(2007க்கு முன்பாக அச்சூடகங்களில் பிரசுரமான படைப்புகளில் சிலவற்றை மட்டும் இப்பக்கத்தில் வாசிக்க முடியும். வலைப்பதிவுக்கென்றே எழுதியவை மிகக் குறைவு. march 28, 2010 அன்று இந்த வலைப்பக்கத்தின் பெயரை மாற்ற விரும்பி பிறகு, 4-5 ஆண்டுகளாக இணையவெளியில் பரவலாக அறியப்பட்டு வந்திருக்கும் பெயரை மாற்ற வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. தொடர்புக்கு - jeyanthisankar(at)gmail (dot)com
Saturday, August 26, 2006
மரணித்த பாதங்கள்
சீனச் சமூகம் ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாக இருந்தது. பெண்ணை ஒரு திருமணப்பொருளாக மட்டும் பார்த்தது. கொக்கி வடிவிலுள்ள தாமரைத் தண்டுகளின் (lotus hooks) மேல் இருக்கும் தாமரை மலரைப் போல ஆணின் கண்களுக்கு பெண் தெரியவேண்டும் என்று நினைத்தது அச்சமூகம். மேலும், சிறிய பாதங்களே அழகானதாகவும் நளினமானதாகவும் கருதப்பட்டது. 3-4 அங்குலமே இருக்கும்படி பாதத்தின் வளர்ச்சியைத் தடுக்க பாதங்களை மடக்கி இறுக்கிக் கட்டினார்கள். மூன்று அங்குலமிருந்தால் தங்கத் தாமரை என்றும் நான்கங்குலமிருந்தால் வெள்ளி என்றும் நான்குக்கு மேலிருந்தால் இரும்பு என்றும் அழைத்தார்கள்.
'தாமரைத் தண்டு' ஆணுக்குள் இச்சையையும் ஆசையையும் தூண்டும் உருவம் என்று சீனர்கள் திடமாக நம்பினார்கள். உடலுறவுக்கு முன் ஆண் தொட்டுத் தடவி, விளையாடி மகிழ தன் பாதங்களை அவனின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளத் துவங்கிய பெண் காலங்காலமாக தன்னை வருத்திக் கொண்டு வந்திருக்கிறாள். அவ்வகைப் பாதங்கள் அவளிடம் கீழ்ப்படிதலை வலியுறுத்துவதாகவும் கொள்ளப் பட்டது. பிறரின் உதவியில்லாமல் வெகுதூரம் போகவோ உலகை அறியவோ ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அவள் கணவனின் கொடுமைக்கும் அடிஉதைக்கும் பயந்து கூட அவள் ஓடிவிடலாகாது. தவிர, கணவனிடமிருந்து பிரிய நினைக்கும் மனைவியும் வீட்டை ஓடிவிடக்கூடாது என்ற முன்யோசனை இதில் இருந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஒரு பெண் தனியாக இயங்கிவிடக்கூடாது; அவள் ஒரு ஆணைச் சார்ந்தே இயங்கவேண்டும் என்பது போன்ற உள்நோக்கங்கள் இருந்திருக்கின்றன. பாதங்களைக் கட்டுவதற்கு வேறு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், இவை தான் முக்கியமானவை. இதன்மூலம் பெண்ணின் கற்புநிலை காக்கப்படுவதாக நம்பினார்கள். மொத்தத்தில், பெண்களுக்கு விதிக்கப்பட்டது அடிமை வாழ்வு.
சீனர்களின் பார்வையில் இது சித்திரவதையில்லை, பெண்ணின் அழகை மேம்படுத்தும் ஒரு செயல். அவ்வளவே. சீனாவில் இவ்வழக்கம் ஒரு கலையாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளது என்பதை நினைக்கும்போது சமூகத்தில் ஆணின் ஆதிக்கம் எந்த அளவிற்கு வேரூன்றி இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகப் புரியும். ஆணின் அழகியல் நோக்கே இவ்வழக்கத்திற்குக் காரணம் என்று தங்களை ஏமாற்றிக் கொண்டும் நம்பிக்கொண்டும், ஆணுக்கு அடிமையாக இருந்த இப்பெண்கள் மிக அதிகம் பயந்ததே பாதங்களைக் கட்டி நீளத்தைக் குறைக்கா விட்டால் தங்களுக்குத் திருமணமாகாது போகுமோ என்று தான். திருமணமாகாவிட்டால் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே இல்லை சீன சமூகத்தில். தன் கல்லறையைப் பராமரிக்க கணவனோ பிள்ளைகளோ இல்லாத அவள் இறப்பிற்குப் பிறகு அமைதியில்லாமல் வெட்டியாகத் திரியும் ஆவியாகிவிடுகிறாள் என்பது நம்பிக்கை. ஆக, திருமணத்திற்கு ஒரு முக்கிய தகுதியாகிப் போனது இந்த கட்டப்பட்ட பாதங்கள். காலம் காலமாக இவ்வழக்கம் வாழ்வின் ஒரு பகுதியாக சீனப் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டும் வந்துள்ளது.
ஆணை மகிழ்விக்கவே பெண் இருப்பதாகவும், அவனுக்குப் பிள்ளைகள் பெற்றுக்கொடுப்பதே அவளின் கடமையெனவும் தீவிரமாக நம்பப்பட்டது. ஆணின் இச்சைக்கும் வசதிக்கும் புலனின்பத்துக்கும் ஏற்றாற்போல் பெண் எல்லாவிதமான சித்ரவதைகளையும் அனுபவிப்பது என்பது அங்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வந்துள்ளது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகப் பார்க்கவே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள் சீனப் பெண்கள். ஒரு பெண்ணின் உறுப்புகள் இயற்கையாக எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் முற்றிலும் இல்லை. அவளின் ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு வகைகளில் குறைக்கவும் கூட்டவும் பட்டுவந்துள்ளது. முக்கியமாக பாதங்களைச் சிறியதாகக் காட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் கொடூரமானவை. ஒரு பெண்ணின் பாதங்கள் எத்தனைக்கெத்தனை குட்டையாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அவளின் அந்தஸ்து கூடுவதாக நம்பப்பட்டது.
சீனமுதுமொழி ஒன்று " உன் மகனின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், அவனுடைய கல்வியைச் சுலபமாக்காதே. உன் மகளின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், பாதங்களைக் கட்டுவதைச் (foot binding) சுலபமாக்காதே", என்கிறது.
பெண் குழந்தைகளின் கால்விரல்கள் உடைக்கப்பட்டு, தோல் கீரப்பட்டு அவளின் கால்விரல் எலும்புகள் உள்ளங்கால்களை நோக்கி மடக்கிக் கட்டப்படுவதெல்லாம் மிகவும் சர்வசாதாரணம். சிறுமிகளின் பாதங்கள் சுமார் மூன்று முதல் பதினோரு வயதுக்கிடையில் கட்டப்படும். அவ்வயதில் எலும்புகள் இளசாக இருக்கும் என்பது ஒருகாரணம். சீக்கிரமே ஆரம்பித்தால் பலன் அதிகம். இதைச் செய்வது அவளின் தாயும் மற்றும் பெண் உறவினர்களும். குளிரில் பாதங்கள் கொஞ்சம் மரத்துப்போய் வலி குறைவாக உணரப்படும் என்று அவர்கள் இம்முறையை முதன்முதலில் நடைமுறைப் படுத்தியது கடும்குளிர்காலத்தில். உண்மையில் வலி என்னவோ கோடையில் இருக்கக்கூடிய அதே அளவு தான் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டாக மடித்துக் கட்டப்படும் பாதங்கள் மூன்றங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது. மடக்குவதால் குதிங்காலுக்கும் முன்காலுக்கும் இடையில் ஏற்படும் பிளவு குறைந்தது 2-3 அங்குல ஆழம் இருக்கவேண்டும். பாதங்கள் பெண்ணின் உடலைத் தாங்குவதைப் போலில்லாமல் அவளின் கால்களின் நீட்சியாகவே தெரியவேண்டும் என்பது நோக்கம். அப்போது தான் ஆணுக்குப் பிடித்த தாமரைக் கொக்கிகள் உருவாகும்.
ஒரு சடங்காக நடத்தப் படும் இவ்வழக்கத்தில், முதலில் கால்விரல் நகங்கள் வெட்டப்படும். பிறகு எலும்பையும் தசையையும் மென்மையாக்க மூலிகைகள் போட்டுக் காய்ச்சிய சுடுநீரில் பாதங்களை ஊறவைப்பார்கள். சிலவேளைகளில் மிருகங்களின் ரத்தம், சிறுநீர் போன்றவற்றிலும். கால்விரல்களில் கட்டைவிரல் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி விடப்படும். மற்ற எட்டு விரல்களும் அடியில் தள்ளப்பட்டும் இறுக்கிக்கட்டப்படும். சிறுமி தன் முழு பாரத்தையும் கட்டப்பட்ட பாதத்தில் செலுத்தி நடக்கப் பழக்கப்படுகிறாள். இதன் மூலம் எலும்புகள் தானாகவே உடைந்து பாதம் மெல்லமெல்ல குட்டையாகி உருமாறும். வலியைப் பற்றியெல்லாம் முணுமுணுக்கவும் மாட்டார்கள். கூடவும் காடாது. பிறகு, அவரவர் வசதிக்கேற்ப பத்தங்குல நீளமும் இரண்டங்குல அகலமும் கொண்ட பட்டு அல்லது பருத்தித் துணியால் பாதங்கள் இறுக்கிக் கட்டப்படும். பணக்காரர்கள் வெள்ளையிலும் ஏழைகள் அடர்நீலத்திலும் துணியை உபயோகித்தார்கள். அடர்நீல வண்ணம் அழுக்கை மறைக்க. அவ்வண்ணம் தோய்த்த துணி பாதங்களில் புண் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவியதாக நம்பப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கட்டு அவிழ்க்கப்பட்டு பாதங்கள் கழுவப்பட்டு நகங்கள் வெட்டப்படும். பிறகு, மீண்டும் முன்பைவிட இறுக்கமாகக் கட்டப்படும். ஆரம்பநாட்களில் தாய் இதைச் செய்வாள். பிறகு, தானே செய்துகொள்ளப் பழகவேண்டும். பாதத்தின் அளவு குறையக்குறைய காலணிகளின் அளவும் குறையும்.
மொத்த உடல் எடையும் கால்களில் இறங்கி கால் எலும்புகள் தானாகவே உடைந்து பிறகு மடக்கியவாக்கில் படிந்து வளர உதவும் என்பதற்காக கட்டப்பட்டபாதங்களுடன் பெண்களை வேண்டுமென்றே நீண்டதூரத்துக்கு நடக்க வைப்பதுண்டு. செயற்கையான முறையில் பாதங்களில் மேல் எடையுள்ள பொருட்களை வைப்பதுமுண்டு. சிலவேளைகளில், கூர்மையான ஆயுதத்தால் பாதங்களின் தசைகளை குத்திக் காயப்படுத்தி அதிகப்படியான தசைகளை அழுகி உதிரச்செய்வார்கள். நாளடைவில் அவளின் இரு பாதங்களும் தாமரைக் கொக்கிகளின் உருவத்திற்கு மாறிவிடும். அப்போது தான் அப்பெண் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறாள். பாதங்கள் மறைந்து மூன்றங்குல கொக்கிகள் மேல் நிற்கவும் நடக்கவும் செய்வாள். நடக்கவே சிரமப்படும் இப்பெண் ஓடுவதை நினைத்தும் பார்க்கமுடியாது. நொண்டிக்கொண்டும் நெளிந்துகொண்டும் நடமாடப்பழகிடுவாள். வேறு வழியில்லையென்றால் தூக்கிக்கொண்டு போவார்கள் பெண்களை. ஆணை மகிழ்விக்கவென்றே வளர்த்தெடுக்கப்பட்ட கலாசாரமான இப்பெண்களின் நுனிக்கால் நடனம் மிகவும் சமீபகாலம் வரையிலும் பிரபலம்.
இரண்டு வருடங்களில் சிறிய பாதங்கள் கிடைக்கப்பெற்றாலும், தொடர்ந்து பத்து வருடங்களுக்கு பாதங்களைக் கட்டினால் தான் இயற்கையாக வளரத் துடிக்கும் விரல்களையும் எலும்புகளையும் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும் என்பதால் கட்டுவது தொடரும். இயற்கைக்கு விரோதமான இவ்வழக்கத்தின் பின்விளைவுகள் ஏராளம். தாங்கமுடியாத வலி தான் முதல் கஷ்டம். மீண்டும் இயற்கையான பாதங்களைப்பெறுதல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமேயில்லாமல் போகிறது. தேவையான இரத்த ஓட்டம் இல்லாமல் விரல்கள் உதிர்ந்து கூடப்போய்விடும். மடக்கியிருக்கும் விரல்களில் வளரும் நகங்கள் அடிப்பாதங்களில் குத்தி புண்ணாகி நாற்றத்துடன் விடாமல் சீழ் வடியும். வாழ்நாள் முழுவதும் நாற்றம் அவளைவிட்டுப் போவதில்லை. இந்தப் புண் ஆறாமல் தொடர்ந்தால், கால் முழுவதும் பரவி சிலவேளைகளில் பெண்ணுக்கு மரணம் கூட நிகழ்வதுண்டு. மரணத்தை வென்ற பெண்ணின் பாதங்கள் எப்படியும் மரணத்துத் தான்விடுகின்றன.
ஆணைவிட பெண்ணின் பாதம் சிறியதாக இருந்தாலும், அதனை மேலும் சிறியதாகக் காட்டவே வலியுறுத்தி வந்துள்ளது சீனச் சமூகம். நாடு முழுவதும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்து, வடசீனாவின் ஹான் வட்டாரத்தில் அதிகமாக இருந்த இவ்வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் மறையத் துவங்கியது எனலாம். ஆச்சரியம் என்னவென்றால், இப்பெண்கள் வீட்டு வேலைகள் செய்யவும், நீண்ட தூரம் நடக்கவும் மலையேறவும் அஞ்சுவதேயில்லை. ஏற்று வாழப்பழகிய மனோபாவம் ஒரு காரணம் என்றாலும் தோல்வியை ஏற்கப் பிடிக்காத மனோதிடமும் இன்னொரு முக்கிய காரணம். உடலில் ஏற்படும் வலிகள் மனதைத் திடப்படுத்திக்கொள்ள உதவி வந்துள்ளதோ என்றெண்ணத் தோன்றுகிறது.
