Monday, April 25, 2005

ஹினா- மட்சுரி


நம் நாட்டில் கொண்டாடப்படுவதைப்போலவே ஜப்பானிலும் 'கொலு' கொண்டாடப்படுகிறது. ஆனால், மார்ச் 3 ஆம் தேதிதான் 'ஹினா-நோ-செக்கு' அல்லது 'ஹினா-மட்சுரி' எனப்படும் ஜப்பானிய 'கொலு' கொண்டாடப் படுகிறது. ஹினா என்றால் பொம்மை, மட்சுரி என்றால் விழா . இதை 'சிறுமிகள் விழா' என்றும்கூடச் சொல்கிறார்கள். 'மோமோ-நோ-செக்கு' (Peach blossom's Festival) என்றும் அழைக்கப் படும் இந்த விழா பழம் சீனாவிலிருந்து வந்திருக்கிறது. உண்மையில் பீச் பூக்கள் மார்ச் மாதத்தொடக்கத்தில் முன்பெல்லாம் பூத்தன. ஆனால், இப்போதெல்லாம் பீச் பூக்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் பூக்கின்றன. அப்போது ஆரம்பித்த விழா இன்றும் மார்ச் மாதமே தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.1603-1867 கால கட்டத்தில் இது ஜப்பானுக்குப் பரவியது. 'காடா' (Kada) கோவில் தான் இந்த விழாவிற்கான கோவில். 'கொடோ நோ ஹி' என்னும் சிறுவர்கள் தினத்திற்கு ஜப்பானில் பொதுவிடுமுறை உண்டு. ஆனால், 'ஹினா மாட்சுரி' என்னும் சிறுமிகள் தினத்திற்கு பொதுவிடுமுறை கிடையாது.

பழங்காலத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் என்று எல்லோருமே காகிதங்களை உபயோகித்து அவரவருக்குத் தோன்றிய பொம்மைகளைச் செய்தனர். அப்படிச்செய்யும்போது அவரவர் பொம்மைக்குள் அவரவரின் துரதிருஷ்டங்களையும் நோய்களையும் ஏற்றிவிடுவதாக நம்பப்பட்டுவந்தது. அந்த பொம்மைகளை பக்கத்தில் இருக்கும் ஆறுகளில் 'விசர்ஜனம்' செய்துவிடுவர். ஜப்பானின் கலை மற்றும் கலாசாரச்சேர்க்கையில் 'மோமோ-நோ-செக்கு' விழா உருவம் கொண்டது. படகுகளில் பொம்மைகளை ஏற்றி இன்றும் கடலை நோக்கிச் செலுத்தி சிறுமிகளின் துரதிருஷ்டம் மற்றும் திருஷ்டி போன்றவற்றைத் துரத்துகின்றனர். அவர்கள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வளர இந்தச் சடங்கு உதவும் என்பது நம்பிக்கை. மாலையில் அழகிய உடைகள் அணிந்த சிறுமிகள் விளக்குகள் (lanterns) ஏந்தி நடப்பதைப்பார்க்க அழகாய் இருக்கும். இன்றும் பெரியளவில் கொண்டாடப்படுகிறது. வேறு ஒரு நாட்டுப்புறக்கதையும் உண்டு. அதில் பொம்மை செய்பவன் மாடலாக இருந்துவந்த பெண்மீது காதல் கொள்கிறான். அதை நினைகூறவே விழா என்பதும் ஒரு நம்பிக்கை. வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாகவும் அமைந்த இந்த விழாவில் விருந்துக்கும் கோலாகலத்திற்கும் குறைவேயில்லை. 'சூஷி' (Sushi) எனப்படும் வினீகர் சேர்க்கப்பட்டும் செய்யப்படும் மீன் மற்றும் சாதத்தினால் ஆன பண்டம்தான் வழக்கம்போல விழாவின் முக்கிய உணவு. இதுதவிர பலவித மதுவகைகளும் உண்டு.

சிறுமிகள் தங்களின் எதிர்கால மகிழ்ச்சிக்காக விழாவை வீட்டில் கொண்டாடி மகிழ்வர். 'ஹினா நிங்க்யோ' என்னும் பொம்மைகளை அலங்கரித்து 'கொலு' வைக்கிறார்கள். அன்றாடம் கூடத்தை அலங்கரிக்கும் பொம்மைகளில்லை இவை. தலைமுறை தலைமுறையாய் வீட்டின் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு, வழிவழியாக வரும் பொம்மைகள். சில நாட்கள் இருக்கும் இந்தக்கொலு முடிந்ததும், அழகாகவும் பாதுகாப்பாகவும் அவற்றிற்குரிய பெட்டிகளில் அடுத்த வருடம் வரை வைத்துவிடுவர். ஒவ்வொரு வருடமும் வசதியுள்ளவர்கள் புது பொம்மைகள் வாங்குவதுமுண்டு. இந்தப் பொம்மைகள் ஹினமட்சுரி விழாவின் போதுதான் பார்வைக்கு வைக்கவேண்டும். மற்றநேரங்களில் வெளியே எடுத்தால், வீட்டுப் பெண்குழந்தைகளுக்கு கணவன் கிடைக்கமாட்டான் என்று நம்பப்படுகிறது.

