Wednesday, May 24, 2006

மதுமிதா கவனிக்க

வலைப்பதிவர் பெயர்: ஜெயந்தி சங்கர்


வலைப்பூ பெயர் : வல்லமை தாராயோ



உர்ல் : http://jeyanthisankar.blogspot.com/

(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)


ஊர்: சிங்கப்பூர்



நாடு: சிங்கப்பூர்



வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சந்திரமதி கந்தசாமி & ஈழநாதன்



முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 01 டிசம்பர் 04



இது எத்தனையாவது பதிவு: 62



இப்பதிவின் உர்ல்: http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html



வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: முக்கியமாக அச்சிதழ்களில் பிரசுரமாகும் என்னுடைய படைப்புகளை இணைய வாசகர்களுக்கு அளிக்கும் நோக்குடன்



சந்தித்த அனுபவங்கள்: வாசகர்களின் எண்ணிக்கை பெருகியது. அதில் பலர் நண்பர்களானார்கள்.



பெற்ற நண்பர்கள்: நிறைய




கற்றவை: பின்னூட்ட எண்ணிக்கையை மட்டும் வைத்து வாசகர்களின்/ வருகையாளர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியாது




எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எப்போதும் போல் தான்



இனி செய்ய நினைப்பவை: தற்சமயம் ஒன்றுமில்லை



உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

என்னைப் பற்றி

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பூக்கள் மிக வலுவான ஊடகமாகி வருகிறது. அதனைப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு தேவை.

Friday, May 19, 2006

பாலி

'கடவுள்களின் தீவு' என்று உலகநாடுகளால் அழைக்கப்படும் பாலி இயற்கை வளத்துடன் மிகச்செழுமையான கலாசாரக் கூறுகளைக் கொண்டுள்ளது. கடவுள்களின் தீவென்றபோதிலும் பாலியர்களுக்கும் மற்ற எல்லா சராசரி மக்களைப்போலவே சவால்களும் சோதனைகளும் இருக்கவே செய்கின்றன.

பாலியர்களின் மதம் 'ஆகம இந்த பாலி' ஆகும். இந்து மதம் மற்றும் பௌத்தமதம் ஆகியவற்றின் பல்வகைக் கூறுகளைக் கொண்டது. தீவின் 2.5 மில்லியன் மக்கட்தொகையில் தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வகை இந்துக்களாவர். தெய்வங்களை இருவகைப் பிரிவில் வைக்கிறார்கள். முதல் பிரிவில் இந்துக்கடவுள்களான விஷ்ணு போன்ற தெய்வங்களையும் இரண்டாவது பிரிவில் இயற்கையோடு தொடர்புடைய சிறுதெய்வங்களும் வரும். கடவுள்களை மட்டுமின்றி மூதாதையரையும் இவர்கள் வணங்குவர். மலைகளில் வாழும் இவ்விருவரும் தங்கள் வாழ்வில் நல்லவற்றைக் கொண்டுவருவதாயும், கடல்களில் வாழும் தீயசக்திகளான பேய்பிசாசுகள் தீயவற்றைக் கொண்டு வருவதாயும் மிகவும் நம்புகிறார்கள். மலைக் கோயில்களும் கடல்கோயில்களும் ஆங்காங்கே தனித்தனியே இருக்கின்றன.

இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று கருதும் பாலியர்கள் தங்களின் இருப்பின் மேன்மை அருவ உலகில்தான் இருக்கிறது என்று மிகத் திடமாக நம்புகிறார்கள். அவ்வுலகில் உலவும் மூதாதையர்கள் தங்கள் வாழ்வின் முக்கியபகுதி என்றும், அவர்களை மகிழ்வித்தால், பாதுகாப்பான வாழ்வு உறுதி என்றும் வழிவழியாக நம்பிவரும் பாலியர்கள், அந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களின் எல்லாவிதமான செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்கிறார்கள்.


