Monday, March 07, 2005

கல்கி தீபாவளி மலர் 2004



ஒரு பக்கத்தையும் தாவிக்குதிக்காமல் வரிசையாகவே படித்து வந்தேன். நான் படித்த அதே வரிசையில் எல்லாப் படைப்புகளையும் பற்றி சின்னச்சின்ன அறிமுகமாகயிருக்கும் இந்தக்கட்டுரை. ஆனந்தவிகடன் மலரைவிடப் பெரியது. ஒப்புநோக்க நீளத்தில் கல்கி ஒண்ணேகால் பங்கு இருக்கும். அகலத்திலும் அதேபோல ஒண்ணேகால் பங்கு. அதன் அளவிற்கு இதில் ஈர்க்கக்கூடிய வர்த்தக அம்சங்களும் இல்லை. கொஞ்சம் குறைவே. தாளின் தரம் பளபளப்போ வழவழப்போ இல்லாத சாதாரண தரமான தாள். ஏறக்குறைய அதே விலையில் அதே எண்ணிக்கையில் பக்கங்கள்.

அட்டையில் நான்கு ஓரங்களிலும் கடுகளவும் இடைவெளி விடாத முழுப் பரப்பளவிலும் 'வேதா'வின் அற்புத ஓவியம். தனது டிரேட் மார்க் மாலை, இடதுகொண்டை அணிந்துள்ள ஆண்டாள் வலக்கையில் வெண்சங்கும் இடக்கையில் பச்சைக்கிளியும் ஏந்திக்கொண்டு, இடதுபுறம் தலையை சற்றே ஒடித்து குழலூதும் கண்ணனை ஒயிலாகப் பார்ப்பது போல. மிக நளினமான, அதிகம் மஞ்சளும் பச்சையும் சேர்த்த வண்ண ஓவியம். ஆண்டாளின் ஒருகாதில் சங்கு மற்றொரு காதில் சக்கரம் ! இந்த ஓவியத்தின் பின்னணியில் துளசிமாடம், முழுநிலா, கோவில், கோபுரம் என்று சிலவும் இருக்கின்றன. பளிச்சென்ற அட்டைப் படமே மனதில் பச்சக்கென்று பதிந்துவிடுகிறது.

முதல் எட்டு பக்கங்களுக்கு விளம்பரங்கள் இருக்கின்றன. தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்குப் பொருளடக்கம் வருகிறது. அதைத் தொடர்ந்தும் ஐந்து பக்கங்களுக்கு விளம்பரங்கள் தான். முதலில் காஞ்சி மாஹாப்பெரியவரின் படம். சாம்பல் மற்றும் பழுப்பு வண்ணக்கலவையில் அமைந்த ஒரு நிழற்படம். அந்தக் கண்களின் தீட்சண்யம் வழக்கம்போல என்னை என்னவோ செய்தது. ஜெயேந்திரரின் 'விவேக ஒளி பரவட்டும்' ஒரே பக்கம். இது வழக்கமாகச் சொல்லும் தீபாவளிச் செய்தி வகைதான்.

அது முடிந்ததும் அட்டைப் படத்தையட்டிய சுகி சிவம் அவர்களின் 'அதிசய துளசி' கட்டுரை நான்கு பக்கங்களுக்கு. இங்கும் கருப்பு வெள்ளையில் 'வேதா'வின் ஆண்டாளின் வேறு ஓர் ஓவியம் வலப்பக்கத்தை அலங்கரிக்கிறது. ஆண்டாளின் வரலாறு மற்றும் இலக்கியத்தைத் தொட்டு, துளசியின் பெருமைகளைச்சொல்லி விட்டு, ஆண்டாள் இறைவனை அடைய காமயோகத்தைத் தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டது அவளின் சாதனை என்கிறார் கட்டுரையாசிரியர் முத்தாயிப்பாக.

ஜி.ஏ. பிரபாவின் 'சிலபார்வைகள் சில மௌனங்கள்' என்ற கதை (கட்டுரை?!) இரண்டு பக்கங்களுக்குப் போகிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்த்தும் ஒரு படைப்பு. கொஞ்சம் மிகைபடச் சொல்லியிருப்பதுபோல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து நான்கு பக்கங்களுக்கு 'கம்யூனிசம் நிலைப்பது ஏன்?' என்ற என். சங்கரய்யாவின் கட்டுரை. இதில் எனக்குப் புரியாதவை நிறையவே இருந்தது.

சுவாமி ரங்கநாதானந்தர் அவர்களின் 'இல்லறத்தில் ஆன்மீகம்' சன்யாசத்தைவிட இல்லறம் எப்படி உயர்வானது என்றுரைக்கிறது. மனு ஸ்ம்ருதியில் 'ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய தலைமுடி நரைத்ததையும், பேரன், பேத்தி முகத்தையும் பார்த்தால் காட்டுக்குப்போய் விடவேண்டும்' என்று சொல்லியிருக்கிறதாம். இப்போதெல்லம் தலைமுடி சீக்கிரமே நரைத்துவிடுகிறது. ஆனால், பேரன் பேத்தியெடுப்பதோ லேட்டாகிறதே, என்றெல்லாம் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. தற்காலத்திற்கேற்றவாறு வாழும் வீட்டையே தபோவனமாக மாற்றிக்கொண்டு வானப்ரஸ்தம் மேற்கொள்ளலாம் என்கிறார் சுவாமிஜி.