பொம்மைகள் ஜப்பானில் அலங்காரப்பொருளாக மட்டுமில்லாமல், விளையாட்டுப்பொருட்களாகவும், தாயத்து போலவும், பஞ்சபூதங்களாகவும்கூட கொண்டாடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான வருடங்களாக பொம்மைகள் மாற்றங்கள் பலகண்டு வந்துள்ளன. இப்போதும் நவீன பொம்மைகளுக்கு நிகராக பாரம்பரிய பொம்மைகளுக்கும் வரவேற்பு இருக்கிறது. மார்ச் 3ஆம் தேதிக்கு முன்னர் கடைகளில் பொம்மை விற்பனை நடைபெறும். ஹினா பொம்மைகள் பெரும்பாலும் ஸெட்டாகவே விற்கப்படும். குறைந்தது 15 பொம்மைகளிருக்கும் ஒரு ஸெட்டில். அதில் குட்டிக்குட்டி வீட்டுச் சாமான்களும் அடங்கும். நுணுக்கமான தேர்ந்த கலைத்திறனோடு கூடிய வேலைப்பாடுகள் அமைந்திருக்கும் இந்த பொம்மைகளில். மிகவும் உயர்ரகமெனக் கருதப்படும் ஸேட், டைரி-சாமா என்னும் ஸெட்டாம். இதில் டைரி- பினா என்னும் அரச தம்பதியர் உயரகப் பட்டினால் ஆன அரசவை உடையில் இருப்பர். இரண்டு மந்திரிகள் மற்றும் மூன்று தோழிப்பெண்களோடு ஐந்து இசைக் கலைஞர்களும் இதில் அடங்குவர். பெரும்பாலும் ஐந்து அல்லது ஏழு படிகளில் அடர் சிவப்புத்துணியைப்போர்த்தி பொம்மைகள் அடுக்கப்படுகின்றன. படிகளுக்கு ஹினா-தன் என்று பெயர். அரசகுடும்பம் முதல் படியில் இருக்கும். தோழிப்பெண்கள், மரங்கள், தேநீர் பாத்திரங்கள் (டீ செட்) உணவுப்பொருட்கள் போன்றவை இரண்டாவது படியிலும், மற்ற பொம்மைகள் மற்றபடிகளிலும் அடுக்கப்படுகின்றன. சீர்வரிசைகளைக்குறிக்கும் வகையில் சின்னச்சின்ன பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும்.

ஆரம்ப நாட்களில் வைக்கோல், மற்றும் குச்சிகளால் பொம்மைகள் செய்யப்பட்டன. ஆனால், நவீன காலங்களில் பெருமளவில் கண்ணைக்கவரும் பொம்மைகள் உற்பத்தியாகின்றன. விலையுயர்ந்த பொம்மைகளும் சந்தையில் வந்துவிட்டன. மிகப் பிரபலமான பொம்மை கிமோனோ உடையணிந்த ஒடைரி-சாமா என்னும் இளவரசனும் ஓஹினி-சாமா என்னும் இளவரசியும் தான். கொகேஷி என்னும் வகை பொம்மை தனியாகக் கை மற்றும் கால்களில்லாமல் உடலோடு ஒட்டி வரையப்பட்டிருக்கும் எளிய வடிவம் கொண்டது. பெரிய தலையும் உடலும் கொண்டது. மரத்தாலான இந்தவகை பொம்மைகள் டொஹோகு என்றறியப்படும் வடக்கு ஹோன்ஷ¤வில் தயாராகிறது. கிட்டத்தட்ட நமது மரப்பாச்சி பொம்மையை ஒத்திருக்கும். ஆனால், மேடுபள்ளமில்லாமல் மொழுமொழுவென்று இருக்கும். இவை டோகுகாவா சகாப்தத்தில் வசந்த ஊற்றுக்களுக்கு வருகை தந்த சுற்றுப்பயணிகளுக்கு நினைவுச் சின்னங்களாகப் பரிசளிக்கப்பட்டனவாம். பெரும்பாலும் சிறுமிகளையே குறிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. ஹகடா பொம்மை மண்ணால் ஆனது. இவ்வகை பொம்மைகள் க்யூஷ¤விலிருக்கும் ·புகுஒகுவால் தயாரிக்கப்படுகின்றன. இவை நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும். புன்ராகு பொம்மை பாரம்பரிய பொம்மலாட்ட வகை. தாருமா பொம்மை உருண்டை வடிவம் கொண்ட சிவப்பு பொம்மை. இதற்குக் கண்களில் கருவிழி இருக்காது. இது போதிதர்மரைக் குறிக்கும் பொம்மை. இவர் நீண்ட நாட்களுக்குத் தவம் செய்ததில் கால்கள் பயனற்றுப்போயினவாம். டகசகியில் இருக்கும் கும்மா என்னும் நிறுவனத்தினரால் கையாலேயே செய்யப்படும் பொம்மைகள் இவை. பெரும்பாலும் புதுவருடத்தில் மனதில் ஒரு வேண்டுதலோடு இந்த பொம்மைக்கு ஒரு கண்ணில் கருவிழி வரைவர். அந்த வேண்டுதல் நிறைவேறினால், அடுத்து வரும் புதுவருடப்பிறப்பன்று மற்றொரு விழிக்கும் கருவிழி வரைவார்கள். பூனைபொம்மைகள் பணப்பெட்டிக்கு அருகில் இருந்தால் காசு கொட்டும் என்பது நம்பிக்கை. கொலுவைச்சுற்றி இருக்கும் மற்ற அலங்காரங்கள் நவீனமாகிக்கொண்டு வருகின்றன. எப்போதும் பீச் பூக்களும் அலங்காரத்தில் உண்டு.