பெற்றோரிடமிருந்து பெற்ற நம் உடல் புனிதத்துவம் கொண்டது; உடலுறுப்புகளை எந்தவிதத்திலும் மாற்றியமைக்கக்கூடாது என்று கன்?ப்யூஷியஸ் சொன்ன முக்கியமான பாடத்தை சீனத்தில் ஆண்சமூகம் மிகச்சௌகரியமாக மறந்தது. பிற்காலத்தில் எதிப்புக்குரல் கிளம்பிய போதுதான் பெண்களுக்கு ஆதரவாக இதனைப் பயன்படுத்தினார்கள். அதே நேரத்தில், கன்?ப்யூஷியஸின் ஆணாதிக்க போதனைகள் இவ்வழக்கத்திற்கு வித்திட்டதாகவும் பரவலாகச் சொல்லப்படுகிறது.
1997ல் கலி?போர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று சீனாவில் osteoporosis குறித்த விரிவான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இவ்வழக்கத்தின் பின்விளைவுகளை ஆராய்ந்தது. இந்த ஆய்வில் 193 பெண்கள் பங்கேற்றார்கள். 93 பேர் 80 வயதைக் கடந்தவர்கள். மற்றவர்கள் 70-79 வயதுடையவர்கள். கட்டி சிறிதாக்கப்பட்ட பாதங்கள் உள்ளோர் இயற்கையான பாதங்கள் உள்ளவர்களைவிட அதிகம் கீழே விழக்கூடியவர்கள். தவிர இந்தச் இப்பாதங்கள் கொண்டவர்களால் இருக்கையிலிருந்து எளிதில் எழமுடியவில்லை. இவர்களால் குந்தியிருக்கவும் சிரமம். சீனாவிலோ அன்றாட வேலைகள் செய்ய பெண்கள் குந்தியிருப்பது தவிர்க்க முடியாதது. சிரமத்துடனேயே வாழப்பழகிய இப்பெண்களுக்கு இடுப்பு மற்றும் முதுகெலும்புகளின் பலம் மிகவும் குறைந்து விடுவதால், இவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியகள் மிகஅதிகம்.
கன்ப்?யூஷியஸ் வகுத்துத் தந்த கலாசாரம் உடல் முழுவதையும் மறைத்த ஆடை. அவரைப்பின்பற்றி தான் அறிஞர் ஜூ ஜீ (1130-1200 கி.மு) தென் ?ப்யூஜியன் மாநிலத்தில் இவ்வழக்கத்தை ஊக்குவித்தார். பெண்களின் கட்டப்பட்ட பாதங்களையும் காலணிகள் கொண்டு முற்றிலும் மறைத்துக் கொள்ளும் பழக்கம் தோன்றியது. இது அவர்களுக்கு ஒருவித அடையாளத்தைக் கொடுத்ததென்றும் நம்பப்பட்டது. அவர்களைப் பொருத்தவரை, பெரிய, தட்டையான மற்றும் காலணியில்லாத பாதங்கள் விலங்குகளுக்குறியவை, பெண்களுக்கானதல்ல.
டாங்க் முடியாட்சியின் இறுதிலோ, அதனைத் தொடர்ந்த சுங்க் முடியாட்சியிலோ ( 960- 1279 கிபி) இவ்வழக்கம் துவங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும் ஷாங்க் முடியாட்சியில் ( 1700- 1027 கிமு) தோன்றிய பலவகையான புராண மற்றும் இதிகாச, கிராமியப் பதிவுகள் இவ்வழக்கத்தினைப் பேசுவதால் அதன் பழமை புரிகிறது. அப்போது நாட்டின் அரசிக்கு இயற்கையாகவே சிறிய பாதங்கள் இருந்ததாகவும் அதற்காக நாட்டின் பெண்களும் பாதங்களைக் கட்டி சிறியதாக்கிக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாக கதைகள் உண்டு. பெண்கள் கால்களை மடக்கிக் கட்டி சிறிதாக்கிக்கொண்டார்கள். அதன்மூலம் அரசி தன்னை அழகின் இலக்கணமாக்கி மகிழ்ந்தாள். பெண்களே மனமுவந்து தன் குறைபாடுகொண்ட கால்களை நினைத்து வருந்திய அரசியின் உணர்வைப் புரிந்துகொண்டு அவ்வாறு செய்ய ஆரம்பித்ததாகவும் பதிவுகள் உண்டு.
அதே காலத்தில் வாழ்ந்த லீ யூ என்ற இளவரசனுக்கு சிறிய பாதங்கள் மற்றும் நுனிக்கால் நடனத்தில் மிகுந்த நாட்டம் இருந்ததால் பாதங்களைக் குட்டையாக்கிக்கொள்ள அவன் தன் அந்தப்புரப்பெண்களிடம் சொன்னான் என்றொரு கதையும் உண்டு. யாவ் நியாங் என்ற அவனின் மனைவியருள் ஒருத்தி அவ்வகைப் பாதங்களைக் கொண்டவள். நுனிக்கால் நடனத்தில் வல்லவள்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தக் கொடிய வழக்கம் உச்சத்தை அடைந்தது. சுங்க் முடியாட்சியைக் கைப்பற்றிய முங்கோல்கள் யுவான் முடியாட்சியை நிறுவினார்கள். அவர்கள் பாதங்களை இறுக்கிக் கட்டும் இவ்வழக்கத்தினை ஆதரித்தனர். பிறகு, இவ்வழக்கம் அரசகுடும்பத்திலிருந்து மிங்க் முடியாட்சியின் போது மேட்டுக்குடியினரிடையே பரவியது. அப்போது தான் இவ்வழக்கம் திருமணத்திற்கும் அந்தஸ்துக்கும் தொடர்பு படுத்தப்பட ஆரம்பித்தது. மேட்டுக்குடிகளில் இருந்த பெண்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றியதால் தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று நினைத்தார்கள் மத்திய கீழ்த்தட்டு மக்கள். தாங்களும் தங்கள் மகள்களுக்கு பாதங்களைக்கட்டி சிறிதாக்கிவிடலாம், அதன்மூலம் மேல்தட்டு சீமான்களுக்கு அவர்களைக் கட்டிவைக்கலாம் என்று நினைத்து தீவிரமாகப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அத்தகைய திருமணங்கள் எளிதில் நடந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்கள் வயல்களில் கடின வேலைக்குத் தான் போகவேண்டி வந்தது. இருந்தாலும் வழக்கம் தொடர்ந்தே வந்திருக்கிறது.
1664ல் ச்சிங்க் முடியாட்சியின் போது மன்னன் காங்ஸி இவ்வழக்கத்திற்கு தடைபோட நினைத்தான். துரதிருஷ்டவசமாக, அவனின் முயற்சிகள் எந்தப் பலனைக் கொடுக்கவில்லை. பெண்கள் பாதக்கட்டுகளை அவிழ்த்துவிடவும் ஆண்கள் (நீண்ட பின்னலை வெட்டி)மொட்டை அடித்துக்கொள்ள ஆணையிடப்பட்டது. தங்களின் நீளமான பின்னல்களை இழக்க ஆண்கள் தயாராய் இல்லை. இந்தத் தருணத்தில் கூட பெற்றோரிடமிருந்து பெற்ற உடலையும் உறுப்புகளையும் எந்தவிதத்திலும் மாற்றியமைக்கக்கூடாது என்ற கன்?ப்யூஷியஸின் போதனையை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தார்களே தவிர அப்போதும் பெண்களுக்காக அவர்கள் யோசிக்கவேயில்லை. அந்தக்காலகட்டத்தில், பாதங்களைக் கட்டும் இவ்வழக்கம் குறைந்தது போலிருந்தது. ஆனால், நான்கே ஆண்டுகளில் மீண்டும் தீவிரமாக நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஷென் தே?பூ ( 1578- 1610 கி.பி) என்றவரின் வரலாற்றுப் பதிவின் படி 1644ல் மன்சுஸ் படைகள் நாட்டைக் கைப்பற்றியபோது மானத்திற்கு பயந்து மன்னன் தற்கொலை செய்துகொண்டான். அப்போது. திடீரென்று ஹான் இனமக்களிடையே நாட்டுப்பற்றையும் ஆண்களுக்கு அடையாளைத்தையும் ஏற்படுத்திடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது கட்டப்பட்ட பாதங்கள் எல்லைகளைக்குறிக்கும் ஒன்றாகிப்போனது. ஹான்ஸ் மற்றும் மன்சுஸ் வட்டாரங்களை அடையாளம் காண அவ்வட்டாரப் பெண்களின் பாதங்கள் தான் உதவின.
போர்த் தந்திரமாகவும் இவ்வழக்கம் அமைந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன. ராணுவ ஆலோசகர் ச்சூ ஜ்யூசீ, பாதங்களை இறுக்கிக் கட்டும் வழக்கத்தை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் மன்சுஸ் இனத்தைக் கவிழ்க்கவும் சீனாவின் பலத்தைப் பெறுக்கிக்கொள்ளவும் முடியும் என்று நினைத்தார். இதற்காக, ஹான்ஸ் வீரர்களைக் கொண்டே மன்சுஸ் வீரர்களிடம் இவ்வழக்கத்தைப் பரப்பப் பரிந்துரைத்தார். இதன் மூலம் அவ்வீரர்களின் கவனம் போரிலிருந்து வேறொன்றில் சிதறி, போர் ஆவேசம் குறைந்து, சீனாவுக்கு அவர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறையலாம் என்று கணக்குப் போட்டார். இருப்பினும், இவ்வழக்கம் மன்சுஸ் இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சீனர்கள் மட்டுமே தொடர்ந்து 1911 புரட்சிவரை பின்பற்றினார்கள்.
முதன்முதலில் 1895ஆம் வருடம் ஷாங்காயிலிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பும் வரை எத்தகைய விழிப்புணர்வும் இல்லாமலே இருந்து வந்தனர் பெண்கள். பெண்ணின் கல்விக்கு இவ்வழக்கம் தடையாக அமைந்து வருவதை குடிமக்களுக்கு உணர்த்தி ஓர் இயக்கம் உருவானது. உறுப்பினர்களுக்கிடையேயும் விழிப்புணர்வு பெற்றிருந்த குடும்பத்தினரிடையேயும் திருமணபந்தங்களை உருவாக்கினார்கள். பாதங்கள் இறுகக் கட்டப்படாத பெண்களுக்கும் திருமணம் சாத்தியமே என்று செயல்முறையாகக் காட்டினார்கள்.
1911ல் சீனக் குடியரசு இவ்வழக்கத்தைச் சட்ட விரோதம் என்று அறிவித்தது. அரசு ஊழியர்கள் வழக்கத்தைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தனர். இருந்தாலும், இந்தப் பழக்கம் உட்புற கிராமங்களில் தொடர்ந்தே வந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் சிறிய பாதங்களுக்கான காலணிகளை உற்பத்தி செய்துவந்த ஹன்பின் என்ற ஊரில் இருந்த கடைசி தொழிற்சாலை இழுத்துமூடப்பட்டது.
கடந்த ஆயிரம் வருடங்களில் 4.5 பில்லியன் சீனப் பெண்கள் இவ்வழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். வழக்கம் உச்சத்தில் இருந்தபோது அதைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவு. மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும்போது தான் ஏராளமான பதிவுகள் இவ்வழக்கத்தைக் குறித்ந்து சீன இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை கடந்த 2-3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பாலியல் சார்ந்த பதிவுகளே.
ஹவாய் தீவுகளுக்குப் புலம்பெயர்ந்த சீனர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டு சென்றார்கள். பிறகு 1898ல் தடைசெய்யப்பட்டபோது கைவிட்டார்கள். இவ்வழக்கம் புலம்பெயர்ந்த மற்ற சீனர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. பாதங்கள் கட்டப்பட்ட பெண்கள் புலம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், புலம்புயர்ந்த மண்ணில் இவ்வழக்கத்தைத் தொடர்ந்ததற்கான பதிவுகள் இல்லை என்றே தெரிகிறது.
இன்று சீனாவில் இவ்வழக்கத்தினைப் பற்றி நன்கறிந்தவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள். எல்லோருமே முதுமையடைந்துவிட்டார்கள். கைவேலைப்பாட்டுடன் அமைந்த மூன்றங்குல பட்டுக் காலணிகளை சீன அரசாங்கம் அருங்காட்சியங்களில் எங்கேயும் வைப்பதில்லை. இக்காலணிகள் இப்போதெல்லாம் சீனர்களிடையே அவமானம், கோபம், எரிச்சல் மற்றும் வெறுப்பு போன்ற வெவ்வேறு விதமான உணர்வுகளைக் கொண்டுவருகின்றன. ந்யூயார்க்கில் 1996ல், 142 ஜோடிக்காலணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டபோதும், கடைக்காரர் அவ்வரிய காலணிகளை 975 டாலருக்கு விற்க முயன்றபோதும் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பின. 1995ல் யாங்க் யூச்சிங் என்ற திரைப்படத்தயாரிப்பாளர் இவ்வழக்கத்தைக்குறித்து ஒரு திரைப்படம் எடுக்க நினைத்தார். அவருக்கு அது சுலபமாக இல்லை. ஏனென்றால், அதைப்பற்றிப் பேச யாரும் முன்வரவில்லை. சீன அரசாங்கம் தன் திரைப் படவேலையைத் தடை செய்துவிடுமோ என்றும் அஞ்சியிருக்கிறார் யாங்க் யூச்சிங். ஆனால், சமீபத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சிக்கு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு நூற்றாண்டில் பெண்கள் அமைப்புகள் பல இம்முறைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீண்ட நேரம் நின்றுகொண்டே செய்யும் வேலையில் இருக்கும் பெண்கள் பாதங்களைக் கட்டியதற்காக வருந்துகிறார்கள். இருப்பினும், தங்கள் மகள்களையாவது இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாதங்களை இறுக்கிக்கட்டும் இம்முறைக்கு எதிராக நடந்த இயக்கங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளன. நிறைய பெண்கள் உடனே பாதக்கட்டுகளை அவிழ்த்து எறிந்துவிட்டு மற்றவர்களையும் அவ்வாறே செய்யத் தூண்டினர். கட்டில்லாமல் நடப்பது மிகவும் வலியைக் கொடுக்கும் என்பதால், கட்டினைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தளர்த்தி இயல்புக்கு வரவேண்டும் என்று இவர்கள் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். வயதில் முதிர்ந்த பெண்களுக்கு வேறு வழியே இல்லை. பாதங்கள் இயல்புக்கு வரவேமுடியாது.
முன்பு சிறியபாதங்கள் இருந்தால் மட்டுமே கல்யாணத்தின் போது பெண் நல்ல விலைபோனாள். ஆனால், இன்று அதில் கிடைக்கும் வருமானத்தை விட பருத்தி மில் போன்ற இடங்களில் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று பெற்றோர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். திருமணம் என்ற பெயரில் தானே விலைபோய் குடும்பத்தின் பொருளாதாரத்தில் கைகொடுத்த பெண், இக்காலத்தில் வேலைசெய்து சம்பாதித்து கைகொடுக்கிறாள். பாதங்கள் தீர்மானித்த திருமணங்களை இப்போதெல்லாம் பணம் தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டது. பெண்ணின் பொருளாதார முன்னேற்றம் ஒருவகையில் இக்கொடிய வழக்கத்தை அழிக்க உதவியுள்ளது. வழக்கம் கிட்டத்தட்ட மறைந்தே போய்விட்டது என்பது தான் ஒரே ஆறுதல்.
