Wednesday, December 29, 2004

ஆடை மொழி

---------ஜெயந்தி சங்கர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிவரை புத்தகங்களும் கட்டுரைகளும் 'ஆடை' என்பது எப்படிக் கலாசாரத்தையும் வாழும் இடத்தின் சீதோஷணத்தையும் பிரதிபலிக்கிறது என்றே கூறிவந்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தான் ஆடையை ஒரு மனோவியல் மற்றும் அறிவியல் பார்வையில் பார்க்கத்தொடங்கினர். ஆய்வுகள் மனிதர்களின் உடையுடுத்தும் பழக்கங்களின் காரணங்களையும், அவர்களின் ஆடைத்தேர்வின் காரணங்களையும் ஆராய்ந்தது. அவற்றின் நோக்கங்கள் மனித நுண்ணறிவுடன் பின்னிப் பிணைந்திருந்தன.நிர்வாணத்தை மறைக்கவே மனிதன் உடையுடுத்தினான் என்பதே தவாறான கூற்று. முதன்முதலில் உடையுடுத்தியவர்கள் மற்றவர்களைக் கவரவே அவ்வாறு செய்தனர்.

உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரபாவம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்கவல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்றமனிதர்களின் உள்மனத்தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது. அதுமட்டுமா? அவனின் மனநிலையையும் ஓரளவிற்கு நிர்ணயிக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடந்த ஆய்வுகள் 'ஆடை' ஒருவருக்கு எந்தெந்த வழிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதையே முக்கிய அம்சமாகக்கொண்டன.

ஆதிமனிதன் உடையில்லாமல் திரிந்தான். அதுவே இயற்கையானது, இப்போது உடையுடுத்தும் மனிதன் இயற்கைக்குப் புறம்பானவன் என்று மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான மனித உடல் மனவியல் வல்லுனர்களின் கூற்றுப்படி நரம்புகளின் சதந்திரமாக எங்கும் ஓடும் 'சக்தி'யைக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லை, உடலுக்கு வேண்டிய பிராணவாயுவில் 40% நாம் நமது தோலின்வழி பெறுகிறோம். அத்துடன், சுற்றியுள்ள மரம், செடிகொடி போன்ற எல்லாவற்றிலிருந்து 'சக்தி' (energy) பெற்று வழங்குகிறோம். அப்படிப்பட்ட இந்த உடலை உடை கொண்டு மறைத்தால் சக்தியும் மனமும் மறைகிறது. உடல், மன, ஆன்மீக மற்றும் உணச்சிகளின் வளர்ச்சிகள் தடைபடுவதாகக்கூறுகின்றனர். கைக்குழந்தை தன் உடல் மறைக்கப்படாமல் இருக்கும்போதும் இயல்பாக இருப்பது இதனால் தான். உடைகொண்டு அதேகுழந்தை மறைக்க ஆரம்பிக்கும்போது வளர்ச்சிகள் தடை படுவது உறுதி. அதுமட்டுமா, உடலுறுப்புகள், உடலுறவு போன்றவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை சமூகமும், குடும்பமும் அவனுக்குக்கொடுக்க ஆரம்பிக்கும்போது அவன் அசௌகரியமடைகிறான். நிர்வாணமே அவனுக்கு அவமானமாகிறது. சகமனிதனோடு தொடர்புகொள்ள அவன் சிரமப்படுகிறான். அதற்காக நாம் ஆதி மனிதனாக முடியாது தான். மற்றவரைவிட ஒரு கணவன் மனைவி ஒருவரையொருவர்முழுவதும் (ஓரளவிற்காவது!) அறிந்திருப்பதற்கு இதுவே விடை! மனிதனின் பரிணாம வளர்ச்சியினால் ஏற்பட்ட 'ஆடை'யை எப்படித்தவிர்க்கமுடியாதோ, அதேபோல ஆடைகளின் பரிணாம வளர்ச்சியையும் அது மனிதனுக்கு ஏற்படுதும் தாக்கங்களையும் தவிர்க்கவே முடியாது

உடையுடுத்தும் முறையின் மூலம் பெரும்புரட்சியையே செய்தவர் மகாத்மா காந்தி. 1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் மாஜிஸ்டிரேட் ஒருவர் அவரது தலைப் பாகையை அவிழ்த்துவிடச் சொன்னது அவரை அவமானத்திலாழ்த்தியது. தலைப் பாகையை உடுத்துவதை அவர் நிறுத்தினாலும் கூட 'உடை'யின் பலத்தை நுணுக்கமாக ஆராய்ந்தபடியிருந்தார். அவர் உடை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பைத் துல்லியமாக அறிய ஆரம்பித்தார். பின் வந்த காலத்தில் அறிந்ததைச் செயலில் காட்டினார். தன் ஆடையின் மூலம் சராசரி மக்களுக்குச் சொன்னசெய்தி அவரே ஆச்சரியப்படும் விதத்தில் மாபெரும் விழிப்புணர்வைக் கொண்டுவந்தது. மதம், வட்டாரம், கல்வி என்ற பெயரால் இருந்த வேற்றுமைகளை எதிர்க்க அவர் ஆடையையே தன் மொழியாகக்கொண்டார்.

சிறுவயதில் குஜராத்தி பாணியுடையுடுத்தி, பிறகு லண்டனில் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு, தென்னாப்பிரிக்காவில் இந்திய விவசாயியைப் போல உடுத்திக்கொண்டு அவர்களுக்காகப்போராடி, பிறகு அத்தகைய உடையிலேயே இந்தியா வந்திறங்கி 1921 ஆம் ஆண்டு ஆறுவாரங்கள் மட்டுமே உடுத்த நினைத்த ஏழை விவசாயியின் அந்த உடையையே நிரந்த உடையாக்கிகொண்டார். பல தலைவர்கள் புருவங்களை உயர்த்திய போதிலும் அவர் உறுதியாக இருந்தார். அநாகரீகமாகவும் ஆதிகால மனிதனாகவும் அறியப்படக்கூடிய அபாயத்தை அறிந்தபோதிலும் அவர் பின்வாங்கவில்லை. தன் உடையை இந்தியாவின் ஏழ்மையின் சின்னமாகவும் ஐரோப்பிய நாகரீகம்/வெளிநாட்டுத் துணிக்கான எதிர்ப்பாகவும் வெளியிட்டார். இது தவிர அவர் தன் உடையை'யாவரும் கேளிர்' தத்துவத்தின் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். உடையின் மூலம் வெளிப்படுத்தியதோடல்லாமல் தானே தன் உடைக்கான துணியை நூற்று எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்தார். ஒவ்வொரு நிலையிலும் அனுபவமும், முதிர்ச்சியும் கூடக்கூட அண்ணலின் உடையளவும் குறைந்தபடியிருந்தது. ஒரு உடை எப்படி ஒரு நாட்டின் சரித்திரத்தில் இடம் பிடிக்கிறது பார்த்தீர்களா?! கவர்ச்சி நடிகைகளின் ஆடைக் குறைப்புக்கும் அண்ணலின் ஆடைக்குறைப்புக்கும் தான் எத்தனை அகலவித்தியாசம்!

காற்றின் ஈரப்பதம் ( humidity ) கூடியிருக்கும் கோடையிலும் சூடு அதிகமுள்ள ஊர்களிலும் வெளிர் நிறங்களிலோ, வெள்ளையிலோ தொளதொள (loose) ஆடைகள் அணிவதே உகந்தது. பருத்தியே சிறந்தது என்பதைச்சொல்லவே வேண்டாம். இந்தச் சமயங்களில் sleeveless உடைகள் மிகவும் பிரபலமாயிருப்பதற்குக் காரணமே சூடு தான். இப்போதெல்லாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் துணிகள் தயாரிக்கப்படுகின்றன. குளிர்பிரதேசங்களில் தான் அடுக்கடுக்காய் உடையணிகிறார்கள். உடற்சூட்டைத் தக்கவைத்துக்கொள்ள கம்பளி உடைகள் அவசியமாகிறது ஒருவரது இமேஜ் (image-தோற்றம்) அவரது தோற்றம், நடையுடை பாவனைகளைப் பொருத்தும் முக அமைப்பு, உடற்தோற்றம் மற்றும் பழக்கவழக்கம் போன்றவற்றைப்பொருத்தும் அமைகிறது. இருப்பினும் மிகமிக முக்கியமாக இவற்றிற்கெல்லாம் சிகரமாக அவரது ஆடையே அவரது இமேஜை உயர்த்தவோ தாழ்த்தவோ செய்கிறது.அவர் பேசிப்பழக ஆரம்பிப்பதற்கு முன்பே அவரது உருவம் தான் முதன்முதலில் மற்றவரின் கண்களின் படுகிறது. ஆகவே, ஆடை மொழியில்லாத ஒரு தொடர்பாய் இருக்கிறது என்பது தெரிகிறதில்லையா? பால், பொருளாதார அந்தஸ்து, வயது போன்றவற்றை ஒரு பார்வையிலேயே ஓரளவிற்குச் சொல்லக்கூடியது ஒருவர் உடுத்தும் உடை.கண்கள் மட்டுமல்லாது ஐம்புலன்களுமே உடைமுறைகளை அறிகின்றன.

ஒருவரின் உடை அவரது குணாதிசயங்களையும் கூறவல்லது என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. அவரது தாழ்வுமனப்பான்மையோ இல்லை அகங்காரகுணங்களோ, தன்னம்பிக்கையோ இல்லை தன்னம்பிக்கையின்மையோ கூட அவரது உடையின் மூலம் பார்ப்பவரின் மனதிற்குப் புரியும். இன்னும் சொல்லப்போனால், சிறப்பாக உடுத்தியிருக்கும் தொடைநடுங்கிக்குக்கூடக் கொஞ்சம் தைரியம் பிறக்கும். தாழ்வு மனப்பான்மையுடையவர்கள் சிறப்பாக உடுத்தினால் திடீரென்று ஒரு தன்னம்பிக்கை தன்னுள் வருவதையுணர்வர். உடை மட்டுமே தன்னம்பிக்கை கொடுக்கவல்லதில்லையென்றாலும் உடை தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய ஒரு முக்கிய அம்சமே.

