Sunday, April 03, 2005

பெரனாக்கான்

(Peranakans)

பெரனாக்கான் என்றாலே 'கலந்த ரத்தம்' என்று பொருள். மலாய் மொழியிலும் இந்தோனீசிய மொழியிலும் 'வாரிசுகள்' என்ற பொருள்கூட வரும். ஆண் வாரிசுகள் 'பாபா' என்றும் பெண் வாரிசுகள் 'ந்யோந்யா' என்றும் அழைக்கப் படுகின்றனர்.17 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அன்றைய மலேயாவிற்கு வந்த சீனர்களுக்கும் மலேயாவின் மக்களுக்குமிடையே நடந்த கலப்பு மணங்களில் பிறந்தது இவ்வினம். பெரும்பாலும் தென்சீனாவிலிருந்து தென் கிழக்காசியவிற்கு வந்த வணிகர்களே இதில் அடங்குவர். இதுதவிர, போர்ச்சுக்கீசிய மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் தாக்கமும் இதற்குண்டு. இந்தக் கலாசாரம் மலாக்காவில் தான் தொடங்கியதாக நம்பப்படுகிறது. மெதுவாக வட்டராமெங்கும் பரவி அந்தந்த மண்ணின் மணத்தோடும் சிற்சில மாற்றங்களோடும் ஆங்காங்கே நிலவிவந்தது. இதனாலேயே இது (Peranakan culture) தனித்துவம் வாய்ந்து வந்துள்ளது.

சீனாவின் அமோய் (Amoy) மற்றும் ·பூகேன் (Fukien) ஆகிய பகுதிகளிலிருந்து 'திரவியம்' தேடி வந்தவர்கள் இவர்கள். ஆண்கள் வரும்போது சிலகாரணங்களுக்காகத் தனியே வந்துவிட்டு பிறகு உள்ளூர் பெண்களை மணம் புரிந்துகொண்டனர். மலேயாவில் நிரந்தரமாகத்தங்கும் எண்ணம் இல்லாதிருந்ததால் பணமீட்டும் ஒரே குறிக்கோளுடன் தான் கிளம்பினார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கடற்பயணத்தில் சிரமப்படுத்த வேண்டாமென்ற எண்ணமும் நிலவியது. அதுவும் தவிர, அந்தக்காலத்தில் சீனஅதிகாரிகள் பெண்களை நாட்டைவிட்டுக் கூட்டிக்கொண்டு போவதைத் தடுத்துவந்தனர். மலேயாவிற்கு வந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றிகண்டால் உள்ளூரில் ஒரு குடும்பத்தையும், சொந்தநாட்டில் ஒரு குடும்பத்தையும் எளிதாகப் பராமரித்தனர். சம்பாத்தியம் பெரிதாய் இல்லாவிட்டால் மீண்டும் திரும்பிப்போய் குடும்பத்தைச் சந்திக்கும் துணிவில்லாமல் மலேயாவிலேயே சம்பாதித்த சொற்பத்தைக்கொண்டு உள்ளூரில் குடும்பம் நடத்தினர். பொதுவாய் பினாங்கைச் சேர்ந்தவர்கள், மலாகாவைச்சேர்ந்தவர்கள் என்று இரண்டு பிரிவினருண்டு.

சிங்கப்பூரைச்சேர்ந்த பெரனாக்கான் இனத்தவர்கள் மலாக்காவிலிருந்து வந்தவர்களே. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சர் ஸ்டாம்போர்ட் ரா·பிள்ஸ் சிங்கப்பூரில் புதிய வணிக துறைமுகம் ஒன்றை நிறுவத்திட்டமிட்டதும் பினாங்கு மற்றும் மலாகாவில் இருந்த பெரனாக்கான் குடும்பங்கள் தெற்குநோக்கிக் குடிபெயர்ந்தனர். இப்படியாகக் கால ஓட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளெங்கும் இவ்வினத்தினர் பரவினர். 19ஆம் நூற்றாண்டில் பெரனாக்கான் சமூகத்தினருக்குப் பெரும் செல்வாக்கும் பொருளாதார வசதியும் கொண்டிருந்தனர். ஏனென்றால், அவர்கள்தான் முதன் முதலில் குடியேறிய வணிகர்கள்.