(முற்றும்)
ஆகஸ்ட் 2006 - உயிர்மை
http://www.nilacharal.com/tamil/interview/jayanthi_shankar_255.asp
http://www.viruba.com/mediareview.aspx?rid=50&bid=VB0000349
www.thinnai.com/author1257.html
Saturday, July 01, 2006
கல்மரம்
ஆசிரியர் - திலகவதி
வாசிப்பு : ஜெயந்தி சங்கர்
தலைப்புத் தேர்வு கவித்துவமாக இருக்கிறது. கற்களால் வளரும் மரமாக கட்டடத்தைச் சொல்வது அழகு. இரண்டும் நிழல் தரும் என்றாலும் கட்டடத்திற்கு உயிரில்லை. அதைக்கட்டியவர்களுக்கோ அங்கீகாரமில்லை. பெரிய கோவிலை இராஜராஜசோழன் கட்டினான் தாஜ்மஹாலை ஷாஜ்ஜஹான் கட்டினான் என்பதுபோல முதல்போட்டவரைத் தான் கட்டடத்தைக் கட்டியவராகப் பார்க்கிறது சமூகம் என்கிற ஆதங்கம் ஆசிரியருக்கு உண்டு.
அடித்தட்டு மக்களின் ஒரு பகுதியினரான கட்டுமானப்பணியார்களின் கடின வாழ்வு மற்றும் தொழில்முறைச் சிக்கல்களை மிகவும் அக்கறையுடன் அணுகியிருப்பது பாராட்டுக்குரியது. இவர்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு என்று எதுவுமே இல்லை. முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் கதை நெடுகிலும் கண்டிக்கப்படுகிறது. தவிர, வேலையின்மையும், கிடைத்த வேலையில் மனநிறைவில்லாமையும், மேஸ்திரி/கொத்தனார்களின் சீண்டல்கள் மற்றும் உரிமை மறுப்பு போன்ற ஏராளமான அழுத்தங்கள் நிறைந்த வாழ்வைக்கொண்ட இவர்கள் எப்படி சமூகத்திலிருந்து அந்நியமாகிப் போகிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காக ஆசிரியர் களப்பணிமேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய பாத்திரங்கள்---------------------------
ஆதிலட்சுமி, காசி, காவேரி, சுசீலா, கன்னியம்மாள், ஆர். ஆர். எம், ராகினி, அத்தை போன்றோர்.
கதைச்சுருக்கம்-------------------
காசி வேலைகிடைக்காமல், என்றாவது கிடைக்கும் சில்லரைவேலையைச் செய்து சம்பாதிக்கும் ஓரு குப்பத்து இளைஞன். எந்தவேலையும் ஒழுங்காகத் தெரியாதவன். அவனது தாய் ஆதிலட்சுமி மேஸ்திரியாக இருந்து வேலையின் போது விபத்தில் இறந்த தன் கணவனின் கதி பிள்ளைக்கு வரக்கூடாது என்ற கவலையில் கொல்லு வேலைக்குப்போகக்கூடாது என்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். அவளின் ஒரு மகள் கன்னியம்மாள் கர்பவதி. புகுந்தவீட்டில் பிரச்சனை என்றும் கணவனுக்கு வரக்கூடாத பால்வினை நோய் வந்திருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிடுகிறாள். கடைசி மகள் காவேரி பத்தாவது படித்திருக்கும் துடிப்புள்ள பெண். அவள் சுசீலாவோடு நட்புகொள்கிறாள். சுசீலா தன் நல்வாழ்வை விட்டுவிட்டு கட்டடத்தொழிலாளிகளின் நலனுக்காகவே குப்பத்தில் வந்து வாழும் பெண். காசிக்கு மணமுடிக்கிறாள் ஆதிலட்சுமி. வந்துசேரும் மருமகள் ராகினி வசதியாக வாழ்ந்தவள். முதலில் இவர்களின் வீட்டைக்கண்டு முகம் சுழித்துவிட்டு, கொஞ்சநாளிலேயே காசிக்கு தன் சகோதரன் மூலமாக வாட்ச் மேன் வேலை வாங்கித் தருகிறாள். அடுக்ககம் கட்டும் தளத்தில் ஷெட் ஒன்று கட்டிக் கொடுக்கிறார் ஆர். ஆர். எம் என்னும் முதலாளி. அங்கே குடியேறும் காசி, ஓரளவிற்கு கையில் காசுபார்க்கிறான். அங்கேயே ராகினிக்கும் கணக்கர் வேலை கிடைக்கிறது. அந்த முதலாளி கொத்தனார் சித்தாள் மற்றும் பிற வேலையாட்களை மனிதாபிமானமில்லாமல் நடத்தும் விதத்தையெல்லாம் இவர்கள் காணநேர்கிறது. உழைப்புச் சுரண்டலையும் பாதுகாப்பில்லாத எளியமக்களின் வாழ்க்கையையும் காணும் ராகினி மனம் மாறி அவர்களுக்காக சுசீலா அமைக்க நினைக்கும் யூனியன் நிறுவும் பணியில் கைகொடுத்து, கொத்தனார் பயிற்சிக்கும் விண்ணப்பித்துச் சேருகிறாள். தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய சம்பளபாக்கியை யூனியன் மூலம் எப்படி வாங்கலாமென்று தொழிலாளர்களுக்குச் சொல்லி நம்பிக்கையூட்டுகிறாள்.
---------
ஆதிலட்சுமி கதாபாத்திரம் இயல்பும் சிறப்பும் கொண்டதாக அமைந்திருக்கின்றது. அவளின் பாசம், தவிப்பு மற்றும் கவலை யாவும் ரசிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல இட்லிக்கடை வைத்திருக்கும் அத்தை பாத்திரமும் அதற்கு நிகரான சிறப்பினைக் கொண்டுள்ளது. இருவரின் உணர்ச்சிவெளிப்பாடுகள் மற்றும் உளவியல் சார்ந்த சிந்தனைகள் அருமை.
காசி ஒரே ஒரு முறை குடிப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அம்மக்களிடையே குடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சரி, குடிக்காதவன் குடித்தான் என்று கொள்வோம். அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீற முயற்சிப்பதாகவும் அது தொடர்பான சில சிக்கல்களையும் சொல்லியிருந்தால் ஒரு எதார்த்த இளைஞனாக இருந்திருப்பான் காசி.
காசிக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது பெண்பார்த்தல் கட்டம் வருகிறது. யாருக்குமே தெரியாமல் குழாயடியில் தண்ணீர் பிடிக்க வரும் பெண்ணைப்பார்த்துவிட்டு வருவதாக கதையில் வருகிறது. அலங்காரம் செய்து நிற்கவைத்துப் பெண்பார்ப்பதைக் கேவலமாக நினைக்கும் இவ்வெளிய மக்களிடமிருந்து நடுத்தரவர்க்கம் கற்றுக்கொள்ளவேண்டியது இது. இதுபோல சில சின்னச் சின்ன ரசிக்கும் படியான எளியமக்களின் வாழ்க்கைக் கூறுகள் கதை நெடுகிலும் வருகின்றன.
பெண்பாத்திரங்கள் எல்லாமே ஏதோ ஒரு சிறப்பு கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன. ஆதிலட்சுமி அக்கறையான தாயாக, காவேரி துடுக்கான முன்னேறத் துடிக்கும் இளைஞியாக, கன்னியம்மாள் பொறுமைநிறைந்தவளாக, சுசீலா தொழிலாளர் நலனுக்காகவே தன் முனைவர் வாய்ப்பினைக்கூட உதறியவளாக, ராகினி தொழிலாளிர் நலனைப்பற்றி யோசிப்பவளாக வருகிறார்கள்.
கட்டுமானப் பணியாளர்கள் எப்போதும் முதலாளியின் ஏதோ ஒருவகையான உழைப்புச் சுரண்டலையும் அலட்சியத்தையும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு நிறைய சிறியதும் பெரியதுமான நம்பகத்தன்மையுடைய நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. எடுத்துக்கொண்ட கருவுக்கு இது மிக அவசியம். ஆனால், அதே அடித்தட்டு மக்களிடையேயும் அந்த முதலாளிகளின் சுரண்டல் மனப்பான்மை கொண்ட சிலர் இருக்கலாம். அவர்களையும் பாத்திரங்களாக உருவாக்கி உலவவிட்டிருக்கலாம். அதேபோல முதலாளிகளில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய முதலாளிகளையும் காட்டியிருக்கலாம். இப்படிச்செய்யும்போது இயல்புத்தன்மை கூடியிருக்கும். ஆசிரியர் ஒரு காவல்த்துறை அதிகாரி. சட்ட மீறல்களைக் கொண்ட நிகழ்வுகளைச் சொல்லி அதற்கேற்ற வழக்கு தண்டனை என்று அவர் பணிசார்ந்து இன்னும் சிறப்பாக எழுதியிருக்கமுடியும்.
சுசீலாவின் கதாப்பாத்திர அமைப்பு மிகவும் மேலோட்டமாக இருப்பதாக வாசகன் உணர்வான். அவளுக்குப் பின்புலமாக ஒரு கிளைக்கதை அமையாதது ஒரு காரணம். அப்படி அமைந்திருக்கும் பட்சத்தில் முனைவர் பட்ட வாய்ப்பைக்கூட அவள் மறந்து தொழிலாளர்களுக்காகவே யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும், குப்பத்தில் வாழ்வதற்குமான காரணங்கள் சரியாக அமைந்து கதையே கனம் கூடியிருக்கும்.
ராகினியின் பாத்திர அமைப்பில் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் பெரிய வேறுபாடு. முதல் பாதியில் புகுந்த வீட்டின் வறுமையை விமரிசித்தபடியிருக்கும் இவ்விளம்பெண் மறுபாதியில் தொழிலாளர்களுக்காக யோசிக்கிறாள். அவர்கள் சுரண்டப்படுவதற்காக வருந்துகிறாள். சில நிகழ்வுகளைக் காண்கிறாள் என்றாலும் அவளின் மனமாற்றத்திற்கான காரணம் திடமாகச் சொல்லப்படவில்லையோ என்ற நெருடல் வாசகனுக்கு எழாமல் இருக்காது. மூன்று ஸ¥ட் கேஸ்கள் நிறைய எதையோ நிரப்பி ( ப 114 ) ராகினியிடம் ஆர்.ஆர்.எம் கொடுத்து பத்திரமாக மறைத்து வைக்கச்சொல்கிறார். அதில் பணமும் நகையும் நிறைய வைத்திருந்ததாக பிறகு அவரே சொல்கிறார். போலீஸ் சோதனை செய்து பிடித்தால், ராகினி மாட்டிக்கொள்வாள் என்ற நோக்கத்துடன் அவர் செயல் பட்டிருப்பது வாசகனின் ஊகத்திற்கு விடப்படுகிறது. ஆனால், இதுவே ராகினியின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று நிறுவப்படவில்லை. வாசகனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் உதவலாம்.
சென்னைத் தமிழில் உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன. இருந்தாலும், உரையாடல்களால் மட்டுமே நிரம்பிவிடும் சில அத்தியாயங்கள் வாசகனுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய அனுபவத்தினை கொடுக்க தவறிவிடுகிறது. Narration என்றறியப்படும் கதை சொல்லலில் ஆசிரியர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இது நேர்ந்திருக்காது. அதோடு புதினம் முழுமையடையவும் உதவியிருக்கும்.
பெண்களே கொத்தனார் பயிற்சிக்குப் போகிறார்கள். காசி வாட்ச் மேன் வேலையே போதுமென்று நினைத்து விட்டானோ? இத்தனை முற்போக்குச் சிந்தனைகொண்ட பெண்கள் சூழ்ந்திருக்கும்போது கொஞ்சம் கூடவா ஒரு இளைஞனுக்கு வேகம் பிறக்காது? காசி பயிற்சிக்கு போகாதது குறையே. அவன் போயிருந்தால், யூனியனிலும் அதுகொடுக்கும் பாதுக்காப்பிலும் ஆதிலட்சுமிக்கும் வாசகனுக்கும் நம்பிக்கை வந்தாற்போலிருந்திருக்கும். நிச்சயம் கதைக்கு வலுச்சேர்த்திருக்கும்.
பரிசு மற்றும் விருதுகள் வாசகனைப் பலவேளைகளில் குழப்பித்தான் விடுகின்றன. பரவலான வாசிப்புள்ளோர் இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை எளிதில் முன்வைத்துவிடுவார்கள். இந்தக் கதையின் நோக்கத்திற்கும் கருவிற்கும் கொடுக்கப்பட்டுள்ள விருதேயன்றி படைப்புக்கு இல்லை என்பதை ஒரு சாமான்ய வாசகனும் நிச்சயம் படித்துமுடித்ததும் புரிந்துகொள்வான். களப்பணி இருந்துகூட ஏதோ செவிவழிச்செய்திகளை வைத்து எழுதிவிட்டது போன்ற ஒரு நிறைவின்மை தோன்றிவிடுவதைத் தவிர்க்கமுடியவில்லை. பிரச்சனைக்குத் தீர்வு எனும் ஒரே குறிக்கோளை மட்டுமே கவனத்தில் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். பிரமாண்டமான விளம்பரங்கள் எப்படி திரைப்படத்தினைப் பற்றி ஒருவரிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துமோ அதேபோல இந்நூலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விருதும் வாசகனில் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுகிறது. அதுவும் வாசகனுக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
பிழைகள் நிறைய இருப்பதைப்பார்க்கும்போது இது திருத்தப்பட்ட பதிப்பு தானா என்ற கேள்வி எழுகிறது. காட்டாக ( ப. 14) த. ஜெயகாந்தன் என்று இருக்கவேண்டிய இடத்தில் த. ஜெகாந்தன் என்று அச்சாகியிருக்கிறது.
கல்மரம்நாவல்ஆசிரியர் :
திலகவதி
(திருத்தப்பட்ட) இரண்டாம் பதிப்பு 2005
அம்ருதா பதிப்பகம்
எண் 5,
5வது அவென்யூசக்தி நகர்
போரூர்சென்னை - 600116
91-44- 2252 2277
amrudhapathippagam@yahoo.com
---------ஜெயந்தி சங்கர்
Wednesday, May 24, 2006
மதுமிதா கவனிக்க
வலைப்பூ பெயர் : வல்லமை தாராயோ
உர்ல் : http://jeyanthisankar.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: சிங்கப்பூர்
நாடு: சிங்கப்பூர்
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சந்திரமதி கந்தசாமி & ஈழநாதன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 01 டிசம்பர் 04
இது எத்தனையாவது பதிவு: 62
இப்பதிவின் உர்ல்: http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: முக்கியமாக அச்சிதழ்களில் பிரசுரமாகும் என்னுடைய படைப்புகளை இணைய வாசகர்களுக்கு அளிக்கும் நோக்குடன்
சந்தித்த அனுபவங்கள்: வாசகர்களின் எண்ணிக்கை பெருகியது. அதில் பலர் நண்பர்களானார்கள்.