உலகப்போருக்குமுன் ஜப்பானியச் சிறுமிகள் தங்கள் சிநேகிதிகளை அழைத்து விருந்துவைக்க இந்த விழாவை ஒரு சந்தர்பமாகக் கருதினர். சிறுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்து படைக்கும் இந்தச் சடங்கு உண்மையில் சிறுமிகளுக்குக் கொடுக்கப்படும் 'விருந்தோம்பல்' பயிற்சி என்றே கொள்ளப் பட்டுகிறது. சிலவேளைகளில் அவர்களே சமைத்து பொம்மைகளுக்குப் படைத்தனர். விருந்தில் ஷிரோஜாக்கே என்னும் இனிப்பு அரிசி வய்ன் குடித்தனர். பொம்மைகளுக்குப் படைத்தவற்றில் முக்கியமானவை அரிசிமாவில் செய்த டைமண்ட் வடிவ கேக், பழவடிவ பர்பி, சிவப்புப்பயறு சேர்த்த சாதம் போன்றவை. சின்ன சொப்புகளில் விருந்தினராய் வந்திருக்கும் மற்ற சிறுமிகளுக்கு இந்த உணவு வழங்கப்பட்டது. சிறுமிகளின் வண்ணவுடைகளும் கொலுவின் அழகிய வண்ணமும் விழாவைக்கோலாகலமாக்கின. இன்றும் கிராமப் புறங்களில் ஹினமட்சுரி பொம்மைகளையும் படிகளையும் பாதுகாத்து வைத்துக்கொள்கிறார்கள். மணமாகிப் புக்ககம் போகும்போது பெண் இவற்றைத் தன் புக்ககத்திற்குக் கொண்டு செல்கிறாள்.

பெண்குழந்தைகள் இல்லாதவர்களும் கூட ஆர்வம் காரணமாக சிறிய அளவிலேனும் கொலு வைக்கிறார்கள். ஒரு சிறுமியின் முதல் ஹினா மாட்சுரியை (கொலுவை) 'ஹட்சு- ஜெக்கு' என்றழைக்கிறார்கள். சிறுமியின் தாத்தாபாட்டி அவளுக்கு கொலுப்படிகளோடு ஒரு ஸெட் பொம்மையைப் பரிசளிப்பர். பிப்ரவரி மத்தியிலேயே கொலு வைக்க ஆரம்பித்து மார்ச் 3 ஆம் தேதி எடுத்து வைத்துவிடுவர். எடுத்து வைப்பதில் தாமதிக்கும் வீட்டுப்பெண்களுக்குத் திருமணம் தடை படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. விழா சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் மேன்மைக்காகவென்று நம்பப்படும் இந்த விழாவைப்பற்றி மற்றும் பலவிதமான நம்பிக்கைகளும் அர்த்தங்களும் நிலவுகின்றன. பெற்றோரைக்காத்தல்/பேணுதல், மூதாதையரை வணங்குதல் போன்ற நன்னெறிகளை வலியுறுத்துவதாகவும் சொல்லுப்படுகின்றது. ஜப்பானியர்களுக்குக் குழந்தைகளிடமிருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விழாவாகவும் கொள்கிறார்கள்.

க்யோட்டோவிலிருக்கும் அருங்காட்சியகம் பொம்மைகளைப்பற்றியும் 'ஹினா மட்சுரி' பெற்ற பரிணாம வளர்ச்சி பற்றியும் விவரிக்கும் படங்களைக்கொண்டுள்ளது. ரிங்கியா என்றழைக்கப்படும் ஏலக்கடை இவ்விழா தொடர்பான பாரம்பரிய பொம்மைகளுக்குப் பெயர்போனது. 1990 ல் வெளியான அகிரா குரோசவாவின் 'யுமே' (Yume) என்னும் திரைப்படத்தில் இந்த ஹினா என்னும் கொலு மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் ஜப்பானியக் கலாசாரத்தையும் ஜப்பானின் இயற்கைச்சூழலையும் மையமாகக்கொண்டு இரண்டின் தொடர்பைக் குறித்துப்பேசும் காவியம். சிறுவன் ஒருவன் தன் குடும்பத்தின் பீச் தோட்டம் பறிபோனதைக் குறித்து வருந்திக் கொண்டிருப்பான். அப்போது தன்னையே உற்சாகப் படுத்திக் கொள்ள தன் சகோதரி படிகளில் அலங்கரித்து வைத்துள்ள 'ஹினா- மாட்சுரி' பொம்மைகளில் சில உயிர்பெற்று நடமாடுவதாகக் கற்பனை செய்வான்.