விஜயேந்திரர் ஜெயேந்திரரை வாத்சல்யத்தோடு சிரித்துக்கொண்டே பார்க்கும் ஒரு வண்ண நிழற்படம். இதைத் தொடர்ந்து வந்த மூன்று பக்கக் கட்டுரையான 'மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி' என்ற டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் வேளாண்கட்டுரை 'காட்டாமணக்கு காப்பாற்றுமா?' என்ற கேள்வியையு முன்வைத்து விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது. பயனுள்ள கட்டுரைதான். அடுத்து வரும் இரண்டு பக்கங்களில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அரசியல்தலைவர்கள் கொண்டாடும் 'தீபாவளிகளை' கருப்பு வெள்ளைக் கார்ட்டூன்களாகத் தெளித்துள்ளார்கள். அரசியல்தான்!

இனியன் அவர்களின் மிக எளிமையான கருப்புவெள்ளை ஓவியத்துடன் ஹிந்தியில் 1960ல் கமலேஷ்வர் எழுதிய 'பாழடைந்த பேட்டை' கதை பிரசுரமாகியிருக்கிறது. சௌரி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். கமலேஷ்வரின் கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் அவரைப்பற்றிய சின்ன அறிமுகம் கதை முடியும் நான்காவது பக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். விக்டோரியா மஹாராணியின் காலத்தையும் சுதந்திரம் பெற்ற காலத்தையும் மாற்றிமாற்றித் தொடுகிறது கதை. இந்தப் பக்கங்களில் இரண்டு ஜோக்குகள் மற்றும் கருப்புவெள்ளை புகைப்படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து வரும் ஒரு பக்கம் முழுக்க இரா.சண்முகசுந்தரம் மற்றும் ஸ்ரீஹரி ஆகியோரின் 'க்ளிக்'குகள்.

இருள் நீக்கியான் என்பவரின் 'முத்தங்கி நாதன் !' என்ற குறுங்கட்டுரையில், வருடத்தில் ஆறரைநாட்கள் மட்டுமே ஸ்ரீரங்கம் அரங்கன் அணியும் முத்தங்கியைப் பற்றிய சிறுவரலாறு மற்றும் அதைச் சுத்தம் செய்யும் பணி பற்றியும் கூறுகிறார். வருடத்திற்கு ஒரே ஒருநாள் காண்பிக்கப்படும் கற்பூரப்படியைக் காணத்தவறியதால் 1706 ஆம் ஆண்டு விஜயரெங்க சொக்க நாயக்க மன்னர் எப்படி ஒரு வருடம் அங்கேயே தங்கி கற்பூரப்படியைக் கண்டுகளித்தார், முத்தங்கியையும் ஊருவாக்கிக் கொடுத்தார் என்பது மிகவும் சுவாரசியம். கருப்புவெள்ளையே ஆனாலும் நிழற்படத்தில் முத்தங்கியின் அழகு ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

இரண்டு பக்கங்களுக்கு நீளும் கட்டுரையான 'நவக்கிரஹங்கள் அங்கும் இங்கும்', பௌத்தத்தில் இருக்கும் நவக்கிரஹ மூர்த்திகளின் தோற்றங்களையும் நமது ஹிந்துமத நவக்கிரஹங்களின் தோற்றங்களையும் ஒப்பிட்டு ஒற்றுமை, வேற்றுமைகளை அலசுகிறது. ஹிந்துமத நவக்கிரஹங்கள் கருப்புவெள்ளையிலும் பௌத்தமத நவக்கிரஹங்கள் பலவண்ணங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்புள்ள பூதக்குடி என்னும் புண்ணியத் தலத்தைப்பற்றிய வரலாறை, 'விமானம்' என்னும் தலைப்பில் விஷ்வக்ஸேனன் என்பவர் எழுதியிருக்கிறார். மூலவரின் கருப்புவெள்ளைப் புகைப்படம் ஒன்று கொடுத்திருக்கிறார்கள். இங்கு ராமன் சங்கு சக்கரத்தோடு வில்லும் ஏந்தி லக்ஷ்மியுடன் நிற்கிறான். ஏன்? அதுதான் கதையே. ஜடாயுவுக்கு அந்திமக்கிரியைகள் செய்யவேண்டும் என்று நினைக்கும் இராமன், உடன் சீதா இல்லாமல் எப்படிச்செய்வது என்று நினைத்து, மஹாவிஷ்ணுவாக மாறி லக்ஷ்மியோடு காரியங்களைச் செய்து முடிக்கிறானாம். இதற்கு எளிமையான வண்ண ஓவியம்.