ஒருவருக்கு மற்றவரிடத்தில் தன்னைப் பற்றிய முதல் பதிவு (first impression) எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிய ஆய்வுக்கூட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.முதல் முறை ஒருவரைப்பார்க்கும் போது நாம் அவரை 'முழுமையாக'த்தான் பார்க்கிறோம். பிறகு தான், ஒவ்வொரு உறுப்பையும் பார்க்கிறோம். தனித்தனியே பார்க்கும்போது நாம் அவரவர் கவனம், அனுபவம், ஈடுபாடு மற்றும் அறிவைப்பொருத்துப் பார்க்கிறோம். அப்படி ஏற்படும் 'முதல் இம்ப்ரெஷன்' பெரும்பாலும் கடைசிவரை மாறுவதில்லை. அதோடு அவர் நடத்தப்படும் விதமும் அந்த இம்ப்ரெஷனைப் பொருத்தே அமையும். ஆக, இம்ப்ரெஷன் மட்டுமில்லாமல் நடத்தப்படும் விதமும் கூடக் கடைசி வரை தொடரும். இதனால் தான் நேர்முகத்தேர்வுகளுக்கு இளைஞர்கள் போகும்போது எடுப்பாக உடுத்த ஊக்குவிக்கப் படுகிறார்கள். 'ஆடை' என்ற ஆயுதம் கொண்டு மற்றவரை வீழ்த்தவோ கவரவோ நம்மால் முடிகிறது. கவர்ச்சியான ஆடையினால் நம்மிடமுள்ள கவர்ச்சியைக்கூட்டி அழகின்மையை மறைத்துவிடமுடியும்.

உடை விஷயத்தில் உலகளவில் பிரிட்னிஸ்பீயர்ஸ¤ம் ஜெனி·பர் லோபேஸ¤ம் (இரண்டு பிரபல ஆங்கிலப்பாப் இசைப்பாடகிகள்)முன்னோடிகள் என்றால், இந்திய அளவில் ஐஸ்வர்யாவும் கரிஷ்மாவும். தமிழகத்தில் ஜோதிகாவும் ஸ்நேகாவும் தங்கள் பிராபல்யத்தைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் நாகரீகத்தின் மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். பிரிட்னி தன் ஜீன்ஸைக் கிழித்துக்கொண்டு உச்சஸ்தாயியில் கத்திப்பாடினால், தன்னால் பாடத்தான் முடியாது, குறைந்தபட்ஷம் ஜீன்ஸையாவது கிழித்துக்கொள்வோம் என்று இளைஞர்கள் நினைத்துச் செயலாக்கம் கொடுக்கிறார்கள்.

ஆடை கவர்ச்சியைக்கூட்ட மட்டுமில்லாமல் அழகின்மையை/குறையை மறைக்கவும் பயன்பட ஐந்து காரணிகள் உண்டு. அவை நிறம், துணியின் தரம், துணியிலிருக்கும் கோடுகள்/பூக்கள் போன்ற டிசைன்கள், அலங்காரங்கள் மற்றும் பேட்கள் (pads) ஆகியவை.

வெளிர்நிறங்கள் (light colours) 'டல்'(dull-கவர்ச்சியற்ற)லாக இருப்பதாகச் சிலர் நினைப்பர். ஆனால், அவைதான் ஆய்வாளர்களின் கணிப்புப்படி கவனத்தை ஈர்க்கும். ஊதா உடுத்தினால் நீங்கள் இளமையாக உணரப்படுவீர்கள். அடர்நீலம் (dark blue) முதிர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய நிறம். பொறுப்பு, நம்பகத்தன்மை, நேயம் போன்றவை கொண்ட நீலம் அதுவும் அடர் நீலம் (navy blue) தான் போலீஸ் உடைக்கு உகந்ததாம்.இது புதியவர்களைச் சந்திக்கும்போது உடுத்த ஏற்ற நிறம். வெளிர் நீலம் அணிந்தால் இளமை, ஆண்மை போன்றவற்றைப் பிரதிபலிக்கும். சிவப்பு, அபாயத்தைக் குறிக்கும் என்றாலும் உடுத்தினால் அது குதூகலத்தையும் உற்சாகத்தையும் உங்களிடம் பார்ப்பவரை உணரச்செய்யும். ஆண்களை ஈர்க்க நினைக்கும் பெண்களுக்கு சிவப்பே சிறந்தது. சிவப்பு, அதிலும் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த நிறத்தில் உடையுடுத்தும் பெண்ணைப்பார்க்கும் ஆணுக்குள், அந்நிறம் ஒரு வேதியல் மாற்றத்தைக் கொணர்கிறது. மூளை உடலுக்கு அனுப்பும் சிக்னல் அதிக இபைனெ·ப்ரின் (epinephrine) என்னும் ஹார்மோன் சுரக்கக் கட்டளையிடுகிறது. இது இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்து உடல் சூட்டையும் கூட்டும். பச்சை உடையில் நேர்சிந்தனை மற்றும் சுகமான இயற்கையுணர்வைக் கொண்டவாராகத் தெரிவீர்கள். இஸ்லாமியர்களுக்குப் புனிதமான பச்சை மன உளைச்சலைப் போக்கவல்லது.அதுமட்டுமல்ல, அது ரணங்களை ஆற்றும் ஆற்றல் உடையது. மருத்துவ மனைகளில் பச்சை உபயோகிக்க இதுவே காரணம். பச்சை உடுத்தியவருடன் இருப்பவர் இயல்பாக இருப்பார். அணியும் 'டை'(tie -கழுத்துப்பட்டை)யில் கொஞ்சம் பச்சை டிசைன் இருந்தாலே கூடப் போதும். வெள்ளை தூய்மையையும் நேர்மையையும் உடையவர் என்று உணரச்செய்யும். கருப்பு 'இவர் மிகவும் சீரியஸ்/ அழுத்தமான ஆசாமி' என்று நினைக்கவைக்கும். சாம்பல் நிறம் உங்களை முதிர்ச்யுடையவராயும் நேர்மையானவராயும் காட்டும். பிரௌன் நிறம் உங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும்.பழுப்பு நிறம் (brown) பாதுகாப்புணர்வைக் கொடுக்கவல்லது.இது விவசாயத் தொடர்புடைய நிறம். இந்த நிறத்தை உடுத்தியவர்களுடன் பேசுபவர்கள் இதயபூர்வமாக ஒளிவுமறைவின்றிப் பேசுவார்கள். ஆனால், வர்த்தகத்துறைக்கு இது ஏற்ற நிறமல்ல. நேவிப்ளூ(கருநீலம்) தான் சிறந்தது.மஞ்சள் மிகவும் ரிஸ்கியான (risky-நிச்சயமில்லாத) நிறம். மஞ்சள் உடுத்துவீர்களானால், முன்கோபிகள் உங்கள் மீது சீக்கிரமே கோபப்பட வாய்புண்டு. கோபமும் மறையாமல் அதிக நேரம் நிலைத்திருக்கும். குழந்தைகள் கூட அறைச்சுவரின் நிறம் மஞ்சளாய் இருந்தால் அதிக நேரம் அழும். நேர்சிந்தனையுடையவாராகவும் இமோஷனலாகவும் மஞ்சள் உங்களைக்காட்டும். இதமும், இளமையுடனான பெண்மையையும் கொண்டவராக அறியப்பட எந்தப்பெண்ணுக்குத் தான் பிடிக்காது?. உங்களுக்கு ஏற்ற நிறம் பிங்க் (pink). இந்நிறம் உடுப்பவருக்கும் சுற்றுப் புறத்துக்கும் அமைதியைக் கொடுக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வாளர்கள் சிறைகளில் சில ஆய்வுகள் மேற்கொண்டார்கள்.சிறை சுவர்களுக்கு பிங்க் (Baker Miller pink/Pepto-Bismol pink) நிறச்சாயம் பூசப்பட்டது. சிறைக்கைதிகள் ஆக்ரோஷத்தைத் துறந்து அமைதியடைந்தனர். சிறையினுள்ளிருந்து வெளியேற்றப்பட்டு 30 நிமிடங்களுக்கு அவர்களுள் அமைதி நிலவியது. யாருடனாவது கடும் சண்டைபோடக்கூடிய சாத்தியமிருந்தால், பிங்க்நிற உடையுடுத்துங்கள். சண்டை சமாதானமாகலாம்.