பெற்ற நண்பர்கள்: நிறைய
கற்றவை: பின்னூட்ட எண்ணிக்கையை மட்டும் வைத்து வாசகர்களின்/ வருகையாளர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியாது
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எப்போதும் போல் தான்
இனி செய்ய நினைப்பவை: தற்சமயம் ஒன்றுமில்லை
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
என்னைப் பற்றி
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பூக்கள் மிக வலுவான ஊடகமாகி வருகிறது. அதனைப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு தேவை.
Friday, May 19, 2006
பாலி
பாலியர்களின் மதம் 'ஆகம இந்த பாலி' ஆகும். இந்து மதம் மற்றும் பௌத்தமதம் ஆகியவற்றின் பல்வகைக் கூறுகளைக் கொண்டது. தீவின் 2.5 மில்லியன் மக்கட்தொகையில் தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வகை இந்துக்களாவர். தெய்வங்களை இருவகைப் பிரிவில் வைக்கிறார்கள். முதல் பிரிவில் இந்துக்கடவுள்களான விஷ்ணு போன்ற தெய்வங்களையும் இரண்டாவது பிரிவில் இயற்கையோடு தொடர்புடைய சிறுதெய்வங்களும் வரும். கடவுள்களை மட்டுமின்றி மூதாதையரையும் இவர்கள் வணங்குவர். மலைகளில் வாழும் இவ்விருவரும் தங்கள் வாழ்வில் நல்லவற்றைக் கொண்டுவருவதாயும், கடல்களில் வாழும் தீயசக்திகளான பேய்பிசாசுகள் தீயவற்றைக் கொண்டு வருவதாயும் மிகவும் நம்புகிறார்கள். மலைக் கோயில்களும் கடல்கோயில்களும் ஆங்காங்கே தனித்தனியே இருக்கின்றன.
இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று கருதும் பாலியர்கள் தங்களின் இருப்பின் மேன்மை அருவ உலகில்தான் இருக்கிறது என்று மிகத் திடமாக நம்புகிறார்கள். அவ்வுலகில் உலவும் மூதாதையர்கள் தங்கள் வாழ்வின் முக்கியபகுதி என்றும், அவர்களை மகிழ்வித்தால், பாதுகாப்பான வாழ்வு உறுதி என்றும் வழிவழியாக நம்பிவரும் பாலியர்கள், அந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களின் எல்லாவிதமான செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்கிறார்கள்.
பாலியர்கள் மூன்று விதமான நாட்காட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று வழக்கமாக உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஆங்கில ஆண்டைக் காட்டுவது. மற்ற இரண்டும் 'வுகு' மற்றும் 'சகா' காலண்டர்கள். முக்கிய பெரியகோயில்களின் விழாக்கள் சகா வழக்கப்படி கணிக்கப்படும். சகா ஆண்டு சந்திரஆண்டை ஒத்திருக்கும். ஆண்டுக்காண்டு சிலநாட்கள் கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கும். வுகு வழக்கப்படி, செப்டம்பர் கடைசி முதல் அக்டோபர் தொடக்கம் வரையில் இருக்கும் பௌர்ணமி நாட்களிலும், ஏப்ரல் முதலிருவாரங்களில் வரக்கூடிய பௌர்ணமி நாட்களிலும் எல்லாக்கோயில்களிலும் முக்கியவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.
பாலியர்களிடையே சாதிவேறுபாடுகள் உண்டு. ஒரு கூட்டத்தில் உயர் இருக்கை மற்றும் தாழ்வான இருக்கைகள் அமைப்பதிலிருந்து, ஒருவரது சாதியைப்பார்த்து அதற்குத் தகுந்தாற்போல பேசும் போது குரலை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவது வரை வேற்றுமைகள் விதவிதமாகப் புலப்படும். உயர்சாதியென்றறியப்படுபவர்கள் 'மலையை நோக்கி' என்னும் பொருள்பட 'காஜா' என்றழைக்கப்படுகிறார்கள். கீழ்சாதி என்று நம்பப்படுகிறவர்கள் 'கடலை நோக்கி' என்ற பொருளில் 'கெலோட்' எனப்படுகிறார்கள். பாலியர்கள் இயற்கையையட்டிச் சிந்திப்பதை இவ்வாறு பற்பல இடங்களில் நம்மால் பார்க்கமுடியும். சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பியராட்சி, அரசியல் போன்ற பல்வேறு காரணங்களினால், அதற்கு முன்னர் நிலவிவந்த சாதிமுறையில் பற்பல மாற்றங்கள் வந்தது. பிறகு, மீண்டும் கொஞ்சம் சீரானபோதிலும் குழப்பங்கள் நிலவியபடியே தானிருக்கின்றன. சாதிவேற்றுமைகள் மட்டும் மறைந்துவிடவில்லை என்பதுடன் செல்வம், அந்தஸ்து போன்ற வேறு பலவேறுபாடுகளும் சேர்ந்தே நிலவிவருகின்றன.
இம்மக்களில் ஒருவரைப் பார்த்து, "நீங்கள் யார்?", என்று கேட்டால் உடனே தன் பெயரைச் சொல்லமாட்டார். முதலில் மற்ற பாலியர்களின் அந்தஸ்தோடு தன் அந்தஸ்தை ஒப்பிட்டுச் சொல்லிவிட்டு, பிறகு தனது மூதாதையரின் கதைகளைச் சொல்லிவிட்டுத் தான் தன்பெயரையே சொல்வார்.
அவரவர் வீட்டுமுற்றத்தில் ஒரு கோயில் அமைத்துக்கொள்கிறார்கள். அதன் அளவு அவரவர் வசதிக்கேற்ப இருக்கிறது. உறவினர்கள் குடும்பங்களுக்கு என்று பொதுவாக 'கோவிட்டன்' என்ற ஒரு பொதுக்கோயில் இருக்கும். அவர்களுடைய பொதுவான மூதாதையரை இங்கு வழிபடுவார்கள். இந்தக் கோயிலின் பழைமையைப் பொருத்தது இவர்களின் அந்தஸ்து. எப்படியும் ஒரு குடும்பத்துக்கு ஐந்து முதல் பத்து கோயில்கள் வரை தொடர்பிருக்கும். இது தவிர கிராமத்துக்கோயில் என்று வேறு ஒன்றுரிருக்கும். இப்படி எண்ணிலடங்காக் கோயில்கள் சிறிதும் பெரிதுமாக பாலியில் காணலாம்.
மலையிலிருந்து கிளம்பிய நதிநீராதது, கடலையடைந்து, கடல் நீர் ஆவியாகிப் பின் மழையாக நிலத்தில் விழுந்து, நிலத்தை வளமாக்குவதைப்போல மனிதவாழ்வும் கடலுக்குக்கொண்டுபோய் அந்திமக்கிரியைகள் செய்யப்பட்டு விடப்பட்டதும், ஆத்மா மலைகளிலேறி மூதாதையரை அடைந்து, பிறகு மீண்டும் பூமியில் வந்து மனிதனாகப் பிறக்கிறது என்பது நம்பிக்கை. இப்படிப்பல முறை பிறந்தும் இறந்தும், இறுதியில் முக்தியடையந்து நிரந்தரமாக மலைகளில் தங்கமுடியும்.
மாந்திரீகங்களிலும் அமானுஷ்யசக்திகளிலும் மிகுந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள் பாலியர்கள். ஆவிகளோடு பேசுவதும், பேயோட்டும் நிகழ்வுகளும், அவை தொடர்பான பல்வேறு சடங்குகளும் அடிக்கடி ஆங்காங்கே நடைபெறுவதைக்காணமுடியும். தெய்வமோ மூதாதையரோ ஒரு மனிதருள் 'இறங்கி'யிருப்பதாக நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகக் கருதப்படும். ஆனால், தீயசக்திகள் 'இறங்கி'யிருப்பின் கவலைக்குரியதாகக் கொள்ளப்படும்.
'பாலியன் தக்சு' என்றழைக்கப்படும் நபர் அருவு உலகிலிருக்கும் தெய்வங்கள், மூதாதையர் மற்றும் பேய்களோடு தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். இருவேறு உலகங்களிடையே ஒரு தொடர்புச் சாதனமாக இருந்து செயல்படும் இவர் பலசடங்கு சம்பிரதாயங்களைச் செய்து செய்யவேண்டியவற்றை மக்களுக்குப் பரிந்துரைப்பார். சாதி, வயது, பால் மற்றும் அந்தஸ்துக்கு அப்பாற்பட்ட பாலியன் தக்சுக்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இவர்களுக்குப் பயிற்சி என்று ஒன்றுமில்லை. 'அழைப்பு' வரும்போது ஒருவர் பாலியன் தக்சு ஆகிறார். சடங்குகளைச் செய்யவும் ஆரம்பிக்கிறார். 'அழைப்பு' திடீரென்று வராது என்று நம்புகிறார்கள். ஒருவரது வாழ்வில் அவ்வப்போது 'அறிகுறிகள்' ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும்.
அரியபொருட்கள் கோயிலிலோ, வீட்டிலோ அவருக்குக் கிடைக்கலாம். அது அரியவகைக் காசாகவோ, மோதிரம் போன்றவையாகவோ, இல்லை ஒரு விநோத வகைக் கல்லாகவோகூட இருக்கலாம். இப்பொருட்கள் மிகவும் கவனமாகப்பாதுகாக்கப்படும். சிலவேளைகளில் 'அறிகுறி' அவருக்கோ அவரது நெருங்கிய உறவினருக்கோ வரும் உடல்மன உபாதையாவும் அமையும். பிறகு, ஒரு கனவாகவோ, இல்லை உள்ளுணர்வாகவோ 'அழைப்பு' வரும் போது அவருக்கு அந்தத் தகுதி வரும். அறிகுறிகளை அலட்சியப்படுத்துவோருக்குச் சோதனைகள் மன நோயாகவும் உடல் உபாதையாகவும் பலவிதமாய் அமையும். குடும்பத்தினருக்கும் அவ்விதமே நிகழக்கூடும். வேறு ஒரு பாலியன் தக்சு எடுத்துரைத்து, இவர் பாலியன் தக்சு ஆகும்போது தீங்குகள் மெல்லமெல்ல விலகுவதை உணர்வார்கள். பாலியன் தக்சுக்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பர்.
கோயில்களில் பக்தர்களில் சிலருக்கு சாமிவருவதுண்டு. தெய்வம் தன் இருப்பை மக்களுக்கு உணர்த்த பக்தர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருள் 'இறங்கி'யிருப்பதாக நம்பப்படுகிறது. பக்தனின் இந்நிலையை 'திடன்' என்றழைக்கிறார்கள். கூடியிருக்கும் மக்கள் இவரைப்பார்த்து அச்சம்கொள்வதில்லை. மாறாக அவரை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஊதுபத்திகள் கொளுத்தி வணங்கி புனிதநீர்பருகக் கொடுப்பர். கோயில் பூசாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சமயச்செயல்பாடுகள் குறித்து கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டுக்கொள்வர். சிலசமயங்களில் வேண்டுமென்றே ஒரு சிறுவனுக்கோ பூசாரிக்கோ ஊதுபத்தி ஏற்றிவைத்து, மந்திரங்கள் ஓதி வலுவில் சாமிவர வைப்பதுமுண்டு. மூங்கில்களால் செய்யப்பட்ட குதிரைமேல் ஏறி, குதித்துக் குதித்து ஆடிக்கொண்டு வெறும்காலோடு சாமிவந்தவர் தீமிதிப்பார். அவருக்குத் துளிகூட தீக்காயமோ வேறு காயமோ படுவதில்லை. இவ்வகை நடனம் கிராமத்தில் மோசமான விளைச்சல், கொடியநோய் போன்ற தீங்குகள் நேர்ந்தால் நடத்தப்படும். கடவுள்களை மகிழ்வித்து கிராமத்தில் நல்லவை நடக்க அருள் போலிக்கச் செய்வதே நோக்கம்.
தீவிலோ, கிராமத்திலோ இல்லை குடும்பத்திலோ பொதுவாக வெகுநாட்களுக்கு தீர்வில்லாமல் இழுத்தடிக்கும் பிரச்சனைகள் மற்றும் ஓயாத குடும்பப்பூசல்கள், சிறுபிள்ளைகள் மரணம் போன்ற இருப்பின் பாலியன் தக்சு தெய்வங்களோடு தொடர்புகொண்டு இறுதியான ஒரு தீர்வைச் சொல்வார். சடங்கு சம்பிரதாயங்களையோ மதத்தையோ அவமதிக்கும் ஒருவரை தீயசக்திகளின் பிடியிலிருந்து கடவுள்கள் காப்பாற்றமாட்டார்கள். பெரும்தீங்கு ஏற்பட்ட ஒருவர் நேரம் தாழ்த்தாது செயல்பட்டு கடவுள்களைத் திருப்திப் படுத்த வேண்டும். எவ்வகையில் என்று அறிய உதவுவார் பாலியன் தக்சு.
குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் பாலியன் தக்சு அழைக்கப்படுவார், சம்பிராதாயசடங்குகள் நடத்தவும், மூதாதையரின் விருப்பங்களை அறியவும். அக்குடும்பத்தினரின் மூதாதையரை சடங்குகள் மூலம் 'தொடர்பு' கொண்டு அவரது விருப்பத்தை அறிந்து சொல்லுவார். அதன்படி குடும்பத்தினர் சடங்குகளை நடத்துவர்.
இறப்பின் போதும் பாலியன் தக்சுவுக்கு வேலை அதிகம். இறந்தவரின் இறுதிச்சடங்கு/யாத்திரை எவ்வாறு அமையவேண்டும் என்பதை இறந்தவரையே 'தொடர்பு' கொண்டு குடும்பத்தினருக்குச் சொல்வதுடன், தெய்வங்களுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைகள் ஏதும் செலுத்தப்படாமலிருந்தால், அவற்றையும் அறிந்து சொல்வார். குடும்பத்தினரோ, இறந்தவரின் நெருங்கிய உறவினரோ அவற்றை நிறைவேற்றுவார். இவ்வாறு செய்வதால், இறந்தவர் மறுபிறப்பெடுக்கும்போது, கடனாளியாகப் பிறக்க வேண்டியிருக்காது என்பது நம்பிக்கை. பாலியன் தக்சுவைச் சந்திக்க கூட்டமாக உறவினர்களோடு போகலாம். குறைந்தது ஒருவராவது உடன் போகவேண்டும். இறந்தவரின் கணவன்/மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் போவார்கள். குழந்தைப் பிறந்திருக்குமானால், பெற்றோரும் தாத்தாபாட்டிகளும் அவசியம் போவார்கள்.