பிறந்தநாள் என்றால் இவ்வினத்தினருக்கு 'முதல் மாதம்', மற்றும் 61 வயது முடியும் பிறந்தநாள் ஆகிய இரண்டும் தான் மிகமிகமுக்கியமானவை. குழந்தைக்கு ஒருமாதம் ஆகும்போது முதல் முடியிறக்கி, நகங்களை வெட்டி, இரண்டு மெழுகுவத்திகள் ஏற்றிவைத்து மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, வணங்கி நன்றி தெரிவித்தனர். விருந்தும் உண்டு. 61 வயதிற்கு முன்னர் இறந்தவர் முழுமையாக வாழவில்லை என்று நம்பினர். உயர்ந்த நாற்காலியில் அமரவைத்து, சிறியவர்கள் அவரை நமஸ்கரித்து ஆசிபெற்றனர். சிகப்பு உறைகளில் பணமும் அவரவர் வசதிக்கேற்ப அன்பணிப்பாக வழங்கப்பட்டது. 'பாஜங்க் பாஜங்க் உமோர்' என்று சுற்றியுள்ளவர்கள் அனைவரும் 'வாழ்த்தி' கோஷித்தனர்.

பெண்களே சமையல்வேலை முழுவதை பார்ப்பதாலேயே, ந்யோந்யா உணவு என்றோ பெரனாக்கான் உணவு என்றோ இவர்களின் உணவு அறியப்படுகிறது. கலப்பு மணத்தில் விளைந்த இச்சமூகத்தின் உணவுக்கலாசாரமும் ஒரு கலவையே. மலேசியர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். ஆகவே இவர்கள் பன்றிக்கறியை உட்கொள்வதில்லை. ஆனால், பெரனாக்கான் உணவில் பன்றிக்கறி தாராளமாகப் பயன்படுகிறது. இவர்களின் உணவில் தேங்காய், மஞ்சள் மற்றும் எலும்பிச்சை போன்றவை இன்றியமையாதவை.

ந்யோந்யாவினர் சமையலை ஒரு கலையாகவே நினைக்கின்றனர். தங்கள் உணவுக்கலாசாரத்தில் அவர்களுக்கு மிகுந்த பெருமையுண்டு. மலேசிய அடையாளங்களுடன், இந்திய, தாய், இந்தோனீசிய மற்றும் சீன வழக்கங்கள் உணவில் தெரியும். ஒவ்வொரு சமூகத்தின் உணவுசமைக்கும் முறைகளின் சிறப்பையும் எடுத்துக்கொண்டுள்ளது பெரனாக்கான் உணவு முறை. வெட்டியோ அப்படியே முழுசாகவோ ஒரு வகை எலுமிச்சை இலைகள் (லிமௌ புருட்) பெரும்பாலான உணவுவகைகளில் சேர்க்கப்படுகின்றன. கொத்துமல்லித் தழைகளும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. வாழையிலையில் கட்டிய சாதம், இறைச்சி போன்றவற்றை ஆவியில் சமைப்பது இவர்கள் வழக்கம். சிலவேளைகளில் பொரித்தும் எடுப்பார்கள். வாழையிலையின் மணம் இவர்களின் சிலவகை உணவுகளில் பிரசித்தம். ந்யோந்யாவினரது கொழுக்கட்டை வகைகள் தென்கிழக்காசிய நாடுகளில் மிகவும் பிரபலம்.