·பாஷன், விளம்பரம் போன்ற துறைகளில் கூட நிறம் 60% தேர்ச்சியை நிர்ணயிக்கிறது என்று மனோவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.பயனீட்டாளர்களை 'நிறம்' விஷயத்தில் திருப்திப்படுத்தவே முடிவதில்லை. மார்கெட்டிங் துறையினர் ஏராளமாகச் செலவு செய்கின்றனர். செயல்முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு முடிவுகளை எடுக்கின்றனர். பணத்திலேயே குறியாக இருக்கும் சில ·பாஷன் நிறுவனங்கள் உடை நடைமுறையில் ஒரு அத்தியாவசியம் என்பதையும் மறந்து அது ஏதோ 'பெரிய' வாழ்க்கை முறையென்றும், அந்தஸ்து சமாசாரம் என்றும் ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகும் பெண்களின் உள்ளாடை விளம்பரம் ஒன்றில், இளம் பெண் ஒருத்தியும் சற்றே வயதுகூடிய பெண் ஒருத்தியும் நடந்துபோகும்போது, ஓர் இளைஞன் பின்தொடர்வான். இளம்பெண் தன்னைத்தான் அவன் தொடர்கிறான் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். ஆனால், அவள் பிரிந்து போனபின்னும் மற்றவளைத்தொடர்வான் அவன். அதாவது, அவள் அணிந்திருக்கும் உள்ளாடை அவளை கவர்ச்சியாகவும் வயது குறைந்தவளாகவும் காட்டுகிறது என்பதே செய்தி. பெண்ணிய நோக்கில் மிகஅபத்தமாகத் தோன்றினாலும், கையாளப்பட்டிருக்கும் ஆடை மொழியைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. உள்ளாடை கூட ஒருவரின் தோற்றத்தை மாற்றக்கூடும்.
டிசைன் போடாத ப்ளெயின் துணியில் உடை தைத்தால் பார்ப்பவர் உங்களின் உடலமைப்பில் இருக்கும் குறைகளைப் பெரும்பாலும் பார்க்கமாட்டார்கள். டிசைகள் இருக்கும் உடையிலுள்ள டிசைன்களை தன்னையறியாமல் பார்க்கும் பார்வையாளரின் பார்வையில்/மனதில் நீங்கள் குண்டாகத் தோற்றமளிப்பீர்கள். நீங்கள் குண்டாக இருந்தால் ப்ளெயின் துணியில் உடைதைத்து உடுத்தினால் உங்கள் குறை மறையும். அதிக ஒல்லியாக இருப்பவர் பூசினாற்போலத் தெரிய டிசைன்கள் உள்ள துணியில் உடுத்தவேண்டும்.துணியில் உள்ள டிசைன் எத்தகையது என்பதும் கூட தோற்றத்தைப் பிரதிபலிக்க ஒரு காரணியாகிறது. குறுக்குக் கோடுகள் உள்ள துணி பார்ப்பவரை 'இவர் குண்டு' என்று நினைக்கச்செய்யும். நேர்கோடுகள் குள்ளமானவரையும் குறை தெரியாமல் உயரமாகக் காட்டும்.
உடலில் வளமான மத்தியப்பிரதேசம் இருப்பவர்கள் அதிக அலங்காரங்கள் உள்ள ஆடைகளை அணிந்தால், பார்ப்பவர் கவனத்தை மற்ற பிரதேசங்களுக்குத் திருப்பலாம். இதன் மூலம் குறை கண்ணில் படாமல் ஏமாற்றலாம். உதாரணமாக, ஆண்கள் தங்க (தங்க நிற ! ) பட்டன்கள் (buttons), கவர்ச்சியான டை ( tie) ,டைபின்கள் (tie pins), க·ப் லிங்கஸ் (cuff links) போன்றவற்றையும் பெண்கள் என்றால், லேஸ் (lace), நெக்லேஸ், முத்துமாலை, புரூச் போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

பேடிங் (padding) பெரும் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது ·பேஷன் உலகில். தோளில் ஆணுடைகளுக்கு பேட் வைத்துத் தைத்தால் 'அகலமான தோள் இவருக்கு' என்று எண்ணவைக்கும். ஒரு தோளிலிருந்து மற்ற தோளுக்குப் பயணிக்க மனிதக்கண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகநேரமே அவரை விலாசமான தோளுடையவராகக் காட்டுகிறது. பெண்களின் உடைகளில் பேட் இருக்கும்போது இடையைச் சிறியதாகக்காட்டும். 'ஆஹா, 'அவர் க்ளாஸ் ஷேப்' (hour glass shape- குடுவைபோன்ற உடலமைப்பு) இவருக்கு' என்று நினைக்கத் தூண்டும். நம் பெண்கள் கமீஸில் பேட் வைத்துக்கொள்வது மிகவும் பிரபலம்.

மகாகவி பாரதியாரின் உடை தனித்துவம் வாய்ந்தது என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அவர் வறியவர் மீது கொண்டிருந்த நெகிழ்ச்சியையும் மனிதநேயத்தையும் உடையின்வழி வெளிப்படுத்தினார். அவர் போட்டுக்கொண்டிருந்த கருப்புக்கோட்டு அவரது சட்டையின் ஓட்டைகளையும் கிழிசல்களையும் மறைக்கவே என்ற வதந்திகளையும் தாண்டி, ஒரு கம்பீரத்தையும் வீரத்தையும் ஆண்மையையும் பிரதிபலிக்கும் உடை அவருடையது. வெளியே புறப்பட்டுவிட்டால் பாண்டிசேரி புஷ் வண்டிக்காரர்கள் பாரதியாருக்கு முன்னே வண்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்களாம். வண்டிக்காரனுடைய 'நெளிவு' பாரதியாருக்குத் தெரியுமென்பதால், சம்பாஷணைச் 'சல்லாபம்' செய்வார். துணி வேண்டும் என்று அவன் வாயால் வரும்படியாகச் செய்வார். தாம் மேலே போட்டுக் கொண்டிருப்பது பட்டாயிருந்தாலும் சரி கிழிந்த அங்கவஸ்திரமாயிருந்தாலும் சரி, சரிகைத் துப்பட்டாவாயிருந்தாலும் சரி, அது அன்றைக்குப் புஷ் வண்டிக்காரனுக்குத் தான்.பாரதியாருக்கு அங்கவஸ்திரமில்லையே என்று பரிவு கூர்ந்து யாரேனும் நண்பர் அவருக்குப் புதிய அங்கவஸ்திரம் கொடுத்தாலும் வண்டிக்காரனுக்குக் கொடுத்துவிடுவார்.பாரதியாருக்குத் துணிப்பஞ்சம், சட்டைப்பஞ்சம் ஏற்படலாம், ஆனால், அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.

சிலர் 'இது எனக்கு மிகவும் ராசியான உடை' என்று வெளுத்துக் கிழிந்தாலும் விடாமல் சில உடைகளை வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ராசியோ இல்லையோ, அந்த உடை அவருக்குப் பல இனிய சம்பவங்களையும் நினைவுகளையும் வெற்றிகளையும் கொடுத்திருப்பது உண்மை.அதேபோல சில ஆடைகள் எத்தனை நாளானாலும் கலரும் துணியும் அப்படியே இருக்கும், அதிகம் உடுத்தப்படாமல். இதற்கு அசௌகரியம் ஒரு காரணமென்றாலும், ஏதோ ஒருவிதத்தில் அவ்வுடை அவர் மனதில் 'பிடிக்காத' ஓர் அனுபவத்தைக் கொண்டுவந்திருக்கலாம்.

சிங்கப்பூரில் சில இந்துக்கோவில்களில் 'பெண்கள் ஜீன்ஸ்/பேண்ட்/ஷார்ட்ஸ்(அரை கால்சட்டை) போன்ற உடைகளையும் ஆண்கள் ஷார்ட்ஸ் அணிந்தும் ஆலயத்துக்குள் வராதீர்கள்', என்று நோடீஸ்போர்டில் எழுதிவைத்து வலியுறுத்துகிறார்கள்.இதற்கும் கூட dress code (உடை முறை)தான் காரணம்.வழிபாட்டுத்தலத்தில் காலாசார உடைகளே உடுத்துபவர், பார்ப்பவர் ஆகியோருக்கு இறைவனை வழிபடத்தேவையான மனோநிலையைக்கொடுக்கிறது. இதனையும் மீறி பகட்டாகப் பட்டுடுத்திய பல நடமாடும் நகைக்கடைகள் ஆலயத்திற்குள் வருவதுண்டு. இது கலாசாரம் தான். ஆனால், இடத்துக்கேற்ற இறையுணர்வைக்கொண்டுவருகிறா என்றால், சந்தேகமே. கல்யாணக்கூடங்களிலேயே நம் ஆடம்பரம் மற்றவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மையையும் பொறாமையுணர்வையும், கவனச்சிதைவையும் ஏற்படுத்துமென்றால், ஆலயத்தில் கேட்கவும் வேண்டுமா?! பொதுவாகவே மதம் சார்ந்த உடைகளும் திருமண உடைகளும் பார்ப்போரிடம் மிகஅதிக கவனம் பெருகின்றன.

சிங்கப்பூரில் உள்ளூர் ஆங்கில நாளிதழில் ஜூலை 25 ஆம் தேதி வெளியான ஒரு செய்தி ஆச்சரியமான ஆடைமொழி! பணக்காரர்கள் செல்லும் பாருடன்(bar) கூடிய க்ளப்பில் நடந்தது. இரண்டு பெண்கள் அங்குசென்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி அணிந்திருந்த ஆடையில் மரிஜுஅனா (கஞ்சா)இலைகளில் டிசைன் போடப்பட்டிருந்தது. அவளின் உடைகாரணமாய் அவள் உள்ளே அனுமதிக்கப்படவில்லையாம். அவளின் ஆடை போதைப்பொருளைச் சித்தரிக்கிறது என்று நிர்வாகம் சொல்லிவிட்டது. போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் திடீரென்று ரெய்ட் வந்தால் அந்த ஆடை 'போதைப்புழக்கத்தை ஊக்குவிக்கும்' சாதனமாகத் தெரியும் என்று நிர்வாகிகள் பயப்படுகின்றனர். இதே போல ஐந்து வருடங்களுக்குமுன் ஓர் ஆடவர் இதே இலை டிசைனில் டீசட்டை அணிந்து போய் அனுமதிமறுக்கப்பட்டார். அவர் அருகில் இருந்த பேரங்காடியில் வேறு டீசட்டை வாங்கி அணிந்தபிறகு தான் உள்ளே நுழைய முடிந்தது.முன்பெல்லாம் அந்த டிசைன் ஹிப்பிக்களின் பிரபல டிசைன். ஆனால், இப்போது அப்படியில்லை.