பாலியர்கள் மூன்று விதமான நாட்காட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று வழக்கமாக உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஆங்கில ஆண்டைக் காட்டுவது. மற்ற இரண்டும் 'வுகு' மற்றும் 'சகா' காலண்டர்கள். முக்கிய பெரியகோயில்களின் விழாக்கள் சகா வழக்கப்படி கணிக்கப்படும். சகா ஆண்டு சந்திரஆண்டை ஒத்திருக்கும். ஆண்டுக்காண்டு சிலநாட்கள் கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கும். வுகு வழக்கப்படி, செப்டம்பர் கடைசி முதல் அக்டோபர் தொடக்கம் வரையில் இருக்கும் பௌர்ணமி நாட்களிலும், ஏப்ரல் முதலிருவாரங்களில் வரக்கூடிய பௌர்ணமி நாட்களிலும் எல்லாக்கோயில்களிலும் முக்கியவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.
பாலியர்களிடையே சாதிவேறுபாடுகள் உண்டு. ஒரு கூட்டத்தில் உயர் இருக்கை மற்றும் தாழ்வான இருக்கைகள் அமைப்பதிலிருந்து, ஒருவரது சாதியைப்பார்த்து அதற்குத் தகுந்தாற்போல பேசும் போது குரலை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவது வரை வேற்றுமைகள் விதவிதமாகப் புலப்படும். உயர்சாதியென்றறியப்படுபவர்கள் 'மலையை நோக்கி' என்னும் பொருள்பட 'காஜா' என்றழைக்கப்படுகிறார்கள். கீழ்சாதி என்று நம்பப்படுகிறவர்கள் 'கடலை நோக்கி' என்ற பொருளில் 'கெலோட்' எனப்படுகிறார்கள். பாலியர்கள் இயற்கையையட்டிச் சிந்திப்பதை இவ்வாறு பற்பல இடங்களில் நம்மால் பார்க்கமுடியும். சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பியராட்சி, அரசியல் போன்ற பல்வேறு காரணங்களினால், அதற்கு முன்னர் நிலவிவந்த சாதிமுறையில் பற்பல மாற்றங்கள் வந்தது. பிறகு, மீண்டும் கொஞ்சம் சீரானபோதிலும் குழப்பங்கள் நிலவியபடியே தானிருக்கின்றன. சாதிவேற்றுமைகள் மட்டும் மறைந்துவிடவில்லை என்பதுடன் செல்வம், அந்தஸ்து போன்ற வேறு பலவேறுபாடுகளும் சேர்ந்தே நிலவிவருகின்றன.


இம்மக்களில் ஒருவரைப் பார்த்து, "நீங்கள் யார்?", என்று கேட்டால் உடனே தன் பெயரைச் சொல்லமாட்டார். முதலில் மற்ற பாலியர்களின் அந்தஸ்தோடு தன் அந்தஸ்தை ஒப்பிட்டுச் சொல்லிவிட்டு, பிறகு தனது மூதாதையரின் கதைகளைச் சொல்லிவிட்டுத் தான் தன்பெயரையே சொல்வார்.

