்டில் கொண்டாடுவது என்ற குழப்பம் வருகிறது. இருவருமே குடும்பத்தில் ஒரே பிள்ளை எனும்போது, இருவருக்கும் இருவரின் பெற்றோருடன் கொண்டாடும் ஒரே வழிதான். அவ்வாறே பெரும்பாலும் நடக்கிறது. ஒரே பிள்ளையோ பெண்ணோ தன் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருந்து விட்டால், இவர்கள் தனியே கொண்டாடுகிறார்கள்.



அதிகமாக உணவுவகைகள் சமைக்கப்பட்டு, விருந்துக்குப் பிறகு நிறைய மீந்து போகவேண்டும் என்பது ஐதீகம். அப்போதுதான், வருடம் முழுவதும் செழிப்பாக அமையுமாம். முழுமையைக் குறிக்க தலை, வால் மற்றும் காலுடன் கோழி சமைக்கப்படுகிறது. பன்றியும் அப்படியே. நீண்ட ஆயுளுக்காக நூடில்ஸ் சமைக்கப்படும் போது துண்டு படக்கூடாது. ஆவியில் வெந்த அரிசிமாவில் செய்த கொழுக்கட்டை வகைகள் பிரபலம். சந்திரப்புத்தாண்டிற்கு சீனர்கள் ஒருவகை அரிசியிலிருந்து தனிவகை மதுவைத் தயாரிப்பார்கள். 'யீ ஷெங்' என்றறியப்படும் சமைக்காத மீன் சேர்க்கப்பட்ட சாலட் ஒன்று நிச்சயம் இருக்கும். எல்லோரும் சேர்ந்து சாப்ஸ்டிக்குகளால் இதை பிரட்டுவதால் ஐஸ்வரியங்கள் குவியும் என்று நம்பப்படுகிறது. சமையறையில் உள்ள பேழைகள், குளிர்ப்பதனப்பெட்டி முதலிவற்றில் நிறைய உணவுப்பொருட்களை சகட்டுமேனிக்கு வாங்கி அடுக்கிவைப்பார்கள். வீட்டின் வாயிலருகில் ஆரஞ்சுப்பழங்கள் அடங்கிய கூடை அல்லது பாத்திரம் வைத்திருப்பார்கள்.


பெரிய தட்டுகளில் விதவிதமான இனிப்புப் பண்டங்களும், பருப்பு/கொட்டை வகைகளும் இருக்கும். பெரும்பாலும் எட்டு பகுதிகள் கொண்ட தட்டில், நிறைவையும் சுபிட்சத்தையும் காட்டும்படி எட்டு விதபக்ஷணங்கள் வைப்பது வழக்கம். சோயாவில் செய்யப்படும் புதிய தோ·பூ கவனமாகத் தவிர்க்கப்படும். ஏனென்றால், அதன் நிறம் மரணத்தையும் நோயையும் நினைவூட்டுகிறது. இனிப்புப் பூசனிமிட்டாய் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. லைச்சி கொட்டை குடும்பத்திலுள்ள வலுவான உறவையும், தேங்காய் மிட்டாய் ஒற்றுமையையும், கடலைமிட்டாய் நீண்ட ஆயுளையும் குறிக்கிறது. கும்காட் மிட்டாய் தங்கம் மற்றும் செல்வத்தைக்கொணரும். லோங்கன் பலகாரம் ஆண்மக்களையும், தாமரை விதை நிறைய குழந்தைகளையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. உலர்ந்ததோ·பூ மற்றும் மூங்கில் குறுத்து மகிழ்ச்சியையும் செல்வத்தையும், கிங்கோ கொட்டை வெள்ளி உலோகத்தையும், கருப்பு கடற்பாசி ஆரோக்கியத்தையும் கொணரும்.



புதியபுதிய செடிவகைகளை வாங்கி வீட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பார்கள். அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படும் செடிகளும், Feng Shui எனப்படும் சீனவாஸ்து சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் செடிகளும் புத்தாண்டு காலத்தில் வீட்டை அலங்கரிக்கும். மிகவும் அதிருஷ்டம் கொடுக்கக்கூடியதாகக் கருதப்படும் மாதுளம்செடிகளையும் தொட்டியில் வைத்தாவது வளர்ப்பார்கள். ஆரோக்கியத்தின் அறிகுறியான செந்நிறப் பூக்களும் வைக்கப்படும். பொன்னிற சிறுமணிகளை செடிகளிலும் நிலையிலும் புதிதாகக் கட்டுவார்கள். இவை நல்ல செய்திகளைத் தாங்கிவரும் என்பது நம்பிக்கை. புதிய நாட்காட்டிகளை வாங்கி மாட்டுவார்கள். பணப்பையில் பணத்தை நிரப்பி வைத்துக்கொள்வார்கள். சில்லறையாக மாற்றி கத்தைகத்தையாக திணித்துக்கொள்வார்கள். ஏழைகள், சிறுவர்கள், வேலையாட்கள் முதலியவர்களுக்கு சிறிய அளவிலாவது பணம் வைத்து 'அங் பாவ்' கொடுப்பார்கள். குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தானியங்களைப் போட்டுவார்கள்.