சமீபகாலங்களில் நவீன உடைகளில் பாரம்பரியச்சாயல்கள் (ethnic-look) கொடுத்து அணிவது பிரபலமாகிவருகிறது. சின்னச்சின்ன டிசைன்களின் மூலமும் ஆடையின் வடிவம் மூலமும் மாற்றங்கள் கொண்டுவருகிறார்கள். இதை முக்கியமாக மேலுடைகளில் காணலாம். அது மட்டுமில்லாமல், ஜீன்ஸில் கூடப் பளபளக்கும் ஜம்கி/முத்து அலங்காரம் கிழித்த ஜீன்ஸ் அளவிற்குப் பிரபலம்.

பிராண்டட் உடைகள் (branded clothes- பிரபல நிறுவன உடைகள்) எல்லோரிடமும் அதிகம் இளைஞர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதிலும் பலதரப்பட்ட விலைகளும் தரங்களும் உண்டு. அவ்வகையுடைகளை உடுத்தும் ஒருவர் தன் பொருளாதார அந்தஸ்த்தின் மீதும் ரசனையின் மீதும் தனக்கிருக்கும் பெருமையைப்பரசாற்றவேகூட இவ்வுடைகளை உடுத்துகிறார்கள். வசதியிருந்தும் அலட்டது அடக்கமாக உறவாடும் நபர்களும் இருக்கிறார்கள் என்றாலும் கூட, மேற்படியாசாமிகளே அதிகம். சிங்கப்பூரிலும் தான். பணக்கார்கள் வாங்கும் அதே உடையைத் தானும் வாங்கியதில் பெருமையடையும் சில சாமான்யருமுண்டு. அந்தமாதிரிக் கடைகளில் வாங்கிய ஆடைகளைப் போட்டுக்கொடுக்கப்பட்ட ப்ளாஸ்டிக்/ அட்டை/ காகிதப்பைகள் கூட இவர்களின் பெருமைப் பேசுவதாய் நினைக்கிறார்கள். வெளியில் போகும்போதும் வரும்போதும் அந்தப்பையை உபயோகிக்கிறார்கள். 'உடை' படுத்தும் பாட்டைப் பார்த்தீர்களா?

ஒருவரின் உடை அவரின் பிராபல்யத்தையும் நடத்தப்படும் விதத்தையும் மாற்றக் கூடியதென்பதை சுமார் இரண்டு வயதிலேயே மனிதன் அறிந்து கொள்கிறான். நேர்த்தியான உடையுடுத்திய சிறுவன் ஒழுங்கீனத்துக்காகக் கண்டிக்கப்படும்போது கூட மிகவும் இதமாகவே நடத்தப்படுகிறான். ஏனோ தானோவென்று உடுத்திய மாணவனோ சிறு தவறுக்குக்கூட கடுமையான கண்டிப்புக்குள்ளாவான். அதுமட்டுமா? மாணவர்த்தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுபவன் கூட நேர்த்தியாக உடுத்தத்தெரிந்தவனே. அத்தகைய மாணவனிடம் தலைமைத்துவக்குணங்கள் (leadership qualities) வளருகின்றன. தன்னம்பிக்கையுடன் கூடிய கவர்ச்சி அவனுடனேயே வளரும். ஆள் பாதியென்றால் ஆடை பாதியாயிற்றே!

பதின்மவயது வரும் போது ஒருவர் அவரவர் பாரம்பரிய முறை ஆடைகள் பற்றி சிலவற்றை அனுபவங்களின் வழி அறிகிறான். இவ்வயதினர் வளரும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று உடை. நேரடியாகவோ மறைமுகமாகவோ உடை அவர்களின் வளரும் வருடங்களில் ஓர் அங்கமாகி விடுகிறது. சிறுவர்கள் பொதுவாகவே 'எதிர்மறை குணம்' (negativism) உடையவர்கள். 'இப்படி உடுத்து' என்றால் வேண்டுமென்றே வேறு மாதிரியாகச் செய்வார்கள். வளரவளர இக்குணம் தேய்ந்து மறையும். அதே சமயம் பதின்மவயதில் தன்வயதொத்தவர்களின் கருத்தும் அங்கீகாரமுமே அதிமுக்கியமாகப் படும்.பொதுவாகவே கூட்டாளிகளிடமிருந்து மாறுபட்ட உடைகளை உடுத்த இவர்கள் விரும்புவதில்லை. ஆனால், அதே சமயம் நட்புவட்டம் நிலைப்பட்டதும், புதுமைகளைப் புகுத்தவும் அறிமுகப் படுத்தவும் செய்ய ஆரம்பிப்பார்கள். இந்தகட்டத்தில் நட்பு மேலும் உறுதிப்படுவதுமுண்டு. இவர்களிடையே ·பாஷன் என்னும் மாயை தன் பொருளாதாரவசதியைப் பறைசாற்றும் ஒரு கருவியாகிறது.'விரலுக்குத் தகுந்த வீக்கம்' என்பதைப்புரிந்து கொண்டால் தான் வீணான மன உளைச்சல்கள் இல்லாது இருக்க முடிகிறது.பொதுவாகவே இளவட்டங்களின் மத்தியில் மாறும் ·பாஷனுக்குத் தகுந்த உடையை உடுத்தாவிட்டால் மிகவும் 'தீண்டத்தகாத' பார்வைகளை வீசுவதைப்பார்க்கலாம்.

ஆப்கானியப் பாரம்பரியமாகப் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது 'பர்தா' அல்லது 'பர்கா' அல்லது 'ஹிஜப்' அணியும் வழக்கம்.. இது நாகரிகத்துடன் கூடிய பணிவின் பொருட்டே என்பது பொதுக் கருத்து. இஸ்லாமியர்களிடையே மகளிர் பர்தா அணிவது பெருமையாகவும் அதே சமயம் சுயமரியாதை தருவதாகவும் கொள்ளப்படுகிறது. ஆடைக்குறைப்புக்குப் பெயர் போன மேலை நாடுகளிலும் கூட இஸ்லாமியர்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றவேசெய்கின்றனர். 'பர்கா' செய்திகள் இப்போதெல்லாம் உலகளவில் மிகப்பிரபலமாகிவருகின்றன. உடையின் ஒரு பகுதி உலகையே உலுக்கக் கூடியது என்பது மிகப்பெரிய ஆச்சரியம்! இந்தத் தலைமறைக்கும் ஆடையில் தான் எத்தனையெத்தனை ரகம் தெரியுமா! வடிவிலும், வழவழப்பிலும், துணி ரகத்திலும் மட்டுமில்லாமல் 'பின்' குத்திக்கொள்ளும் வகையென்றும் 'பின்' குத்தாத வகையென்றும் இருக்கின்றன. இது தவிர ஆப்பிரிக்க வகையான நீளமான பின்னால் தொங்கும் ரகம் வேறு! வண்ணங்கள் ஏராளம். துபாய் போன்ற பொருளாதாரவசதி மிகுந்த நாடுகளில் இலேசான ஷிபான் ரகத்திலிருந்து கெய்ரோ போன்ற தேசங்களில் இருக்கும் தடித்த பருத்தி வரை இதை உருவாக்கப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமா, எகிப்தியப் பகுதிகளில் 'துடென்காமென்' பாணியில் நெற்றியைமறைத்து இருகாதுகளின் பின்புறமும் சொருகிக்கொள்ளும் ரகமும் உண்டு. அவரவர் வசதிக்கேற்ப துணியின் தரம் மட்டுமில்லாது அலங்காரங்களும் மாறுகின்றன. துருக்கியத் தலைநகரான இஸ்தான்புல் பர்தாவிற்கும் மற்ற இஸ்லாமிய உடைகளுக்கு நவீன அறிமுகங்களைக் கொண்டுவந்தது. பர்தா அணியும் வழக்கம் தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனீசியா போன்ற பலநாடுகளிலும் கடைபிடிக்கப் படுகிறது.

ஆதாம், ஏவாள் இலைகளால் உடலை மறைத்தனர். கிருஸ்துமதத்தின் புதிய ஏற்பாட்டின்படி மனிதன் பாவத்தை அறிந்தபின் தான் உடையுடுத்த ஆரம்பித்தான். அன்றிலிருந்து உடை ஒரு வரமாகவும் சாபமாகவும் நோக்கப்பட்டது ( Genesis 3:7 ). சுயமரியாதையையும் நாகரீகத்தையும் கட்டிக்காக்கும் உடைகளையே கிருஸ்தவம் வலியுறுத்துக்கிறது.

வண்ணங்களில் விதவிதமாய் பெண்களுக்கு ஆடைகள் கிடைக்கும் அதே சமயம் ஆண்களுக்கு 'காஷ¤வல் வேர்'(casual wear-சாதாரண உடை), '·பார்மல் வேர்'(formal wear-நேர்த்தி உடை) பிஸினஸ் காஷ¤வல் ( business casual- வர்த்தக உடை)என்று குவித்து வைத்திருப்பதைப்பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால், பெண்களுக்கே கூட '·பார்மல் வேர்'(formal wear-நேர்த்தி உடை) ரகங்கள் நிறைய வந்துவிட்டன.

யாரைப்பார்க்கவேண்டியிருக்கும், முக்கிய மீட்டங்கா என்றெல்லாம் யோசித்து அன்றைக்கு வேண்டியதை உடுத்துவதைப் பார்க்கிறோம். அதே ஆசாமிகள் மற்ற நாட்களில் 'காஷ(casual wear-சாதாரண உடை) அணிந்து ஆபீஸ் போவார்கள். சிலர் நிறுவனத்தின் கெடுபிடிக்காகப் பிடிக்காவிட்டாலும் '·பார்மல் வேர்' (formal wear-நேர்த்தி உடை) உடுத்துவாரகள். சிலர் சுயவிருப்பத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் ஆபீஸில் விதிமுறை இல்லையென்றாலும் விடாமல் '·பார்மல் வேர்'(formal wear-நேர்த்தி உடை) தான் என்றிருப்பார்கள்.
மதம், காலாசாரம் அல்லது ஊனம் காரணமாகக்கூட dress code ஐச் சரியாகப் பின்பற்றமுடியாதவர்களும் இருக்கிறார்கள்.பாலுணர்வு தூண்டக்கூடிய உடைகளைத் தவிர்க்கச் சொல்லும் நிறுவனங்களும் உண்டு. அமெரிக்கக் கம்பெனிகளில் கிருஸ்துமஸ் காலங்களில் சாதாரண உடையணிய அனுமதிக்கும் நிறுவனங்கள்,அச்சமயம் ஊழியர்களின் வேலைத்திறன் சூடுபிடித்ததைக் கண்டறிந்திருக்கிறார்கள்.அந்நாட்டில் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு போகும் சில நிறுவனஊழியர்களை வேற்றுக் கிரக வாசிகளைப்போலக் கேலியாகப்பார்ப்பவரும் உண்டு. அதாவது, எல்லாமே பார்ப்பவரின் பார்வையில்தான் இருக்கிறது. இதனால் தான் போலிருக்கிறது நம் உடையை நாமே தேர்ந்தெடுப்பதை விட நமக்கு நெருக்கமானவர் தேர்ந்தெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள்.