அவரவர் வீட்டுமுற்றத்தில் ஒரு கோயில் அமைத்துக்கொள்கிறார்கள். அதன் அளவு அவரவர் வசதிக்கேற்ப இருக்கிறது. உறவினர்கள் குடும்பங்களுக்கு என்று பொதுவாக 'கோவிட்டன்' என்ற ஒரு பொதுக்கோயில் இருக்கும். அவர்களுடைய பொதுவான மூதாதையரை இங்கு வழிபடுவார்கள். இந்தக் கோயிலின் பழைமையைப் பொருத்தது இவர்களின் அந்தஸ்து. எப்படியும் ஒரு குடும்பத்துக்கு ஐந்து முதல் பத்து கோயில்கள் வரை தொடர்பிருக்கும். இது தவிர கிராமத்துக்கோயில் என்று வேறு ஒன்றுரிருக்கும். இப்படி எண்ணிலடங்காக் கோயில்கள் சிறிதும் பெரிதுமாக பாலியில் காணலாம்.
மலையிலிருந்து கிளம்பிய நதிநீராதது, கடலையடைந்து, கடல் நீர் ஆவியாகிப் பின் மழையாக நிலத்தில் விழுந்து, நிலத்தை வளமாக்குவதைப்போல மனிதவாழ்வும் கடலுக்குக்கொண்டுபோய் அந்திமக்கிரியைகள் செய்யப்பட்டு விடப்பட்டதும், ஆத்மா மலைகளிலேறி மூதாதையரை அடைந்து, பிறகு மீண்டும் பூமியில் வந்து மனிதனாகப் பிறக்கிறது என்பது நம்பிக்கை. இப்படிப்பல முறை பிறந்தும் இறந்தும், இறுதியில் முக்தியடையந்து நிரந்தரமாக மலைகளில் தங்கமுடியும்.


மாந்திரீகங்களிலும் அமானுஷ்யசக்திகளிலும் மிகுந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள் பாலியர்கள். ஆவிகளோடு பேசுவதும், பேயோட்டும் நிகழ்வுகளும், அவை தொடர்பான பல்வேறு சடங்குகளும் அடிக்கடி ஆங்காங்கே நடைபெறுவதைக்காணமுடியும். தெய்வமோ மூதாதையரோ ஒரு மனிதருள் 'இறங்கி'யிருப்பதாக நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகக் கருதப்படும். ஆனால், தீயசக்திகள் 'இறங்கி'யிருப்பின் கவலைக்குரியதாகக் கொள்ளப்படும்.


'பாலியன் தக்சு' என்றழைக்கப்படும் நபர் அருவு உலகிலிருக்கும் தெய்வங்கள், மூதாதையர் மற்றும் பேய்களோடு தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். இருவேறு உலகங்களிடையே ஒரு தொடர்புச் சாதனமாக இருந்து செயல்படும் இவர் பலசடங்கு சம்பிரதாயங்களைச் செய்து செய்யவேண்டியவற்றை மக்களுக்குப் பரிந்துரைப்பார். சாதி, வயது, பால் மற்றும் அந்தஸ்துக்கு அப்பாற்பட்ட பாலியன் தக்சுக்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இவர்களுக்குப் பயிற்சி என்று ஒன்றுமில்லை. 'அழைப்பு' வரும்போது ஒருவர் பாலியன் தக்சு ஆகிறார். சடங்குகளைச் செய்யவும் ஆரம்பிக்கிறார். 'அழைப்பு' திடீரென்று வராது என்று நம்புகிறார்கள். ஒருவரது வாழ்வில் அவ்வப்போது 'அறிகுறிகள்' ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும்.


அரியபொருட்கள் கோயிலிலோ, வீட்டிலோ அவருக்குக் கிடைக்கலாம். அது அரியவகைக் காசாகவோ, மோதிரம் போன்றவையாகவோ, இல்லை ஒரு விநோத வகைக் கல்லாகவோகூட இருக்கலாம். இப்பொருட்கள் மிகவும் கவனமாகப்பாதுகாக்கப்படும். சிலவேளைகளில் 'அறிகுறி' அவருக்கோ அவரது நெருங்கிய உறவினருக்கோ வரும் உடல்மன உபாதையாவும் அமையும். பிறகு, ஒரு கனவாகவோ, இல்லை உள்ளுணர்வாகவோ 'அழைப்பு' வரும் போது அவருக்கு அந்தத் தகுதி வரும். அறிகுறிகளை அலட்சியப்படுத்துவோருக்குச் சோதனைகள் மன நோயாகவும் உடல் உபாதையாகவும் பலவிதமாய் அமையும். குடும்பத்தினருக்கும் அவ்விதமே நிகழக்கூடும். வேறு ஒரு பாலியன் தக்சு எடுத்துரைத்து, இவர் பாலியன் தக்சு ஆகும்போது தீங்குகள் மெல்லமெல்ல விலகுவதை உணர்வார்கள். பாலியன் தக்சுக்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பர்.



