'
பௌத்தம்'தான் இந்தியநாடு உலகிற்களித்த மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டு வருகிறது. அவலோகிதேஸ்வராவின் (Avalokitesvara) பெண் வடிவமே கருணை தெய்வம் குஆன்யின் (Guanyin). மஹாவிஷ்ணு மோகினியாக வந்தகதை நினைவிற்கு வருகிறது இல்லையா!? ஆசியாவின் தாவோ (Tao) மற்றும் பௌத்த ஆலயங்களில் காணப்படும் அன்பும் இரக்கமும் உடைய குஆன்யின் சந்திர ஆண்டின் இரண்டாம் மாதத்தில் 19ஆம் நாள் அவதரித்தாள். சீன நாட்டில் மூன்று பெரும் சரிவுகளைக் கடந்து வந்துள்ளது பௌத்தம். ஆனால், எப்போதுமே கருணை தெய்வமான குஆன்யின் மட்டும் மறக்கபட்டதேயில்லை. குஆன்யின் மதம், நாடுகளின் எல்லை போன்றவற்றைக்கடந்து இறைமைபெற்ற கலாசாரச் சின்னமாகவே உருவெடுத்திருக்கிறாள். பல மதங்கள் மற்றும் கலாசாரத் தாக்கங்கள் பெண்மை வடிவம் கொண்ட கருணைத் தெய்வமான குஆன்யினின் உருவப் பரிணாமத்தில் இருந்திருக்கின்றன.
கிட்டத்தட்ட எல்லா சூத்திரங்களும் கருணை அன்னையின் புகழ் பாடினாலும் மஹாயன சூத்திரத்தின் முக்கிய பகுதியான சத்தர்ம புண்டரிக சூத்திரம் ஒரு தனி அத்தியாயம் முழுக்கவே குஆன்யினின் இயல்புகளைச் சொல்கிறது. ஒரு முறை சீன அரசன் ஒருவனுக்கு உடல் நலமில்லை. அப்போது அவனை இந்த அத்தியாயத்தை ஓதச்சொன்னார்கள். அவனின் உடல் உபாதை பறந்தோடிவிட்டது. அப்போதிலிருந்து இந்த அத்தியாயம் அவலோகிதஸ்வர சூத்திரா என்ற அந்தஸ்த்தைப் பெற்றுப் பலராலும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து போதிசத்வரும் சீனாவில் இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றார்.
பௌத்த சூத்திரங்கள் பல போதிசத்வர்களைப் பற்றிப் பேசினாலும் அவலோகிதேஸ்வரா (Avalokitesvara) தான் ஹினன்யாவைப் பின்பற்றுபவர்களாலும் மஹாயனபௌத்தர்களாலும் கலையார்வலர்களாலும் அதிகம் ஆராதிக்கப்படுகிறவர். புத்தரையும் மிஞ்சிவிடும் முக்கியத்துவம் பெற்றவர் இவரே. இந்தியாவில் அவலோகிதேஸ்வரர் இந்து தெய்வங்களின் இயல்புகளைக்கொண்டவராயிருந்தார். சீனாவிலோ ஆதி பௌத்தப் பெண் தெய்வங்களான தாரா மற்றும் ஹரிதி போன்றவர்களின் குணங்கள் மற்றும் தோற்றங்களிலிருந்து ஒருசில கூறுகளைக் கொண்டிருந்தார். இந்தியா, நேபாளம், சீனா மற்றும் திபெத் போன்ற நாடுகளில் அவலோகிதேஸ்வரருக்கு ஆங்காகே விதவிதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன.
பௌத்தப் புராணக்கதையின்படி, சம்சாரசாகரத்தில் தத்தளிக்கும் மானிடர்களைக் கடைத் தேற்றாது ஓயமாட்டேன் என்று அவலோகிதேஸ்வரா சபதமிட்டார். கடும் முயற்சிகளுக்குப் பின்னும் அவரால் முழுமையாக நிறைவேற்றமுடியாததால், அவர் தலை ஆயிரம் துண்டு களாக உடைந்தது. ஆனால், புத்தர் அவரது தலையை ஒட்டவைத்துவிட்டார். 11 தலைகள் எல்லாத்திசைகளிலும் பார்த்துக்கொண்டிருப்பதால், இவரால், எல்லா இடங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியும். கஷ்டப்படுபவர்களுக்கு உதவவும் முடியும்.