மூளைக்கு அதிக வேலையிருக்கும் தொழில்நுட்பத்துறை, ஆராய்ச்சித்துறை போன்ற துறைகளில் '·பார்மல் வேர்'(formal wear-நேர்த்தி உடை) பெரும்பாலும் பிரபலமில்லை. ஆனால்,அது வர்த்தத்துறைக்கு இன்றியமையாதது.பொதுவாக, டீசட்டை, ஸ்போர்ட்ஸ் ஷ¥ மற்றும் ஜீன்ஸ் அணிய எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது. சிங்கப்பூரிலோ ஆண்பெண் பேதமின்றி ஷார்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷ¥ மற்றும் டீசட்டை தினப்படி(ஏன் தேசிய உடையாகவே) உடையாக இருக்கிறது. சிலர் ட்ராக் பேண்ட் (track pant - ஓட்டத்திற்கு அணியும் முழுக்கால் சட்டை)அணிவார்கள்.

ஆடை பற்றிய விழுமியங்கள் காலத்தால் மாறியபடியிருக்கின்றன. எது நாகரிக/பாங்கான ( modest ) உடை என்னும் பார்வையும் அப்படியே. இந்தியாவிலேயே பத்துவருடங்களுக்கு முன்னர் நிலவிய கருத்துக்கள் இப்போது இல்லை. வட இந்தியாவை விட தென்னிந்தியா இன்னமும் கூட முழுமையாக மேலைக் கலாசாரத்தில் சிக்கவில்லை. இன்னமும் புடைவை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவேயிருக்கிறது என்று புடைவைக்கடைகளில் நடக்கும் வியாபாரமே சொல்கிறது. ஒப்புநோக்க வடமாநிலங்களில் மேற்கத்திய உடைகளே அதிக பிரபலமைந்துவருகின்றன. முக்கிய விழாக்களுக்குமட்டும் சேலை அணியும் பழக்கமும் நிலவுகிறது. ஆனால், சேலையணியும் பெண்களுக்கு நிச்சயம் கம்பீரமும் மற்றவரிடமிருந்து மரியாதையும் கிடைக்கிறது. பாலைவனப் பிரதேசமான ராஜஸ்தானிய உடையைப்பின்பற்றி 'ஜன்னல்' வைத்த ஜாக்கெட் 'தென்றல் அடிக்க' வும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், பொதுவாகவே 'அழகியல்' போர்வையுடன் பார்ப்பவரின் ஆர்வத்தைத் தூண்டிக் கவரவே என்பது மனோவியல் ரீதியிலான கண்டுபிடிப்பு. அதேபோல புடைவை உடுத்தும் பெண்களிடையே கூட இயல்பிற்குப்புறம்பான பாணிகள் உண்டு. சில அனாவசியமாக போர்த்திப்போர்த்திப் பார்ப்பவரை அசௌகரியத்துக்குள் தள்ளுவர். சகஜமாகவே பேசவிடாது செய்வர். காரணமேயில்லாம புடைவையைச் சரிசெய்தபடியிருக்கும் பெண்களைப்பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். பார்ப்பவருக்கு அவர் புதிதாய் புடைவை உடுத்தியிருந்தால், அசௌகரியமோ இல்லை உடையே அசௌகரியமோ என்றுகூட எண்ணவைக்கக்கூடும். சரியா உடுத்தினால் புடைவையைப் போல ஓர் கம்பீரமான நேர்த்தியான உடையுமில்லை. ஏனோதானோவென்று உடுத்தினால் அதைப்போன்ற ஆபாசமான உடையுமிருக்கமுடியாது.
ஜீன்ஸ் என்பது முன்பெல்லாம் ஏதோ பெரிய மேற்கத்திய முத்திரை என்ற போர்வையைக் கொண்டிருந்தது. இன்றோ ஜீன்ஸ் என்பது மிகவும் சௌகரிய உடையாகிவிட்டது. பார்வையும் பழக்கமும் எண்ணங்களுமே இதற்குக் காரணம்.

அமெரிக்காவில் 1980 களில் ஒரு விமான ஊழியர் மேக்கப் போட்டுக்கொள்ள மறுத்ததால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அந்தப்பெண் நீதிமன்றத்துக்கு சென்று முறையிட்டார். தன் வேலையைக்காட்டிலும் தன் தோற்றத்திற்கே நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்கிறதே என்பது அந்தப்பெண்மணியின் ஆதங்கம். உடையும் தோற்றமும் தான் எத்தனை முக்கியத்துவம் பெறுகின்றன!

கதையிருக்கிறதோ, கதாநாயகன், கதாநாயகியிருக்கிறார்களோ இல்லையோ, இப்போதெல்லாம் சினிமாக்களில் தொப்புள் இல்லாமல் பெரும்பாலும் இருப்பதில்லை. தொப்புளுக்கு என்று அணிகலன்கள் வேறு!எல்லாம் எம்டீவீ, மற்றும் மேலைநாட்டுக்கலாசாராம் படுத்தும் பாடு. எத்தனை குறைவாக உடையுடுத்தமுடியுமோ அவ்வளவு குறைவாக உடுத்துகிறார்கள். அழகியல் என்பது மருந்துக்கும் இல்லாமல் போன அவல நிலையில் கதைக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாமல் திரைமுழுவதும் நாற்பது தொப்புள்களைக்காட்டுகிறார்கள், ஆடல்/பாடல் என்ற பெயரில். இது கவனத்தை ஈர்க்கவே என்பதைச் சொல்லவும் வேண்டுமா?! மைக்ரோமினி ஸ்கர்ட்டுகளும் தொப்புள் தெரியும் மேல்சட்டைகளும் தான் இப்போதைய உலகளாவிய ·பாஷன் உடை! மேலை நாடுகளில் டீசட்டைகளில் ஆபாசவாசகம் எழுதிக்கொள்வதெல்லாம் போய் பிருஷ்டபாகங்களில் (buttocks) அப்படி எழுதிக்கொள்வது இப்போது பிரபலமாகிவருகிறது. உடலுறுப்புக்களை பெரும்பாகங்களை வெளியில் காட்டும் உடைகள் பேசும் மொழி நிச்சயமாய் ஆபாசம் தான் என்பது மனோவியலாளர்கள் கருத்து. அவ்வுடை பார்ப்பவரிடம் சமூகவிரோத எண்ணங்களுக்கு வித்திடுமாம். அதை 'அழைப்பு' என்றே சொல்கிறார்கள் வல்லுனர்கள்.

சீருடை என்பது தனித்தன்மையை மறைத்து சமத்துவத்தைக்காட்டவே ஏற்படுத்தப்பட்டது என்றால் மிகையில்லை. வசதிகுறைந்தோர் வசதியுள்ளோரைப்பார்த்துத் தாழ்வுமனப்பான்மை கொள்ளாமல் இருக்க சீருடை மிகவும் உதவுகிறது. அந்தப்பள்ளிச்சீருடை அழகான கலர், இந்தப்பள்ளிச்சீருடை அழகான டிசைன் என்று மாணவர்கள் கூட ஒப்பிடுகிறார்கள். சமத்துவத்துக்கென்று ஏற்படுத்தப்பட்ட சீருடை வித்தியாசங்களினால் வேறுபாடுகள் நிலவுவது விநோதம் மட்டுமல்லாத ஒரு முரண்நகையும் கூட.

கணகெடுக்கப்பட்ட பெரும்பான்மையோர் சீருடையில்லாமல் சாதாரண உடையுடுத்திப் பள்ளிகளுக்குச்செல்லவே விரும்புகின்றனர். உடை ஒருவரது குணநலன்களை ஓரளவிற்கேனும் சொல்கிறது என்றும் அவர்களின் பெரும்பாலோர் நினைக்கின்றனர். ஒருவரின் உடை அவரது விருப்பம் சௌகரியம் என்று இவர்கள் நம்பினாலும் உடை காரணமாய் கேலிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமானதாயிருக்கிறது. ஜீன்ஸ் பின்புறமும் டீ சட்டையின் மீதும் எழுதப்பட்டிருக்கும் 'வாசகங்கள்', பார்ப்பவரின்/படிப்பவரின் மனநிலையைப் பாதிக்கிறதென்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சீருடை இல்லாத மேற்கத்திய பள்ளிகளிலேயே கூட மினிஸ்கர்ட், ஷார்ட்ஸ், வயிறு தெரியும் சட்டைகள் போன்றவற்றை உடுத்தக்கூடாது என்ற விதியிருக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன்பேர் இராணுவம், தேவாலயம், மருத்துவமனை, உணவகன், விளையாட்டுத்துறை, பள்ளிக்கூடம் என்று எல்லா இடங்களிலும் ஏதோ ஒருவகைச் சீருடையை அணிகிறார்கள். பொதுவாகச் சீருடை என்றாலே ஒருவர் எந்தத்துறையைச் சார்ந்தவர் என்ற அடையாளம் கொடுக்கக்கூடியது. அங்கு தனிநபரின் திறமை மற்றும் குணநலன்களைக் கடந்து நிற்பது இதுவே. இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலிய போர்வீரர்களைக் கிண்டலத்தனராம் மற்ற நாட்டு வீரர்கள். எதற்காகத் தெரியுமா? இத்தாலிய வீரர்களின் தொப்பிகள் (hats) பறவையிறகுகள் மற்றும் குதிரைவால் உரோமங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இராணுவத்திற்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத அவ்வகையலங்காரம் பெண்மையைக்காட்டியதாக கேலிசெய்தவர்கள் எண்ணினர்.ரஷ்ய இராணவத்தினர் தோள்ப் பட்டைகளை ( shoulder boards) மிகவும் விரும்புகின்றனர். ஜெர்மானியவீரர்களுக்கு கருப்பு மிகவும் பிடித்த நிறமாம்.