பாலியன் தக்சுக்கள் அவரவர் திறன்களைப்பொருத்து பிரபலமாகலாம். தூரத்திலிருந்தெல்லாம் கூட ஒருவரைக் காணவருவார்கள். சிலர் நோய்களுக்குத் தீவு 'கேட்டு'ச் சொல்வர். வேறு சிலரோ எல்லாவிதமான சிறுபிரச்சனைகளையும் 'கேட்டு'த் தீர்த்துவைப்பர். வருபவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து, இலக்கங்கள் வழங்கப்படும். வரிசையில் அறைக்குள் சென்று பாலியன் தக்சுவைச் சந்திப்பார்கள் மக்கள். அறை சிறியதாக சடங்குகளுக்குத் தேவையானவற்றைத் தன்னுள் கொண்டிருக்கும். 'கமர் சுகி' என்றறியப்படும் அப்புனித அறையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அதன் மீது தெய்வச்சிலைகள், ஜாடிகளில் புனிதநீர், வெள்ளைத் துணி, மஞ்சள் துணி போன்றவை வைக்கப்பட்டிருக்கும். அத்துடன் பாலியன் தக்சு அறிகுறிகளாகக் கண்டெடுத்த கல், மோதிரம் போன்ற பொருட்களும் இடம் பெறும். அது ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம். இவை 'பராங் சுகி' என்றழைக்கப்படும். புனிதமான இப்பொருள்களைக் கழுவிய நீரை நோயாளிகளுக்கும் விஷக்கடிபட்டவர்களுக்கும் உட்கொள்ளக்கொடுக்கிறார் பாலியன் தக்சு. நிச்சயம் குணமடைவார்கள் என்றும் நம்புகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் தேங்காய், முட்டை, அரிசி, பூக்கள், பிஸ்கட்டுகள், பழம் ஆகியவற்றை வைத்துப்படைத்து வணங்கியபின் வெள்ளையுடையுடுத்திய பாலியன் தக்சு, புனிதநீரை அவர்கள் மீது தெளிப்பார். பிறகு, சடங்குப்பூர்வமாக தெய்வங்களையும் மூதாதையர்களையும் கண்களை மூடிக்கொண்டு அழைப்பார். அப்போது அழைக்கப்பட்ட தெய்வமானது பாலியன் தக்சுவின் உடலில் 'இறங்கி', பின் பேச ஆரம்பிக்கும். பலவிதமான குறுக்குக் கேள்விகள் கேட்டு, கண்டிக்கவும் செய்து, பின்னர் தீர்வுகள் வழங்கும். சிலவேளைகளில் மூதாதையர்கள் 'பேசு'வர். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு ஏற்ப தீர்வுகள் சொல்வதுண்டு. மூதாதையரின் ஆவி தன் நகைச்சுவையான பேசின் மூலம் குடும்பத்தினரையும் மற்றவரையும் சிரிக்கவும் வைக்கும். அறைக்குள் நடப்பது எதுவும் ரகசியமாக நடப்பதில்லை. அந்நியர்களாக இருக்கக்கூடிய மற்றவர்களும் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பார்கள். அவ்வகையில், மக்கள் பரவலாய் பலவிதப் பாடங்களைக் கற்கலாம் என்றே நம்பப்படுகிறது.
தெய்வமோ மூதாதையரோ பாலியன் தக்சுவின் உடலைவிட்டுச் சென்றதும், பாலியன் தக்சு தன்னிலை பெறுவார். உடனே, அவர் வாடிக்கையாளரிடம், தங்களுக்கு வேண்டிய விடை/தீர்வு கிடைத்ததா என்று கேட்டுக்கொள்வார். புனிதநீர் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்தவரைக் கூப்பிட்டு மீண்டும் சடங்குகளைத் தொடங்குவார். நவீன யுகத்தில், மக்கள் பாலியன் தக்சு வழியாக மூதாதையர் 'பேசும் பேச்சு'க்களைப் பதிவுசெய்துகொண்டு, பலமுறை கேட்கவென்று வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
உள்ளூர் பாணி உணவுவகைகள் மற்றும் மற்ற கலாசாரத்தின் தாக்கம் கொண்ட சில மாற்றங்களுடனான உணவுகள் ஏராளம். எத்தனை வகை உணவு சாப்பிட்டாலும் கொஞ்சமாவது சோறு சாப்பிடவேண்டும் என்பது நியதி. வகைவகையாக அரிசியைச் சமைக்கிறார்கள். இவர்கள் அரிசிச்சோற்றுக் கொடுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். இதற்கும் சமயத்தொடர்பையே நாம் பார்க்கலாம். எண்ணிலடங்காத பெண்தெய்வங்கள் கொண்ட அவர்களது கலாசாரத்தில் 'தேவி ஸ்ரீ' என்ற அரிசிக்குரிய தெய்வமே அவற்றுள் முதன்மையானது. இத்தெய்வத்திற்குத்தான் அறுவடை சமயத்திலும் வழிபாடுகள் செய்கிறார்கள்.
இது தவிர பழவகைகள் இவர்களது உணவில் மிகமுக்கிய இடத்தைப்பிடிக்கின்றன. வாழைப்பழ வகைகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் விளைகின்றன இத்தீவில். இளநீர், பப்பாளி, பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு, தேங்காய்ப்பால் போன்றயவையும். அரிசியை ஆவியில் அவித்து, பின்னர் புளிக்கவைத்துச் செய்யப்படும் பானம் போன்ற பலவகை பானங்கள் இங்கு மிகவும் பிரபலம்.
பலவகைப்பண்டிகைகள் கொண்டாடப்பட்டபோதிலும் மிக முக்கியமானது புதுவருடப்பிறப்பு. 'நையிபி' என்றழைக்கப்படும் இந்நாளில் தீவே அமைதியில் ஆழ்ந்திருக்கும். அன்று பயணம் செல்வது, நெருப்பூட்டுவது, பணிக்குச் செல்வது போன்றவை தவிர்க்கப்படும். வீட்டைவிட்டு யாரும் வெளியில் செல்லமாட்டார்கள். அதற்கு முதல் நாள் அதற்கு நேர்மாறாக இரைச்சலாய் இருக்கும். கொண்டாட்டமும் குதூகலமுமாக இருக்கும் இந்நாளே தீவின் ஆக அதிக இரைச்சல் மிகுந்த நாள் என்றறியப்படுகிறது. ஆங்காங்கே தீவெங்கும் உலாவுவதாக நம்பப்படும் பூதாதிகளுக்கு சாலை கூடுமிடங்களிலெல்லாம் இறைச்சிவகைகள், மதுவகைகள் என்று படையல்களாகப் அடுக்கப்பட்டிருக்கும். பின்மாலையில் இருள் கவியும் நேரம் எல்லோருமே வெளியில் வீதிகளில் வந்து பெரிய வாத்தியக்கருவிகளைப் பேரதிவுகளுடன் இசைத்து, தீப்பந்தங்கள் கொளுத்தி தீயசக்திகளை விரட்டுவர். அடுத்த நாளான புத்தாண்டன்று விரட்டப்பட்ட தீயசக்திகள் மீண்டும் வராமலிருக்கத்தான் அமைதி காக்கிறார்கள். அவை வந்தாலும், பாலியில் மனிதநடமாட்டமே இல்லையென்று ஏமார்ந்து போய் ஓடிவிடும்.
படையலுக்கு ஏற்புடையவற்றை அலங்காரமாக அடுக்கிவைப்பது பெண்களின் பணி. சிறுமிகள் சிறுவயது முதலே பெரிய பெண்களிடமிருந்து இதைக் கலை நயத்தோடு செய்யக் கற்கிறார்கள். 'பன்தென்' என்றழைக்கப்படும் இக்கலையை பெண்கள் மிகுந்த ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கற்கிறார்கள். பனையோலைகளைக் கோண்டு கூடைபோன்ற தட்டுகளைச் செய்கிறார்கள். படையலுக்கு மிகவும் முக்கியமானது அரிசி மாவால் செய்த பிஸ்கட்டுகள். இவை மரம், செடி, கொடி, விலங்கு, மனிதன் போன்ற பல்வேறு வடிவிலும் செய்யப்படும். அவற்றுடன், பூக்கள், பழங்கள், அரிசி, கருப்பு, முட்டை, தேங்காய் மற்றும் இறைச்சி ஆகியவற்றையும் சேர்த்து அழகாக அடுக்குவார்கள். ஒவ்வொரு அடுக்கின் மேலும் மூன்று வெற்றிலைகள் அடுக்கபடும். இவை பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கானவை. இதுபோல இக்கலையில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிளக்கம் இருக்கிறது.
'கலுங்கன்' மற்றொரு முக்கியப் பண்டிகை பாலியில். பத்துநாட்களுக்குக் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் போது தெய்வங்களும் முதாதையர்களும் பூமிக்கு வருகிறார்கள். பாலியர்கள் பலமணிநேரம் செலவிட்டு வீதியோரங்கள், வீடுகள், கோயில்கள் என்று ஆங்காங்கே விதவிதமான நுணுக்கங்களுடன் கூடிய அழகிய அலங்காரங்களை ஆர்வத்துடன் அமைக்கிறார்கள். இக்காலத்தில் தான் தீவெங்கும் இருக்கும் இந்துக்கோயில்களில் பலவகையான பெரியளவுக் கொண்டாட்டங்கள் நடைபெறும். இவ்விழாவும் புத்தாண்டைப்போல மார்ச் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. எல்லா மாதங்களிலும் பண்டிகைகளும் விழாக்களும் நடந்தபடியே தான் இருக்கும். அதில் அதிகமானவை இந்துக்கோயில்களில் நடக்கும் சமயவிழாக்கள். சிறுபான்மையிரால் கொண்டாடப்படும் மொஹ்ரம், ரம்ஸான், ஈஸ்டர்,ஆங்கில வருடப்புத்தாண்டு மற்றும் கிருஸ்துமஸ் போன்ற விழாக்களும் உண்டு. இதுதவிர விதவிதமான வடிவங்களோடு, கண்கவர் வண்ணங்களில் பெரியபெரிய பட்டங்கள் பறக்க விடும் விழா போன்ற பொதுவிழாக்களும் கணக்கேயில்லாமல் கொண்டாடப்படும்.
கோயில் திருவிழாக்களில் 'பாரோங்க்' என்றழைக்கப்படும் நடனநாடகம் நடத்தப்படும். இதில் பலவகையுண்டு. 'பாரோங்' என்பது புராணவிலங்கு ஒன்றினைக்குறிக்கும். இது 'ரங்டா' எனப்படும் சூன்யக்காரியை அழித்து தீவைக் காப்பதால் பாலியர்களுக்கும் பாரோங்கை மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் இரு ஆண்கள் ஆடுகிறார்கள். முகமூடிகளையணிந்து இந்நடனத்தை ஆட பிராமணர்களுக்கே உரிமையுண்டு. சண்டையிடுவதைப்போன்ற பாவனையோடு, நடனம் உச்சத்தையடையும்போது நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கமுடியும் என்பதை உணர்த்துவிதமாக இருபுறமும் வெற்றி தோல்வியின்றியே முடியும். முகமூடிகள் கோயிலிலேயே வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதற்கும் சடங்குகள் செய்யப்படுகின்றது. இது தவிர பெண்களுக்கே உரிய நளின அசைவுகளுடனான பாரம்பரிய வகை நடனங்களும் உண்டு.
விதவிதமான மரத்தாலான காற்று வாத்தியங்கள், தந்தி மற்றும் தாள வாத்தியங்கள் கொண்ட பாலியர்களின் இசை குதூகலம் நிறைந்தது. இசையும் பெரும்பாலும் மதநம்பிக்கைகளோடு தொடர்புடையதாகவே இருந்துவருகிறது. இசைக்குழுக்கள் 'கமெலன்' என்றழைக்கப்படுகின்றன. நடனம், நடன நாடகம், இசை போன்று ஓவியமும் பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுவந்துள்ளது. மதம் சார்ந்த புராணங்களைச் சித்தரிக்கும் பாரம்பரிய ஓவியங்களோடு நவீன ஓவியங்களும் இவர்களது கலாசாரத்தில் தீட்டப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் கல்லில் சிற்பக்கலை, தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களில் நுணுக்கங்கள் நிறைந்த கலைப் பொருட்கள் ஆகியவையும் பாலியின் சிறப்புக்கள். ஜாவாவிலிருந்து பெறப்பட்ட 'பதிக்' எனப்படும் துணிஓவியம் உள்ளூர் ரசனைக்கேற்ப சின்னஞ்சிறு மாறுதல்களுடன் பொலிகிறது.
இறப்பை அறிவிக்க கோயிலின் உச்சியிலிருக்கும் மணி அடிக்கப்படுகிறது. இறப்பு இன்னொரு உலகிற்கான பயணம் என்று அவர்கள் நம்புவதால், அழுகை என்ற பேச்சுக்கே இடமில்லை. காகிதம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட கோயில் போன்ற பல்லக்கிலோ அல்லது எருமை வடிவம் கொண்ட பல்லக்கிலோ உறங்குபவரைப் போல இறந்தவரைப்படுக்க வைத்து இறுதி ஊர்வலத்தைத் துவங்குகிறார்கள். மறுபிறவி எடுக்கக் கூடிய ஆன்மாவிற்கு சில சடங்குகள் செய்து சிதை எரியூட்டப்படுகிறது.
தனித்துவம் வாய்ந்த கலாசாரத்தைக் கொண்டிருக்கும் பாலியர்கள் வாழ்க்கையில் மிகவும் திருப்தியடைந்தவர்கள் என்றால் அது சற்றும் மிகையில்லை. ஒரு பாலியரிடம் போய்,"சொர்க்கம் எப்படியிருக்கும்", என்று கேட்டோமானால், சற்றும் தயங்காது,"ஒரு விதமான கவலையும் இல்லாமல் பாலியைப்போல இருக்கும்", என்பார். அவர்கள் பாலியில் பிறந்து, பாலியில் இறந்து பின்னர் பாலியிலேயே மறுபிறவி எடுக்கத்தான் விரும்புகிறார்கள். இருப்பினும், பாலியர்கள் தவிர்க்கமுடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்தான் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
--------- ஜெயந்தி சங்கர்
(முற்றும்)
நன்றி நிலாச்சாரல்
Saturday, March 18, 2006
நாலு விளையாட்டு
மதுமிதா இழுத்ததால வந்தேன். அவருக்கு நன்றி. ஏன்னா, கொஞ்சம் என்னை சுய அலசல் செய்ய வச்சிருக்கார். எனக்குப் பிடிச்சதுன்னு யோசிச்சா அது பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய பட்டியலா போயிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கு. நாலுநாலாதான் போடணும்னு சொன்னதால நாலு நாலா போடறேன். உண்மைல எனக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தது 10-40 போடறமாதிரி வருது.