இவர்களது சாப்பாட்டு மேசையில் தவறாமல் இடம் பெறுவது 'சாலட்'(Salad). இதில் உலர்ந்த வகை, ஈரப்பதமுடைய வகை என்று இரண்டு உண்டு. ஈரவகை சாலடில் தேங்காய்ப்பால் சேர்க்கிறார்கள். காரமும் இனிப்பும் எலும்பிச்சையின் புளிப்பும் சேர்த்திருக்கும். உலர்ந்த வகையிலோ துருவி வறுத்த தேங்காய் சேர்த்திருக்கும். இது சுமத்திராவிலிருந்து வந்த வழக்கம். மீன்வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளோ உலர்ந்த நெத்திலி மீனில் செய்யப்பட்ட சாஸ் (sauce) அல்லது வேர்கடலையில் செய்யப்பட்ட சாஸ் (sauce) சேர்க்கப்பட்டிருக்கும்.

பங்கா ரம்பே (screwpine) என்னும் இலைகளை பிறப்பு முதல் இறப்பு வரையில் எல்லா விதமான நிகழ்ச்சிகளுக்கும் உபயோகிக்கிறார்கள். பலவாரங்கள் முடியை அலசாத கிழவிகள் இந்த இலையைக் கொண்டைக்குள் வைத்துக்கொள்வராம். இதன்மூலம் முடியை நாற்றமில்லாமல் வைத்துக் கொள்ளமுடியும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு வகைப் பூவைப் பயன்படுத்துகிறார்கள். பழங்கால சிங்கப்பூரில் இச்சமூகத்தினரது வீடுகளின் பின்புறத்தோட்டத்தில் உணவிற்குத் தேவையான கீரை மற்றும் மூலிகை வகைகள் வளர்க்கப்பட்டன. இப்போதெல்லாம் அடுக்குமாடிகளில் இந்த வழக்கம் தொடர வழியில்லாதுபோனது. மலேசியாவிலிருந்து வரவழைக்கப்படும் மூலிகைகள் இப்போதும் கடைகளில் வாங்கக் கிடைக்கும்.

உணவில் மட்டுமில்லாமல் உடை, ஆபரணங்கள், கட்டடவியல் ஆகிய எல்லாவற்றிலுமே பெரனாக்கான் சமூகம் தனித்துவம் கொண்டிருக்கிறது. இவர்களது மரச்சாமான்களின் வேலைப்பாடுகள் கண்ணைக்கவரும். சுண்ணாம்பு தடவிய வெற்றிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கம் பெண்களிடம் இருந்திருக்கிறது. இவர்கள் மிகவும் உல்லாசப்பேர்வழிகள். சூதாட்டம் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

மூத்தவர்கள் தொளதொள சட்டையும் பேண்டும், துணியாலான காலணியும், தலையோடு பொருந்திய சிறிய குல்லாயும் தான் பாரம்பரியமென்று நம்பினர். ஆனால், பெரானகன் இனத்தவரின் உடை பலமாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலப்பில் பிறந்த ஆண் குழந்தைகள்/இளையர்கள் மேல்நாட்டுப் பாணி கோட்டும் பேண்டும் காலணிகளும் தொப்பியும் அணிய ஆரம்பித்தனர். வேலைக்குப் போகும்போது அரைக்கை பனியனுக்குமேல் 5 பட்டன்கள் வைத்துத் தைத்த கோட்டு அணிந்தனர். பனியன் பேண்டுக்குள் இழுத்துவிடப்பட்டிருக்கும். கணுக்காலுக்கு அருகில் குறுகிய கால்சட்டையையே அணிந்தனர்.