அவலோகிதேஸ்வரா பிரபலமானது கருணை மற்றும் ஞானம் மூலம். ஞானம் போதிசத்வரான அவலோகிதேஸ்வரரை மனித மனதுக்கு நெருக்கம் கொள்ளவைக்கிறது. கருணையின் மூலம் குஆன்யின் மனித உள்ளத்தில் குடிகொள்கிறாள். நமது அர்தநாரீஸ்வர உருவமாகவும் குஆன்யினை சிலர் காண்கிறார்கள், தாயும் தந்தையுமான சிவசக்தி வடிவம் போல! முதல் பார்வையில் பெண்ணைப்போன்ற உருவம் குஆன்யினுக்குக் கொடுக்கப் பட்டிருந்த போதிலும் குஆன்யின் ஆணுமில்லாது பெண்ணுமில்லாத உருவமேயாம். 'அன்னை' யாகத்தான் பெரும்பாலும் வழிபடுகிறார்கள். மணமான தம்பதியர் குழந்தைப்பேறு வேண்டுவதும் குஆன்யினிடம்.
'டாங்க்' முடியாட்சி வரிசையில் வந்த ராணி 'வூ ஜெதியான்' தான் இந்தக் கருணைதெய்வம் உருவாக அதிக பங்காற்றியிருக்கிறார். கிமு 479 ல் பக்தன் பெங்க் ஜுஜியாய் என்பவனைக் காப்பாற்றவே குஆன்யின் அவதரித்ததாக நம்பப்படுவதுமுண்டு. ஆனால், அதற்குமுன்பு மன்னர் வென் செங்க் என்பவரின் உடல் உபாதையைக் குறைக்க வந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
குஆன்யினின் தொடக்கம் இந்து தெய்வமான ஹரிதி என்பதும் ஒரு நம்பிக்கை. சம்யுக்தவத்ஸ¤ என்னும் புராணக்கதையின்படி இந்தப்பெண் தெய்வம் அரசகுடும்பத்தின் குழந்தைகளைத் தின்றுவிடுவாள். மற்ற குழந்தைகளும் தொடர்ந்து மறைந்துபோகவே பெற்றோர்கள் பெரும் கவலையடந்து புத்தரை அணுகி, ஹரிதியை அடக்கவேண்டினர். அமைதியாகவிருந்த புத்தரோ, அடுத்தநாள் காலையில் 'பி¨க்ஷ'யை முடித்துக்கொண்டு ஹரிதியின் இருப்பிடம் சென்றார். அங்கு 500வதும் ஹரிதியின் ஆக அதிக பாசத்தைப் பெற்றவனுமான ப்ரியங்கராவைத் தன் பி¨க்ஷப்பாத்திரத்தில் மறைத்துக்கொண்டார். இதை யறியாத ஹரிதி எல்லா இடங்களிலும் மகனைத்தேடிவிட்டு புத்தரிடம் வந்து வணங்கி வேண்டினாள். அரசகுடும்பம் மற்றும் உலகின் எல்லாக் குழந்தைகளையும் காக்கும் தெய்வமாய் மாறிவிடும்படி உத்தரவிட்டு உறுதிமொழியும் வாங்கிக்கொண்ட பின்னரே புத்தர் அவளின் மகனைக்கொடுத்தார். ஆகவே, அன்றிலிருந்து அவலோகிதேஸ்வரரின் மறு அவதாரமான குஆன்யின் கர்பத்திலிருக்கும் குழந்தையைக்காக்கும் தெய்வமாகவும், பிறந்த குழந்தைகளைக் காக்கும் அன்னையாகவும் வணங்கப்படுகிறாள். ஆண் மகவை நாடும் பெற்றோர்/பெண்கள் அவலோகிதேஸ்வரரை வேண்டினால் நிச்சயம் மகன் பிறப்பான் என்கிறது தாமரை சூத்திரம்.