நான் கண்டு பிரமிக்கும் வலை நண்பர்கள்
1) மதி (for her leadership )
2) பாஸ்டன் பாலாஜி (for his energy)
3) இராம.கி (for his Tamil knowledge)
4) பத்மா அரவிந்தன் (for her acheivements & proactive thoughts)
பிடித்த உணவுவகைகள்
1) 'நான்' வகைகள் + வட இந்திய இணை (side dishes) பதார்த்தங்கள்
2) பிட்ஸா
3) வெந்தயக்குழம்பு4) அவரைக்காய் பொரிச்சகூட்டு
பிடித்த (இந்தியாவின்) ஊர்கள்/இடங்கள்
1) சாலகுடி - கேரளா
2) ஸ்ருங்கேரி - கர்நாடகா
3) மீனாட்சி அம்மன் கோவில்
4) ரிஷிகேஷ்/ஹரித்வார்
பார்க்க விரும்பும் நாடுகள்/ஊர்கள்
1) ஸ்காட்லந்து2) ஜப்பான்3) கஷ்மீர்4) சீனா
பிடித்த பிரபலங்கள்
1) அதிபர் திரு. கலாம்2) அன்னை தெரெஸா3) சானியா மிர்ஸா4) விஸ்வநாதன் ஆனந்த்
பிடித்த வீட்டு வேலைகள்
1) சமையல் (ரசிச்சு சாப்ட ஆள் இருந்தா சமைக்கப் பிடிக்கும்)
2) வீட்டை சுத்தம் செய்தல் (ஆனா,. வீட்ல யாரும் இருக்கக்கூடாது பாட்டு கேட்டுகிட்டே,.. மணிக்கணக்கா செய்வேன்)
3) ரீஸைக்ளிங்க்குக்காக (மறுபயனீட்டுக்காக) ப்ளாஸ்டிக்/பாட்டில்/பேப்பர்/துணி எல்லாத்தையும் தேடி எடுத்து ஒரு பையில போட்டு மாசத்துக்கு இரு முறை சேகரிக்க வரவங்ககிட்ட கொடுக்கவென்று எடுத்து வைப்பேன்.
4) புத்தக அலமாரியைக் குடைந்து, பிரித்து அடுக்குதல்
பிடிக்காதது
1) தேவையில்லாத/ வேண்டாத பொருட்களைச் சேர்த்தல் (எங்க வீட்ல மூணு பேரும் சேர்ப்பாங்க,.. நான் அப்பப்ப கழிப்பேன்)
2) பந்தாவிடுதல்/அலட்டுதல்/தற்பெருமை
3) நேரத்தை வீணடித்தல்
4) exploiting my kindness
பிடித்தது
1) ஆழ்ந்த நட்பு2) unconditional Love/respect3) பெண்களை (வார்த்தைகளால் மட்டுமில்லாமல்) உண்மையிலேயே மதிக்கத் தெரிந்த ஆண்கள்4) தன்னம்பிக்கையுள்ள பெண்கள் '
பிடித்த நடிகர்கள்
1) நாசர்2) கமல்3) தலைவாசல் விஜய்4) வினீத்
பிடித்த நடிகைகள்
பிடித்த நடனமணிகள்
1) மாளவிகா சருக்கை2) சித்ரா விஸ்வேஸ்வரன்3) பத்மா சுப்ரமணியம்5) ஸ்ரீநிதி சிதம்பரம்
மனசுக்கு பிடிச்சு செய்யற வேலைகள்
1) உடற்பயிற்சி/வேக நடை2) குருட்டு யோசனை : )3) எழுதறது4) பிழைதிருத்தம் செய்யறது
பேராசைகள்
1) மெகா சீரியல்கள் மற்றும் குப்பை (குத்தாட்ட) சினிமாக்கள் அடியோடு ஒழியவேண்டும்.
2) உலகில் எங்கும் எதிலும் அமைதி நிலவவேண்டும்
3) பசி பிணி இல்லாத உலகம் உருவாகவேண்டும்.
4) கணினி/தொலைகாட்சி இல்லாத உலகில் ஒரே நாள் வாழவேண்டும். அதாவது, ஒருவரும் பயன்படுத்தக்கூடாது.
பிடித்த பொழுதுபோக்கு
1) இணையத்தில் மேய்வது (நேரம் தான் கிடைக்காது)
2) தோழிகளுடன் அரட்டை (வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவதைவிட அதிகம் கேட்பேன்)
3) இசை கேட்பது
4) புத்தகம் படிப்பது
பிடித்த நூல்கள்
1) காடு2) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்3) புலிநகக் கொன்றை4) மிதவை
பிடித்த கவிஞர்கள்
1) பாரதி2) க்ருஷாங்கினி3) ஞானக்கூத்தன்4) ஜெயபாஸ்கரன்
பிடித்த எழுத்தாளர்கள்
1) நாஞ்சில் நாடன்2) ஜெயமோகன்3) தி.ஜா4) சு.ரா
பிடித்த பிறமொழி படைப்பாளர்கள்
1) செக்காவ்2) வைக்கம் மொஹமது பஷீர்3) தாகூர்4) தகழி
பிடித்த தமிழ் படங்கள்
1) சலங்கை ஒலி2) அன்பே சிவம்3) ஆடோகிரா·ப்4) சதி லீலாவதி
பிடித்த இந்திப்படங்கள்
1) காமோஷி2) ஆராதனா3) ஆனந்த்4) தேவ்தாஸ்
பிடித்த இந்திப்பாடல்கள்
1) ஏ மேரா ப்ரேம் பத்ரு படுகர் து நராஸ¤ ,.
மொஹமத் ர·பி
2) ஜெஷாயர் தோ நஹி மகர் ஏ ஹஸீன்,..
கிஷோர் குமார்
3) தேரே மேரே பீச்மே, கைசா ஹை ஏ பந்தன்
SPB
4) மேரே சாம்னேவாலி கிடுகீ மே எக் சாந்துக்கா டுக்டா ரெஹத்தா ஹே
மொஹமத் ர·பி
இசைக்காக பிடித்த திரையிசைப் பாடல்கள்
பி. சுசீலா,பாலமுரளிகிருஷ்ணா
2) அதிசய ராகம் ஆனந்தராகம்
ஜேசுதாஸ்
3) ஸ்நேகிதனே ஸ்நேகிதனே,. ரகசிய ஸ்நேகிதனே
சாதனா சர்கம் & ஸ்ரீனிவாஸ்
4) தூங்காத விழிகள் ரெண்டு,..
ஜேசுதாஸ் & சித்ரா ( ? )
கருத்துக்காக/ஓசை நயத்திற்காக பிடித்த பாடல்கள்
1) ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே2) சின்னப்பையலே சின்னப்பயலே சேதிகேளடா3) நலம் நலமறிய ஆவல்4) சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்,..
பிடித்த (சாஸ்த்ரீய சங்கீதம்) பாடல்கள்
1) கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன் (பாம்பே ஜெயஸ்ரீ)2) போ சம்போ (மஹாராஜபுரம் சந்தானம்)3) பாவயாமி ரகுராமம் (எம். எஸ்)4) திக்குத் தெரியாத காட்டில் (ஜி. என். பாலசுரமணியம்)
பிடித்த ராகங்கள்
1) ரேவதி2) ரஞ்சனி3) அம்ருதவஷிணி4) சஹானா
பிடித்த நான்கு இசைக்கலைஞர்கள்
1) ராஜேஷ் வைத்யா (வீணை)2) எம். எஸ். கோபாலகிருஷ்ணன் (வையலின்)3) உமையாள்புரம் சிவராமன் (ம்ருதங்கம்)4) என். ரமணி (புல்லாங்குழல்)
பிடித்த நான்கு கர்நாடக இசைப் பாடகர்கள்
1) ஓ. எஸ் அருண்2) அருணா சாயிராம்3) டீ. கே. ஜெயராமன் 4) எம். எஸ். சுப்புலஷ்மி
பிடித்த திரை இசைப் பாடகர்கள்
1) ஹரிஹரன்2) ஜேசுதாஸ்3) சாதனா சர்கம்4) ஹரிஷ் ராகவேந்தர்
நான் கூப்பிட நினைக்கும் நால்வர்
1) நிர்மலா (ஒலிக்கும் கணங்கள்)2) இராம.கி (வளவு) (இப்பல்லாம் நேரம் கிடைச்சா கிடுகிடுன்னு 'வளவு'க்கு மட்டும் ஒரு நடை போயி படிக்கறேன். பிரமிக்கறேன். ஏதாவது எனக்குள்ளும் ஏறிடாதான்னு ஒரு சின்ன நப்பாசைதான்.)) மாதங்கி (பெரிதினும் பெரிது கேள்)4) எம். கே. குமார் ( நெஞ்சின் அலைகள்)
Tuesday, February 07, 2006
சந்திர ஆண்டு
4000 வருடப்பழமை கொண்டது சீன நாகரீகம். ஆகப் பழங்குடியான 'பீங்க் மனிதன்', இன்றைய பேய்ஞ்சின்கின் அருகில் சௌகௌட் என்ற இடத்தில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததற்கான குறிப்புகள் உண்டு. 10000 வருடத்திற்கு முந்தைய காலத்தின் குறிப்பேடுகள் நாடு முழுவதும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன.
இவர்களின் பஞ்சாங்கம் சந்திரனை அடிப்படையாகக் கொண்டபடியால், ஒவ்வொரு சந்திரமாதமும் அமாவாசையன்று தான் துவங்கும். ஆங்கில ஆண்டில் 'லீப்' ஆண்டில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒரு நாளைச் சேர்த்துக்கொள்வதைப் போல, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமாதம் ஒன்றைக் கூடுதலாகச் சேர்த்து அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆங்கில வருடமும் சந்திரவருடமும் சமத்துவத்துக்கு வரமுடிகிறது. வழக்கத்தில் இருக்கும் ஆங்கில ஆண்டைவிட சந்திர ஆண்டு 11 நாட்கள் குறைவானது. ஏனென்றால், சந்திர மாதம் சுமார் 29.5 நாட்களை மட்டுமே கொண்டது. மொத்தம் வருடத்திற்கு 354 நாட்கள். ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைவிட சுமார் 11 நாட்கள் (சில சமயம் 9 அல்லது பத்து) முன்னதாகவே சீனப் புத்தாண்டு பிறக்கிறது. இதை ஈடுகட்டத்தான் 'லீப்' மாதத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தகைய லீப் வருடங்களில் புத்தாண்டு கிட்டத்தட்ட 19 நாட்கள் தாமதமாகப் பிறக்கும்.
கிராமமக்கள் கிழவனின் பரிந்துரைகளின்படியே நடந்தனர். நியான் வரவேயில்லை. அதற்காகத் தான் புத்தாண்டுக்கு முன் இரண்டு வாரமும் பின்னர் இரண்டு வாரமும் கோலாகலம் நீடிக்கிறது இன்றும். புத்தாண்டை 'குவோ நியான்' என்கிறார்கள், நியானைக் கடந்து என்று பொருள்பட. சிவப்பு அலங்காரங்களுக்கும், வெடியோசைக்கும் குறைவேயிருக்காது. சிங்க நடனம் ஆடும் குழுக்களை ஆங்காங்கே பதினைந்து நாட்களுக்குப் பார்க்கலாம். சிங்கத்தின் வாயிற்குள் இருப்பவன் தலையை திறந்து மூடியும், ஆட்டியபடியும் செல்வான். வண்ணமயமான கண்கொள்ளாக் காட்சி இந்த நடனம். பெரிய முரசு வகைத் தாள வாத்தியத்துக்கேற்றவாறு ஆடிக்கொண்டே உயரமான குச்சியின் மீதேறி உச்சியில் வைத்திருக்கும் பணப்பையை எடுக்கும் சாகசமும் நடத்துவார்கள்.
'சௌவாங்க்' என்பவர்தான் சமையலறைக் கடவுள். இவர் நெருப்பைக் கண்டுபிடித்தவர். வீட்டைவிட்டு கடைசி மாதத்தின் 23ஆம் நாள் மேலுலகம் சென்று அக்குடும்பத்தைப்பற்றி சொல்வார். அவர் கொடுக்கும் 'அறிக்கை'யை வைத்துதான் குடும்பத்தின் அடுத்த வருட செழுமை அமையும். ஆகவே, அவரைத் திருப்திப்படுத்தவும், மகிழ்விக்கவும் அச்சமயத்தில் முடிந்ததையெல்லாம் செய்வார்கள் மக்கள். அந்நாளில் இவருக்குப் பலவகையான உணவுவகைகள் படைக்கபடுகிறது. இவர் மீண்டும் புத்தாண்டின் முதல் நாள் குடும்பத்தில் வந்து இணைந்துகொள்வார்.
புத்தாண்டிற்கான ஏற்பாடுகள் எல்லாமே சந்திரவருடத்தின் கடைசி மாதத்தில் துவங்கும். எப்படியும் ஒரு புத்தாடையும் ஒரு புதுக்காலணியும் வாங்கப்படும். வசதியைப்பொருத்து அதிகமாகவோ, விலையுயர்ந்ததாகவோ வாங்குவார்கள். விதவிதமான பலகாரவகைகளும் சமைக்கப்படும். போகிக்கு முதல் நாள் நாம் செய்வதைப்போலவே, புத்தாண்டுக்கு முன்னர் சீனர்கள் பழைய பொருள்கள் முதலியவற்றைச் சுத்தம் செய்து குவித்து எரித்துவிடுவார்கள். இதற்கும் பஞ்சாங்கத்தின்படி நேரம் குறித்துத்தான் செய்கிறார்கள். இவ்வாறு சுத்தம் செய்தபின்னர் நாற்பத்தியெட்டு மணிநேரத்திற்கு வீட்டைக்கூட்டக்கூடாது. அப்படிச்செய்வது, அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கூட்டிவிரட்டுவதாகும். அன்று முழுமையும் கூத்தும் கும்மாளமும் சிரிப்புமாக மகிழ்வுடன் இருப்பார்கள். புத்தாண்டை வரவேற்க 'லேண்டர்ன்' என்றறியப்படும் சிவப்பு விளக்குகளை வீட்டின்முன் பக்கம் தொங்க விடுவார்கள். சர்ப்பம்-சிங்க முகமூடி அணிந்து ஆடும் நடனம் மற்றும் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள். வெடிகள் கொளுத்திக் கொண்டாடுவது தோஷங்களைக் களைவதற்கு. பெரும் ஓசைகளை எழுப்பினால் பேய்களும் துரதிர்ஷ்டமும் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. சிவப்புத் துணியில் கருப்பில் எழுதிய மங்கள வாசகங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்கும். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் முதல் இரண்டுநாட்களும் பொதுவிடுமுறை. சிங்கப்பூரில் பொதுமக்கள் வெடிகள் கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால், மத்தாப்புகள் மட்டும் கொளுத்துகின்றனர். வெடிகொளுத்தும் ஆர்வமுள்ளவர்கள் இதற்காகவே மலேசியாவில் புத்தாண்டைக் கொண்டாடவென்று மூட்டைகட்டிக்கொண்டு கிளம்பிப்போவதுமுண்டு.