ந்யோந்யா என்றழைக்கப்படும் இவ்வினப் பெண்கள் கணுக்கால்வரை நீண்டிருக்கும் 'சரோங்க்' அணிந்து முழங்கால் வரை நீண்டிருக்கும் ஜம்பர் வகை மேலுடை அணிந்தனர். சிறிய உருண்டைக்கொண்டையோ, நத்தை வடிவிலான கொண்டையோ போட்டுக்கொண்டனர். பின்னல்வேலைசெய்யப்பட்ட கைப்பை இவர்களின் இடுப்பு வாரிலிருந்து (belt) தொங்கும். வலதுதோளில் முக்கோணமாக மடிக்கப்பட்ட கைக்குட்டை குத்தப்பட்டிருக்கும். 'கஸொத் மனேக்' என்றழைக்கப்பட்ட மணிகளால் அலங்கரிக்கப்பட்ட காலணி அணிந்திருப்பர்.

1920 களில் நேர் வகிடு எடுத்து இரண்டாகப்பிரித்து கூந்தலை இரட்டைப்பின்னிச்சுற்றி, காதுகளையட்டி இரண்டு கொண்டைகள் போட்டுக்கொண்டனர். பிறகு மெதுவாக கொண்டையைவிட்டுவிட்டு ஹேர்பின் போட்டுக்கொள்ளும் பழக்கம் வந்தது. மேல்சட்டையின் உயரம் இடைவரை குறைந்தது. 'கெரோசங்க்' எனப்படும் பெண்களுடையில் பல மாற்றங்கள் வந்தது. சில 1930களில் குட்டைப்பாவாடைகூட அணிய ஆரம்பித்தனர். குதியுயர்ந்த வகைக்காலணிகளும் வந்தன.

பெரனாக்கான் உடையில் 'கெபாயா' தான் மிகமிகப் பிரபலம். இதில் நுணுக்கமான அழகிய தையல்வேலைதான் (embroidery) சிறப்பு. இதற்குத் தான் வேலையும் அதிகம், கூலியும் அதிகம். மணிகளையும் இதற்குப் பயன் படுத்துகிறார்கள். சுற்றுப்பயணிகள் மிகவும் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். இன்றும் ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளிலிருந்து இதற்காகவே சிங்கப்பூருக்கு வந்து அளவுகொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். தயாரானதும் அனுப்பிவைக்கப்படுகின்றதாம்.

ஏற்பாடுசெய்யப்பட்ட திருமணங்கள் தான் பெரும்பாலும் நடந்துவந்துள்ளது. நிழற்படத்தை மட்டுமேபார்த்து நிச்சயயிக்கப்பட்ட திருமணங்களுமுண்டு. ஜாதகப்பொருத்தம் நட்சத்திரப்பொருத்தம் போன்றவற்றைப்பார்த்து நிச்சயித்தார்கள். 12 நாட்களுக்குக் கோலாகல ஏற்பாடுகள் நடக்கும். பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்ளும் பழக்கம் இந்தியர்களிடமிருந்து பெற்றது. நிச்சயமானபிறகும் கூட மணப்பெண்ணின் கன்னித்தன்மையிலோ கற்பிலோ மாப்பிள்ளைக்கோ அல்லது மாப்பிள்ளையின் அம்மாவிற்கோ சந்தேகம் வந்தால் திருமணம் நிற்கும். ஆகவே நடக்கும் வரை நிச்சயமில்லாத ஒரு ஐயம் நிலவியது. ஒவ்வொரு சடங்கும் பொருள் பொதிந்தது. பெற்றோருக்கும் மூத்தவர்களுக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தல் ஒரு முக்கிய சடங்கு. இப்போதெல்லாம் ஒரே நாளில் முடிந்துவிடுகிறது.

பெரும்பாலும் பாபாமலாய் மொழியோ 'ஹொக்கெயின்' என்னும் ஒருவகைச் சீனமொழியோ பேசினார்கள். மூத்த பெரனாக்கான் இனத்தவர்கள் பாபா மலாய் மொழியைப் பேசினார். அதன்பிறகு சீனமொழிகள் இடம்பிடித்தன. ஆணாதிக்கம் தூக்கலாய் இருக்கும் இந்தச்சமூகத்தில் மொழியிலும் வேற்றுமை. சில தகாத வார்த்தைகளை ஆண்கள் உபயோகிக்கலாம். பெண்கள் உபயோகிக்கக்கூடாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பெரானகன் சமூகத்தினர் மலாயாவின் பல பகுதிகளிலும் சொத்து பத்துக்களை விற்கவேண்டியிருந்தது. அதனால், பலவிதமான கலாசார அடையாளங்கள் காணாமல் போய்விட்டன.