ஜனவரி 1927 ல் மிஸ். அமெரிக்கா மற்றும் 48 அமெரிக்க மாநிலங்களைக்குறிக்கும் 48 பொம்மைகளும் பொம்மைத் தூதுவர்களாக அமெரிக்காவிலிருந்து நல்லெண்ண அடிப்படையில் தோக்கியோவிற்கு அனுப்பப்பட்டன. இம்பீரியல் எடுகேஷன் மியூசியம் என்னும் அரச அருங்காட்சியகத்தில் இருக்கும் இரட்டை மாடி பொம்மை வீட்டில் வசிக்கின்றன இந்த பொம்மைகள். இவற்றிற்குக் கோலாகல வரவேற்பு நடந்தது ஜப்பானில். இந்தப்பொம்மைகளை வரவேற்கவென்று ஒரு 'நல்வரவுப் பாடல்' போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் கொரியச்சிறுமி வென்றாள். வென்ற பாடல் ஜப்பானிய இசைஞர்களால் இசையமைக்கப்பட்டுப் பாடப்பட்டது. நீலவிழிகளுடைய இந்தப் பொம்மைகள் பார்க்கவும் தொடவும் அற்புதம். நேர்த்தியோட வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. அமெரிக்க நட்பு பொம்மைகள் கிடைத்துவுடன் ஜப்பான் நன்றி தெரிவிக்கும் வகையில் அமெரிக்கக் குழந்தைகளுக்கு 12,000 திற்கும் மேற்பட்ட பொம்மைகளை அனுப்பியது. அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் மேலும் 12,739 அமெரிக்க பொம்மைகள் ஜப்பானின் ஒசாகாவை வந்தடைந்தன. ஒவ்வொரு பொம்மையும் சின்ன பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் வைத்திருந்தன. அதோடு அமெரிக்கக்குழந்தைகளின் செய்தியடங்கிய மடலும்.

விழாமுடிந்தபிறகு பொம்மைகள் நாடெங்கும் இருக்கும் பாலர் மற்றும் தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டன. தங்களுடைய சொந்த பொம்மைகளைக்கொண்டுவந்து அவற்றையும் படிகளில் வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிச் சிறார்கள் ஜப்பானியக் குழந்தைகளைப் பிரதிநிதித்து விழாவில் கலந்துகொண்டனர். அதே எண்ணிக்கையில் அமெரிக்கக் குழந்தைகளும் விழாவில் பங்கேற்றனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பொம்மை கொடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் முழுமையான புரிந்துணர்வு மற்றும் நட்பு நீடிக்க இந்த விழா மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று எல்லோரும் நம்பினர். அவ்வகையுணர்வுகளை இளையதலைமுறையிடையே தோற்றுவிக்கும் நோக்கமும் இதில் அடங்கும். உலகின் மற்ற விழாக்களைப் போலவே காலத்திற்கு ஏற்றாற்போல ஹினா-மாட்சுரியின் நோக்கங்களும் அர்த்தங்களும் மாற்றங்களைக் கண்டு வருகிறது.

(முற்றும்)

நன்றி: உயிர்மை மார்ச் 2005
& திண்ணை

-----ஜெயந்தி சங்கர்

Sunday, April 03, 2005

பெரனாக்கான்

(Peranakans)

பெரனாக்கான் என்றாலே 'கலந்த ரத்தம்' என்று பொருள். மலாய் மொழியிலும் இந்தோனீசிய மொழியிலும் 'வாரிசுகள்' என்ற பொருள்கூட வரும். ஆண் வாரிசுகள் 'பாபா' என்றும் பெண் வாரிசுகள் 'ந்யோந்யா' என்றும் அழைக்கப் படுகின்றனர்.17 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அன்றைய மலேயாவிற்கு வந்த சீனர்களுக்கும் மலேயாவின் மக்களுக்குமிடையே நடந்த கலப்பு மணங்களில் பிறந்தது இவ்வினம். பெரும்பாலும் தென்சீனாவிலிருந்து தென் கிழக்காசியவிற்கு வந்த வணிகர்களே இதில் அடங்குவர். இதுதவிர, போர்ச்சுக்கீசிய மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் தாக்கமும் இதற்குண்டு. இந்தக் கலாசாரம் மலாக்காவில் தான் தொடங்கியதாக நம்பப்படுகிறது. மெதுவாக வட்டராமெங்கும் பரவி அந்தந்த மண்ணின் மணத்தோடும் சிற்சில மாற்றங்களோடும் ஆங்காங்கே நிலவிவந்தது. இதனாலேயே இது (Peranakan culture) தனித்துவம் வாய்ந்து வந்துள்ளது.