அமரர் கல்கி அவர்களின் 'டாகூர் தரிசனம்' நகைச்சுவையான ஒன்பதுபக்கத்துக்கு நீளும் நீண்ட கட்டுரை. ஷாந்திநிகேதனின் ஆரம்பகாலம், வளர்ச்சி, அதில் ராஜாஜி அவர்களின் பங்கு போன்றவற்றைச் சொல்லிவிட்டு 1940 களின் பிற்பகுதியில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். அப்போதுதான் கல்கி, ராஜாஜியவர்களின் பரிந்துரையின்பேரில் சுமார் ஆயிரம் தமிழ்ப் புத்தகங்களை ரசிகமணியவர்களுடன் சேர்ந்து ஷாந்திநிகேதனுக்குக் கொண்டுபோய் கொடுத்துள்ளார். 1947 ல் இந்தக்கட்டுரை பொங்கல் மலர் கல்கியில் பிரசுரமாகியிருக்கிறது. பல சின்னச்சின்ன சுவையான தகவல்கள், சம்பவங்கள் என்று தனக்கே உரிய நடையில் சொல்லியிருக்கிறார் கல்கி. அடுத்து இரண்டு பக்கங்களுக்கு பாரிஸ் நகரின் வண்ணப்புகைப்படங்களும் தொடர்ந்து இரண்டு பக்கங்களுக்கு இன்றைய ஷாந்திநிகேதன் வளாகத்தின் புகைப்படங்களும்.

கருப்பு வெள்ளையில் கார்ட்டூன் போன்ற படத்துடன் பிரசுரிக் கப்பட்டுள்ளது ஆரண் யுவராஜ் 'எலியால் வந்த கிலி' என்கிற நகைச்சுவைக் கதை. இந்த இரண்டு பக்கக் கதை பரவாயில்லை, கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. 'உயிர் எடுக்க உரிமை உண்டா?' என்ற சட்டம் தொடர்பான பி.ஹெச்.பாண்டியனின் 4 பக்கக்கட்டுரை அறியாதபல தகவல்களைத் தருகிறது. ஆம்! தனஞ்செய் சட்டர்ஜியின் தூக்குதண்டனையுடன் தான் தொடங்குகிறது கட்டுரை.

தொடர்புடைய வண்ண ஓவியங்களை நான்குபக்கங்களுக்குக் கொண்டுள்ளது சுதா சேஷய்யன் எழுதிய 'அநுபூதி ஆனந்தம்' எனும் 4 பக்கக்கட்டுரை. சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிக அழகு. திருவண்ணாமலையில் ஆட்சி செய்த பிரபுதேவராயன் அருணகிரிநாதரின் மீது பொறாமைகொண்டு அவரை வாதுக்கு அழைத்த சம்பவம், அருணகிரிநாதரின் சந்தச் சிறப்பு, அவரின் கந்தரநுபூதியின் மேன்மை என்று படித்துப் பாதுகாக்கவேண்டிய அருமையான கட்டுரை.

'கீழாநெல்லிக்கு மேலான காப்புரிமை' யினை வலியுறுத்தி, செய்யாவிட்டால் நாட்டுக்கு எந்தவிதத்தில் நட்டம் என்பதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் அடங்கிய கட்டுரையினை பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் (சென்னைப் பல்கலைத் துணைவேந்தர்) எழுதியுள்ளார். முகில் 'மரப்பாச்சி' என்ற கவிதை எழுதியுள்ளார்.

அடுத்த ஒருபக்கக்கட்டுரை ந.ச.நடராசன் எழுதிய 'அன்னமய்யா'. இதில் 1408 ஆம் வருடம் பிறந்த ஸ்ரீ அன்னமாச்சாரியாரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. கர்நாடகசங்கீதப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஸ்ரீ அன்னமாச்சாரியாரைப் பற்றித் தெரிந்திருக்கும். இவரின் மனைவி திம்மக்க அம்மையாரும் சுபத்ரா கல்யாணம் எனும் காவியத்தை எழுதிய தெலுங்கின் முதல் பெண் கவிஞர் என்ற சிறப்புத்தகவல் எனக்குப் புதியது.

விஷ்வக் எழுதிய 'நகரத்தார் நாகரிகம்' ஒருபக்கக் குறுங்கட்டுரை. ஆனால், நான்கு பக்கங்களுக்கு அவர்களின் கலாசார சமூக வாழ்வின் பிரதிபலிப்பாய் அழகிய வண்ணப்புகைப்படங்கள் பளிச்பளிசென்று கொடுக்கப்படிருக்கின்றன. ஜே.எஸ் ராகவனின் 'ஹெல்ப் ஆண்டி' இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் கேள்வி பதில் பாணியில் கொடுக்கப்பட்டிருக்கும் எட்டு கேள்விகளும் அதற்கு பதில்களும்.