கிமு 2590 ல் ஓர் அரசன் இருந்தான். முற்பிறவியின் ஊழ்வினையின் பயனாக இவ்வரசனுக்கு ஒரு மகன் பிறக்கவில்லை. தன் மூன்று மகள்களின் வயிற்றுப்பேரன்களில் ஒருவனையே தன் வாரிசாக ஏற்க நினைத்து அவர்களுக்குத் திருமணமும் முடிக்க எண்ணினான். மியாஓ ஷான் என்ற கடைக்குட்டிப்பெண் பருவம் எய்தியவுடனேயே தான் ஒரு சன்யாசினி ஆகவே ஆசைப் படுவதாகவும், அதற்கு அனுமதியளிக்கும்படியும் வேண்டவே, மன்னனும் அப்போதைக்குச் சரியென்று சொல்லிவிட்டான். எப்படியும் மடத்தின் கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாயிருக்கும், மகள் மனம் மாறிவிடுவாள் என்று மிகவும் நம்பினான். பலவிதமான துன்பங்களைத் தானே மகளுக்கு ஏற்படுத்தியும் பார்த்தான். மடத்து பிக்குகளிடம் அவளுக்கு அதிக வேலை கொடுக்கும் படி சொன்னான். மற்ற எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்க அவள் மட்டும் இரவெல்லாம் விழித்து வேலைசெய்தாள். ஒருமுறை அவள் தூக்கிக்கொண்டிருந்த கோவிலுக்குத் தீ மூட்டிக்கூடப் பார்த்தான். தீயைத்தன் கையாலேயே அணைத்துவிட்டாள் சிறுமி. மடத்திலிருந்து அவளை இழுத்து வந்து சிறை வைத்தான். ஆனால், அவனின் எண்ணம் மட்டும் ஈடேறவேயில்லை. மனதை மாற்றிக்கொள்ளவேயில்லை அவள். 'இத்தகைய கீழ்படிதலில்லாத மகள் எதிர்காலத்தலைமுறைக்கே ஒரு தீய உதாரணம். ஆகவே இவளைக் கொன்றுவிடுங்கள்', என்று மன்னன் ஆணையிட்டான்.
இந்தகட்டத்திலிருந்து தான் கதை பல்வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. தலையை வெட்ட வந்தவனின் மனம் இரக்கத்தால் இளகியது. அவனது கையிலிருந்து வெட்டரிவாள் ஆயிரம் துண்டுகளாக உடைந்து சிதறியது என்று கதை சொல்கிறார்கள். நரகவாசலை அவள் அடைந்ததுமே அங்கு எரிந்துகொண்டிருந்த தீ ஜ்வாலைகள் பட்டென்று அணைந்தன. பூக்கள் கொல்லென்று பூத்துக்குலுங்கின. எமன்(Yama) செய்வதறியாது வாய்பிளந்து நின்றான். தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடப்போகிறது என்று பயந்து அவளை உயிர்ப்பித்து பூலோகத்திற்குத் திருப்பியனுப்பினான். அவள் நறுமணம் கமழ்ந்த தாமரையில் ஏறி 'புடௌஷன்' என்னும் தீவையடந்தாள்.