மூவுலகங்களிலும் உள்ள தெய்வங்களை வணங்குவது முதல் நாளில். அன்று சிலர் சைவம் மட்டும் உண்பதுண்டு. உற்றார் உறவினர் வீடுகளுக்குப் போய்வருவர். ஆரஞ்சுப்பழங்களை அதிருஷ்டம் மிகுந்ததாகக் கருதுகின்றனர். ஆகவேதான், பெரும்பாலும் சிறியவர்கள் பெரியவர்களின் வீட்டுக்குப்போய் இரண்டு ஆரஞ்சுப் பழங்களைக்கொடுத்து நல்வார்த்தை கூறி வாழ்த்துத் தெரிவிப்பர். ஆரங்சு அளவிலாத மகிழ்ச்சியின் சின்னம். இலையுடன் கூடியது கொடுப்பவர் மற்றும் பெறுபவரிடையே உள்ள உறவின் நிலைத் தன்மையையும், புதுமணத்தம்பதிகளுக்கு சந்ததிகளையும் குறிக்கும். பதிலுக்கு வாழ்த்தி, 'அங் பாவ்' எனப்படும் சிவப்பு உறைகளில் வசதிக்கு ஏற்ப பணம் வைத்துக் கொடுத்து வாழ்த்தி ஆசி வழங்குவர் பெரியவர்கள். சிவப்பு உறையில் கொடுக்கப்படும் பணத்தை சிறார்கள் எதிர்பார்த்திருப்பர். பெரும்பாலும் மணமானவர்கள் சிறார்களுக்கும் மணமாகாதவர்களுக்கும் தான் கொடுக்கிறார்கள்.


இரண்டாம் நாளில் மூதாதையரை வணங்கி, அன்று நாய்களுக்கு தாராளமாக உணவிடுவர். மூன்றாம் நாள், எலிகள் தங்களின் மணமாகாத பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் என்று ஒரு நம்பிக்கை. எனவே, அன்று சீக்கிரமே தூங்கப் போய்விடுவார்கள். மூன்றாம் மற்றும் நான்காம் நாள் மாப்பிள்ளைகள் மாமன் மாமியைச் சென்று வணங்கி ஆசி பெறுகிறார்கள். நான்காம் நாள், சமையலறைக் கடவுளுக்கு உணவுப் படையல்கள் வைப்பார்கள். வீட்டைக்கூட்டி சுத்தம் செய்தால், வாசலிலிருந்து உள் நோக்கிக்கூட்டித் தள்ளி வீட்டின் உள்ளறையில் குமித்து வைப்பர். ஐந்தாம் நாள் கழிந்தபிறகுதான் அக்குப்பையை அப்புறப்படுத்துவர். அதற்குள் வெளியில் கொண்டு கொட்டினால், வீட்டுன் அதிருஷ்டமும் ஐஸ்வரியமும் போய்விடும் என்பது நம்பிக்கை.


ஐந்தாம் நாள் செல்வதிற்கான கடவுள் 'போ வூ'வைத் தொழுகிறார்கள். அன்று யாரும் யார் வீட்டுக்கும் போவதில்லை. அப்படிப்போவது இருவருக்கும் துரதிருஷ்டம் என்பது நம்பிக்கை. ஐந்தாம் நாள், முதல் கட்ட கொண்டாட்டங்கள் முடிவுறும். இந்த முதல் ஐந்து நாட்களும், பேச்சிலும், நடத்தையிலும் மிகக் கவனமாக செயல்படுவாகள். வீட்டிலுள்ள செல்வங்களும், நல்வினைகளும் வெளியேறிவிடக் கூடாதென முதல் ஐந்து நாட்கள் வீட்டைக் கூட்டுவது, கெட்ட வார்த்தைகள், மரணத்தைப் பற்றிய பேசுவது தவிர்க்கப்படும். ஏதாவது பாண்டங்கள் கீழே விழுந்து உடைந்துவிட்டால், உடனே “இந்த வருடம் முழுவதும் சமாதானம் நிலவட்டும்” என்று வேகமாக கூறுவார்கள்.