சீனாவின் அமோய் (Amoy) மற்றும் ·பூகேன் (Fukien) ஆகிய பகுதிகளிலிருந்து 'திரவியம்' தேடி வந்தவர்கள் இவர்கள். ஆண்கள் வரும்போது சிலகாரணங்களுக்காகத் தனியே வந்துவிட்டு பிறகு உள்ளூர் பெண்களை மணம் புரிந்துகொண்டனர். மலேயாவில் நிரந்தரமாகத்தங்கும் எண்ணம் இல்லாதிருந்ததால் பணமீட்டும் ஒரே குறிக்கோளுடன் தான் கிளம்பினார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கடற்பயணத்தில் சிரமப்படுத்த வேண்டாமென்ற எண்ணமும் நிலவியது. அதுவும் தவிர, அந்தக்காலத்தில் சீனஅதிகாரிகள் பெண்களை நாட்டைவிட்டுக் கூட்டிக்கொண்டு போவதைத் தடுத்துவந்தனர். மலேயாவிற்கு வந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றிகண்டால் உள்ளூரில் ஒரு குடும்பத்தையும், சொந்தநாட்டில் ஒரு குடும்பத்தையும் எளிதாகப் பராமரித்தனர். சம்பாத்தியம் பெரிதாய் இல்லாவிட்டால் மீண்டும் திரும்பிப்போய் குடும்பத்தைச் சந்திக்கும் துணிவில்லாமல் மலேயாவிலேயே சம்பாதித்த சொற்பத்தைக்கொண்டு உள்ளூரில் குடும்பம் நடத்தினர். பொதுவாய் பினாங்கைச் சேர்ந்தவர்கள், மலாகாவைச்சேர்ந்தவர்கள் என்று இரண்டு பிரிவினருண்டு.

சிங்கப்பூரைச்சேர்ந்த பெரனாக்கான் இனத்தவர்கள் மலாக்காவிலிருந்து வந்தவர்களே. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சர் ஸ்டாம்போர்ட் ரா·பிள்ஸ் சிங்கப்பூரில் புதிய வணிக துறைமுகம் ஒன்றை நிறுவத்திட்டமிட்டதும் பினாங்கு மற்றும் மலாகாவில் இருந்த பெரனாக்கான் குடும்பங்கள் தெற்குநோக்கிக் குடிபெயர்ந்தனர். இப்படியாகக் கால ஓட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளெங்கும் இவ்வினத்தினர் பரவினர். 19ஆம் நூற்றாண்டில் பெரனாக்கான் சமூகத்தினருக்குப் பெரும் செல்வாக்கும் பொருளாதார வசதியும் கொண்டிருந்தனர். ஏனென்றால், அவர்கள்தான் முதன் முதலில் குடியேறிய வணிகர்கள்.

பிறந்தநாள் என்றால் இவ்வினத்தினருக்கு 'முதல் மாதம்', மற்றும் 61 வயது முடியும் பிறந்தநாள் ஆகிய இரண்டும் தான் மிகமிகமுக்கியமானவை. குழந்தைக்கு ஒருமாதம் ஆகும்போது முதல் முடியிறக்கி, நகங்களை வெட்டி, இரண்டு மெழுகுவத்திகள் ஏற்றிவைத்து மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, வணங்கி நன்றி தெரிவித்தனர். விருந்தும் உண்டு. 61 வயதிற்கு முன்னர் இறந்தவர் முழுமையாக வாழவில்லை என்று நம்பினர். உயர்ந்த நாற்காலியில் அமரவைத்து, சிறியவர்கள் அவரை நமஸ்கரித்து ஆசிபெற்றனர். சிகப்பு உறைகளில் பணமும் அவரவர் வசதிக்கேற்ப அன்பணிப்பாக வழங்கப்பட்டது. 'பாஜங்க் பாஜங்க் உமோர்' என்று சுற்றியுள்ளவர்கள் அனைவரும் 'வாழ்த்தி' கோஷித்தனர்.

பெண்களே சமையல்வேலை முழுவதை பார்ப்பதாலேயே, ந்யோந்யா உணவு என்றோ பெரனாக்கான் உணவு என்றோ இவர்களின் உணவு அறியப்படுகிறது. கலப்பு மணத்தில் விளைந்த இச்சமூகத்தின் உணவுக்கலாசாரமும் ஒரு கலவையே. மலேசியர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். ஆகவே இவர்கள் பன்றிக்கறியை உட்கொள்வதில்லை. ஆனால், பெரனாக்கான் உணவில் பன்றிக்கறி தாராளமாகப் பயன்படுகிறது. இவர்களின் உணவில் தேங்காய், மஞ்சள் மற்றும் எலும்பிச்சை போன்றவை இன்றியமையாதவை.

ந்யோந்யாவினர் சமையலை ஒரு கலையாகவே நினைக்கின்றனர். தங்கள் உணவுக்கலாசாரத்தில் அவர்களுக்கு மிகுந்த பெருமையுண்டு. மலேசிய அடையாளங்களுடன், இந்திய, தாய், இந்தோனீசிய மற்றும் சீன வழக்கங்கள் உணவில் தெரியும். ஒவ்வொரு சமூகத்தின் உணவுசமைக்கும் முறைகளின் சிறப்பையும் எடுத்துக்கொண்டுள்ளது பெரனாக்கான் உணவு முறை. வெட்டியோ அப்படியே முழுசாகவோ ஒரு வகை எலுமிச்சை இலைகள் (லிமௌ புருட்) பெரும்பாலான உணவுவகைகளில் சேர்க்கப்படுகின்றன. கொத்துமல்லித் தழைகளும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வாழையிலையில் கட்டிய சாதம், இறைச்சி போன்றவற்றை ஆவியில் சமைப்பது இவர்கள் வழக்கம். சிலவேளைகளில் பொரித்தும் எடுப்பார்கள். வாழையிலையின் மணம் இவர்களின் சிலவகை உணவுகளில் பிரசித்தம். ந்யோந்யாவினரது கொழுக்கட்டை வகைகள் தென்கிழக்காசிய நாடுகளில் மிகவும் பிரபலம்.

