(2007க்கு முன்பாக அச்சூடகங்களில் பிரசுரமான படைப்புகளில் சிலவற்றை மட்டும் இப்பக்கத்தில் வாசிக்க முடியும். வலைப்பதிவுக்கென்றே எழுதியவை மிகக் குறைவு. march 28, 2010 அன்று இந்த வலைப்பக்கத்தின் பெயரை மாற்ற விரும்பி பிறகு, 4-5 ஆண்டுகளாக இணையவெளியில் பரவலாக அறியப்பட்டு வந்திருக்கும் பெயரை மாற்ற வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. தொடர்புக்கு - jeyanthisankar(at)gmail (dot)com
Monday, January 09, 2006
the algebra of infinite justice (நூல் அறிமுகம்)
இயற்கை மற்றும் மனிதநேயம் ஆகிய இரண்டையும் பின்னுக்குத் தள்ளிவிட்டுவிட்ட எந்தவகை முன்னேற்றமும் முன்னேற்றமாகவே முடியாது என்னும் ஆதாரக் கருதுகோளோடு எழுதுகோல் பிடித்திருக்கிறார் அருந்ததி ராய். அணுவாயுதம், அணைக்கட்டு, ரயில் எரிப்பு, தீவிரவாதம், போர் என்ற ஒவ்வொன்றைத் தொடும்போதும் உலகின் எல்லாநிலைகளிலும் விரவிக்கிடக்கும் அவலங்களை குத்திக்காட்டியும், கண்டித்தும் அவ்வந்த அமைப்பின் மற்றும் அரசியல் செயல்பாடுகளை மறைமுகமாயும் நேரடியாகவும் எள்ளிநகையாடியிருக்கிறார் ஆங்காங்கே.
'war is peace' என்ற கட்டுரையில் ஆ·ப்கான் போரினால் ஏற்பட்ட அவலங்களையும் அப்போரின் பின்னணியையும் பற்றி தகுந்த அரசியல் சான்றுகளோடு கண்டிக்கிறார்.'democracy'யில் கோத்ரா ரயில் எரிப்பும் அதன் அரசியல் பின்னணியும் நிகழ்வின் பின்விளைவுகளாகக் கிளம்பிய பயங்கர மதவாதக் கோடூர நிகழ்வுகளைப் படிக்கப் படிக்க முதல்முறையாக அறிந்துகொண்டதைப் போல மனம் கனத்துத் தான் போகிறது.
'war talk'என்ற கட்டுரையில் "உலகில் அணுவாயுதப்போரின் அறிகுறிகள் பளீச்சென்றிருக்க நான் எப்படி இன்னொரு புத்தகத்தை எழுத?", என்று கேட்கிறார்.
'சில வேளைகளில் சிந்திப்பதற்கு நான் எழுதவேண்டியுள்ளது', (ப. 16) என்று சொல்லும் 1997 ஆண்டின் புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய், இந்தியாவின் 'போக்ரான்' அணுவாயுதச் சோதனையை எதிர்த்து 1998ல் எழுதியது 'the end of inmagination'. முதல் கட்டுரையான இதில் அவர் சொல்லும் பல விஷயங்கள் வாசகர் ஏற்கனவே அறிந்திருக்கக்கூடியவையே என்றாலும், அவர் சொல்லும் விதத்தால் ஏற்படக்கூடிய தாக்கம் எளிதில் அகன்றுவிடக்கூடியதல்ல. அதைத் தொடர்ந்து, மூன்றரையாண்டு காலத்தில் Frontline மற்றும் Outlook இதழ்களுக்கு மருந்தளவிற்கும் பாசாங்கில்லா மொழியில் படைத்த மற்ற கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலில் இருப்பது மொத்தம் எட்டு. "உயிரோடு இருக்கும் போது வாழவும், இறக்கும்போது சாகவும்", கனவு காண்பது மட்டுமே அர்த்தமுள்ளதாகும் (ப. 15) என்று சொல்லும் அருந்ததிராய் உலகநாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் என்று எல்லோரையும் கொஞ்சமும் தாட்சண்யமின்றி பளேர் பளேரென்று மொழியால் அறைகிறார். பல இடங்களில் ராய் நாடுகளின் எல்லைகள் கடந்த ஓர் 'உலகப் பிரஜை'யாக எழுதியிருப்பதும் புரிகிறது.