கோயில்களில் பக்தர்களில் சிலருக்கு சாமிவருவதுண்டு. தெய்வம் தன் இருப்பை மக்களுக்கு உணர்த்த பக்தர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருள் 'இறங்கி'யிருப்பதாக நம்பப்படுகிறது. பக்தனின் இந்நிலையை 'திடன்' என்றழைக்கிறார்கள். கூடியிருக்கும் மக்கள் இவரைப்பார்த்து அச்சம்கொள்வதில்லை. மாறாக அவரை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஊதுபத்திகள் கொளுத்தி வணங்கி புனிதநீர்பருகக் கொடுப்பர். கோயில் பூசாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சமயச்செயல்பாடுகள் குறித்து கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டுக்கொள்வர். சிலசமயங்களில் வேண்டுமென்றே ஒரு சிறுவனுக்கோ பூசாரிக்கோ ஊதுபத்தி ஏற்றிவைத்து, மந்திரங்கள் ஓதி வலுவில் சாமிவர வைப்பதுமுண்டு. மூங்கில்களால் செய்யப்பட்ட குதிரைமேல் ஏறி, குதித்துக் குதித்து ஆடிக்கொண்டு வெறும்காலோடு சாமிவந்தவர் தீமிதிப்பார். அவருக்குத் துளிகூட தீக்காயமோ வேறு காயமோ படுவதில்லை. இவ்வகை நடனம் கிராமத்தில் மோசமான விளைச்சல், கொடியநோய் போன்ற தீங்குகள் நேர்ந்தால் நடத்தப்படும். கடவுள்களை மகிழ்வித்து கிராமத்தில் நல்லவை நடக்க அருள் போலிக்கச் செய்வதே நோக்கம்.



தீவிலோ, கிராமத்திலோ இல்லை குடும்பத்திலோ பொதுவாக வெகுநாட்களுக்கு தீர்வில்லாமல் இழுத்தடிக்கும் பிரச்சனைகள் மற்றும் ஓயாத குடும்பப்பூசல்கள், சிறுபிள்ளைகள் மரணம் போன்ற இருப்பின் பாலியன் தக்சு தெய்வங்களோடு தொடர்புகொண்டு இறுதியான ஒரு தீர்வைச் சொல்வார். சடங்கு சம்பிரதாயங்களையோ மதத்தையோ அவமதிக்கும் ஒருவரை தீயசக்திகளின் பிடியிலிருந்து கடவுள்கள் காப்பாற்றமாட்டார்கள். பெரும்தீங்கு ஏற்பட்ட ஒருவர் நேரம் தாழ்த்தாது செயல்பட்டு கடவுள்களைத் திருப்திப் படுத்த வேண்டும். எவ்வகையில் என்று அறிய உதவுவார் பாலியன் தக்சு.


குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் பாலியன் தக்சு அழைக்கப்படுவார், சம்பிராதாயசடங்குகள் நடத்தவும், மூதாதையரின் விருப்பங்களை அறியவும். அக்குடும்பத்தினரின் மூதாதையரை சடங்குகள் மூலம் 'தொடர்பு' கொண்டு அவரது விருப்பத்தை அறிந்து சொல்லுவார். அதன்படி குடும்பத்தினர் சடங்குகளை நடத்துவர்.