ஹரி பக்தியைச் சிலாகிக்கும் பண்டரிபுரம் பற்றி 'பண்டரிபுரம் ஆகும் கோவிந்தபுரம்' என்ற சுப்ர.பாலன் அவர்களின் கட்டுரை ஸ்ரீஹரியில் காமராவில் பிறந்த புகைப்படங்களுடன் மெச்சும்படி இருக்கிறது. பாண்டுரங்கனைப்பாடும் பஜனைப்பாடல்களையும் 'அபங்க்' என்றறியப்படும் கீதங்களையும் பற்றிப் பிரஸ்தாபிக்கிறது இந்த மூன்று பக்கக்கட்டுரை. 'அபங்க்' என்று படித்ததுமே பாடகி அருணா சாய்ராம் தான் என் நினைவுக்கு வந்தார்!

'அள்ளி அள்ளிப் பருக ஒரு கொல்லி' என்ற அடுத்த கட்டுரை கொல்லிமலையின் சிறப்பை நிறைய கருப்புவெள்ளை நிழற்படங்களின் உதவியோடு மூன்று பக்கங்களில் சொல்கிறது. சித்தர்கள், காளி வனம், கலப்படமிளகு, செம்மேடு என்று பலவறைச் சொல்லி பழமையையும் புதுமையையும்கூடச் சொல்கிறது. ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசுவின் உபயம் இந்தக் கட்டுரை.

அடுத்ததுதான் 'மகளிரும் சிறுவரும்' என்ற பா.ராகவனின் நான்கு பக்கக்கதை. கருப்பு வெள்ளையில் வேதாவின் அழகிய பொருத்தமான ஓவியம். முதியவர் ஒருவர் கண்சரியாகத் தெரியாததால் தவறுதலாக லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் ஏறிவிட்டுப் பிறகு படும் சில அனுபவங்கள், அவரின் சிந்தனை ஒட்டங்கள் என்று மிகக் கச்சிதமான கதை. இவரின் ஆனந்த விகடன் தீபாவளி மலர் கதையைவிட இந்தக் கதையே எனக்குப் பிடித்தது.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/8238

ஸ்ரீ ஹரி எடுத்துள்ள 2 குழந்தைகளின் கருப்பு வெள்ளைப் போட்டோக்கள் கடைசிப் பக்கத்தில் பாதிக்குமேல் அடைத்துக்கொண்டிருக்கின்றன.

'வினாடிகளும் வாழ்வும்' என்ற தமிழவன் அவர்களின் கவிதை. பாடுபொருள் 'வாழ்க்கை' என்றபோதிலும் 'குடை'யைச் சுற்றியே சொல்ல ஆரம்பித்து பாதிக்குமேல் காற்று, நதி என்று தொட்டு இறுதியில் நேரடியாகவே உணர்வுகளைச் சொல்லி முடிக்கும் அவரது பாணி எனக்குப் பிடித்திருந்தது.

பேராசிரியர் அ.சினிவாச ராகவன் அவர்களின் நூற்றாண்டு அக்டோபர் 23, 2004 அன்று தொடங்கியுள்ளதாம். இதையட்டி அ.சீ.ராவின் 'வீடும் வெளியும்' பிரசுரித்துள்ளார்கள். பழைய சிதிலமடைந்த வீட்டைப் பற்றிச் சொல்லிவிட்டு கற்பனைச் சிறகை விரித்து பாரதியையும், அவது 'எந்தையும் தாயும்' வரிகளை உயர்த்தி, தேசபக்தியைச் சொல்லும் அவனது பாடல்களையும் பாராட்டிச் சிலிர்த்து, மயானம் வரை போகிறார் அ.சீ.ரா. ஆஹா! எத்தனை அழகான நடை! கடைசி வரியைப் பாருங்களேன். << வீடு கவிஞனுடைய கற்பனையின் மூலம் வெளியாகிவிடுகிறது. இல்லை. வெளி முழுதும் வீடாகவே நம்முடைய வாழ்க்கையின் உயிர்தத்துவமாக மாறிவிடுகிறது>> வீட்டைப் பற்றி உணர்வுப்பூர்வமாக எழுதியுள்ளவற்றைப் படிக்கும்போது நமது ஹரியண்ணா அவர்களின் 'தம்மக்கள்' கட்டுரையில் வருமே வீடு, அது சொல்லும் கவித்துவம் நிறைந்த செய்தி, அதுதான் நினைவுக்கு வந்தது எனக்கு!

http://www.maraththadi.com/article.asp?id=605

அடுத்தது சில 'கோகுலம் பக்கங்கள்'. சுட்டிகளின் வண்ணப்புகைப்படங்களோடு அவர்களின் தீபாவளிப் பெருமைகள் ! மேலும் இரண்டு பக்கங்களுக்கு எஸ்.சுஜாதாவின் 'அண்டை நாட்டுப் பண்டிகைகள்'. தொடர்ந்து பா. முருகேசனின் 'சிதறி விழுந்த நட்சத்திரங்கள்'