இவர்களது சாப்பாட்டு மேசையில் தவறாமல் இடம் பெறுவது 'சாலட்'(Salad). இதில் உலர்ந்த வகை, ஈரப்பதமுடைய வகை என்று இரண்டு உண்டு. ஈரவகை சாலடில் தேங்காய்ப்பால் சேர்க்கிறார்கள். காரமும் இனிப்பும் எலும்பிச்சையின் புளிப்பும் சேர்த்திருக்கும். உலர்ந்த வகையிலோ துருவி வறுத்த தேங்காய் சேர்த்திருக்கும். இது சுமத்திராவிலிருந்து வந்த வழக்கம். மீன்வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளோ உலர்ந்த நெத்திலி மீனில் செய்யப்பட்ட சாஸ் (sauce) அல்லது வேர்கடலையில் செய்யப்பட்ட சாஸ் (sauce) சேர்க்கப்பட்டிருக்கும்.

பங்கா ரம்பே (screwpine) என்னும் இலைகளை பிறப்பு முதல் இறப்பு வரையில் எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் உபயோகிக்கிறார்கள். பலவாரங்கள் முடியை அலசாத கிழவிகள் இந்த இலையைக் கொண்டைக்குள் வைத்துக்கொள்வராம். இதன்மூலம் முடியை நாற்றமில்லாமல் வைத்துக் கொள்ளமுடியும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு வகைப் பூவைப் பயன்படுத்துகிறார்கள். பழங்கால சிங்கப்பூரில் இச்சமூகத்தினரது வீடுகளின் பின்புறத்தோட்டத்தில் உணவிற்குத் தேவையான கீரை மற்றும் மூலிகை வகைகள் வளர்க்கப்பட்டன. இப்போதெல்லாம் அடுக்குமாடிகளில் இந்த வழக்கம் தொடர வழியில்லாதுபோனது. மலேசியாவிலிருந்து வரவழைக்கப்படும் மூலிகைகள் இப்போதும் கடைகளில் வாங்கக் கிடைக்கும்.

உணவில் மட்டுமில்லாமல் உடை, ஆபரணங்கள், கட்டடவியல் ஆகிய எல்லாவற்றிலுமே பெரனாக்கான் சமூகம் தனித்துவம் கொண்டிருக்கிறது. இவர்களது மரச்சாமான்களின் வேலைப்பாடுகள் கண்ணைக்கவரும். சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கம் பெண்களிடம் இருந்திருக்கிறது. இவர்கள் மிகவும் உல்லாசப்பேர்வழிகள். சூதாட்டம் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

மூத்தவர்கள் தொளதொள சட்டையும் பேண்டும், துணியாலான காலணியும், தலையோடு பொருந்திய சிறிய குல்லாயும் தான் பாரம்பரியமென்று நம்பினர். ஆனால், பெரானகன் இனத்தவரின் உடை பலமாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலப்பில் பிறந்த ஆண் குழந்தைகள்/இளையர்கள் மேல்நாட்டுப் பாணி கோட்டும் பேண்டும் காலணிகளும் தொப்பியும் அணிய ஆரம்பித்தனர். வேலைக்குப் போகும்போது அரைக்கை பனியனுக்குமேல் 5 பட்டன்கள் வைத்துத் தைத்த கோட்டு அணிந்தனர். பனியன் பேண்டுக்குள் இழுத்துவிடப்பட்டிருக்கும். கணுக்காலுக்கு அருகில் குறுகிய கால்சட்டையையே அணிந்தனர்.

ந்யோந்யா என்றழைக்கப்படும் இவ்வினப் பெண்கள் கணுக்கால்வரை நீண்டிருக்கும் 'சரோங்க்' அணிந்து முழங்கால் வரை நீண்டிருக்கும் ஜம்பர் வகை மேலுடை அணிந்தனர். சிறிய உருண்டைக்கொண்டையோ, நத்தை வடிவிலான கொண்டையோ போட்டுக்கொண்டனர். பின்னல்வேலைசெய்யப்பட்ட கைப்பை இவர்களின் இடுப்பு வாரிலிருந்து (belt) தொங்கும். வலதுதோளில் முக்கோணமாக மடிக்கப்பட்ட கைக்குட்டை குத்தப்பட்டிருக்கும். 'கஸொத் மனேக்' என்றழைக்கப்பட்ட மணிகளால் அலங்கரிக்கப்பட்ட காலணி அணிந்திருப்பர்.

1920 களில் நேர் வகிடு எடுத்து இரண்டாகப்பிரித்து கூந்தலை இரட்டைப்பின்னிச்சுற்றி, காதுகளையட்டி இரண்டு கொண்டைகள் போட்டுக்கொண்டனர். பிறகு மெதுவாக கொண்டையைவிட்டுவிட்டு ஹேர்பின் போட்டுக்கொள்ளும் பழக்கம் வந்தது. மேல்சட்டையின் உயரம் இடைவரை குறைந்தது. 'கெரோசங்க்' எனப்படும் பெண்களுடையில் பல மாற்றங்கள் வந்தது. சில 1930களில் குட்டைப்பாவாடைகூட அணிய ஆரம்பித்தனர். குதியுயர்ந்த வகைக்காலணிகளும் வந்தன.