'ஸின்யென் தாவ் ஸின்யென் தாவ், தாவ் ஸின்யென் தாவ்ஸின்யென்' என்ற பாட்டுக்களை இவ்விழாக்காலங்களில் கேட்கமுடியும். 'மிகுந்த நலமுண்டாகட்டும்' என்னும் பொருளில், 'கொங்ஸீ ·பா ச்சாய்' என்று சொல்லி ஒருவர்க்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்வார்கள். புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை நெருங்கிய உறவினர் அனவரும் யாராவது ஒரு மூத்த குடும்ப உறுப்பினர் வீட்டில் கூடி விருந்துண்பார்கள். Reunion Dinner என்றறியப்படும் இவ்விருந்தில் வெளியார் கலந்துகொள்ள முடியாது. இரண்டாம் நாளன்று, மணமான பெண்கள் பெற்றோர் வீட்டிற்கு வருவார்கள். புதியதாக மணமானவர்களென்றால், நம்மூர் தலைத் தீபாவளி மாதிரி கணவருடனும், பரிசுப் பொருட்களுடனும் வரவேண்டும். வாங்கிய கடன்கள் அடைக்கப்படும். இன்றிரவு புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்கதவு, சாளரங்கள் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான், பழைய வருடம் வெளியேறும்.
ஒரே குழந்தை பெற அனுமதிக்கப்படும் சீனாவின் குடும்பங்களில் திருமணமான இளம்தம்பதிகளுக்கு யார் வீட்டில் கொண்டாடுவது என்ற குழப்பம் வருகிறது. இருவருமே குடும்பத்தில் ஒரே பிள்ளை எனும்போது, இருவருக்கும் இருவரின் பெற்றோருடன் கொண்டாடும் ஒரே வழிதான். அவ்வாறே பெரும்பாலும் நடக்கிறது. ஒரே பிள்ளையோ பெண்ணோ தன் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருந்து விட்டால், இவர்கள் தனியே கொண்டாடுகிறார்கள்.
அதிகமாக உணவுவகைகள் சமைக்கப்பட்டு, விருந்துக்குப் பிறகு நிறைய மீந்து போகவேண்டும் என்பது ஐதீகம். அப்போதுதான், வருடம் முழுவதும் செழிப்பாக அமையுமாம். முழுமையைக் குறிக்க தலை, வால் மற்றும் காலுடன் கோழி சமைக்கப்படுகிறது. பன்றியும் அப்படியே. நீண்ட ஆயுளுக்காக நூடில்ஸ் சமைக்கப்படும் போது துண்டு படக்கூடாது. ஆவியில் வெந்த அரிசிமாவில் செய்த கொழுக்கட்டை வகைகள் பிரபலம். சந்திரப்புத்தாண்டிற்கு சீனர்கள் ஒருவகை அரிசியிலிருந்து தனிவகை மதுவைத் தயாரிப்பார்கள். 'யீ ஷெங்' என்றறியப்படும் சமைக்காத மீன் சேர்க்கப்பட்ட சாலட் ஒன்று நிச்சயம் இருக்கும். எல்லோரும் சேர்ந்து சாப்ஸ்டிக்குகளால் இதை பிரட்டுவதால் ஐஸ்வரியங்கள் குவியும் என்று நம்பப்படுகிறது. சமையறையில் உள்ள பேழைகள், குளிர்ப்பதனப்பெட்டி முதலிவற்றில் நிறைய உணவுப்பொருட்களை சகட்டுமேனிக்கு வாங்கி அடுக்கிவைப்பார்கள். வீட்டின் வாயிலருகில் ஆரஞ்சுப்பழங்கள் அடங்கிய கூடை அல்லது பாத்திரம் வைத்திருப்பார்கள்.
பெரிய தட்டுகளில் விதவிதமான இனிப்புப் பண்டங்களும், பருப்பு/கொட்டை வகைகளும் இருக்கும். பெரும்பாலும் எட்டு பகுதிகள் கொண்ட தட்டில், நிறைவையும் சுபிட்சத்தையும் காட்டும்படி எட்டு விதபக்ஷணங்கள் வைப்பது வழக்கம். சோயாவில் செய்யப்படும் புதிய தோ·பூ கவனமாகத் தவிர்க்கப்படும். ஏனென்றால், அதன் நிறம் மரணத்தையும் நோயையும் நினைவூட்டுகிறது. இனிப்புப் பூசனிமிட்டாய் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. லைச்சி கொட்டை குடும்பத்திலுள்ள வலுவான உறவையும், தேங்காய் மிட்டாய் ஒற்றுமையையும், கடலைமிட்டாய் நீண்ட ஆயுளையும் குறிக்கிறது. கும்காட் மிட்டாய் தங்கம் மற்றும் செல்வத்தைக்கொணரும். லோங்கன் பலகாரம் ஆண்மக்களையும், தாமரை விதை நிறைய குழந்தைகளையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. உலர்ந்ததோ·பூ மற்றும் மூங்கில் குறுத்து மகிழ்ச்சியையும் செல்வத்தையும், கிங்கோ கொட்டை வெள்ளி உலோகத்தையும், கருப்பு கடற்பாசி ஆரோக்கியத்தையும் கொணரும்.
புதியபுதிய செடிவகைகளை வாங்கி வீட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பார்கள். அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படும் செடிகளும், Feng Shui எனப்படும் சீனவாஸ்து சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் செடிகளும் புத்தாண்டு காலத்தில் வீட்டை அலங்கரிக்கும். மிகவும் அதிருஷ்டம் கொடுக்கக்கூடியதாகக் கருதப்படும் மாதுளம்செடிகளையும் தொட்டியில் வைத்தாவது வளர்ப்பார்கள். ஆரோக்கியத்தின் அறிகுறியான செந்நிறப் பூக்களும் வைக்கப்படும். பொன்னிற சிறுமணிகளை செடிகளிலும் நிலையிலும் புதிதாகக் கட்டுவார்கள். இவை நல்ல செய்திகளைத் தாங்கிவரும் என்பது நம்பிக்கை. புதிய நாட்காட்டிகளை வாங்கி மாட்டுவார்கள். பணப்பையில் பணத்தை நிரப்பி வைத்துக்கொள்வார்கள். சில்லறையாக மாற்றி கத்தைகத்தையாக திணித்துக்கொள்வார்கள். ஏழைகள், சிறுவர்கள், வேலையாட்கள் முதலியவர்களுக்கு சிறிய அளவிலாவது பணம் வைத்து 'அங் பாவ்' கொடுப்பார்கள். குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தானியங்களைப் போட்டுவார்கள்.
மூவுலகங்களிலும் உள்ள தெய்வங்களை வணங்குவது முதல் நாளில். அன்று சிலர் சைவம் மட்டும் உண்பதுண்டு. உற்றார் உறவினர் வீடுகளுக்குப் போய்வருவர். ஆரஞ்சுப்பழங்களை அதிருஷ்டம் மிகுந்ததாகக் கருதுகின்றனர். ஆகவேதான், பெரும்பாலும் சிறியவர்கள் பெரியவர்களின் வீட்டுக்குப்போய் இரண்டு ஆரஞ்சுப் பழங்களைக்கொடுத்து நல்வார்த்தை கூறி வாழ்த்துத் தெரிவிப்பர். ஆரங்சு அளவிலாத மகிழ்ச்சியின் சின்னம். இலையுடன் கூடியது கொடுப்பவர் மற்றும் பெறுபவரிடையே உள்ள உறவின் நிலைத் தன்மையையும், புதுமணத்தம்பதிகளுக்கு சந்ததிகளையும் குறிக்கும். பதிலுக்கு வாழ்த்தி, 'அங் பாவ்' எனப்படும் சிவப்பு உறைகளில் வசதிக்கு ஏற்ப பணம் வைத்துக் கொடுத்து வாழ்த்தி ஆசி வழங்குவர் பெரியவர்கள். சிவப்பு உறையில் கொடுக்கப்படும் பணத்தை சிறார்கள் எதிர்பார்த்திருப்பர். பெரும்பாலும் மணமானவர்கள் சிறார்களுக்கும் மணமாகாதவர்களுக்கும் தான் கொடுக்கிறார்கள்.
இரண்டாம் நாளில் மூதாதையரை வணங்கி, அன்று நாய்களுக்கு தாராளமாக உணவிடுவர். மூன்றாம் நாள், எலிகள் தங்களின் மணமாகாத பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் என்று ஒரு நம்பிக்கை. எனவே, அன்று சீக்கிரமே தூங்கப் போய்விடுவார்கள். மூன்றாம் மற்றும் நான்காம் நாள் மாப்பிள்ளைகள் மாமன் மாமியைச் சென்று வணங்கி ஆசி பெறுகிறார்கள். நான்காம் நாள், சமையலறைக் கடவுளுக்கு உணவுப் படையல்கள் வைப்பார்கள். வீட்டைக்கூட்டி சுத்தம் செய்தால், வாசலிலிருந்து உள் நோக்கிக்கூட்டித் தள்ளி வீட்டின் உள்ளறையில் குமித்து வைப்பர். ஐந்தாம் நாள் கழிந்தபிறகுதான் அக்குப்பையை அப்புறப்படுத்துவர். அதற்குள் வெளியில் கொண்டு கொட்டினால், வீட்டுன் அதிருஷ்டமும் ஐஸ்வரியமும் போய்விடும் என்பது நம்பிக்கை.
ஐந்தாம் நாள் செல்வதிற்கான கடவுள் 'போ வூ'வைத் தொழுகிறார்கள். அன்று யாரும் யார் வீட்டுக்கும் போவதில்லை. அப்படிப்போவது இருவருக்கும் துரதிருஷ்டம் என்பது நம்பிக்கை. ஐந்தாம் நாள், முதல் கட்ட கொண்டாட்டங்கள் முடிவுறும். இந்த முதல் ஐந்து நாட்களும், பேச்சிலும், நடத்தையிலும் மிகக் கவனமாக செயல்படுவாகள். வீட்டிலுள்ள செல்வங்களும், நல்வினைகளும் வெளியேறிவிடக் கூடாதென முதல் ஐந்து நாட்கள் வீட்டைக் கூட்டுவது, கெட்ட வார்த்தைகள், மரணத்தைப் பற்றிய பேசுவது தவிர்க்கப்படும். ஏதாவது பாண்டங்கள் கீழே விழுந்து உடைந்துவிட்டால், உடனே “இந்த வருடம் முழுவதும் சமாதானம் நிலவட்டும்” என்று வேகமாக கூறுவார்கள்.
ஆறிலிருந்து பத்தாம் நாள் வரை நண்பர்கள், சொந்தங்களைக் கண்டு வருவர். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டு முழுவதற்குமான செல்வம், ஆரோக்கியம் வேண்டித் தொழுவதுமுண்டு. ஏழாம் நாள் விவாசாயிகளுக்கான தினம். இன்று மனிதனின் பிறந்தநாளும் ஆகும். இன்று வேளாண்தொழில் செய்வோர் பலவிதபானங்களைச் செய்து தங்களின் திறமையையும், அந்தஸ்தையும் காட்டுவர். இன்றுதான் பச்சை மீன் மற்றும் நூடில்ஸ் உண்கிறார். எட்டாம் நாள், மீண்டும் ஒன்று கூடி விருந்துண்டு களிக்கிறார்கள். நள்ளிரவில் தியேன் கோங் என்னும் கடவுளை வணங்குகிறார்கள். இது வழிபாட்டுக்குரியநாள். பெரும்பான்மையினர் இந்நாளில் சைவ அசைவ பதார்த்தங்களுடன், மது வகையும் சேர்த்து படையல்கள் வைக்கின்றனர். கடவுளையும் மூதாதையரையும் வணங்குவது வழக்கம்.ஒன்பதாவது நாள் பச்சைப்பவள அரசனுக்கான நாள் (Jade Emperor). அன்று படையல் விமரிசையாக இருக்கும். பத்திலிருந்து பனிரெண்டு வரை உற்றார் உறவினர்களை விருந்துக்கு அழைத்து உபசரிக்கிறார்கள். வரிசையாக விருந்துண்ட வயிற்றுக்கு இதமாக பதிமூன்றாம் நாள் பத்தியச் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். பதினான்காம் நாளில் அடுத்த நாள் விளக்கு விழாவுக்குண்டான ஆயத்தங்களில் கழிக்கிறார்கள்.
பதினைந்தாம் நாள் தான் கொண்டாட்டத்தின் இறுதிநாள். அன்று தான், ச்சிங்கே ஊர்வலம் நடைபெறும். குச்சியில் நடப்பது, சிங்க/நாக நடனம், குட்டிக்கரண சாகசவீரர்கள் என்று ஏராளமான வழமைகளுடன், புதுமைகளும் கலந்து நகரின் முக்கிய வீதியில் பெரிய அளவில் நடக்கும். ஸிம்பல் என்றறியப்படும் ரட்சச ஜால்ராக்கள், முரசுவகை தாளவாத்தியங்கள் போன்றவை இசைக்கப்படும். சீனர்களின் மரபுப்படி இதுதான் அவர்கைன் 'காதலர் தினம்'. இன்று மணமாகாத இளம்பெண்கள் நல்ல கணவன்மார்களை வேண்டி ஆரஞ்சுப்பழகளை ஆற்றில் எறிவது வழக்கம். இன்னொரு விசித்திரமான பழக்கமும் உண்டு இவர்களிடையே. ஒரு தேரை அல்லது குறைந்தபட்சம் தவளையை வாங்கிக் கொண்டுவந்து வீட்டிற்குள் விடுவார்கள். தேரைப் பதுமைகள், பொன்னிறத்தேரை விக்கிரகங்கள் முதலியவற்றை வீட்டின் முன்பாகத்தில் வைப்பார்கள். இவ்வாரங்களில் கடன் வாங்குவது கொடுப்பது முற்றிலும் தவிர்க்கப்படும். அசுப வார்த்தைகள் அழுகை இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளை ஏசுவதும் அடிப்பதும் கவனமாகத் தவிர்க்கப்படும்.