ஆறிலிருந்து பத்தாம் நாள் வரை நண்பர்கள், சொந்தங்களைக் கண்டு வருவர். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டு முழுவதற்குமான செல்வம், ஆரோக்கியம் வேண்டித் தொழுவதுமுண்டு. ஏழாம் நாள் விவாசாயிகளுக்கான தினம். இன்று மனிதனின் பிறந்தநாளும் ஆகும். இன்று வேளாண்தொழில் செய்வோர் பலவிதபானங்களைச் செய்து தங்களின் திறமையையும், அந்தஸ்தையும் காட்டுவர். இன்றுதான் பச்சை மீன் மற்றும் நூடில்ஸ் உண்கிறார். எட்டாம் நாள், மீண்டும் ஒன்று கூடி விருந்துண்டு களிக்கிறார்கள். நள்ளிரவில் தியேன் கோங் என்னும் கடவுளை வணங்குகிறார்கள். இது வழிபாட்டுக்குரியநாள். பெரும்பான்மையினர் இந்நாளில் சைவ அசைவ பதார்த்தங்களுடன், மது வகையும் சேர்த்து படையல்கள் வைக்கின்றனர். கடவுளையும் மூதாதையரையும் வணங்குவது வழக்கம்.ஒன்பதாவது நாள் பச்சைப்பவள அரசனுக்கான நாள் (Jade Emperor). அன்று படையல் விமரிசையாக இருக்கும். பத்திலிருந்து பனிரெண்டு வரை உற்றார் உறவினர்களை விருந்துக்கு அழைத்து உபசரிக்கிறார்கள். வரிசையாக விருந்துண்ட வயிற்றுக்கு இதமாக பதிமூன்றாம் நாள் பத்தியச் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். பதினான்காம் நாளில் அடுத்த நாள் விளக்கு விழாவுக்குண்டான ஆயத்தங்களில் கழிக்கிறார்கள்.


பதினைந்தாம் நாள் தான் கொண்டாட்டத்தின் இறுதிநாள். அன்று தான், ச்சிங்கே ஊர்வலம் நடைபெறும். குச்சியில் நடப்பது, சிங்க/நாக நடனம், குட்டிக்கரண சாகசவீரர்கள் என்று ஏராளமான வழமைகளுடன், புதுமைகளும் கலந்து நகரின் முக்கிய வீதியில் பெரிய அளவில் நடக்கும். ஸிம்பல் என்றறியப்படும் ரட்சச ஜால்ராக்கள், முரசுவகை தாளவாத்தியங்கள் போன்றவை இசைக்கப்படும். சீனர்களின் மரபுப்படி இதுதான் அவர்கைன் 'காதலர் தினம்'. இன்று மணமாகாத இளம்பெண்கள் நல்ல கணவன்மார்களை வேண்டி ஆரஞ்சுப்பழகளை ஆற்றில் எறிவது வழக்கம். இன்னொரு விசித்திரமான பழக்கமும் உண்டு இவர்களிடையே. ஒரு தேரை அல்லது குறைந்தபட்சம் தவளையை வாங்கிக் கொண்டுவந்து வீட்டிற்குள் விடுவார்கள். தேரைப் பதுமைகள், பொன்னிறத்தேரை விக்கிரகங்கள் முதலியவற்றை வீட்டின் முன்பாகத்தில் வைப்பார்கள். இவ்வாரங்களில் கடன் வாங்குவது கொடுப்பது முற்றிலும் தவிர்க்கப்படும். அசுப வார்த்தைகள் அழுகை இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளை ஏசுவதும் அடிப்பதும் கவனமாகத் தவிர்க்கப்படும்.


நவீன யுகத்தில் மரபுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைவாகவும் குடும்ப ஒற்றுமை, ஒன்றுகூடல், உல்லாசம், நன்கொடை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள். சிங்கப்பூர் ஆற்றங்கரையில் சந்தை, திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 42 நாட்களுக்கு கோலாகலமாக நடக்கும். சைனாடௌண் வட்டாரம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவற்றைக் காணவென்றே சிங்கப்பூருக்க்கு வரும் சுற்றுப்பயணிகளும் உண்டு. வாணவேடிக்கைகளுடன் துவங்கும் இவ்விழா.


( முற்றும் )



--------- ஜெயந்தி சங்கர்


***************************************************