பெரனாக்கான் உடையில் 'கெபாயா' தான் மிகமிகப் பிரபலம். இதில் நுணுக்கமான அழகிய தையல்வேலைதான் (embroidery) சிறப்பு. இதற்குத் தான் வேலையும் அதிகம், கூலியும் அதிகம். மணிகளையும் இதற்குப் பயன் படுத்துகிறார்கள். சுற்றுப்பயணிகள் மிகவும் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். இன்றும் ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளிலிருந்து இதற்காகவே சிங்கப்பூருக்கு வந்து அளவுகொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். தயாரானதும் அனுப்பிவைக்கப்படுகின்றதாம்.

ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணங்கள் தான் பெரும்பாலும் நடந்துவந்துள்ளது. நிழற்படத்தை மட்டுமேபார்த்து நிச்சயயிக்கப்பட்ட திருமணங்களுமுண்டு. ஜாதகப்பொருத்தம் நட்சத்திரப்பொருத்தம் போன்றவற்றைப்பார்த்து நிச்சயித்தார்கள். 12 நாட்களுக்குக் கோலாகல ஏற்பாடுகள் நடக்கும். பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்ளும் பழக்கம் இந்தியர்களிடமிருந்து பெற்றது. நிச்சயமானபிறகும் கூட மணப்பெண்ணின் கன்னித்தன்மையிலோ கற்பிலோ மாப்பிள்ளைக்கோ அல்லது மாப்பிள்ளையின் அம்மாவிற்கோ சந்தேகம் வந்தால் திருமணம் நிற்கும். ஆகவே நடக்கும் வரை நிச்சயமில்லாத ஒரு ஐயம் நிலவியது. ஒவ்வொரு சடங்கும் பொருள் பொதிந்தது. பெற்றோருக்கும் மூத்தவர்களுக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தல் ஒரு முக்கிய சடங்கு. இப்போதெல்லாம் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது.

பெரும்பாலும் பாபாமலாய் மொழியோ 'ஹொக்கெயின்' என்னும் ஒருவகைச் சீனமொழியோ பேசினார்கள். மூத்த பெரனாக்கான் இனத்தவர்கள் பாபா மலாய் மொழியைப் பேசினார். அதன்பிறகு சீனமொழிகள் இடம்பிடித்தன. ஆணாதிக்கம் தூக்கலாய் இருக்கும் இந்தச்சமூகத்தில் மொழியிலும் வேற்றுமை. சில தகாத வார்த்தைகளை ஆண்கள் உபயோகிக்கலாம். பெண்கள் உபயோகிக்கக்கூடாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பெரானகன் சமூகத்தினர் மலாயாவின் பல பகுதிகளிலும் சொத்து பத்துக்களை விற்கவேண்டியிருந்தது. அதனால், பலவிதமான கலாசார அடையாளங்கள் காணாமல் போய்விட்டன.

'மூத்தோரை மதித்தல்' எனும் பண்பே இவர்களுக்கு மிகமுக்கியமானது. 'பஹாசா பாபா' என்றழைக்கப்படும் இவர்களது மொழி மலாய் மொழியும் இல்லாமல் சீன மொழியும் இல்லாமல் ஒரு கலவையாக இருக்கும். பயணக்கட்டுரைகளையும் சீன இலக்கியங்களையும் பாபா மலாயில் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களுக்கு மூட நம்பிக்கை அதிகம். துடைப்பத்தால் பெண்ணின் கால்களைத் தொடுதல் அபசகுனம். வீட்டில் 'அழகி' என்று புகழப்படும் பெண்குழந்தைகளை 'குரூபி' என்றழைப்பர். அந்தப் பெண்குழந்தை ஒருகட்டத்திலிருந்து வளர்ந்து மனமுதிர்ச்சிபெற உதவுமென்று நம்புகின்றனர். ஆரம்பகால பெரானகன் இனத்தவர் பௌத்தம் மற்றும் தாவோ மதத்தைப் பின்பற்றினர். பாபா கோவில்களில் இஸ்லாமிய மற்றும் தாவோ மதவழக்கங்களின் விநோத கலவை புலப்படும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் கிருஸ்தவமதத்திற்கு எதிராகவே இருந்தது. ஆங்கில ஆட்சியின் போது இவர்களில் அதிகபேர் கிருஸ்தவமதத்தைத் தழுவினார்கள்.