சீருடை தொழிலாளியின் பாதுகாப்பைக்கூட உறுதிசெய்யக்கூடியது. பாய்லர்ப்ளாண்டுகளிலோ அதுபோன்ற தொழிற்சாலைகளிலோ ஹெல்மெட் முதல் கால் பூட்ஸ¤கள் வரை எல்லாமே கட்டாயச்சீருடையாகின்றன. முரட்டுப் பருத்தியில் தீபோன்ற விபத்துக்களிலிருந்து உடலைக்காக்கும்படி உடுத்துவர். உயர் பதவிகளில் நிறுவனங்கள் உடைமுறையை ( dress code-உடை முறை) வகுத்துவைக்கின்றன.அம்முறையைக் கடைபிடித்தால், வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்பது ஒருபுறமிருக்க நிறுவனத்திற்கும் மேலதிகாரிகளுக்கும் கொடுக்கவேண்டிய மரியாதையைக்கொடுக்கமுடியும். அவர்களிடம் நல்லபெயர் உறுதி. நேர்த்தியான உடை இவர்களுக்குத் தன்னம்பிக்கையைக்கொடுத்து வேலையில் சிறக்கவைக்கிறது. நிறுவன வாடிக்கையாளர்களையோ, பயனீட்டாளர்களையோ சந்திக்கும் பதவியில் இருப்போர் உடை விஷயத்தில் மிகுந்த கவனம் கொள்ளவேண்டிள்ளது. முதல் பார்வையில் படுவது அவரின் தோற்றமும் உடையுமேயல்லவா, அதனால்தான்.

அறிவியல்/விஞ்ஞானம் மனிதனை விலங்கினங்களில் பாலூட்டியாகவே பிரிக்கிறது. அதாவது குரங்கு, நாய் வகைச் சேர்ந்தவர்களே நாம். ஆனால், ஒரே ஒரு மிகப்பெரிய வித்தியாசமுண்டு. பரிணாமவளர்ச்சியின் தயவால் மனிதன் பகுத்தறிவுள்ள மிருகமாகியிருக்கிறான். பகுத்தறியும் அவனது திறனை அவன் ஆடையணிகலன்களிலும் பயன்படுத்தவேண்டும். சீதோஷண, சுற்றுப்புற, மனநில ,பணியிடம் போன்ற பலகாரணங்களைக்கொண்டே ஆடையைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். வாழ்க்கையின் பொருளைத் தேடியலையும் மனிதன் இப்போதெல்லாம் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத்தேவைகளால் திருப்தியடைவதில்லை. ஆன்மீகத் தேடல்கள் அவனை விலங்கினத்திலிருந்து வெகுதூரம் அழைத்துச்செல்லப்போகிறதா இல்லை வந்தவழியே திரும்பச்சென்று விலங்காகவே ஆக்குமா என்பது காலம் சொல்லப்போகும் பதில். இதில் ஆடைக்கும் ஆடைமொழிக்கும் நிச்சயம் பெரும் பங்குண்டு.

நன்றி : அமுதசுரபி (செப்டம்பர் 2004) / திண்ணை

Monday, December 20, 2004

வணக்கம்

அன்பார்ந்த இணைய நண்பர்களே,

எல்லோருக்கும் வணக்கம்.



இதுநாள்வரைக்கும் கலகலவென்று 'லேடீஸ் ஹாஸ்டல்' போன்ற 'ஒண்டுக்குடித்தன'த்தில் வாழ்ந்துவிட்டு, வேண்டுமா, முடியுமா என்று யோசித்து யோசித்து ஒரு வழியாக இப்போதுதான் 'சொந்த' வீடு வாங்கியுள்ளேன். சும்மா சின்னதா 'ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாய்' ஒரு ·ப்ளாட் தான் !

வலைப்பூ என்ற இந்த அழகிய வடிவத்திற்கு முதலில் நான் சந்திரமதி, காசி இருவருக்கும் மற்றும் இதில் பங்காற்றிய எல்லோருக்குமநன்றி சொல்லக்கடமைப் பட்டுள்ளேன். என்னுடைய இந்தத் தனி வலைப்பூவை வடிவமைக்க உதவிய,.. இல்லையில்லை, முழுவதும் வடிவமைத்தே கொடுத்த தம்பி ஈழநாதனுக்கும் அதேபோல இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

'வலைப்பூவை' வாடவிடாமல் அடிக்கடி நீர் தெளித்து புத்துணர்ச்சியோடு வைத்திருக ்கவேண்டும் என்று ஏனோ மனதில் (நானாகவே தான்) ஏற்படுத்திக் கொண்டுவிட்ட கருத்து அகலாமல் மிகவும் படுத்தியது. விடாமல் தொடர்ந்து எழுதுவேனா என்ற சந்தேகமே 'சொந்த வீடு' எண்ணத்தைத் தள்ளிப்போட்டு வந்தது.

ஒவ்வொரு வலைப்பூவையும் பார்த்தால் இப்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. உதாரணமாக சுரேஷின் 'பிச்சைப் பாத்திரம்' மற்றும் நிர்மலாவின் 'ஒலிக்கும் கணங்கள்' பதிவுகளைப் படிக்கப் படிக்க இவர்கள் ஏன் இத்தனை நாளாக பதிய ஆரம்பிக்காமல் இருந்தார் என்று தான் தோன்றுகிறது.

ஒரேயொரு சின்னஞ்சிறு ஆதங்கம். சில பெயர்கள் தான் மனதை நெருடுகிறன. கவனத்தை ஈர்க்கவென்றோ, அதீத அடக்கம் காட்டும் நோக்கமோ தெரியவில்லை. இத்தனைக்கும் உள்ளடக்கம் சம்பந்தமேயில்லாமல் கட்டாயம் படிக்கவேண்டியதாகயிருக்கிறது.

எண்ணிக்கையில் மட்டுமில்லாமல் தரத்திலும் தமிழ் வலைப்பூக்கள் உயர்ந்து வருவது எத்தனை மகிழ்ச்சியளிக்கிறது தெரியுமா உங்களைப்போலவே எனக்கும் !

சரி, முதலில் ஒரு புதிய முயற்சியுடன் ஆரம்பிப்போம். பிறகு முடியும் போதெல்லாம் எழுதுவோம். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது, பழைய கதை/கட்டுரைகள், அவ்வப்போது போட்டு, இட்டுநிரப்ப (!) என்றுதான் துணிந்துவிட்டேன்.

'புதிய முயற்சி'யா ? என்ன அது என்றா கேட்கிறீர்கள்? அடுத்த பதிவிலே இந்த வினாவிற்கான விடையுண்டு. நான் தவறாகவும் இருக்கலாம். ஏனென்றால், உண்மையிலேயே இது தமிழ் வலைப்பதிவிற்குப் புதிதுதானா என்ற சந்தேகமுண்டு எனக்கு. ஏற்கனவே இதுபோல யாரேனும் செய்திருக்கிறார்களா?

சீனப் புராணங்கள், புராணக் கதைகள் போன்றவற்றின் மீது எனக்கு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் ஆர்வமே இந்த முயற்சிக்குக் காரணம். மற்றபடி கொடுக்கப்போகிற வடிவம் சற்றே மாறுபட்டிருக்கும். குழந்தைத்தனமாக என்றுகூடச் சிலர் நினைக்கலாம்.

அன்புடன் ஜெயந்தி சங்கர்

வூ குங்க் ஸன் -- பாகம் - 1


டங்க்ஷெங்க் என்றொரு மாநிலம் உண்டு சீனாவில். அங்கு பூக்களும் பழங்களும் நிறைந்த ஒரு மலை. அதன் பெயர் அவோலை. முற்காலத்தில் அங்குதான் ஒரு மாயப்பாறை இருந்ததாக நம்பப்படுகிறது. இந்தப்பாறை கோடிக்கணக்கான ஆண்டுகளை இயற்கையின் பற்பல சீற்றங்களைக் கண்டுவந்தது. ஒருநாள், பாறை பிளந்து உடைந்து ஒரு கல் முட்டையை இட்டதாம். அதனின்று வந்தது ஒரு கல் குரங்கு.

பூக்களும் பழங்களும் நிறைந்த ஒரு மலையில் இருந்த மற்ற மந்திகளோடு சேர்ந்தது இந்தக்குரங்கு. ஒரு நாள் அவை விளையாடிக ்கொண்டிருந்தன. நீர்த்திரையால் மறைக்கப் பட்ட ஒரு குகைக்கு அருகே வந்தன. அந்த நீரைக்கடந்து குகைக்குள் போகத் துணிபவர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. அவ்வாறு போகும் குரங்கு அவர்களின் அரசனாவான் என்று ஒரு மனதாக ஏற்றுக்கொள்லப் பட்டது. மற்ற குரங்குகள் தயங்கி நிற்க கல்குரங்கு மட்டுமே குகையினுள் போகத் துணிந்தது.