வாய்ப்பிருக்குமிடத்திலெல்லாம் இயல்பான நகைச்சுவையாலும் கவர்கிறார். உதாரணத்திற்கு, (ப. 26) " For India to demand the status of a Superpower is as ridiculous as demanding to play in the World Cup finals simply because we have a ball. Never mind that we haven't qualified, or that we don't play much soccer and haven't got a team." என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நாட்டில் கவனம் பெறவேண்டியவைகளைப் பட்டியலிட்டு 'தற்காப்பு' எனும் போர்வை அநாவசியமானது என்று அரசியலின் அபத்தங்களை ஒவ்வொன்றாக விளக்குகிறார். ஏனென்றால், அணுவாயுதம் போர் வந்தால் தான் ஆபத்தாகிறது என்று நினைப்பது முட்டாள் தனம், அதை உலகில் வைத்திருப்பதே மிகுந்த ஆபத்து. தனித்துவமில்லாத நிலையிலேயே அணுவாயுதசோதனையை நாடியுள்ளது இந்தியா என்பது இவர் கூற்று. 'கோக்'கும் 'பெப்ஸி'யும் மேலைக்கலாசாரம் எனும்போது அணுவாயுதம் மட்டும் இந்தியக்கலாசாரமா என்ற கேள்வியைக்கேட்கிறார். ஒருவேளை வேதங்களில் அதைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பார்கள், ஆனால், தேவையை அறிந்து தேடினால், 'கோக்'கும் 'பெப்ஸி'யும் கூட சமயநூல்களில் கிடைக்கக்கூடும் என்பதே அந்நூல்களின் சிறப்பு என்று சொல்லிப் போகிறபோக்கில் நம்மைச் சிரிக்கவைக்கிறார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தங்களின் அணுவாயுத சோதனைகளுக்கு எத்தனையோ நியாயங்கள் இருக்கலாம். ஆனால், இது தொடர்ந்து வளரும், வளரவேண்டிய என்று எல்லா நாடுகளையும் அணுவாயுதச் சோதனைக்கு ஊக்குவிக்கும். அப்போது வாழ்க்கையின் பொருளே மாறிப்போகும் என்கிறார். அத்தைய உலகில் மரணமல்ல, வாழ்தலே பீதியைக்கொடுக்கும் என்று உண்மையைக் கட்டுரையாளர் முன்வைக்கும்போது, பலமுறை சிந்தித்த விஷயமேயானாலும் உண்மை தகிக்கத் தான் செய்கிறது.
அணுயுத்தம் ஏற்பட்டால், பிழைத்திருப்பவர்கள் வீட்டிலிருக்கும் உணவுப்பொருள்களை உண்ணுங்கள், ஆற்று நீரைத் தவிருங்கள், வீட்டைவிட்டு வேளியேறாதீர்கள் என்றெல்லாம் சொல்லும் மடமையைக் கண்டிக்கிறார். அவர்களைப் பாதுகாப்புக்காக ஐயோடின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி அறிக்கை விடுத்த பாபா அணுசக்தி நிலையத்தின் சுகாதார, சுற்றுசூழல் மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவரை, 'பைத்தியக்காரத்தனம்' (ப.7) என்று ஏசுகிறார்.
அணுயுத்தம் இன்னும் ஆரம்பிக்காத நிலையிலேயே மனித இனம் கதிரியக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள என்று சொல்லி அத்தகைய போர் ஒன்று நாடுகளிடையே நடக்காது, பூமியுடன் தான் நடக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். அந்தப்போர் கடவுளுக்குச் சவாலாக அமைவதுடன், 4600 மில்லியன் வருடங்களாக நமக்குச் சொந்தமான இந்த பூமியும் அதில் இருக்கும் அத்தனையும் ஒரிரு மணிநேரங்களிலேயே சுவடின்றி சூன்யமாகிவிடும் என்று சொல்லும்போது புதிதாக அறிந்தாற்போலத்தான் வாசகன் பயப்படுவான். அருந்ததி ராயின் தேவையற்ற அலங்காரங்களில்லா மொழியின் வெற்றியது.
அரசியல் பின்னணியை குற்றஞ்சாட்டி அணுவாயுத ஒப்பந்தங்களைப் பற்றிப்பேசும்போது ஆசிரியருக்கு எதிர்மறை எண்ணம் மற்றும் அவநம்பிக்கை தூக்கலாய் இருப்பதுபோலத் தோன்றுகிறது. இருப்பினும், தொடர்ந்து அவர்கொடுக்கும் விளக்கங்கள் ஓரளவிற்குச் சமாதானம் தரவே செய்கின்றன. 'படைப்பாளியின் அதீத கற்பனை என்று ஒதுக்கிவிடக்கூடியதல்ல அணுவாயுதத்தின் பின்விளைவுகள்' என்கிறார் அவரே. அவற்றையெல்லாம் புட்டுப்புட்டு வைத்துவிட்டு, அதன் கோரங்களை உணர்ந்து ' ஏற்கனவே பலராலும் பேசப்பட்டிருக்கலாம். இருக்கட்டும். தனிமனித அக்கறையோடு ஒவ்வொருவரும் எதிர்ப்பு தெரிவியுங்கள்', என்று வலியுறுத்தும்போது தொடர்ந்து மேலே படிக்க முடியாமல் அப்படியே மூடிவைத்து விட்டு கொஞ்சநேரம் சிந்திக்கச் செய்துவிடுகிறது.
'power politics', என்ற மூன்றாம் கட்டுரையில் உலகமயமாதல், தனியார் மயப்படுத்துதல் போன்றவற்றின் பாதகங்களைப்பேசுகிறார். 'the ladies have feelings, so,..'யில் இந்தியாவில் உள்ள பழமை மற்றும் புதுமைகளுக்கிடையே நிலவும் அகன்ற இடைவெளியைச் சொல்லி ஆரம்பித்து, ஓர் எழுத்தாளராய்த் தன்னை முன்னிலைப்படுத்தி மனந்திறந்து பலவற்றைப்பேசுகிறார்.
'the algebra of infinite justice' என்ற கட்டுரையில் உலகவர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதன் மற்றும் ஆ·ப்கான் போரின் பின்னணிகளை அரசியல் சான்றுகளோடு எழுதுகிறார். "தீவிரவாதம் ஒரு நோயல்ல. ஒரு அறிகுறி. அது கோக், பெப்ஸி, நைகியைப்போல உலகளாவியது", என்கிறார். "Terrorism as a phenomenom may never go away. But if it is to contained, the first step is for America to at least acknowledge that it shares the planet with other nations, with other human beings, who even if they are not on TV, have loves and griefs and stories and songs and sorrows and, for heaven's sake, rights. Instead, when Donald Rumsfeld, the US Defense Sevretary, was asked what he would call a victory in America's New War, he said that if he could convince the world that Americans must be allowed to continue with their way of life, he would consider victory" (ப. 233), போன்ற அமெரிக்க எதிர்ப்புக் குரலை நம்மால் பெரும்பாலான கட்டுரைகளில் கேட்கமுடிகிறது. அதே நேரம் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாத அமெரிக்காவின் மீது வெறுப்பு கூடத்தான் கூடுகிறது.
நர்மதா பள்ளத்தாக்கு குறித்த 'the greater common good' என்ற இரண்டாவது கட்டுரை சுமார் 100 பக்கங்களுக்கு விரிந்து, அரசியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களைக்கொண்டு, பயனுள்ள நர்மதா பள்ளத்தாக்கின் வரைபடத்துடன் துவங்குகிறது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப்பற்றி தகுந்த ஆதாரங்களோடு சொல்லும்போது வியப்பாகயிருக்கிறது. உதாரணமாக, பெரிய அணைக்கட்டுகள் நன்மையை விடத்தீமைகளையே கொடுக்கின்றன என்று சொல்லிவிட்டு அவை பூகம்பங்கள் போன்றவற்றிற்குக் காரணமாகின்றன என்கிறார். (ப. 56) "In the fifty years since independence, Nehru's famous 'Dam are the Temples of Modern India' speech ( one that he grew to regret in his own lifetime ), has made its way into primary school textbooks in every indian language", எனும்போது பல்வேறுகோணங்களில் சிந்திக்கவைக்கிறது. இது தவிர வேளாண்மைக்கு அது எப்படியெல்லாம் அதிக தீங்குகளை அளித்துள்ளது என்றும் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் புள்ளிவிவரம் வைத்திருக்கும் அரசாங்கம் (ப. 60) அணைக்கட்டுகள் கட்டுபோது அப்புறப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் வைத்துக்கொள்வதில்லையே என்று சாடுகிறார். இப்பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பெரிய அணைக்கட்டுகளால் மட்டும் சுந்ததிரத்திற்குப்பிறகு ஐம்பது வருடங்களில் சுமார் 33 மில்லியன் மக்கள் அகற்றப்பட்டுள்ளனராம். இது ஆஸ்திரேலியாவின் மக்கட் தொகையைப் போல மூன்று மடங்கு ! 'இழப்புக்கள்' யாவற்றையும் அறியாமல், அணைகள் ஏற்படுத்தும் என்ற நம்பக்கூடிய 'முன்னேற்றங்கள்' எப்படி அளக்கப்படும் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
உலகத்தின் அணைகளின் எண்ணிக்கையில் 40% இந்தியாவில் தான் இருக்கிறன. இருந்தாலும், மக்கட்தொகையில் ஐந்தில் ஒரு பகுதி அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் சுகாதாரமில்லாமல் இருப்பது ஏன் என்பதே புதிர். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை அணைகளில் கொண்டு கொட்டுவதை கண்டிக்கிறார். ஒட்டு மொத்த நிர்வாகமும் கட்டுரையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. " Disconnecting the politics from the economics from the emotion and human tragedy of uprootment is like breaking up a band. The individual musicians don't rock in quite the same way. You keep the noise but lose the music", என்கிறார். ஆனால், நடைமுறையில் துறைகள் அப்படித்தான் இயங்குகின்றன என்பதையும் ஒரு வேதனையுடன் தான் விளக்கிச் சொல்கிறார்.
இந்தியாவின் முக்கிய அரசியல் தவறுகள் மற்றும் தன்னலம் தோய்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தவறுகள் குறித்த அப்பட்டமான ஆதாரத்துடன் கூடிய கட்டுரைகள் அடங்கிய இந்நூல் நாட்டு மற்றும் உலக நடப்புகளை எளிதில் புரிந்துகொள்ள நிச்சயம் உதவும். ராயின் துணிச்சலான மொழியே ஒரு பலம் இந்நூலுக்கு.
---------------------------------------------
the algebra of infinite justice
By Arunthati Roy
பதிப்பகத்தார் - Penguin Books India (P) ltd
முதல் பதிப்பு - 2001
திருத்திய மறுபதிப்பு - 2002
-----------------------------------------------
நன்றி : திசைகள் (Januray 2006)
-------ஜெயந்தி சங்கர்
Subscribe to:
Posts (Atom)