ஒருமாதம் முதல் மூன்று வருடங்கள் வரை இறந்தவருடனான உறவின் நெருக்கத்திற்கு ஏற்றாற்போல் இறந்தவருக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வினத்தினரின் ஆண்கள் கரண்டி மற்றும் முட்கரண்டி உபயோகித்தும் பெண்கள் கையை உபயோகித்தும் உணவுண்பர். இருப்பினும் ஈமச்சடங்கில் போது 'சாப் ஸ்டிக்' குகள் (chop sticks) வைக்கப்படும். ஈமச்சடங்கின் போது கருப்பு, வெள்ளை நிறங்களிலான உடையிலோ இல்லையானால் சாக்கினாலான உடையிலோ மிகநெருங்கிய உறவினர்களைப்பார்க்கலாம். 'பிகின் சது தாஹ¤ன்' என்றழைக்கப்படும் முதல் திதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பௌத்த பிக்குவை அழைத்து சீனர்களின் வழக்கப்படி காகிதத்திலான வீடு, பணம் போன்றவற்றை எரிப்பர். முதலாமாண்டு திதியைவிட இரண்டாம் ஆண்டுத்திதியின் போது படைக்கப்படும் சோற்றின் அளவு அதிகமாயிருக்கும். ஓராண்டிற்குள் இறந்தவரின் மேலுலக வாழ்வில் அவருக்கு அதிக நண்பர்கள் சேர்ந்திருப்பராம். இறந்தவரின் வீட்டிற்குச் சென்று வந்ததுமே முகம்கழுவும் பழக்கமுண்டு. அதன்மூலம் தீட்டுவிலகித் தூய்மையடைவதாக நம்பப்படுகிறது. துக்கத்தை அகற்ற ஒரு ஜோடி குட்டி சிவப்பு மெழுகுவத்தி மற்றும் சிறிய சிவப்பு நூல் ஈமச்சடங்கிற்கு வந்தவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

தற்காலத்தில் பெரனாக்கான் சமூகம் தன் அடையாளத்தைக் கிட்டத்தட்ட தொலைத்துவிட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். பெரனாக்கான் தோன்றக்காரணமாயிருந்த கலப்பு மணங்களே இதன் மறைவுக்கும் காரணமாகிவருகின்றன. வெவ்வேறு இனத்து ஆண்பெண்களை மணம் செய்துகொண்டு 'பெரனாக்கான்' அடையாளத்தை இழந்துவருகின்றனர். சிங்கப்பூரின் அதிநவீன வளர்ச்சியும் இச்சமூகத்தை அழித்துதான் வருகிறது. இருப்பினும் சிங்கப்பூர், தீபகர்ப மலேசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆங்காங்கே பெரனாக்கான் குடும்பங்களை இன்றும் பார்க்கலாம். சிறுபான்மையினரான இவர்கள் அவ்வப்போது சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நாடகங்கள், விருந்து மற்றும் நடனம் போன்றவற்றை ஏற்பாடுசெய்து தங்கள் கலாசாரத்தை உயிர்ப்பிக்க முயன்று வருகிறார்கள்.

சிங்கப்பூரில் 2002ல் 23,198 திருமணங்களில் 2,842 இரண்டு வேறு இனங்களிடையே நடந்திருக்கின்றன.வெவ்வேறு இனத்தில் மணம் புரிவோரின் விகிதம் 1982 ல் இருந்த 6.3% யிலிருந்து 2002ல் 12.3%க்கு வந்துள்ளது.சிங்கப்பூரின் மக்கட்தொகை 4.1 மில்லியன். 75% சீனர்கள். 14% மலாய்க்காரர்கள். 8% இந்தியர்கள். இதில் தமிழர்களே பெரும்பான்மை. 3% மற்ற இனத்தவர்கள். இந்த மூன்றில் ஒரு சதவிதம் தான் பெரனாக்கான் இனத்தவர்கள். இந்தோனீசியாவில் 1990 ல் இருந்த தொகை 8,259,266. இது 1997ல் 9,341,400 ஆக உயர்ந்தது. 2000ல் 15 மில்லியனாக உயர்ந்தது. இதில் ஒரு மில்லியன் பேர் வந்துபோவோர்.

1980களிலிருந்தே சிங்கப்பூர் அரசாங்கம் தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கென்று பெரனாக்கான் கலாசாரத்தின் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொடுக்கும் நோக்கத்தோடு நிரந்தர மற்றும் தற்காலிக அருங்காட்சியகங்களை ஏற்படுத்தி வருகிறது. கலாசார கட்டடவியலைக்காட்டும் கட்டடங்களைப் பராமரிக்கிறது தேசிய கலாசாரக்கழகம். கலாசாரவிழாவை ஊக்குவித்தும் வருகிறது. ஆனால்,இவ்விழாக்களில் மூத்தவர்களே கலந்துகொள்கிறார்கள். இவ்வட்டாரத்தில் வசிப்போரில் சிலருக்கே பெரனாக்கான் சமூகத்தைப்பற்றித் தெரிவதில்லை. இப்படியிருக்க, சுற்றுப்பயணிகளாக வருபவர்களுக்கு சீனக்கலாசாரத்துக்கும் பெரனாக்கான் கலாசாரத்துக்கும் வேறுபாடு தெரிவதும் கடினமே. இளைய தலைமுறைக்கு இக்கலாசாரத்தை எடுத்துச்செல்ல இன்னும் அதிக நடவடிக்கைகள் தேவையென்றே தோன்றுகிறது.


(நிறைவு)

நன்றி: 'The Tamil Times' from New York -டிசம்பர், 2004

thinnai

- ஜெயந்தி சங்கர்