குகைக்குள் கல்லினாலான பானை, சட்டி, படுக்கை, இருக்கை போன்றவை இருந்தன. குகையின் மத்தியில் பிரம்மாண்டமான கல்தூண் ஒன்று இருந்தது. அதில் 'நீர்த் திரையினால் மறைக்கப்பட்டிருக்கும் இந்தக்குகை சொர்க்கலோகத்திற்கு அழைத்துச ்செல்லும்' என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அந்தநாள் முதல் நாளெல்லாம் விளையாடி விட்டு இரவில் குகைக்குள் சென்று உறங்க ஆரம்பித்தன குரங்குகள். கல்குரங்கைத் தன் அரசனாக ஏற்கொண்டன மற்ற குரங்குகள். கல்குரங்கு தன்னை அப்போதிலிருந்து 'கல்' என்ற அடைமொழியை நீக்கிக்கிக் கொண்டு 'குரங்கரசன்' என்று கூறிக்கொண்டது.

ஒரு நாள் குரங்கரசன் கவலைகொண்டது. ஒருநாளைக்கு இறந்துவிடுவோமே, என்றென்றும் வாழ்க்கையின் இன்பங்களைத் துய்க்கமுடியாதே என்பதே அதன் அன்றைய கவலை. அருகிலிருந்த ஒரு குரங்கு," இவ்வுலகில் முனிவர்கள், புத்தர்கள் மற்றும் சிலரே என்றென்றும் உயிர் வாழ்வர்", என்றது. இதைக்கேட்டதுமே குரங்கரசனின் கவலை மறைந்தது. "நானும் 'சாகாவரம்' பெறுவேன். நாளைக்கே கிளம்புவேன்", என்றது.

அடுத்த நாளே குரங்கரசன் ஒரு கட்டுமரத்தில் ஏறி கடலைக் கடக்கத்துவங்கியது. பல வருடங்கள் கடந்தும்கூட குரங்கரசனால் 'சாகாவரம்' கிடைக்கும் வழியைக ்கண்டுபிடிக்கமுடியவில்லை. குரங்கரசன் ச்சன்பூ மாநிலத்தைக் கடந்து மேற்குக் கடலைக் கடந்தது. கடைசியாக மேற்கு நியூஹே மாநிலத்தின் எல்லையை அடைந்தது.

அந்த வட்டாரத்திலேயே பல வருடங்களைக் கடத்தியும்கூட சாகாவரம் பெற்ற ஒருவரையும் குரங்கரசனால் பார்க்கமுடியவில்லை. கொஞ்சமும் மனந்தளராமல் தொடர்ந்து பயணப்பட்டது. பிறகுதான், ஒருவரால் வழிகாட்டப்பட்டு உயரமான மலை ஒன்றை அடைந்தது. அடர்ந்த காட்டினுள் ஒரு குகையை அடைந்தது. அந்தக் குகையின் வெளிப்புறத்தில்,' சாய்ந்த நிலா மற்ரும் மூன்று நட்சத்திரங்கள் குகை' என்று எழுதப்பட்டிருந்தது.

குகை மூடப்பட்டிருந்தது. குரங்கரசன் காத்திருந்தது. கொஞ்சநேரம் கழித்து உள்ளேயிருந்து ஒரு குழந்தைத் தேவதை வெளியே வந்தது. "குகை வாயிலில் பௌத்தத்தைப் பின்பற்ற விழையும் ஒருவர் நிற்கிறார் என்றார் என் ஆசான், பூடி. அது நீங்கள்தானா?",என்று கேட்டது. குரங்கரசன் கொஞ்சமும் யோசிக்காமல், "ஆமாம், நாந்தான் அது", என்று சொன்னது.

குரங்கரசனை தேவதை ஆசாரியரிடன் அழைத்துச் சென்றது. ஆசாரியர் 'அநாதை' அன்று கூறிக்கொண்ட குரங்கரசனைப் பார்த்துப் பரிதாபம் கொண்டார். தந்தைவழிப் பெயர் ஏதும் அதற்கு இல்லாததால், அவரே குரங்கரசனுக்கு 'வூ குங்க் ஸன்' என்று பெயர் சூட்டினார்.

ஆசாரியர் வூ குங்க் ஸன் என்றழைக்கப்பட்ட குரங்கரசனையும் மற்ற சீடர்களைப ்போலவே தரையைக் கூட்டுவது, களை எடுப்பது, செடி,மரம் நடுவது, நீர் இரைப்பது போன்ற சில வேலைகள் செய்யச்சொன்னார். வூ குங்க் ஸன் மிகவும் கீழ்படிதலுடன்தான் நடந்துகொண்டது. இப்படியே ஏழு ஆண்டுகள் கழிந்தன.
தொடரும்,....

வூ குங்க் ஸன் --முன்னுரை

அன்பார்ந்த நண்பர்களே,

சீனப்புராணங்களில் நமது ஹனுமானைப் போலவே குரங்குக்கடவுள் உண்டு.

சீனர்கள் பின்பற்றும் சந்திர ஆண்டின் எட்டாவது மாதத்தின் பதினாறாவது நாள் சீனர்கள் குரங்குக்கடவுளின் (The Monkey God Festival) விழாவைக்கொண்டாடுகிறார்கள். ஹாங்காங்கில் ஸௌ மௌ பிங்க் என்ற ஒரு இடமுண்டாம். அங்கு இருக்கும் கோவிலில் விழாவின் போது குரங்குக்கடவுள் அனுபவித்த துன்பங்களைச்சித்தரிக்கும் விதத்தில் பக்தர்கள் தீமிதிப்பது, கத்திகள் நீட்டிக்கொண்டிருக்கும் ஏணியில் ஏறுவது போன்றவை மட்டுமில்லாது தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபடுகிறார்களாம் இன்றும்.

இதற்குப் பின்னணியாக நீண்ட ஒரு கதையுண்டு. அந்தக்கதையைத்தான் இங்கு சில பாகங்களில், படங்களுடன் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரைவில் வரவிருக்கிறேன்.

சந்திப்போமா ,..
அன்புடன் ஜெயந்தி சங்கர்

Sunday, December 19, 2004

குறிப்புகள்




குறிப்புகள்----

மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் பல மாநிலங்களிலும் பள்ளிகளிலும் பள்ளிப் படிப்பை முடித்து திருச்சி சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் இயற்பியல் பட்டம் பெற்றவர். 1995 ஆம் வருடத்திலிருந்து எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள ஜெயந்தி சங்கர் 1990 முதல் சிங்கப்பூரில் பொறியாளரான கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ருசியுண்டு. ஓர் எழுத்தாளராகத் தான் உருவாக முக்கிய காரணம் தனது தொடர்ந்த வாசிப்பும் அதற்கு உறுதுணையாக அமைந்த சிங்கப்பூரின் நூலகங்களுமே என்கிறார். எளிய எதார்த்த நடையில் எழுதும் இவர் சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நிறைய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் மற்றும் நாவல் போன்றவற்றை எழுதியுள்ள இவர் ஏராளமான பரிசுகள் வாங்கியுள்ளார். உலகளாவிய வாசகர்களைப் பெற்ற இவர் சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட இவரின் புனைவுகளுக்காக பரவலாக அறியப் பெறுபவர். 2006 வரை வெளியான இவரின் 8 நூல்கள் - 'நாலேகால் டாலர்', 'முடிவிலும் ஒன்று தொடரலாம்', 'ஏழாம் சுவை', 'பெருஞ்சுவருக்குப் பின்னே', 'பின் சீட்', 'வாழ்ந்து பார்க்கலாம் வா' மற்றும் 'நியாயங்கள் பொதுவானவை', 'சிங்கப்பூர் வாங்க'. இவரின் ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வையைத் திருப்பக் கூடியவை. 'தமிழ்க்கொடி 2006' என்ற ஆழி பதிப்பகத்தின் ஆண்டு மலர் போன்ற பல்வேறு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

வாசிப்பு

சிறுவயதில் இலக்கியச் சூழல் அமைவது பெரிய ஒரு வரம் என்று நினைக்கும் இவருக்கு சிறுவயதில் நூல்கள் படிக்கத் தூண்டும் ஊக்கங்கள் இருக்கவில்லை. இவருக்கு அதில் கொஞ்சம் வருத்தமுண்டு. பாடப்புத்தத்தோடு உறவாடியதுடன் முடிந்துவிட்டிருந்தது. ஆனால், பொறியாளரான தந்தையார் விகடனிலிருந்து பக்கங்களைக் கிழித்துத் தான் படிக்கச் சேகரித்த அகிலனின் 'சித்திரப்பாவை' மற்றும் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' போன்ற மிகச்சிலவற்றை மட்டும், அதுவும் மேம்போக்காக மிகச் சிறுவயதில் வாசித்திருக்கிறார். அதைப்பற்றி விவாதிக்கும் சூழல் இவருக்கு இருந்திருக்கவில்லை. கல்கி அவர்களின் சரித்திரப் படைப்புக்களை விட அவரது சமூகக் கதைகளையே அதிகம் விரும்புவார். தேவனின் நகைச்சுவை பிடிக்கும். தி.ஜானகிராமன் சுந்தரராமசாமி, புதுமைப்பித்தன், ஆதவன், அ.முத்துலிங்கம் போன்றவர்களின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். இவர்கள் தவிர வாஸந்தியின் ஆணாதிக்கத்தை அழகாகச் சொன்ன 'அம்மணி' பிடித்திருந்தது. ஜெயமோகனின் குறுநாவல்கள், எஸ்.ராமகிருஷ்ணனின் 'தாவரங்களின் உரையாடல்', சுராவின் 'ஆண்கள் பெண்கள் குழந்தைகள்', மற்றும் திஜாவின் மோகமுள்'/ செம்பருத்தி, அ.முத்துலிங்கத்தின் 'மகாராஜாவின் ரயில்வண்டி' போன்ற பல நூல்களை பலமுறை மீள்வாசிப்பு செய்வது இவர் வழக்கம்.