அருண் சரண்யாவின் 'துப்பாக்கி சொல்லாத கதை' யில் கதாநாயகனின் அக்கா தம்பிமேல் அதீத பாசம் வைத்ததால், பொஸசிவ்நெஸ் காரணமாக அவனது காதலியையே கொல்ல முயற்சிக்கிறாள். மர்மக் கதையாக்கம் நல்ல முயற்சி. அடுத்தது. ஜெ. பாக்யலக்ஷ்மியின் 'கலைக்க முடியாத வேஷம்'. பரம்பரையாக தர்மம் செய்தே பழகிய பணக்காரன் நொடிந்துபோய் பிச்சையெடுத்தாலும்கூட வேறொருவனுக்குப் பிச்சைபோடவே நினைப்பான் என்கிறது கதை. பரவாயில்லை.

சௌந்தரா கைலாசம் அவர்களின் 'துருவாசர்' மரபுவகையில் எழுதிய கவிதை. அடுத்தது ஆர். சூடாமணியின் 'தண்ணீர் குடம்'. தண்ணீர் பிடிக்கும் இடத்தின் சச்சரவுகள், வம்புகள் போன்றவற்றை இயல்பாகச்சொல்லும் நல்ல கதை. பெற்றபிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ முதிய தம்பதியர் எப்படி உள்ளூரில் இருக்கும் எளியோரிடம் அன்பாகப்பழகி அவர்களைத் தங்கள் உற்றாராய்ப் பாவிக்கிறார்கள் என்பதே மையக்கருத்து. அவர் டாக்டர். சிகிச்சைக்கு வரும் ஒரு பெண்ணுக்கு இலவசமாக மருந்துகொடுத்து உதவுகிறார். அவளோ தண்ணீர் பிடிக்க அந்த முதிய தம்பதிக்கு உதவுகிறாள்.

அடுத்துவரும் பக்கங்கள் கவிதை மடல் பகுதி. 'கண்ணசைவில்' என்னும் ச.சவகர்லால் அவர்களின் கவிதை மாருதியின் வண்ண ஓவியத்தோடு துல்லியமாகச் ஸ்ருதி சேர்த்துள்ளது. 'வன்முறை' என்ற மருதனின் கவிதை எனக்குப்பிடித்தது. ஏனென்று தான் சொல்லத் தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து 'வாசிப்பு' என்ற மு. முருகேஷின் கவிதை. கடைசியில் 'நிழல்' என்ற பூவை அமுதனின் கவிதை. ஆனந்தியின் 'ஞான சரஸ்வதி' மூன்று பக்கங்களுக்கு விரியும் கலைவாணியின் மேன்மைகளை எடுத்தியம்பும் நல்ல கட்டுரை.

அடுத்து, ஜெயந்தி சங்கரின் : ) 'நாலேகால் டாலர்' கதை வண்ணப்பக்கங்களில், ஜெயராஜின் வண்ண ஓவியத்துடன் 4 பக்கங்களில் பிரசுரமாகியுள்ளது.

கல்கி இதழாசிரியர் சீதா ரவி அவர்களின் 'ஷ்யாம கிருஷ்ணன்' என்று ஒரு கதை. கோபுலுவின் வண்ண ஓவியங்கள் கதைக்கு நல்ல பக்கவாத்தியம் ! பாடகர் ஒருவர், நினைத்தால் திருவையாற்றுக்குக் கிளம்பிச் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்புவார். இவரின் பழக்கம் அவரது மனைவி லலிதாவுக்குப் புதிதல்ல. பசியோடு காத்திருந்து பழக்கம். பக்கத்து வீட்டு தர்மா வந்து அவளின் வாயைப் கிளறி, 'தனிமை' உன்னை வாட்டவில்லையா என்று கேட்டு அவளைப் பேசவைக்கிறாள். அதற்கு லலிதா கூறும் விளக்கமும் பதிலுமே கதையின் ஜீவன். கதை என்று பெரிதாக இல்லாவிட்டாலும் விவரிப்புகள், கதையின் மொத்த உருவம், செய்தியின் உண்மை ஆகியவை எனக்குமிகவும் பிடித்தது.

அடுத்தது 'பார்க்கும் மரங்களெல்லாம்' என்ற மதிவண்ணனின் கவிதை. அடுத்தது சுபா எழுதியது. இது கதையல்ல, கட்டுரை. 'சொல்லச்சொல்ல இனிக்குதடா' என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பற்றியும், அவரது மார்க்கம் அவர்களிருவருக்கும் கொடுத்த அனுபவம் பற்றியும் கூறி, தியான லிங்கம், தியான வகுப்புகள், அவற்றினால் பெறக்கூடிய பலன்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்கள்.