நவீன யுகத்தில் மரபுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைவாகவும் குடும்ப ஒற்றுமை, ஒன்றுகூடல், உல்லாசம், நன்கொடை போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள். சிங்கப்பூர் ஆற்றங்கரையில் சந்தை, திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 42 நாட்களுக்கு கோலாகலமாக நடக்கும். சைனாடௌண் வட்டாரம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவற்றைக் காணவென்றே சிங்கப்பூருக்க்கு வரும் சுற்றுப்பயணிகளும் உண்டு. வாணவேடிக்கைகளுடன் துவங்கும் இவ்விழா.
( முற்றும் )
--------- ஜெயந்தி சங்கர்
***************************************************
Monday, January 09, 2006
the algebra of infinite justice (நூல் அறிமுகம்)
இயற்கை மற்றும் மனிதநேயம் ஆகிய இரண்டையும் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்ட எந்தவகை முன்னேற்றமும் முன்னேற்றமாகவே முடியாது என்னும் ஆதாரக் கருதுகோளோடு எழுதுகோல் பிடித்திருக்கிறார் அருந்ததி ராய். அணுவாயுதம், அணைக்கட்டு, ரயில் எரிப்பு, தீவிரவாதம், போர் என்ற ஒவ்வொன்றைத் தொடும்போதும் உலகின் எல்லாநிலைகளிலும் விரவிக்கிடக்கும் அவலங்களை குத்திக்காட்டியும், கண்டித்தும் அவ்வந்த அமைப்பின் மற்றும் அரசியல் செயல்பாடுகளை மறைமுகமாயும் நேரடியாகவும் எள்ளிநகையாடியிருக்கிறார் ஆங்காங்கே.
'war is peace' என்ற கட்டுரையில் ஆ·ப்கான் போரினால் ஏற்பட்ட அவலங்களையும் அப்போரின் பின்னணியையும் பற்றி தகுந்த அரசியல் சான்றுகளோடு கண்டிக்கிறார்.'democracy'யில் கோத்ரா ரயில் எரிப்பும் அதன் அரசியல் பின்னணியும் நிகழ்வின் பின்விளைவுகளாகக் கிளம்பிய பயங்கர மதவாதக் கோடூர நிகழ்வுகளைப் படிக்கப் படிக்க முதல்முறையாக அறிந்துகொண்டதைப் போல மனம் கனத்துத் தான் போகிறது.
'war talk'என்ற கட்டுரையில் "உலகில் அணுவாயுதப்போரின் அறிகுறிகள் பளீச்சென்றிருக்க நான் எப்படி இன்னொரு புத்தகத்தை எழுத?", என்று கேட்கிறார்.
'சில வேளைகளில் சிந்திப்பதற்கு நான் எழுதவேண்டியுள்ளது', (ப. 16) என்று சொல்லும் 1997 ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய், இந்தியாவின் 'போக்ரான்' அணுவாயுதச் சோதனையை எதிர்த்து 1998ல் எழுதியது 'the end of inmagination'. முதல் கட்டுரையான இதில் அவர் சொல்லும் பல விஷயங்கள் வாசகர் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடியவையே என்றாலும், அவர் சொல்லும் விதத்தால் ஏற்படக்கூடிய தாக்கம் எளிதில் அகன்றுவிடக்கூடியதல்ல. அதைத் தொடர்ந்து, மூன்றரையாண்டு காலத்தில் Frontline மற்றும் Outlook இதழ்களுக்கு மருந்தளவிற்கும் பாசாங்கில்லா மொழியில் படைத்த மற்ற கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலில் இருப்பது மொத்தம் எட்டு. "உயிரோடு இருக்கும் போது வாழவும், இறக்கும்போது சாகவும்", கனவு காண்பது மட்டுமே அர்த்தமுள்ளதாகும் (ப. 15) என்று சொல்லும் அருந்ததிராய் உலகநாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் என்று எல்லோரையும் கொஞ்சமும் தாட்சண்யமின்றி பளேர் பளேரென்று மொழியால் அறைகிறார். பல இடங்களில் ராய் நாடுகளின் எல்லைகள் கடந்த ஓர் 'உலகப் பிரஜை'யாக எழுதியிருப்பதும் புரிகிறது.
வாய்ப்பிருக்குமிடத்திலெல்லாம் இயல்பான நகைச்சுவையாலும் கவர்கிறார். உதாரணத்திற்கு, (ப. 26) " For India to demand the status of a Superpower is as ridiculous as demanding to play in the World Cup finals simply because we have a ball. Never mind that we haven't qualified, or that we don't play much soccer and haven't got a team." என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நாட்டில் கவனம் பெறவேண்டியவைகளைப் பட்டியலிட்டு 'தற்காப்பு' எனும் போர்வை அநாவசியமானது என்று அரசியலின் அபத்தங்களை ஒவ்வொன்றாக விளக்குகிறார். ஏனென்றால், அணுவாயுதம் போர் வந்தால் தான் ஆபத்தாகிறது என்று நினைப்பது முட்டாள் தனம், அதை உலகில் வைத்திருப்பதே மிகுந்த ஆபத்து. தனித்துவமில்லாத நிலையிலேயே அணுவாயுதசோதனையை நாடியுள்ளது இந்தியா என்பது இவர் கூற்று. 'கோக்'கும் 'பெப்ஸி'யும் மேலைக்கலாசாரம் எனும்போது அணுவாயுதம் மட்டும் இந்தியக்கலாசாரமா என்ற கேள்வியைக்கேட்கிறார். ஒருவேளை வேதங்களில் அதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பார்கள், ஆனால், தேவையை அறிந்து தேடினால், 'கோக்'கும் 'பெப்ஸி'யும் கூட சமயநூல்களில் கிடைக்கக்கூடும் என்பதே அந்நூல்களின் சிறப்பு என்று சொல்லிப் போகிறபோக்கில் நம்மைச் சிரிக்கவைக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தங்களின் அணுவாயுத சோதனைகளுக்கு எத்தனையோ நியாயங்கள் இருக்கலாம். ஆனால், இது தொடர்ந்து வளரும், வளரவேண்டிய என்று எல்லா நாடுகளையும் அணுவாயுதச் சோதனைக்கு ஊக்குவிக்கும். அப்போது வாழ்க்கையின் பொருளே மாறிப்போகும் என்கிறார். அத்தைய உலகில் மரணமல்ல, வாழ்தலே பீதியைக்கொடுக்கும் என்று உண்மையைக் கட்டுரையாளர் முன்வைக்கும்போது, பலமுறை சிந்தித்த விஷயமேயானாலும் உண்மை தகிக்கத் தான் செய்கிறது.
அணுயுத்தம் ஏற்பட்டால், பிழைத்திருப்பவர்கள் வீட்டிலிருக்கும் உணவுப்பொருள்களை உண்ணுங்கள், ஆற்று நீரைத் தவிருங்கள், வீட்டைவிட்டு வேளியேறாதீர்கள் என்றெல்லாம் சொல்லும் மடமையைக் கண்டிக்கிறார். அவர்களைப் பாதுகாப்புக்காக ஐயோடின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அறிக்கை விடுத்த பாபா அணுசக்தி நிலையத்தின் சுகாதார, சுற்றுசூழல் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவரை, 'பைத்தியக்காரத்தனம்' (ப.7) என்று ஏசுகிறார்.
அணுயுத்தம் இன்னும் ஆரம்பிக்காத நிலையிலேயே மனித இனம் கதிரியக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள என்று சொல்லி அத்தகைய போர் ஒன்று நாடுகளிடையே நடக்காது, பூமியுடன் தான் நடக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். அந்தப்போர் கடவுளுக்குச் சவாலாக அமைவதுடன், 4600 மில்லியன் வருடங்களாக நமக்குச் சொந்தமான இந்த பூமியும் அதில் இருக்கும் அத்தனையும் ஒரிரு மணிநேரங்களிலேயே சுவடின்றி சூன்யமாகிவிடும் என்று சொல்லும்போது புதிதாக அறிந்தாற்போலத்தான் வாசகன் பயப்படுவான். அருந்ததி ராயின் தேவையற்ற அலங்காரங்களில்லா மொழியின் வெற்றியது.
அரசியல் பின்னணியை குற்றஞ்சாட்டி அணுவாயுத ஒப்பந்தங்களைப் பற்றிப்பேசும்போது ஆசிரியருக்கு எதிர்மறை எண்ணம் மற்றும் அவநம்பிக்கை தூக்கலாய் இருப்பதுபோலத் தோன்றுகிறது. இருப்பினும், தொடர்ந்து அவர்கொடுக்கும் விளக்கங்கள் ஓரளவிற்குச் சமாதானம் தரவே செய்கின்றன. 'படைப்பாளியின் அதீத கற்பனை என்று ஒதுக்கிவிடக்கூடியதல்ல அணுவாயுதத்தின் பின்விளைவுகள்' என்கிறார் அவரே. அவற்றையெல்லாம் புட்டுப்புட்டு வைத்துவிட்டு, அதன் கோரங்களை உணர்ந்து ' ஏற்கனவே பலராலும் பேசப்பட்டிருக்கலாம். இருக்கட்டும். தனிமனித அக்கறையோடு ஒவ்வொருவரும் எதிர்ப்பு தெரிவியுங்கள்', என்று வலியுறுத்தும்போது தொடர்ந்து மேலே படிக்க முடியாமல் அப்படியே மூடிவைத்து விட்டு கொஞ்சநேரம் சிந்திக்கச் செய்துவிடுகிறது.
'power politics', என்ற மூன்றாம் கட்டுரையில் உலகமயமாதல், தனியார் மயப்படுத்துதல் போன்றவற்றின் பாதகங்களைப்பேசுகிறார். 'the ladies have feelings, so,..'யில் இந்தியாவில் உள்ள பழமை மற்றும் புதுமைகளுக்கிடையே நிலவும் அகன்ற இடைவெளியைச் சொல்லி ஆரம்பித்து, ஓர் எழுத்தாளராய்த் தன்னை முன்னிலைப்படுத்தி மனந்திறந்து பலவற்றைப்பேசுகிறார்.
'the algebra of infinite justice' என்ற கட்டுரையில் உலகவர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதன் மற்றும் ஆ·ப்கான் போரின் பின்னணிகளை அரசியல் சான்றுகளோடு எழுதுகிறார். "தீவிரவாதம் ஒரு நோயல்ல. ஒரு அறிகுறி. அது கோக், பெப்ஸி, நைகியைப்போல உலகளாவியது", என்கிறார். "Terrorism as a phenomenom may never go away. But if it is to contained, the first step is for America to at least acknowledge that it shares the planet with other nations, with other human beings, who even if they are not on TV, have loves and griefs and stories and songs and sorrows and, for heaven's sake, rights. Instead, when Donald Rumsfeld, the US Defense Sevretary, was asked what he would call a victory in America's New War, he said that if he could convince the world that Americans must be allowed to continue with their way of life, he would consider victory" (ப. 233), போன்ற அமெரிக்க எதிர்ப்புக் குரலை நம்மால் பெரும்பாலான கட்டுரைகளில் கேட்கமுடிகிறது. அதே நேரம் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாத அமெரிக்காவின் மீது வெறுப்பு கூடத்தான் கூடுகிறது.
நர்மதா பள்ளத்தாக்கு குறித்த 'the greater common good' என்ற இரண்டாவது கட்டுரை சுமார் 100 பக்கங்களுக்கு விரிந்து, அரசியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களைக்கொண்டு, பயனுள்ள நர்மதா பள்ளத்தாக்கின் வரைபடத்துடன் துவங்குகிறது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப்பற்றி தகுந்த ஆதாரங்களோடு சொல்லும்போது வியப்பாகயிருக்கிறது. உதாரணமாக, பெரிய அணைக்கட்டுகள் நன்மையை விடத்தீமைகளையே கொடுக்கின்றன என்று சொல்லிவிட்டு அவை பூகம்பங்கள் போன்றவற்றிற்குக் காரணமாகின்றன என்கிறார். (ப. 56) "In the fifty years since independence, Nehru's famous 'Dam are the Temples of Modern India' speech ( one that he grew to regret in his own lifetime ), has made its way into primary school textbooks in every indian language", எனும்போது பல்வேறுகோணங்களில் சிந்திக்கவைக்கிறது. இது தவிர வேளாண்மைக்கு அது எப்படியெல்லாம் அதிக தீங்குகளை அளித்துள்ளது என்றும் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் புள்ளிவிவரம் வைத்திருக்கும் அரசாங்கம் (ப. 60) அணைக்கட்டுகள் கட்டுபோது அப்புறப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் வைத்துக்கொள்வதில்லையே என்று சாடுகிறார். இப்பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பெரிய அணைக்கட்டுகளால் மட்டும் சுந்ததிரத்திற்குப்பிறகு ஐம்பது வருடங்களில் சுமார் 33 மில்லியன் மக்கள் அகற்றப்பட்டுள்ளனராம். இது ஆஸ்திரேலியாவின் மக்கட் தொகையைப் போல மூன்று மடங்கு ! 'இழப்புக்கள்' யாவற்றையும் அறியாமல், அணைகள் ஏற்படுத்தும் என்ற நம்பக்கூடிய 'முன்னேற்றங்கள்' எப்படி அளக்கப்படும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
உலகத்தின் அணைகளின் எண்ணிக்கையில் 40% இந்தியாவில் தான் இருக்கிறன. இருந்தாலும், மக்கட்தொகையில் ஐந்தில் ஒரு பகுதி அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் சுகாதாரமில்லாமல் இருப்பது ஏன் என்பதே புதிர். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை அணைகளில் கொண்டு கொட்டுவதை கண்டிக்கிறார். ஒட்டு மொத்த நிர்வாகமும் கட்டுரையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. " Disconnecting the politics from the economics from the emotion and human tragedy of uprootment is like breaking up a band. The individual musicians don't rock in quite the same way. You keep the noise but lose the music", என்கிறார். ஆனால், நடைமுறையில் துறைகள் அப்படித்தான் இயங்குகின்றன என்பதையும் ஒரு வேதனையுடன் தான் விளக்கிச் சொல்கிறார்.
இந்தியாவின் முக்கிய அரசியல் தவறுகள் மற்றும் தன்னலம் தோய்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தவறுகள் குறித்த அப்பட்டமான ஆதாரத்துடன் கூடிய கட்டுரைகள் அடங்கிய இந்நூல் நாட்டு மற்றும் உலக நடப்புகளை எளிதில் புரிந்துகொள்ள நிச்சயம் உதவும். ராயின் துணிச்சலான மொழியே ஒரு பலம் இந்நூலுக்கு.
---------------------------------------------
the algebra of infinite justice
By Arunthati Roy
பதிப்பகத்தார் - Penguin Books India (P) ltd
முதல் பதிப்பு - 2001
திருத்திய மறுபதிப்பு - 2002
-----------------------------------------------
நன்றி : திசைகள் (Januray 2006)
-------ஜெயந்தி சங்கர்