'மூத்தோரை மதித்தல்' எனும் பண்பே இவர்களுக்கு மிகமுக்கியமானது. 'பஹாசா பாபா' என்றழைக்கப்படும் இவர்களது மொழி மலாய் மொழியும் இல்லாமல் சீன மொழியும் இல்லாமல் ஒரு கலவையாக இருக்கும். பயணக்கட்டுரைகளையும் சீன இலக்கியங்களையும் பாபா மலாயில் மொழிபெயர்த்துள்ளனர். இவர்களுக்கு மூட நம்பிக்கை அதிகம். துடைப்பத்தால் பெண்ணின் கால்களைத் தொடுதல் அபசகுனம். வீட்டில் 'அழகி' என்று புகழப்படும் பெண்குழந்தைகளை 'குரூபி' என்றழைப்பர். அந்தப் பெண்குழந்தை ஒருகட்டத்திலிருந்து வளர்ந்து மனமுதிர்ச்சிபெற உதவுமென்று நம்புகின்றனர். ஆரம்பகால பெரானகன் இனத்தவர் பௌத்தம் மற்றும் தாவோ மதத்தைப் பின்பற்றினர். பாபா கோவில்களில் இஸ்லாமிய மற்றும் தாவோ மதவழக்கங்களின் விநோத கலவை புலப்படும். சடங்குகளும் சம்பிரதாயங்களும் கிருஸ்தவமதத்திற்கு எதிராகவே இருந்தது. ஆங்கில ஆட்சியின் போது இவர்களில் அதிகபேர் கிருஸ்தவமதத்தைத் தழுவினார்கள்.

ஒருமாதம் முதல் மூன்று வருடங்கள் வரை இறந்தவருடனான உறவின் நெருக்கத்திற்கு ஏற்றாற்போல் இறந்தவருக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வினத்தினரின் ஆண்கள் கரண்டி மற்றும் முட்கரண்டி உபயோகித்தும் பெண்கள் கையை உபயோகித்தும் உணவுண்பர். இருப்பினும் ஈமச்சடங்கில் போது 'சாப் ஸ்டிக்' குகள் (chop sticks) வைக்கப்படும். ஈமச்சடங்கின் போது கருப்பு, வெள்ளை நிறங்களிலான உடையிலோ இல்லையானால் சாக்கினாலான உடையிலோ மிகநெருங்கிய உறவினர்களைப்பார்க்கலாம். 'பிகின் சது தாஹ¤ன்' என்றழைக்கப்படும் முதல் திதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பௌத்த பிக்குவை அழைத்து சீனர்களின் வழக்கப்படி காகிதத்திலான வீடு, பணம் போன்றவற்றை எரிப்பர். முதலாமாண்டு திதியைவிட இரண்டாம் ஆண்டுத்திதியின் போது படைக்கப்படும் சோற்றின் அளவு அதிகமாயிருக்கும். ஓராண்டிற்குள் இறந்தவரின் மேலுலக வாழ்வில் அவருக்கு அதிக நண்பர்கள் சேர்ந்திருப்பராம். இறந்தவரின் வீட்டிற்குச் சென்று வந்ததுமே முகம்கழுவும் பழக்கமுண்டு. அதன்மூலம் தீட்டுவிலகித் தூய்மையடைவதாக நம்பப்படுகிறது. துக்கத்தை அகற்ற ஒரு ஜோடி குட்டி சிவப்பு மெழுகுவத்தி மற்றும் சிறிய சிவப்பு நூல் ஈமச்சடங்கிற்கு வந்தவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