இறப்பின் போதும் பாலியன் தக்சுவுக்கு வேலை அதிகம். இறந்தவரின் இறுதிச்சடங்கு/யாத்திரை எவ்வாறு அமையவேண்டும் என்பதை இறந்தவரையே 'தொடர்பு' கொண்டு குடும்பத்தினருக்குச் சொல்வதுடன், தெய்வங்களுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைகள் ஏதும் செலுத்தப்படாமலிருந்தால், அவற்றையும் அறிந்து சொல்வார். குடும்பத்தினரோ, இறந்தவரின் நெருங்கிய உறவினரோ அவற்றை நிறைவேற்றுவார். இவ்வாறு செய்வதால், இறந்தவர் மறுபிறப்பெடுக்கும்போது, கடனாளியாகப் பிறக்க வேண்டியிருக்காது என்பது நம்பிக்கை. பாலியன் தக்சுவைச் சந்திக்க கூட்டமாக உறவினர்களோடு போகலாம். குறைந்தது ஒருவராவது உடன் போகவேண்டும். இறந்தவரின் கணவன்/மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் போவார்கள். குழந்தைப் பிறந்திருக்குமானால், பெற்றோரும் தாத்தாபாட்டிகளும் அவசியம் போவார்கள்.

பாலியன் தக்சுக்கள் அவரவர் திறன்களைப்பொருத்து பிரபலமாகலாம். தூரத்திலிருந்தெல்லாம் கூட ஒருவரைக் காணவருவார்கள். சிலர் நோய்களுக்குத் தீவு 'கேட்டு'ச் சொல்வர். வேறு சிலரோ எல்லாவிதமான சிறுபிரச்சனைகளையும் 'கேட்டு'த் தீர்த்துவைப்பர். வருபவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து, இலக்கங்கள் வழங்கப்படும். வரிசையில் அறைக்குள் சென்று பாலியன் தக்சுவைச் சந்திப்பார்கள் மக்கள். அறை சிறியதாக சடங்குகளுக்குத் தேவையானவற்றைத் தன்னுள் கொண்டிருக்கும். 'கமர் சுகி' என்றறியப்படும் அப்புனித அறையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அதன் மீது தெய்வச்சிலைகள், ஜாடிகளில் புனிதநீர், வெள்ளைத் துணி, மஞ்சள் துணி போன்றவை வைக்கப்பட்டிருக்கும். அத்துடன் பாலியன் தக்சு அறிகுறிகளாகக் கண்டெடுத்த கல், மோதிரம் போன்ற பொருட்களும் இடம் பெறும். அது ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம். இவை 'பராங் சுகி' என்றழைக்கப்படும். புனிதமான இப்பொருள்களைக் கழுவிய நீரை நோயாளிகளுக்கும் விஷக்கடிபட்டவர்களுக்கும் உட்கொள்ளக்கொடுக்கிறார் பாலியன் தக்சு. நிச்சயம் குணமடைவார்கள் என்றும் நம்புகிறார்கள்.

வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் தேங்காய், முட்டை, அரிசி, பூக்கள், பிஸ்கட்டுகள், பழம் ஆகியவற்றை வைத்துப்படைத்து வணங்கியபின் வெள்ளையுடையுடுத்திய பாலியன் தக்சு, புனிதநீரை அவர்கள் மீது தெளிப்பார். பிறகு, சடங்குப்பூர்வமாக தெய்வங்களையும் மூதாதையர்களையும் கண்களை மூடிக்கொண்டு அழைப்பார். அப்போது அழைக்கப்பட்ட தெய்வமானது பாலியன் தக்சுவின் உடலில் 'இறங்கி', பின் பேச ஆரம்பிக்கும். பலவிதமான குறுக்குக் கேள்விகள் கேட்டு, கண்டிக்கவும் செய்து, பின்னர் தீர்வுகள் வழங்கும். சிலவேளைகளில் மூதாதையர்கள் 'பேசு'வர். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு ஏற்ப தீர்வுகள் சொல்வதுண்டு. மூதாதையரின் ஆவி தன் நகைச்சுவையான பேசின் மூலம் குடும்பத்தினரையும் மற்றவரையும் சிரிக்கவும் வைக்கும். அறைக்குள் நடப்பது எதுவும் ரகசியமாக நடப்பதில்லை. அந்நியர்களாக இருக்கக்கூடிய மற்றவர்களும் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பார்கள். அவ்வகையில், மக்கள் பரவலாய் பலவிதப் பாடங்களைக் கற்கலாம் என்றே நம்பப்படுகிறது.

தெய்வமோ மூதாதையரோ பாலியன் தக்சுவின் உடலைவிட்டுச் சென்றதும், பாலியன் தக்சு தன்னிலை பெறுவார். உடனே, அவர் வாடிக்கையாளரிடம், தங்களுக்கு வேண்டிய விடை/தீர்வு கிடைத்ததா என்று கேட்டுக்கொள்வார். புனிதநீர் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்தவரைக் கூப்பிட்டு மீண்டும் சடங்குகளைத் தொடங்குவார். நவீன யுகத்தில், மக்கள் பாலியன் தக்சு வழியாக மூதாதையர் 'பேசும் பேச்சு'க்களைப் பதிவுசெய்துகொண்டு, பலமுறை கேட்கவென்று வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

உள்ளூர் பாணி உணவுவகைகள் மற்றும் மற்ற கலாசாரத்தின் தாக்கம் கொண்ட சில மாற்றங்களுடனான உணவுகள் ஏராளம். எத்தனை வகை உணவு சாப்பிட்டாலும் கொஞ்சமாவது சோறு சாப்பிடவேண்டும் என்பது நியதி. வகைவகையாக அரிசியைச் சமைக்கிறார்கள். இவர்கள் அரிசிச்சோற்றுக் கொடுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். இதற்கும் சமயத்தொடர்பையே நாம் பார்க்கலாம். எண்ணிலடங்காத பெண்தெய்வங்கள் கொண்ட அவர்களது கலாசாரத்தில் 'தேவி ஸ்ரீ' என்ற அரிசிக்குரிய தெய்வமே அவற்றுள் முதன்மையானது. இத்தெய்வத்திற்குத்தான் அறுவடை சமயத்திலும் வழிபாடுகள் செய்கிறார்கள்.

இது தவிர பழவகைகள் இவர்களது உணவில் மிகமுக்கிய இடத்தைப்பிடிக்கின்றன. வாழைப்பழ வகைகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் விளைகின்றன இத்தீவில். இளநீர், பப்பாளி, பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு, தேங்காய்ப்பால் போன்றயவையும். அரிசியை ஆவியில் அவித்து, பின்னர் புளிக்கவைத்துச் செய்யப்படும் பானம் போன்ற பலவகை பானங்கள் இங்கு மிகவும் பிரபலம்.

பலவகைப்பண்டிகைகள் கொண்டாடப்பட்டபோதிலும் மிக முக்கியமானது புதுவருடப்பிறப்பு. 'நையிபி' என்றழைக்கப்படும் இந்நாளில் தீவே அமைதியில் ஆழ்ந்திருக்கும். அன்று பயணம் செல்வது, நெருப்பூட்டுவது, பணிக்குச் செல்வது போன்றவை தவிர்க்கப்படும். வீட்டைவிட்டு யாரும் வெளியில் செல்லமாட்டார்கள். அதற்கு முதல் நாள் அதற்கு நேர்மாறாக இரைச்சலாய் இருக்கும். கொண்டாட்டமும் குதூகலமுமாக இருக்கும் இந்நாளே தீவின் ஆக அதிக இரைச்சல் மிகுந்த நாள் என்றறியப்படுகிறது. ஆங்காங்கே தீவெங்கும் உலாவுவதாக நம்பப்படும் பூதாதிகளுக்கு சாலை கூடுமிடங்களிலெல்லாம் இறைச்சிவகைகள், மதுவகைகள் என்று படையல்களாகப் அடுக்கப்பட்டிருக்கும். பின்மாலையில் இருள் கவியும் நேரம் எல்லோருமே வெளியில் வீதிகளில் வந்து பெரிய வாத்தியக்கருவிகளைப் பேரதிவுகளுடன் இசைத்து, தீப்பந்தங்கள் கொளுத்தி தீயசக்திகளை விரட்டுவர். அடுத்த நாளான புத்தாண்டன்று விரட்டப்பட்ட தீயசக்திகள் மீண்டும் வராமலிருக்கத்தான் அமைதி காக்கிறார்கள். அவை வந்தாலும், பாலியில் மனிதநடமாட்டமே இல்லையென்று ஏமார்ந்து போய் ஓடிவிடும்.