'மங்கைய மலர்' பக்கங்களில் முதலில் ரேவதி சங்கரன், 'ஆசை ஆசையா', ஓமலேகியம், சுக்கு லேகியம், இங்கி லேகியம் போன்றவற்றைச் செய்யக் கற்றுக்கொடுக்கிறார். அடுத்த இரண்டு பக்கங்களுக்கு பாரதி பாஸ்கர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரை 'குகையும் மலையும்'. இதில் பெண்கள் அடங்கிய பட்டிமன்ற கோஷ்டி ஒன்று மலேசியாவிற்குப் பயணப்படுகிறது. பத்துமலைக்குச் செல்லும் இவர்களிடையே இந்தியாவிலிருந்து கிளம்பியது முதல் திரும்புவது வரை நடக்கும் தமாஷான உரையாடல்கள், ஏற்பாட்டாளர் பழனிச்சாமி படும்பாடு என்று கொஞ்சம் சிரிக்கவைக்கிறது. பொருத்தமான கார்ட்டூன் சித்திரங்கள் ரசிக்கும்படியுள்ளன.

'சுமை' என்ற சாயா எழுதிய கவிதை சும்மாடு கட்டாமல் சுமைதூக்கிப் போகிறவளைப் பார்த்து கேள்வியுடன் ஆரம்பிக்கிறது. கவிதை நன்று. அடுத்த இரண்டு பக்கங்களுக்கு சைனீஸ் பிரஷ் பெயிண்டிங்க் பற்றி லக்ஷ்மி ராமநாதன் விளக்குகிறார். சிங்கப்பூர், இந்தோனீசியா போன்ற நாடுகளில் வசித்தபோது கற்றுக்கொண்டாராம். அவரது ஓவியங்கள் பார்ப்பவரையும் கற்றுக்கொள்ளத் தூண்டும்வண்ணம் அழகாக இருக்கின்றன. மாண்புமிகு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் 'பெண்ணுக்கொரு நீதி' பகுதியில் இரண்டு பக்கங்களுக்கு ஆணாதிக்க நோக்கு, அதனை வளர்க்கும் ஊடகங்கள் போன்ற எல்லாவற்றையும் சாடுகிறார். உண்மையில் அத்தனையும் நியாயமான விவாதங்களே.

'வானவன் மாதே ஈஸ்வரம்' என்ற தேவமணி ர·பேலின் அழகிய புகைப்படங்களுடன் கூடிய கட்டுரை இலங்கையின் வடமத்தியப் பகுதியில் உள்ள ஆலயத்தைப்பற்றிய வரலாறு பேசும் கட்டுரை. சிதிலமடைந்த நந்தி மற்றும் சிங்களக் கல்வெட்டுப் புகைப்படங்கள் குறிப்படவேண்டியவை. இலங்கை சிலகாலம் சோழர்காலத்தில் இருந்ததாம். 'அவதாரம்' என்ற சு. வேணுகோபால் எழுதிய 5 பக்கக்கதை தம்பதியரிடையே இருக்கக்கூடிய 'ஈகோ' எப்படியெல்லாம் கதாநாயகனை ஆட்டிவைக்கிறது என்று சொல்லி அவனின் மனமாற்றத்தையும் சொல்கிறது. நல்லகதைதான். நடுப்பக்கங்களில் நீள்கட்டம் கட்டி சில ஜோக்குகளைக் கொடுத்துள்ளார்கள்.

'கல்கி அவதாரம் எப்போது?' என்ற பழ.பழநியப்பன் அவர்களின் இருபக்கக்கட்டுரையில் பல தெரிந்த தெரியாத தகவல்களைக் கொடுத்து 'இந்த யுகத்திலே பிறக்கப்போகிற பத்தாவது அவதாரம் நாமே! நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளே சேர்ந்துள்ள அரக்கத்தனத்தை எல்லாம் விரட்டிவிட்டு, ஒழித்துக்கட்டிவிட்டு, நம்மைநாமே புதுப்பித்துக் கெள்ளவேண்டும்', என்கிறார். சித்தார்த் எழுதிய 'ஒன்றுக்கும் உதவாதவர்கள்' நகைச்சுவை நாடகம் 4 பக்கங்களுக்கு நீள்கிறது. இது 'மீண்டும்' பாட நினைக்கும் 'பெண்'ணின் கதை. பரவாயில்லை.

ஒருபக்கத்திற்கு காஞ்சிகாமாக்ஷ¢ ( தனுஸ¤) அம்மன் வண்ணப்படம் ! 'ஆயு புவான்' ( ஸ்ரீலங்காவுக்கு வாருங்கள்! ) என்ற சாருகேசியின் கட்டுரை 7 பக்கங்களில் பலபுகைப்படங்களுடன் சுற்றுலாத்துறையின் மொழியோடு கொஞ்சம் வாரலாற்று மொழியும் கலந்து கொடுக்கிறது. பயனுள்ள கட்டுரை. தொடர்ந்து 4 பக்கங்களுக்கு ஸ்ரீலங்காவின் வண்ணவண்ணப் புகைப்படங்கள் !

என்.சொக்கன் எழுதிய 'பொதி' மாருதியின் கருப்புவெள்ளை ஓவியத்துடன் 5 பக்கங்களுக்குப் போகிறது. சின்னப் பெண்குழந்தை எப்படித்தன் அம்மாவின் ஆங்கில மோகம் மற்றும் தேவைக்கதிகமான புறப்பாட நடவடிக்கைகளின் பளுகாரணமாகத் தன் இயல்பான சின்னச்சின்ன ஆசைகளையும் கனவுகளாகவே வைத்துக்கொள்ள நேர்கிறது என்பதுதான் கதை.

'ஓவிய மூவர்' ஸ்ரீனிவாசன், பாலசுப்ரமணியன், நாகேந்திரபாபு ஆகியோரது வாழ்க்கை, ஓவியப்பாணி என்று சொல்லிவிட்டு அடுத்த 2 பக்கங்களுக்கு அவர்களது வண்ண ஓவியங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஓவியங்கள் தான் எத்தனை நேர்த்தி ! 'கோவில் மணி சொன்ன செய்தி'யில் கலைத் தம்பதியர் தாஸ், உஷாவைப் பற்றியது. கணவர் சிற்பி. மனைவி ஓவியர். பொதுவான இவர்களது படைப்புகளின் அம்சம் பிள்ளையார். இரண்டு பக்கங்களுக்கு இவர்களின் அற்புதக் கைவண்ணம்!

திருப்பூர் கிருஷ்ணன் 'கண்ணன் வந்தான்' என்ற தலைப்பில் நீண்ட கவிதை எழுதியுள்ளார். அடுத்து ரம்யா நாகேஸ்வரனின் 'ஒரு துண்டு சாக்லேட்' இருபக்கங்களில் 'டையடிங்க்' இருக்கும் ஒரு பெண்ணின் மனவோட்டங்களைச் சொல்லியிருக்கும் நகைச்சுவைக் கதை. 'திருபுடை மருதூர் அற்புதங்கள்' கட்டுரை, சிற்பங்களின் மிக அழகிய நிழற்படங்களுடன் ஸ்தலவரலாறு சொல்லிவிட்டுச் சிற்பங்களைப்பற்றியும், மூர்த்திகளைப்பற்றியும் சொல்கிறது. திருநெல்வேலியிலிருந்து பக்கமாம் இந்தத்தலம். மு.மாறனின் 'ஜானி' என்ற நாயைப்பற்றிய கதை ஏற்கனவே படித்த சில கதைகளை நினைவூட்டியது.

'நீச்சல் தெரியாத நீச்சல் சாம்பியன்' கௌதம் ராம் எடுத்த நேர்காணல். எண்பத்தைந்து வயதாகும் கோமதி சுவாமிநாதன் அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அவரது நினைவலைகளைத் தொகுத்துள்ளார்கள். நகைச்சுவையாகப் பத்திரிக்கைகளில் எழுத ஆர்வங்கொண்டு இவர் தனது மூன்றாம் படிவ ஆசிரியர் ஒருவரையே பல ஆண்டுகள் கழித்து ஒரு பாத்திரமாக்கி நகைச்சுவைக் கதையெழுதி சுதேசமித்ரனுக்கு அனுப்பிவிட்டார். அவரே எதிர்பாராமல் பிரசுரமானது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதி அனுப்பினாராம். கதைக்கு ஏழு ரூபாய் சன்மானம் வந்ததாம். இன்னும் சுவையான பல சம்பவங்கள் தகவல்கள் உள்ளன.

'ஒற்றுமைக்கு ஒரு விழா' என்ற மாதா அமிருதானந்தமயி தேவியின் கட்டுரையை ஆ.வை.சி.மூர்த்தி தமிழாக்கியுள்ளார். இதில் மாதாஜி 'மன்னிப்போம், மறப்போம்',என்ற தத்துவத்தின் மூலம் பூலோகத்தையே சொர்க்கமாக்கலாம் என்கிறார்.
வாஸந்தியின் 'வாக்குமூலம்' கண்முன் நடந்த கொலைகளைப்பார்த்த பெண்ணைப்பற்றியது. சட்டத்தைத் தட்டி அடக்கிவிட்டுத் தங்களுக்குச் சாதகமாக வாக்குமூலம் கொடுக்கும்படி சொல்கிறது ரௌடிக்கும்பல். அந்தப்பெண்ணும் உயிருடன் இருக்கும் தம்பி மற்றும் அம்மாவையாவது காப்பாற்றிவிட எண்ணி 'வாக்குமூலம்' கொடுத்துவிடுகிறாள்.

ஆர்.சி.ஜெயந்தன் எழுதியுள்ள 'கமல் எம்புட்டு அழகானவன்' என்ற மூன்று பக்கக்கட்டுரை பல நிழற்படங்களோடு கமல்புகழ் பாடுகின்றது. நிறைய தெரிந்ததெரியாத செய்திகள். அவற்றைத்தொடர்ந்து வரும் 4 பக்கங்களில் களத்தூர் கமலிலிருந்து வசூல்ராஜா, ஏன், நிலுவையிலிருக்கும் சரித்திரக்கமல் வரை முக்கிய பல வண்ணப்புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

யுகபாரதியின் 'ஜாதகக் குறிப்பு' கவிதை நன்றாகவேயிருக்கிறது. த. க நீலகண்டன் 'கடன் தீர்க்கும் கடம்பூர்' கட்டுரையை கருப்புவெள்ளை நிழற்படங்களுடனும் தனுஸ¤வின் அழகிய கருப்புவெள்ளக் கோட்டோவியங்களுடனும் தந்திருக்கிறார். பொன்னியின் செல்வன் வரலாற்றுக் களமாக அமைந்துள்ள தேவாரப் பாடல்பெற்ற ஸ்தலமான கடம்பூர் கரக்கோயில் என்றும் வழங்கப்படுகிறதாம். வரலாறு இந்தக்கட்டுரையில் சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

மூன்று வெள்ளிக்கிழமைகளாகப் பிரித்து 'தாஜ் மகால்' கதையை ந.காவியன் எழுதியுள்ளார். ஷாஜஹான் மும்தாஜ் கதைதான் என்றாலும் ரசிக்கும்படி எழுதியுள்ளார் கதாசிரியர். 'அன்பின் ஈரம்' கட்டுரை, ரன் இவன் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ள புகைப்படக்கலைஞர் சண்முகசுந்தரம் பற்றியது. ஒருபக்கமேயானாலும் புகைப்படங்களோடு சுவாரஸ்யமாயிருக்கிறது. அடுத்துவரும் 4 பக்கங்களிலும் இவரின் கலைக்கண்ணோடு வறுமையைச் சொல்லும் புகைப்படங்கள். கேவாக் கலரில் அழகாக இருக்கின்றன.

'கிளியே கிளியே' பொன்மணி வைரமுத்துவின் கவிதை. மனசாட்சியைத் தான் கிளியாக உருவகப்படுத்தி எழுதியுள்ளார் என்று நான் புரிந்துகொள்கிறேன். நான் தவறாகவும் இருக்கலாம். கவிதை புதுமாதிரி நன்றாகவேயிருக்கிறது. மருதனின் 'லவ்வரை லவ்வுவது எப்படி?' என்று இரண்டு பக்கங்களுக்கு நகைச்சுவை என்ற பெயரில் போட்டிருக்கிறார்கள்.

'திக்கற்ற பார்வதி' என்ற ராஜாஜியின் நெடுங்கதையை 11 பக்கங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதில் சிறப்பம்சம் என்றால், லக்ஷ்மி, ஸ்ரீகாந்த் நடித்த 'திக்கற்ற பார்வதி' திரைப்படத்தின் ஸ்டில்களைக் கருப்பு வெள்ளையிலும், கோபுலுவின் பொருத்தமான வண்ண ஓவியங்களையும் மாற்றி மாற்றி ஆங்காங்கே கொடுத்திருப்பதுதான். நான் இன்னும் முழுவதும் படித்து முடிக்காத இந்தக்கதையின் கடைசிப் பக்கத்தில் (இது மலரின் கடைசிப்பக்கமும்கூட) பாதிப்பக்கத்துக்கு பழனி.இளங்கம்பன் அவர்களில் 'எழுதாக்கவிதைகள்' என்னும் கவிதை வெளியாகியுள்ளது. மிக எளிமையான கவிதை. அதிகம் முதிர்ச்சியில்லை.

வெளிநாடுகளில் தீபாவளி மலர்களைப் படிக்கும் வாய்ப்பில்லாதவர்களுக்காக மலர் முழுவதையும் சுருக்கமாகவேயானாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட எண்ணித் தான் விளம்பரப்பக்கங்கள், ஜோக்ஸ் தவிர மற்றவற்றைத் தொட்டிருக்கிறேன்.

(நிறைவு)

thanks:
marathadi e groups
marathadi.com

3 comments:

Boston Bala said...

நன்றி!

பாலு மணிமாறன் said...

கல்கி தீபாவளி மலரை ( 2004 ) படிக்காமலே அதைப் படித்த உணர்வைத் தந்திருக்கிறது உங்கள் பதிவு. உங்கள் கவனமும், பொறுமையும் - நினைக்க - ஆச்சரியமளிக்கிறது. நல்ல அலசல் !

Vijayakumar said...

யக்கோவ், நமக்கு அவ்வளவு பொறுமையில்லேங்கோ. விகடன் தீபாவளி மலர் ஊரிலேயிருந்து வந்திச்சி ஒரே நைட் தான் கையில் தவழ்ந்தது. பிறகு அந்த மேசையில இன்னும் தூங்கிக் கொண்டுதானிருக்கிறது. விகடன் தீபாவளி மலர்-ல படிச்சது அந்தகாலத்து விகடன் ஜோக்கு, பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் கதை, பிறகு புத்தகத்திலிருக்கும் படங்கள்.

(படிக்கும்)பொறுமை கடலினும் பெரிது.