புடௌஷன் என்னும் தீவு சேஜியாங்க் கரையோரத்தில் நிங்க்போவிற்கு அருகில் இருக்கிறது. இதுதான் குஆன்யினுக்கான புனிதத்தலம். இங்கு அன்னை குஆன்யின் ஒன்பது வருடங்கள் இருந்திருக்கிறாள். இத்தீவு இன்றும் ஏராளமான புனிதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை ஈர்த்து வருகிறது. வாணவேடிக்கைகள் இசைக்கருவிகள் போன்றவற்றைக் கொண்டு அன்னையை மகிழ்வித்துக் கோலாகலமாக வழிபடுகிறார்கள். கி.பி 847ல் குஆன்யினுக்கு முதல் கோவில் இத்தீவில் கட்டப்பட்டது. 1702 ஆம் ஆண்டிற்குள் 400 கோவில்களையும், 3000 புத்துபிக்குகளையும் எண்ணிலடங்கா பக்தர்களையும் தீவில் காணமுடிந்தது. ஆனால், 1947லோ 140 மடங்களும் கோவில்களும் தான் இருக்கின்றன.
வேறு ஒரு கதையும் உண்டு. சிறுமி மியாஓ ஷானின் தலைதுண்டிக்கப்படும் நேரத்தில் பிரம்மாண்டமான உருக்கொண்ட புலியன்று சட்டென்று சிறுமியைத் தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த மலைக்குக் கொண்டு சென்றது. பிறகு மியாஓ ஷான் போதிசத்வரைக் கண்டு பின் தவத்தின் மூலம் தானே ஒரு போதிசத்வராகி நாட்டிற்குத்திரும்பினார். தாய் தந்தையரையும் காணச்சென்றார். தந்தை குருடாகியிருந்ததைப் பார்த்ததும், யாரோ அந்நியராகத் தன்னை உருமாற்றம் கொண்டு அவரிடம் சென்று,' உங்களின் ஒரு பிள்ளையின் கண்முழிகளை நீங்கள் விழுங்கிவிட்டல் உங்களுக்குக் கண்பார்வை கிடைக்கும்", என்று சொன்னார். ஆனால், அரசரின் பிள்ளைகளில் ஒருவர்கூட 'தியாகம்' செய்ய முன்வரவில்லை. பிற்காலத்தில் குஆன்யின் என்று போற்றப் படவிருந்த மியாஓ ஷான் தான் செயற்கையாக கண் முழிகளை உண்டாக்கித் தன் தந்தையை அவற்றை விழுங்கச் செய்து அவரின் கண்பார்வையை மீட்டுக்கொடுத்ததாக போகிறது கதை.
'டிராகன்' அரசன் குஆன்யினுக்கு உதவும் எண்ணத்தில் தன் மகனைப் பணிந்தான், பின் மகன் ஒரு மீனின் உருவெடுத்து மீனவனின் வலையில் சிக்கி சந்தையில் விற்கப்பட்டான், அவனின் 'முழி' இதற்குப் பயன்பட்டது என்றும் ஒரு புராணக்கதையுண்டு. மியாஓ ஷான் தன் பெற்றோரை பௌத்தத்தைதழுவப் பணித்தார். இவரே குஆன்யின் என்பது நம்பிக்கை. உலகில் துன்பங்கள் முழுவதும் அகலும் வரை மேலுலகிற்குத் தான் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டிருந்தார். இன்றும்கூட குஆன்யினை வணங்குபவர்கள் புலாலைத் தவிர்த்துச் சைவ உணவை மட்டுமே உட்கொள்வர்.
ஒரு நாள் தந்தை மிகவும் உடல்நலம் குன்றிப்போனார். அப்போது மகள் மியாஓ ஷான் தன் கையிலிருந்து சதையைவெட்டி எடுத்து மருந்து தயாரித்தாள். தந்தை உடல் நலம் பெற்று நன்றியுணர்ச்சியில், 'முழுமையான கரங்கள் மற்றும் கண்களோடு' (சீனமொழியில்) அவளின் சிலையை வடிக்கச் சொன்னான். சிற்பிகள் அதை 'பல தலைகள் மற்றும் கரங்களோடு' என்று தவறாகப்புரிந்துகொண்டு அப்படியே சிலை வடித்தனராம். பெரும்பாலும் குஆன்யினின் சிலை தனி மேடையில் சாக்யமுனியின் சிலைக்குப் பின்னால், வடவாசலை நோக்கியே வைக்கப் பட்டிருக்கும். தாவோ இனத்தவரும்கூட பௌத்தர்களின் முறையையே பின்பற்றுகின்றனர். ஆரம்பகாலங்களில் குஆன்யினின் சிலைகள் ஜேட் என்றறியப்படும் பச்சைப்பவளத்தினால்தான் செய்யப்பட்டன. கப்பலில் பயணிப்பவர்களைப் புயல் மற்றும் சூறாவளிபோன்ற இயற்கை இடர்களிலிருந்து குஆன்யின் காக்கிறாள் என்பது பரவலான நம்பிக்கை. குழந்தைகளைக் காப்பாற்றுபவள், தாய்மையை நல்குபவள், துன்பங்களைக் களைபவள் என்றெல்லாம் போற்றப்படும் குஆன்யின் இன்றும் வீடுகளை அலங்கரித்துவருகிறாள்.