தற்காலத்தில் பெரனாக்கான் சமூகம் தன் அடையாளத்தைக் கிட்டத்தட்ட தொலைத்துவிட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். பெரனாக்கான் தோன்றக்காரணமாயிருந்த கலப்பு மணங்களே இதன் மறைவுக்கும் காரணமாகிவருகின்றன. வெவ்வேறு இனத்து ஆண்பெண்களை மணம் செய்துகொண்டு 'பெரனாக்கான்' அடையாளத்தை இழந்துவருகின்றனர். சிங்கப்பூரின் அதிநவீன வளர்ச்சியும் இச்சமூகத்தை அழித்துதான் வருகிறது. இருப்பினும் சிங்கப்பூர், தீபகர்ப மலேசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆங்காங்கே பெரனாக்கான் குடும்பங்களை இன்றும் பார்க்கலாம். சிறுபான்மையினரான இவர்கள் அவ்வப்போது சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். நாடகங்கள், விருந்து மற்றும் நடனம் போன்றவற்றை ஏற்பாடுசெய்து தங்கள் கலாசாரத்தை உயிர்ப்பிக்க முயன்று வருகிறார்கள்.

சிங்கப்பூரில் 2002ல் 23,198 திருமணங்களில் 2,842 இரண்டு வேறு இனங்களிடையே நடந்திருக்கின்றன.வெவ்வேறு இனத்தில் மணம் புரிவோரின் விகிதம் 1982 ல் இருந்த 6.3% யிலிருந்து 2002ல் 12.3%க்கு வந்துள்ளது.சிங்கப்பூரின் மக்கட்தொகை 4.1 மில்லியன். 75% சீனர்கள். 14% மலாய்க்காரர்கள். 8% இந்தியர்கள். இதில் தமிழர்களே பெரும்பான்மை. 3% மற்ற இனத்தவர்கள். இந்த மூன்றில் ஒரு சதவிதம் தான் பெரனாக்கான் இனத்தவர்கள். இந்தோனீசியாவில் 1990 ல் இருந்த தொகை 8,259,266. இது 1997ல் 9,341,400 ஆக உயர்ந்தது. 2000ல் 15 மில்லியனாக உயர்ந்தது. இதில் ஒரு மில்லியன் பேர் வந்துபோவோர்.

1980களிலிருந்தே சிங்கப்பூர் அரசாங்கம் தற்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கென்று பெரனாக்கான் கலாசாரத்தின் அடையாளங்களைக் காப்பாற்றிக்கொடுக்கும் நோக்கத்தோடு நிரந்தர மற்றும் தற்காலிக அருங்காட்சியகங்களை ஏற்படுத்தி வருகிறது. கலாசார கட்டடவியலைக்காட்டும் கட்டடங்களைப் பராமரிக்கிறது தேசிய கலாசாரக்கழகம். கலாசாரவிழாவை ஊக்குவித்தும் வருகிறது. ஆனால்,இவ்விழாக்களில் மூத்தவர்களே கலந்துகொள்கிறார்கள். இவ்வட்டாரத்தில் வசிப்போரில் சிலருக்கே பெரனாக்கான் சமூகத்தைப்பற்றித் தெரிவதில்லை. இப்படியிருக்க, சுற்றுப்பயணிகளாக வருபவர்களுக்கு சீனக்கலாசாரத்துக்கும் பெரனாக்கான் கலாசாரத்துக்கும் வேறுபாடு தெரிவதும் கடினமே. இளைய தலைமுறைக்கு இக்கலாசாரத்தை எடுத்துச்செல்ல இன்னும் அதிக நடவடிக்கைகள் தேவையென்றே தோன்றுகிறது.


(நிறைவு)

நன்றி: 'The Tamil Times' from New York -டிசம்பர், 2004

thinnai

- ஜெயந்தி சங்கர்

No comments: