Saturday, August 26, 2006

மரணித்த பாதங்கள்

--------ஜெயந்தி சங்கர்



சீனச் சமூகம் ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாக இருந்தது. பெண்ணை ஒரு திருமணப்பொருளாக மட்டும் பார்த்தது. கொக்கி வடிவிலுள்ள தாமரைத் தண்டுகளின் (lotus hooks) மேல் இருக்கும் தாமரை மலரைப் போல ஆணின் கண்களுக்கு பெண் தெரியவேண்டும் என்று நினைத்தது அச்சமூகம். மேலும், சிறிய பாதங்களே அழகானதாகவும் நளினமானதாகவும் கருதப்பட்டது. 3-4 அங்குலமே இருக்கும்படி பாதத்தின் வளர்ச்சியைத் தடுக்க பாதங்களை மடக்கி இறுக்கிக் கட்டினார்கள். மூன்று அங்குலமிருந்தால் தங்கத் தாமரை என்றும் நான்கங்குலமிருந்தால் வெள்ளி என்றும் நான்குக்கு மேலிருந்தால் இரும்பு என்றும் அழைத்தார்கள்.



'தாமரைத் தண்டு' ஆணுக்குள் இச்சையையும் ஆசையையும் தூண்டும் உருவம் என்று சீனர்கள் திடமாக நம்பினார்கள். உடலுறவுக்கு முன் ஆண் தொட்டுத் தடவி, விளையாடி மகிழ தன் பாதங்களை அவனின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளத் துவங்கிய பெண் காலங்காலமாக தன்னை வருத்திக் கொண்டு வந்திருக்கிறாள். அவ்வகைப் பாதங்கள் அவளிடம் கீழ்ப்படிதலை வலியுறுத்துவதாகவும் கொள்ளப் பட்டது. பிறரின் உதவியில்லாமல் வெகுதூரம் போகவோ உலகை அறியவோ ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அவள் கணவனின் கொடுமைக்கும் அடிஉதைக்கும் பயந்து கூட அவள் ஓடிவிடலாகாது. தவிர, கணவனிடமிருந்து பிரிய நினைக்கும் மனைவியும் வீட்டை ஓடிவிடக்கூடாது என்ற முன்யோசனை இதில் இருந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஒரு பெண் தனியாக இயங்கிவிடக்கூடாது; அவள் ஒரு ஆணைச் சார்ந்தே இயங்கவேண்டும் என்பது போன்ற உள்நோக்கங்கள் இருந்திருக்கின்றன. பாதங்களைக் கட்டுவதற்கு வேறு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், இவை தான் முக்கியமானவை. இதன்மூலம் பெண்ணின் கற்புநிலை காக்கப்படுவதாக நம்பினார்கள். மொத்தத்தில், பெண்களுக்கு விதிக்கப்பட்டது அடிமை வாழ்வு.



சீனர்களின் பார்வையில் இது சித்திரவதையில்லை, பெண்ணின் அழகை மேம்படுத்தும் ஒரு செயல். அவ்வளவே. சீனாவில் இவ்வழக்கம் ஒரு கலையாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளது என்பதை நினைக்கும்போது சமூகத்தில் ஆணின் ஆதிக்கம் எந்த அளவிற்கு வேரூன்றி இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகப் புரியும். ஆணின் அழகியல் நோக்கே இவ்வழக்கத்திற்குக் காரணம் என்று தங்களை ஏமாற்றிக் கொண்டும் நம்பிக்கொண்டும், ஆணுக்கு அடிமையாக இருந்த இப்பெண்கள் மிக அதிகம் பயந்ததே பாதங்களைக் கட்டி நீளத்தைக் குறைக்கா விட்டால் தங்களுக்குத் திருமணமாகாது போகுமோ என்று தான். திருமணமாகாவிட்டால் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே இல்லை சீன சமூகத்தில். தன் கல்லறையைப் பராமரிக்க கணவனோ பிள்ளைகளோ இல்லாத அவள் இறப்பிற்குப் பிறகு அமைதியில்லாமல் வெட்டியாகத் திரியும் ஆவியாகிவிடுகிறாள் என்பது நம்பிக்கை. ஆக, திருமணத்திற்கு ஒரு முக்கிய தகுதியாகிப் போனது இந்த கட்டப்பட்ட பாதங்கள். காலம் காலமாக இவ்வழக்கம் வாழ்வின் ஒரு பகுதியாக சீனப் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டும் வந்துள்ளது.



ஆணை மகிழ்விக்கவே பெண் இருப்பதாகவும், அவனுக்குப் பிள்ளைகள் பெற்றுக்கொடுப்பதே அவளின் கடமையெனவும் தீவிரமாக நம்பப்பட்டது. ஆணின் இச்சைக்கும் வசதிக்கும் புலனின்பத்துக்கும் ஏற்றாற்போல் பெண் எல்லாவிதமான சித்ரவதைகளையும் அனுபவிப்பது என்பது அங்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வந்துள்ளது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகப் பார்க்கவே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள் சீனப் பெண்கள். ஒரு பெண்ணின் உறுப்புகள் இயற்கையாக எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் முற்றிலும் இல்லை. அவளின் ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு வகைகளில் குறைக்கவும் கூட்டவும் பட்டுவந்துள்ளது. முக்கியமாக பாதங்களைச் சிறியதாகக் காட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் கொடூரமானவை. ஒரு பெண்ணின் பாதங்கள் எத்தனைக்கெத்தனை குட்டையாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அவளின் அந்தஸ்து கூடுவதாக நம்பப்பட்டது.



சீனமுதுமொழி ஒன்று " உன் மகனின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், அவனுடைய கல்வியைச் சுலபமாக்காதே. உன் மகளின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், பாதங்களைக் கட்டுவதைச் (foot binding) சுலபமாக்காதே", என்கிறது.



பெண் குழந்தைகளின் கால்விரல்கள் உடைக்கப்பட்டு, தோல் கீரப்பட்டு அவளின் கால்விரல் எலும்புகள் உள்ளங்கால்களை நோக்கி மடக்கிக் கட்டப்படுவதெல்லாம் மிகவும் சர்வசாதாரணம். சிறுமிகளின் பாதங்கள் சுமார் மூன்று முதல் பதினோரு வயதுக்கிடையில் கட்டப்படும். அவ்வயதில் எலும்புகள் இளசாக இருக்கும் என்பது ஒருகாரணம். சீக்கிரமே ஆரம்பித்தால் பலன் அதிகம். இதைச் செய்வது அவளின் தாயும் மற்றும் பெண் உறவினர்களும். குளிரில் பாதங்கள் கொஞ்சம் மரத்துப்போய் வலி குறைவாக உணரப்படும் என்று அவர்கள் இம்முறையை முதன்முதலில் நடைமுறைப் படுத்தியது கடும்குளிர்காலத்தில். உண்மையில் வலி என்னவோ கோடையில் இருக்கக்கூடிய அதே அளவு தான் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டாக மடித்துக் கட்டப்படும் பாதங்கள் மூன்றங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது. மடக்குவதால் குதிங்காலுக்கும் முன்காலுக்கும் இடையில் ஏற்படும் பிளவு குறைந்தது 2-3 அங்குல ஆழம் இருக்கவேண்டும். பாதங்கள் பெண்ணின் உடலைத் தாங்குவதைப் போலில்லாமல் அவளின் கால்களின் நீட்சியாகவே தெரியவேண்டும் என்பது நோக்கம். அப்போது தான் ஆணுக்குப் பிடித்த தாமரைக் கொக்கிகள் உருவாகும்.



ஒரு சடங்காக நடத்தப் படும் இவ்வழக்கத்தில், முதலில் கால்விரல் நகங்கள் வெட்டப்படும். பிறகு எலும்பையும் தசையையும் மென்மையாக்க மூலிகைகள் போட்டுக் காய்ச்சிய சுடுநீரில் பாதங்களை ஊறவைப்பார்கள். சிலவேளைகளில் மிருகங்களின் ரத்தம், சிறுநீர் போன்றவற்றிலும். கால்விரல்களில் கட்டைவிரல் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி விடப்படும். மற்ற எட்டு விரல்களும் அடியில் தள்ளப்பட்டும் இறுக்கிக்கட்டப்படும். சிறுமி தன் முழு பாரத்தையும் கட்டப்பட்ட பாதத்தில் செலுத்தி நடக்கப் பழக்கப்படுகிறாள். இதன் மூலம் எலும்புகள் தானாகவே உடைந்து பாதம் மெல்லமெல்ல குட்டையாகி உருமாறும். வலியைப் பற்றியெல்லாம் முணுமுணுக்கவும் மாட்டார்கள். கூடவும் காடாது. பிறகு, அவரவர் வசதிக்கேற்ப பத்தங்குல நீளமும் இரண்டங்குல அகலமும் கொண்ட பட்டு அல்லது பருத்தித் துணியால் பாதங்கள் இறுக்கிக் கட்டப்படும். பணக்காரர்கள் வெள்ளையிலும் ஏழைகள் அடர்நீலத்திலும் துணியை உபயோகித்தார்கள். அடர்நீல வண்ணம் அழுக்கை மறைக்க. அவ்வண்ணம் தோய்த்த துணி பாதங்களில் புண் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவியதாக நம்பப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கட்டு அவிழ்க்கப்பட்டு பாதங்கள் கழுவப்பட்டு நகங்கள் வெட்டப்படும். பிறகு, மீண்டும் முன்பைவிட இறுக்கமாகக் கட்டப்படும். ஆரம்பநாட்களில் தாய் இதைச் செய்வாள். பிறகு, தானே செய்துகொள்ளப் பழகவேண்டும். பாதத்தின் அளவு குறையக்குறைய காலணிகளின் அளவும் குறையும்.



மொத்த உடல் எடையும் கால்களில் இறங்கி கால் எலும்புகள் தானாகவே உடைந்து பிறகு மடக்கியவாக்கில் படிந்து வளர உதவும் என்பதற்காக கட்டப்பட்டபாதங்களுடன் பெண்களை வேண்டுமென்றே நீண்டதூரத்துக்கு நடக்க வைப்பதுண்டு. செயற்கையான முறையில் பாதங்களில் மேல் எடையுள்ள பொருட்களை வைப்பதுமுண்டு. சிலவேளைகளில், கூர்மையான ஆயுதத்தால் பாதங்களின் தசைகளை குத்திக் காயப்படுத்தி அதிகப்படியான தசைகளை அழுகி உதிரச்செய்வார்கள். நாளடைவில் அவளின் இரு பாதங்களும் தாமரைக் கொக்கிகளின் உருவத்திற்கு மாறிவிடும். அப்போது தான் அப்பெண் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறாள். பாதங்கள் மறைந்து மூன்றங்குல கொக்கிகள் மேல் நிற்கவும் நடக்கவும் செய்வாள். நடக்கவே சிரமப்படும் இப்பெண் ஓடுவதை நினைத்தும் பார்க்கமுடியாது. நொண்டிக்கொண்டும் நெளிந்துகொண்டும் நடமாடப்பழகிடுவாள். வேறு வழியில்லையென்றால் தூக்கிக்கொண்டு போவார்கள் பெண்களை. ஆணை மகிழ்விக்கவென்றே வளர்த்தெடுக்கப்பட்ட கலாசாரமான இப்பெண்களின் நுனிக்கால் நடனம் மிகவும் சமீபகாலம் வரையிலும் பிரபலம்.



இரண்டு வருடங்களில் சிறிய பாதங்கள் கிடைக்கப்பெற்றாலும், தொடர்ந்து பத்து வருடங்களுக்கு பாதங்களைக் கட்டினால் தான் இயற்கையாக வளரத் துடிக்கும் விரல்களையும் எலும்புகளையும் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும் என்பதால் கட்டுவது தொடரும். இயற்கைக்கு விரோதமான இவ்வழக்கத்தின் பின்விளைவுகள் ஏராளம். தாங்கமுடியாத வலி தான் முதல் கஷ்டம். மீண்டும் இயற்கையான பாதங்களைப்பெறுதல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமேயில்லாமல் போகிறது. தேவையான இரத்த ஓட்டம் இல்லாமல் விரல்கள் உதிர்ந்து கூடப்போய்விடும். மடக்கியிருக்கும் விரல்களில் வளரும் நகங்கள் அடிப்பாதங்களில் குத்தி புண்ணாகி நாற்றத்துடன் விடாமல் சீழ் வடியும். வாழ்நாள் முழுவதும் நாற்றம் அவளைவிட்டுப் போவதில்லை. இந்தப் புண் ஆறாமல் தொடர்ந்தால், கால் முழுவதும் பரவி சிலவேளைகளில் பெண்ணுக்கு மரணம் கூட நிகழ்வதுண்டு. மரணத்தை வென்ற பெண்ணின் பாதங்கள் எப்படியும் மரணத்துத் தான்விடுகின்றன.



ஆணைவிட பெண்ணின் பாதம் சிறியதாக இருந்தாலும், அதனை மேலும் சிறியதாகக் காட்டவே வலியுறுத்தி வந்துள்ளது சீனச் சமூகம். நாடு முழுவதும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்து, வடசீனாவின் ஹான் வட்டாரத்தில் அதிகமாக இருந்த இவ்வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் மறையத் துவங்கியது எனலாம். ஆச்சரியம் என்னவென்றால், இப்பெண்கள் வீட்டு வேலைகள் செய்யவும், நீண்ட தூரம் நடக்கவும் மலையேறவும் அஞ்சுவதேயில்லை. ஏற்று வாழப்பழகிய மனோபாவம் ஒரு காரணம் என்றாலும் தோல்வியை ஏற்கப் பிடிக்காத மனோதிடமும் இன்னொரு முக்கிய காரணம். உடலில் ஏற்படும் வலிகள் மனதைத் திடப்படுத்திக்கொள்ள உதவி வந்துள்ளதோ என்றெண்ணத் தோன்றுகிறது.



பெற்றோரிடமிருந்து பெற்ற நம் உடல் புனிதத்துவம் கொண்டது; உடலுறுப்புகளை எந்தவிதத்திலும் மாற்றியமைக்கக்கூடாது என்று கன்?ப்யூஷியஸ் சொன்ன முக்கியமான பாடத்தை சீனத்தில் ஆண்சமூகம் மிகச்சௌகரியமாக மறந்தது. பிற்காலத்தில் எதிப்புக்குரல் கிளம்பிய போதுதான் பெண்களுக்கு ஆதரவாக இதனைப் பயன்படுத்தினார்கள். அதே நேரத்தில், கன்?ப்யூஷியஸின் ஆணாதிக்க போதனைகள் இவ்வழக்கத்திற்கு வித்திட்டதாகவும் பரவலாகச் சொல்லப்படுகிறது.


1997ல் கலி?போர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று சீனாவில் osteoporosis குறித்த விரிவான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இவ்வழக்கத்தின் பின்விளைவுகளை ஆராய்ந்தது. இந்த ஆய்வில் 193 பெண்கள் பங்கேற்றார்கள். 93 பேர் 80 வயதைக் கடந்தவர்கள். மற்றவர்கள் 70-79 வயதுடையவர்கள். கட்டி சிறிதாக்கப்பட்ட பாதங்கள் உள்ளோர் இயற்கையான பாதங்கள் உள்ளவர்களைவிட அதிகம் கீழே விழக்கூடியவர்கள். தவிர இந்தச் இப்பாதங்கள் கொண்டவர்களால் இருக்கையிலிருந்து எளிதில் எழமுடியவில்லை. இவர்களால் குந்தியிருக்கவும் சிரமம். சீனாவிலோ அன்றாட வேலைகள் செய்ய பெண்கள் குந்தியிருப்பது தவிர்க்க முடியாதது. சிரமத்துடனேயே வாழப்பழகிய இப்பெண்களுக்கு இடுப்பு மற்றும் முதுகெலும்புகளின் பலம் மிகவும் குறைந்து விடுவதால், இவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியகள் மிகஅதிகம்.
கன்ப்?யூஷியஸ் வகுத்துத் தந்த கலாசாரம் உடல் முழுவதையும் மறைத்த ஆடை. அவரைப்பின்பற்றி தான் அறிஞர் ஜூ ஜீ (1130-1200 கி.மு) தென் ?ப்யூஜியன் மாநிலத்தில் இவ்வழக்கத்தை ஊக்குவித்தார். பெண்களின் கட்டப்பட்ட பாதங்களையும் காலணிகள் கொண்டு முற்றிலும் மறைத்துக் கொள்ளும் பழக்கம் தோன்றியது. இது அவர்களுக்கு ஒருவித அடையாளத்தைக் கொடுத்ததென்றும் நம்பப்பட்டது. அவர்களைப் பொருத்தவரை, பெரிய, தட்டையான மற்றும் காலணியில்லாத பாதங்கள் விலங்குகளுக்குறியவை, பெண்களுக்கானதல்ல.



டாங்க் முடியாட்சியின் இறுதிலோ, அதனைத் தொடர்ந்த சுங்க் முடியாட்சியிலோ ( 960- 1279 கிபி) இவ்வழக்கம் துவங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும் ஷாங்க் முடியாட்சியில் ( 1700- 1027 கிமு) தோன்றிய பலவகையான புராண மற்றும் இதிகாச, கிராமியப் பதிவுகள் இவ்வழக்கத்தினைப் பேசுவதால் அதன் பழமை புரிகிறது. அப்போது நாட்டின் அரசிக்கு இயற்கையாகவே சிறிய பாதங்கள் இருந்ததாகவும் அதற்காக நாட்டின் பெண்களும் பாதங்களைக் கட்டி சிறியதாக்கிக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாக கதைகள் உண்டு. பெண்கள் கால்களை மடக்கிக் கட்டி சிறிதாக்கிக்கொண்டார்கள். அதன்மூலம் அரசி தன்னை அழகின் இலக்கணமாக்கி மகிழ்ந்தாள். பெண்களே மனமுவந்து தன் குறைபாடுகொண்ட கால்களை நினைத்து வருந்திய அரசியின் உணர்வைப் புரிந்துகொண்டு அவ்வாறு செய்ய ஆரம்பித்ததாகவும் பதிவுகள் உண்டு.



அதே காலத்தில் வாழ்ந்த லீ யூ என்ற இளவரசனுக்கு சிறிய பாதங்கள் மற்றும் நுனிக்கால் நடனத்தில் மிகுந்த நாட்டம் இருந்ததால் பாதங்களைக் குட்டையாக்கிக்கொள்ள அவன் தன் அந்தப்புரப்பெண்களிடம் சொன்னான் என்றொரு கதையும் உண்டு. யாவ் நியாங் என்ற அவனின் மனைவியருள் ஒருத்தி அவ்வகைப் பாதங்களைக் கொண்டவள். நுனிக்கால் நடனத்தில் வல்லவள்.



பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தக் கொடிய வழக்கம் உச்சத்தை அடைந்தது. சுங்க் முடியாட்சியைக் கைப்பற்றிய முங்கோல்கள் யுவான் முடியாட்சியை நிறுவினார்கள். அவர்கள் பாதங்களை இறுக்கிக் கட்டும் இவ்வழக்கத்தினை ஆதரித்தனர். பிறகு, இவ்வழக்கம் அரசகுடும்பத்திலிருந்து மிங்க் முடியாட்சியின் போது மேட்டுக்குடியினரிடையே பரவியது. அப்போது தான் இவ்வழக்கம் திருமணத்திற்கும் அந்தஸ்துக்கும் தொடர்பு படுத்தப்பட ஆரம்பித்தது. மேட்டுக்குடிகளில் இருந்த பெண்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றியதால் தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று நினைத்தார்கள் மத்திய கீழ்த்தட்டு மக்கள். தாங்களும் தங்கள் மகள்களுக்கு பாதங்களைக்கட்டி சிறிதாக்கிவிடலாம், அதன்மூலம் மேல்தட்டு சீமான்களுக்கு அவர்களைக் கட்டிவைக்கலாம் என்று நினைத்து தீவிரமாகப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அத்தகைய திருமணங்கள் எளிதில் நடந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்கள் வயல்களில் கடின வேலைக்குத் தான் போகவேண்டி வந்தது. இருந்தாலும் வழக்கம் தொடர்ந்தே வந்திருக்கிறது.



1664ல் ச்சிங்க் முடியாட்சியின் போது மன்னன் காங்ஸி இவ்வழக்கத்திற்கு தடைபோட நினைத்தான். துரதிருஷ்டவசமாக, அவனின் முயற்சிகள் எந்தப் பலனைக் கொடுக்கவில்லை. பெண்கள் பாதக்கட்டுகளை அவிழ்த்துவிடவும் ஆண்கள் (நீண்ட பின்னலை வெட்டி)மொட்டை அடித்துக்கொள்ள ஆணையிடப்பட்டது. தங்களின் நீளமான பின்னல்களை இழக்க ஆண்கள் தயாராய் இல்லை. இந்தத் தருணத்தில் கூட பெற்றோரிடமிருந்து பெற்ற உடலையும் உறுப்புகளையும் எந்தவிதத்திலும் மாற்றியமைக்கக்கூடாது என்ற கன்?ப்யூஷியஸின் போதனையை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தார்களே தவிர அப்போதும் பெண்களுக்காக அவர்கள் யோசிக்கவேயில்லை. அந்தக்காலகட்டத்தில், பாதங்களைக் கட்டும் இவ்வழக்கம் குறைந்தது போலிருந்தது. ஆனால், நான்கே ஆண்டுகளில் மீண்டும் தீவிரமாக நடைமுறைக்கு வந்துவிட்டது.



ஷென் தே?பூ ( 1578- 1610 கி.பி) என்றவரின் வரலாற்றுப் பதிவின் படி 1644ல் மன்சுஸ் படைகள் நாட்டைக் கைப்பற்றியபோது மானத்திற்கு பயந்து மன்னன் தற்கொலை செய்துகொண்டான். அப்போது. திடீரென்று ஹான் இனமக்களிடையே நாட்டுப்பற்றையும் ஆண்களுக்கு அடையாளைத்தையும் ஏற்படுத்திடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது கட்டப்பட்ட பாதங்கள் எல்லைகளைக்குறிக்கும் ஒன்றாகிப்போனது. ஹான்ஸ் மற்றும் மன்சுஸ் வட்டாரங்களை அடையாளம் காண அவ்வட்டாரப் பெண்களின் பாதங்கள் தான் உதவின.



போர்த் தந்திரமாகவும் இவ்வழக்கம் அமைந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன. ராணுவ ஆலோசகர் ச்சூ ஜ்யூசீ, பாதங்களை இறுக்கிக் கட்டும் வழக்கத்தை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் மன்சுஸ் இனத்தைக் கவிழ்க்கவும் சீனாவின் பலத்தைப் பெறுக்கிக்கொள்ளவும் முடியும் என்று நினைத்தார். இதற்காக, ஹான்ஸ் வீரர்களைக் கொண்டே மன்சுஸ் வீரர்களிடம் இவ்வழக்கத்தைப் பரப்பப் பரிந்துரைத்தார். இதன் மூலம் அவ்வீரர்களின் கவனம் போரிலிருந்து வேறொன்றில் சிதறி, போர் ஆவேசம் குறைந்து, சீனாவுக்கு அவர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறையலாம் என்று கணக்குப் போட்டார். இருப்பினும், இவ்வழக்கம் மன்சுஸ் இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சீனர்கள் மட்டுமே தொடர்ந்து 1911 புரட்சிவரை பின்பற்றினார்கள்.



முதன்முதலில் 1895ஆம் வருடம் ஷாங்காயிலிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பும் வரை எத்தகைய விழிப்புணர்வும் இல்லாமலே இருந்து வந்தனர் பெண்கள். பெண்ணின் கல்விக்கு இவ்வழக்கம் தடையாக அமைந்து வருவதை குடிமக்களுக்கு உணர்த்தி ஓர் இயக்கம் உருவானது. உறுப்பினர்களுக்கிடையேயும் விழிப்புணர்வு பெற்றிருந்த குடும்பத்தினரிடையேயும் திருமணபந்தங்களை உருவாக்கினார்கள். பாதங்கள் இறுகக் கட்டப்படாத பெண்களுக்கும் திருமணம் சாத்தியமே என்று செயல்முறையாகக் காட்டினார்கள்.




1911ல் சீனக் குடியரசு இவ்வழக்கத்தைச் சட்ட விரோதம் என்று அறிவித்தது. அரசு ஊழியர்கள் வழக்கத்தைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தனர். இருந்தாலும், இந்தப் பழக்கம் உட்புற கிராமங்களில் தொடர்ந்தே வந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் சிறிய பாதங்களுக்கான காலணிகளை உற்பத்தி செய்துவந்த ஹன்பின் என்ற ஊரில் இருந்த கடைசி தொழிற்சாலை இழுத்துமூடப்பட்டது.



கடந்த ஆயிரம் வருடங்களில் 4.5 பில்லியன் சீனப் பெண்கள் இவ்வழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். வழக்கம் உச்சத்தில் இருந்தபோது அதைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவு. மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும்போது தான் ஏராளமான பதிவுகள் இவ்வழக்கத்தைக் குறித்ந்து சீன இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை கடந்த 2-3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பாலியல் சார்ந்த பதிவுகளே.



ஹவாய் தீவுகளுக்குப் புலம்பெயர்ந்த சீனர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டு சென்றார்கள். பிறகு 1898ல் தடைசெய்யப்பட்டபோது கைவிட்டார்கள். இவ்வழக்கம் புலம்பெயர்ந்த மற்ற சீனர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. பாதங்கள் கட்டப்பட்ட பெண்கள் புலம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், புலம்புயர்ந்த மண்ணில் இவ்வழக்கத்தைத் தொடர்ந்ததற்கான பதிவுகள் இல்லை என்றே தெரிகிறது.



இன்று சீனாவில் இவ்வழக்கத்தினைப் பற்றி நன்கறிந்தவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள். எல்லோருமே முதுமையடைந்துவிட்டார்கள். கைவேலைப்பாட்டுடன் அமைந்த மூன்றங்குல பட்டுக் காலணிகளை சீன அரசாங்கம் அருங்காட்சியங்களில் எங்கேயும் வைப்பதில்லை. இக்காலணிகள் இப்போதெல்லாம் சீனர்களிடையே அவமானம், கோபம், எரிச்சல் மற்றும் வெறுப்பு போன்ற வெவ்வேறு விதமான உணர்வுகளைக் கொண்டுவருகின்றன. ந்யூயார்க்கில் 1996ல், 142 ஜோடிக்காலணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டபோதும், கடைக்காரர் அவ்வரிய காலணிகளை 975 டாலருக்கு விற்க முயன்றபோதும் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பின. 1995ல் யாங்க் யூச்சிங் என்ற திரைப்படத்தயாரிப்பாளர் இவ்வழக்கத்தைக்குறித்து ஒரு திரைப்படம் எடுக்க நினைத்தார். அவருக்கு அது சுலபமாக இல்லை. ஏனென்றால், அதைப்பற்றிப் பேச யாரும் முன்வரவில்லை. சீன அரசாங்கம் தன் திரைப் படவேலையைத் தடை செய்துவிடுமோ என்றும் அஞ்சியிருக்கிறார் யாங்க் யூச்சிங். ஆனால், சமீபத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சிக்கு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு நூற்றாண்டில் பெண்கள் அமைப்புகள் பல இம்முறைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீண்ட நேரம் நின்றுகொண்டே செய்யும் வேலையில் இருக்கும் பெண்கள் பாதங்களைக் கட்டியதற்காக வருந்துகிறார்கள். இருப்பினும், தங்கள் மகள்களையாவது இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாதங்களை இறுக்கிக்கட்டும் இம்முறைக்கு எதிராக நடந்த இயக்கங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளன. நிறைய பெண்கள் உடனே பாதக்கட்டுகளை அவிழ்த்து எறிந்துவிட்டு மற்றவர்களையும் அவ்வாறே செய்யத் தூண்டினர். கட்டில்லாமல் நடப்பது மிகவும் வலியைக் கொடுக்கும் என்பதால், கட்டினைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தளர்த்தி இயல்புக்கு வரவேண்டும் என்று இவர்கள் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். வயதில் முதிர்ந்த பெண்களுக்கு வேறு வழியே இல்லை. பாதங்கள் இயல்புக்கு வரவேமுடியாது.



முன்பு சிறியபாதங்கள் இருந்தால் மட்டுமே கல்யாணத்தின் போது பெண் நல்ல விலைபோனாள். ஆனால், இன்று அதில் கிடைக்கும் வருமானத்தை விட பருத்தி மில் போன்ற இடங்களில் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று பெற்றோர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். திருமணம் என்ற பெயரில் தானே விலைபோய் குடும்பத்தின் பொருளாதாரத்தில் கைகொடுத்த பெண், இக்காலத்தில் வேலைசெய்து சம்பாதித்து கைகொடுக்கிறாள். பாதங்கள் தீர்மானித்த திருமணங்களை இப்போதெல்லாம் பணம் தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டது. பெண்ணின் பொருளாதார முன்னேற்றம் ஒருவகையில் இக்கொடிய வழக்கத்தை அழிக்க உதவியுள்ளது. வழக்கம் கிட்டத்தட்ட மறைந்தே போய்விட்டது என்பது தான் ஒரே ஆறுதல்.


(முற்றும்)
ஆகஸ்ட் 2006 - உயிர்மை





http://www.nilacharal.com/tamil/interview/jayanthi_shankar_255.asp
http://www.viruba.com/mediareview.aspx?rid=50&bid=VB0000349
www.thinnai.com/author1257.html