தொடக்கம்

சிங்கப்பூர் வந்தபுதிதில் (1990) கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்க ஆரம்பித்தார். அப்போது தான் வகைவகையான எழுத்துக்கள் பரிச்சயமாகின. ஆனால், சின்னக் குழந்தையின் திணறல் இருந்து கொண்டேயிருந்தது. எல்லாமே பிடித்த மாதிரியும், எல்லாவற்றையும் பறூத்துவிட வேண்டும் என்ற தீவிர ஆர்வமும் எழுந்தது. சிங்கையின் நூலகங்கள் இவரின் வாசிப்புப் பசிக்கு நல்ல தீனி வழங்கின. 1990ல் ஆரம்பித்தது இவரின் எழுதும் முயற்சி. சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் திரு. வை. திருநாவுக்கரசு அவர்கள் இவரின் முதல் சிறுகதையை வாரயிறுதியில் பிரசுரித்த பிறகு தொலைபேசியில் அழைத்து ஊக்கப் படுத்தியுள்ளார். தமிழ் முரசு, முன்பிருந்த சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர் போன்றவை எழுத்துச் சோதனைகளுக்கு நல்ல தளங்கள். திண்ணை, திசைகள் தவிர சாமாசார், இ-சங்கமம், தமிழோவியம், தட்ஸ் தமிழ், பதிவுகள் நிலாச்சாரல் போன்ற மின்னிதழ்களிலும் இவரின் சிறுகதைகள் /கட்டுரைகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. உள்ளூர் அச்சிதழ்களில் தொடங்கி, இணையத்தில் தொடர்ந்து, ஜூன் 2004 முதல் தமிழகத்தின் பிரபல அச்சிதழ்களில் எழுத ஆரம்பித்துள்ளார். அது மட்டுமில்லாது சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பல வாய்ப்புக்களை இவருக்கு நல்கியுள்ளது. 'முத்தமிழ் விழா'வில் பல போட்டிகளில் பங்கு பெற்றுப் பல பரிசுகளும் பெற்றிருந்தாலும், 2001ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை 'நொண்டி' இரண்டாம் பரிசு (S$ 750) பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே கதை 'நுடம்' என்று பெயர் மாற்றப்பட்டு 'சிங்கைச்சுடர்' மற்றும் மின் சஞ்சிகையான 'திண்ணை' போன்றவற்றில் பிரசுரம் கண்டது. இது மட்டுமல்லாது இக்கதையிலிருந்து சில பகுதிகள் அதே வருடம் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் மாநாட்டில் திரு.மாலன் அவர்களால் படிக்கப்பட்டு சிலாகிக்கப் பட்டது. சிங்கப்பூரின் நூலகங்கள், தமிழ் முரசு, உள்ளூர் இதழ்களான சிங்கை எக்ஸ்பிரஸ் மற்றும் சிங்கைச்சுடர், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், தேசிய கலைகள் மன்றம் போன்ற அமைப்புக்கள், களங்கள் மற்றும் போட்டிகள் அமைத்துக் கொடுத்து இவரின் தொடக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தன.

பரிசுகள்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 1998ல் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 2000 ல் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசும் பெற்றுள்ளார். கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசும் 2001ல் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற குறுநாவல் முதல் பரிசு (30gm தங்கம்) பெற்றது குறிப்பிடத்தக்கது. முத்தமிழ் விழா 2004 ல் ‘சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்’ மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் 'பொம்மை' கதை இரண்டாம் பரிசு பெற்றது. இதைத் தவிர 'தெளிவு', 'கீரை' போன்ற கதைகள் ஆரம்பத்தில் ஆறுதல் பரிசுகள் பெற்றதுடன் சிங்கை வானொலியில் ரே. சண்முகம் அவர்களால் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன. 'சேவை' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 யில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'மழலைச்சொல் கேளாதவர்' என்ற கதை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக தரவில் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுசிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா 2005) ஊக்கப்பரிசு. தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது 2005-கௌரவக் குறிப்பு- ‘ வேண்டியது வேறில்லை ‘ (குறுநாவல்). கோவை ஞானியின் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி 2005 - ‘கடைசிக் கடிதம்’ முதல் தகுதி. 'தமிழ் நேயம்' அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம். பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் நடத்தும் ''தமிழ் நேயம்' அமைப்பின் ஏற்பாட்டில் திருமதி. ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 2006ல் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் 'சொல்லாத சொல்' என்ற சிறுகதை முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற (அமைப்பின் ஒன்பதாவது) தொகுதியில் பிரசுரம். 2006 சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.

அச்சு இதழ்கள்

அமுதசுரபியின் ஜூன் 2004ல் வந்த 'உலகநாடுகளில் கல்வி' , செப்டம்பர் இதழில் 'ஆடை மொழி' ஆகிய கட்டுரைகளுக்கு ஆய்வு செய்ததும் கிடைத்த பின்னூட்டங்களும் மிகுந்த திருப்தியளித்தன. அமீர தமிழ்ச் சங்கம் ஆண்டு மலரில் (2004) 'புரட்சி'க் கவிஞர் என்ற கட்டுரை பிரசுரம் கண்டுள்ளது. திசைகள் August இதழில் பிரசுரமாகி, பின் Fetna 2004 நியூஜெர்ஸி ஆண்டிதழிலும் பிரசுரமான 'ஈரம்' என்ற சிறுகதை ஏராளமானோரின் மனதை நெருடியது தெரியவந்தது. நிறைய மின்மடல்களும் பின்னூட்டங்கள் என் மின்னஞ்சல் பெட்டியை நிறைத்தன. டூந்தக் கதையைப் படித்தவர்களும், தமிழோவியம் மின்னிதழில் ஆகஸ்டு 2004 வெளியாகத் தொடங்கிய கட்டுரைத் தொடர் படித்தும் அச்சிதழாசிரியர்கள் கதை மற்றும் கட்டுரை கேட்டு இவரை அணுகினர். அக்டோபர் 2004 'உயிர்மை' இலக்கிய இதழில் வந்த 'ஆவிகள் புசிக்குமா?' என்ற கட்டுரை வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே தொலைபேசி மற்றும் மின்மடல்களின் வழி பல பின்னூட்டங்களைக் கொணர்ந்தது. 'தென்றல் முல்லை' வாஷிங்டன் (2004 -நான்காம்) காலாண்டிதழில் 'நுடம்' என்ற (மீண்டும் பிரசுரம் கண்டு) சிறுகதையும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. இதே கதை ஸ்விஸ் நாட்டின் தமிழ் FM 'நிலா'வில் 25/26-09-05 அன்று 'இசையும் கதையும்' ல் ஒலிபரப்பானது. 2004 ஜூலையில் கல்கி தீபாவளி மலருக்கென்று கதை ஒன்றைக் கேட்டு கல்கி ஆசிரியர் எழுதியிருந்தார். மிகுந்த ஊக்கமும் உற்சாகமும் அடைந்து, உடனே 'நாலேகால் டாலர்' என்ற கதை எழுதியனுப்பி, 4-5 நாட்களில், 'மிகச் சிறப்பாக இருக்கிறது', என்று பதிலும் வந்தது. 2004 நவம்பர் 8 வெளியான தீபாவளி மலரில் இக்கதை பிரசுரமாகியுள்ளது. (பாரிஸ்)பெண்கள் சந்திப்பு 2005 மலரில் 'தையல்' (பெண்ணே நீ அக்டோபர் 05 மறுபிரசுரம்) என்ற கதையும், ந்யூயார்க்கின் 'த தமிழ் டைம்ஸ்' (the tamil times) டிசம்பர் 2004 இதழில் பெரானாகன் என்ற கட்டுரையும், அமுதசுரபி பிப்ரவரி 2005இதழில் 'பேஜர்' என்ற கதையும் ஜனவரி 2005 அமுதசுரபி இதழில் வெற்றித் திருமகள் பகுதிக்கு நேர்காணலும், உயிர்மை மார்ச் 2005 இதழில் 'ஹினா மட்சுரி' என்ற கட்டுரையும், 'தென்றல்' வட அமெரிக்க இதழில் (மார்ச் 2005) 'அம்மா பேசினாள்' என்ற கதையும், கல்கி 13-03-05 இதழில் 'பின் சீட்' என்ற கதையும் பிரசுரமானது. கனடாவின் 'குவியம்' இதழிலும் இவரின் சிறுகதை பிரசுரம் கண்டுள்ளது. ஜூன் 2005 'உயிர்மை' இதழில் 'கருணைக் கடவுள் குஆன்யின்' என்ற கட்டுரை பிரசுரமானது. 'சேவை' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2005 ல் பிரசுரத்துக்குத் தர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. 'அவள்' என்ற கதை அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி- 2006 ல் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2006 கல்கி தீபாவளி மலரில் 'நான்கிலக்கம்' சிறுகதை பிரசுரம் கண்டது.


இதுவரை வெளியாகியுள்ள நூல்கள் (டிசம்பர் 2006) .




  • நாலேகால் டாலர்- சிறுகதைத் தொகுப்பு
  • முடிவிலும் ஒன்று தொடரலாம் - குறுநாவல் தொகுப்பு
  • ஏழாம் சுவை - கட்டுரைத் தொகுப்பு
  • சிங்கப்பூர் வாங்க - விகடன் பிரசுரம்
  • பின் சீட் - சிறுகதைத் தொகுப்பு
  • வாழ்ந்து பார்க்கலாம் வா - நாவல்
  • பெருஞ்சுவருக்குப் பின்னே - (சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்)
  • நியாயங்கள் பொதுவானவை - சிறுகதைத் தொகுப்பு

2006 சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று ( ஜூன்-ஆகஸ்ட்) மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.



சோதனை

வணக்கம்.சோதனைப் பதிவு.அன்புடன் ஜெயந்தி