படையலுக்கு ஏற்புடையவற்றை அலங்காரமாக அடுக்கிவைப்பது பெண்களின் பணி. சிறுமிகள் சிறுவயது முதலே பெரிய பெண்களிடமிருந்து இதைக் கலை நயத்தோடு செய்யக் கற்கிறார்கள். 'பன்தென்' என்றழைக்கப்படும் இக்கலையை பெண்கள் மிகுந்த ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கற்கிறார்கள். பனையோலைகளைக் கோண்டு கூடைபோன்ற தட்டுகளைச் செய்கிறார்கள். படையலுக்கு மிகவும் முக்கியமானது அரிசி மாவால் செய்த பிஸ்கட்டுகள். இவை மரம், செடி, கொடி, விலங்கு, மனிதன் போன்ற பல்வேறு வடிவிலும் செய்யப்படும். அவற்றுடன், பூக்கள், பழங்கள், அரிசி, கருப்பு, முட்டை, தேங்காய் மற்றும் இறைச்சி ஆகியவற்றையும் சேர்த்து அழகாக அடுக்குவார்கள். ஒவ்வொரு அடுக்கின் மேலும் மூன்று வெற்றிலைகள் அடுக்கபடும். இவை பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கானவை. இதுபோல இக்கலையில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிளக்கம் இருக்கிறது.

'கலுங்கன்' மற்றொரு முக்கியப் பண்டிகை பாலியில். பத்துநாட்களுக்குக் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் போது தெய்வங்களும் முதாதையர்களும் பூமிக்கு வருகிறார்கள். பாலியர்கள் பலமணிநேரம் செலவிட்டு வீதியோரங்கள், வீடுகள், கோயில்கள் என்று ஆங்காங்கே விதவிதமான நுணுக்கங்களுடன் கூடிய அழகிய அலங்காரங்களை ஆர்வத்துடன் அமைக்கிறார்கள். இக்காலத்தில் தான் தீவெங்கும் இருக்கும் இந்துக்கோயில்களில் பலவகையான பெரியளவுக் கொண்டாட்டங்கள் நடைபெறும். இவ்விழாவும் புத்தாண்டைப்போல மார்ச் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. எல்லா மாதங்களிலும் பண்டிகைகளும் விழாக்களும் நடந்தபடியே தான் இருக்கும். அதில் அதிகமானவை இந்துக்கோயில்களில் நடக்கும் சமயவிழாக்கள். சிறுபான்மையிரால் கொண்டாடப்படும் மொஹ்ரம், ரம்ஸான், ஈஸ்டர்,ஆங்கில வருடப்புத்தாண்டு மற்றும் கிருஸ்துமஸ் போன்ற விழாக்களும் உண்டு. இதுதவிர விதவிதமான வடிவங்களோடு, கண்கவர் வண்ணங்களில் பெரியபெரிய பட்டங்கள் பறக்க விடும் விழா போன்ற பொதுவிழாக்களும் கணக்கேயில்லாமல் கொண்டாடப்படும்.

கோயில் திருவிழாக்களில் 'பாரோங்க்' என்றழைக்கப்படும் நடனநாடகம் நடத்தப்படும். இதில் பலவகையுண்டு. 'பாரோங்' என்பது புராணவிலங்கு ஒன்றினைக்குறிக்கும். இது 'ரங்டா' எனப்படும் சூன்யக்காரியை அழித்து தீவைக் காப்பதால் பாலியர்களுக்கும் பாரோங்கை மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் இரு ஆண்கள் ஆடுகிறார்கள். முகமூடிகளையணிந்து இந்நடனத்தை ஆட பிராமணர்களுக்கே உரிமையுண்டு. சண்டையிடுவதைப்போன்ற பாவனையோடு, நடனம் உச்சத்தையடையும்போது நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கமுடியும் என்பதை உணர்த்துவிதமாக இருபுறமும் வெற்றி தோல்வியின்றியே முடியும். முகமூடிகள் கோயிலிலேயே வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதற்கும் சடங்குகள் செய்யப்படுகின்றது. இது தவிர பெண்களுக்கே உரிய நளின அசைவுகளுடனான பாரம்பரிய வகை நடனங்களும் உண்டு.

விதவிதமான மரத்தாலான காற்று வாத்தியங்கள், தந்தி மற்றும் தாள வாத்தியங்கள் கொண்ட பாலியர்களின் இசை குதூகலம் நிறைந்தது. இசையும் பெரும்பாலும் மதநம்பிக்கைகளோடு தொடர்புடையதாகவே இருந்துவருகிறது. இசைக்குழுக்கள் 'கமெலன்' என்றழைக்கப்படுகின்றன. நடனம், நடன நாடகம், இசை போன்று ஓவியமும் பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுவந்துள்ளது. மதம் சார்ந்த புராணங்களைச் சித்தரிக்கும் பாரம்பரிய ஓவியங்களோடு நவீன ஓவியங்களும் இவர்களது கலாசாரத்தில் தீட்டப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் கல்லில் சிற்பக்கலை, தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களில் நுணுக்கங்கள் நிறைந்த கலைப் பொருட்கள் ஆகியவையும் பாலியின் சிறப்புக்கள். ஜாவாவிலிருந்து பெறப்பட்ட 'பதிக்' எனப்படும் துணிஓவியம் உள்ளூர் ரசனைக்கேற்ப சின்னஞ்சிறு மாறுதல்களுடன் பொலிகிறது.

இறப்பை அறிவிக்க கோயிலின் உச்சியிலிருக்கும் மணி அடிக்கப்படுகிறது. இறப்பு இன்னொரு உலகிற்கான பயணம் என்று அவர்கள் நம்புவதால், அழுகை என்ற பேச்சுக்கே இடமில்லை. காகிதம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட கோயில் போன்ற பல்லக்கிலோ அல்லது எருமை வடிவம் கொண்ட பல்லக்கிலோ உறங்குபவரைப் போல இறந்தவரைப்படுக்க வைத்து இறுதி ஊர்வலத்தைத் துவங்குகிறார்கள். மறுபிறவி எடுக்கக் கூடிய ஆன்மாவிற்கு சில சடங்குகள் செய்து சிதை எரியூட்டப்படுகிறது.



தனித்துவம் வாய்ந்த கலாசாரத்தைக் கொண்டிருக்கும் பாலியர்கள் வாழ்க்கையில் மிகவும் திருப்தியடைந்தவர்கள் என்றால் அது சற்றும் மிகையில்லை. ஒரு பாலியரிடம் போய்,"சொர்க்கம் எப்படியிருக்கும்", என்று கேட்டோமானால், சற்றும் தயங்காது,"ஒரு விதமான கவலையும் இல்லாமல் பாலியைப்போல இருக்கும்", என்பார். அவர்கள் பாலியில் பிறந்து, பாலியில் இறந்து பின்னர் பாலியிலேயே மறுபிறவி எடுக்கத்தான் விரும்புகிறார்கள். இருப்பினும், பாலியர்கள் தவிர்க்கமுடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்தான் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.


--------- ஜெயந்தி சங்கர்

(முற்றும்)


நன்றி நிலாச்சாரல்