சீனப்புராணங்களில் வேறு எந்தத் தெய்வத்திற்கும் குஆன்யின் அளவிற்கு விதவிதமான அவதார உருவங்களும் பரிமாணங்களும் இல்லை. பொதுவாகவே குஆன்யின், கையில் சிறுகலயத்தைச்சுமக்கும் வெள்ளை உடையணிந்த உயரமான, மெலிந்த, நளினமான பெண்ணுருவமாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஆனால், சில சீன மற்றும் திபெத்திய வெண்கலச் சிலைகளில் முழு நிர்வாணமாகவும் காணப்படுகிறாள். எப்படியிருந்தாலும், அன்பும் கருணையும் ததும்பும் அன்னையின் திருவுருவம் அனைவரது உள்ளத்தையும் ஈர்க்கும். சிலவேளைகளில் யானையின் மீது வீற்றிருப்பாள். மீனின் மீது நின்றுகொண்டு, குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு அல்லது கூடை ஒன்றைத் தூக்கிக்கொண்டு என்று பலவித உருவத்தில் குஆன்யின் வணங்கப் படுகிறாள். துயருருவோரின் துன்பம் களைய ஆறு ,நான்கு, நாற்பது அல்லது ஆயிரம் கரங்களோடு, ஒரு முகம் அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக எட்டு முகம் என்று பல்வேறு வடிவங்கள் வழிபடுபவரின் மனதிற்கேற்ப கொடுக்கப்பட்டு வந்துள்ளன. கிட்டத்தட்ட சிங்கத்தை ஒத்திருக்கும் 'ஹௌ' என்றழைக்கப்படும் சீனப் புராண விலங்கின் மீது சவாரி செய்வதாயும் அன்னை காணப்படுகிறாள் சில இடங்களில். தாமரையிலிருந்து பிறந்தவள் எனும் பொருள்பட 'பத்மபாணி' என்றும் அழைக்கப்படும் குஆன்யின் பல இடங்களில் கையில் குழந்தையோடும் காணப்படுகிறாள். கிருஸ்தவர்களின் 'கன்னி மேரி' யோடும் சிலர் குஆன்யினை ஒப்பிடுகிறார்கள்.இரு புறங்களிலும் இரு துவாரபாலகர்கள் இருப்பர். வலப்புறத்தில் மேல் சட்டையணியாத 'ஷன்ட்சை' எனப்படும் வாலிபன் இருப்பான். இடப்புறம் பவ்யமாகத் தன் ஆடையினுள் தன் இரு கரங்களையும் மறைத்துக்கொண்டிருக்கும் அழகிய யுவதி நின்றிருப்பாள்.
பௌத்தத்தில் 'பெற்றோரிடம் அன்பு செலுத்துதல்' என்ற ஒரு சூத்திரமே உண்டு. புத்தர் சில போதனைகளைக்கூறும்போது தாயின் அன்பையும் கருணையையும் போற்றி அவளுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய் என்கிறார் மனிதனிடம். தந்தையின் விந்திலிருந்து ஆன்மாவையும் தாயின் கர்ப உதிரத்திலிருந்து உடலையும் அவன் பெறுகிறான். அவனது பிறப்பிற்குக் காரணம் அவனது 'கர்மா' வாக இருந்தாலும்கூட அவனது தொடக்கம் அவனது தாயும் தந்தையும் தான். தாய் குழந்தையைச் சுமக்கும் ஒன்பது மாதமும் பலப்பல இன்னல்களை அனுபவிக்கிறாள். பிரசவம் நல்லபடியாக நடக்கவே அவள் கவலைப்படுகிறாள். உணவின் மீதும் மற்றவற்றின் மீதும் அவளுக்குச் சாதாரணமாக இருக்கும் விருப்பு மறைகிறது. இடுப்பு எலும்புகள் பிரசவத்தின் போது நொருங்கிவிடுவதுபோல வலிக்கிறது. அவளின் கர்மாவைக்கரைக்க அவளுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாகவே கருதப்படுகிறது. பிள்ளை பிறந்ததுமே அளவிலா ஆனந்தம் அடைந்து அவன் பேசும்போதும் மகிழ்கிறாள். தான் பட்டினி கிடக்க நேர்ந்தாலும்கூட குழந்தைக்குத் தன் ரத்தத்தையே பாலாக ஊட்டுகிறாள்.
வடசீனாவை விட தென்சீனாவில் குஆன்யின் அதிகப் பிரபலம். சந்திரவருடத்தின் இரண்டாம், ஆறாம், ஒன்பதாம் மாதங்களின் 19வது நாளில் குஆன்யினை சிறப்பாக வழிபடுகிறார்கள். அந்நாட்களில் தான் அவளின் வெவ்வேறு அவதாரங்கள் நிகழ்ந்தன. இன்றும் மணமான மகள் ஓராண்டிற்குள் ஒரு மகனைப்பெற்றிராவிட்டால் அவளுக்குப் பிறந்த வீட்டுச் சீதனமாகச் சில பொருட்களை அனுப்பிவைக்கிறார்கள். சந்திர வருடத்தின் ஐந்தாம் நாளுக்கும் பதிநான்காம் நாளுக்கும் இடையில் ஒரு நல்லநாளில், ஒரு மண்பானை, அரிசியில் செய்த கேக், ஆரசுப்பழங்கள் மற்றும் வெள்ளைப்பூண்டு ஆகியவை அனுப்பப்படும். இவற்றோடு காகிதத்தினால் செய்யப்பட்ட விளக்கு (lantern) ஒன்றும் நிச்சயம் இருக்கும். அதில் குஆன்யினின் திருவுருவம் வரையப்பட்டிருக்கும். அதோடு அதன்மேல் சீனமொழியில் 'குஆன்யின் உனக்கு ஒரு மகனைத் தந்தருள்வாள்' என்ற வாசகமும் எழுதப்பட்டிருக்கும்.
பொதுவாகவே பெண் தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத ஆணாதிக்க சீன சமுதாயத்தில் குஆன்யினுக்குக் கிடைத்த அந்தஸ்து சீனர்களுக்கேகூட ஆச்சரியமளிக்கின்றது. சீனர்களுக்கேற்ற பெண் உருவம் இந்தியாவின் அவலோகிதேஸ்வரருக்குக் கொடுக்கப்பட்டது என்றும் சில சீனர்களால் நம்பப்படுகிறது. புத்தரின் வலக்கண்ணிலிருந்து வெள்ளையான ஒளியுருவில் உதித்தவள் இவள். குஆன்ஷியின் என்பதன் சுருக்கமே குஆன்யின். இதன் பொருள் - உலகின் குரலைக் கேட்பவள்/காண்பவள். இது அவலோகிதேஸ்வரா என்ற வட மொழிச் சொல்லிலிருந்த வந்ததாகவும் கருதப்படுகிறது. அவலோகிதஸ்வரா என்றால் 'கஷ்டப் படும் குரலைக்கேட்பவர்' என்று கொள்ளலாம்.
உயிர்மை - ஜூன் 2005
---ஜெயந்தி சங்கர்