சிங்கப்பூரில் தமிழ்
சீனர்களைப் போல தமிழர்களும் சிங்கப்பூரின் வந்தேறிகள் தாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் திட்டமிட்ட படி நவீன சிங்கப்பூர் நகரம் உருவாக ஆரம்பித்த நேரம். ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் சென்னையிலிருந்து தமிழர்களை பல்வேறு வேலைகளுக்கு என்று கப்பலில் கூட்டி வந்தனர். பெரும்பாலும் சாலை அமைக்கும் பணியைப்போலக் கடினவேலைகளுக்கு என்று சொல்லலாம். இதில் ஆங்கிலேய ஆட்சியில் 'குற்றவாளிகள்' என்று சிறைபடுத்தப் பட்டோரும் அதிகம். தண்டனையின் ஒரு பகுதியாக தீவின் காடுகளை அழித்து அப்புறப்படுத்தி, சாலைகள், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். சிலருக்கு காடுகளைச் செம்மைப்படுத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக மாற்றும் அரும்பணியும் உண்டு. கடும் வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்து குறைந்த கூலியைப் பெற்றனர்.
இது தவிர, தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் வறட்சி காரணமாக பிழைப்பு தேடிய சில தமிழர்களை சிங்கப்பூர் இழுத்தது. வேலையும் வணிகமும் செய்தனர் இவர்கள். காவல்துறையிலும் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்படியெல்லாம் வந்தவர்களின் சந்ததியினர் தான் இன்றைய சிங்கப்பூர் தமிழர்களின் பெரும்பகுதியினர். இதில் இஸ்லாமியர்களும் அடங்குவர்.
இன்றைய வளர்ச்சியடைந்த சிங்கப்பூரின் செழுமைக்கு தமிழர்களின் பங்கும் உண்டு என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். பல்வேறு துறைகளில் வெற்றி கண்ட முன்னோர்கள் பலர் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். காட்டாக, ஏழ்மை நிலையிலிருந்து உழைத்து வணிகத்துறையில் வென்ற திரு. பி. கோவிந்தசாமிப் பிள்ளை மற்றும் பத்திரிக்கைத் துறையில் தடம் பதித்த தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. அப்போதெல்லாம் வட்டி தொழில் முறையற்றிருந்தது. அண்ணாமலைச் செட்டியார் செட்டியார் சங்கத்தினை நிறுவி, வணிகம் செய்ய விரும்புவோருக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் முறையினை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்தவராவார்.
தற்போது தமிழர்களாகிய நமக்குப் பெருமை சேர்ப்பவர் சிங்கப்பூரின் அதிபர் திரு. எஸ். ஆர். நாதன். இன்றும் சில துறைகளில் பல தமிழர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் படி திகழ்கிறார்கள். குறிப்பாக, கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்தினம் அவர்களைச் சொல்லலாம். இளைய சமூகத்தினரைச் சென்றடைந்து, அவர்களோடு உறவாடி தன் துறையில் புத்த புதிய வரவேற்கத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் இன்னொருவர் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன். சட்டத்துறையில் வெற்றி பெறும் தமிழர்களை இங்கு அதிகம் காணலாம்.
சமீப சதாப்தங்களில் சிங்கப்பூரில் உயர் பதவிகளுக்கு தமிழகப் பொறியாளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நிரந்தரவாசம் பெற்றுக் கொண்டு குடும்பத்தினரோடு இங்கு வசிக்கும் இவர்கள் கல்வியிலும் மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். குடிமக்களுக்கு இணையான பற்பல சலுகைகளை நிரந்தரவாசிகளுக்கும் அரசாங்கம் அளித்துள்ளது. கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகளும் தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்து நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறார்கள்.
பொதுவாகப் பார்த்தால் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் சிங்கப்பூரில் அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் திருப்திகரமாகவே இருக்கிறது. எனினும், சில குடும்பங்கள் பொருளாதார மற்றும் குடும்பப் பிரச்சனைகளில் சிக்குவதுண்டு. அத்தகைய குடும்பங்கள் தங்கள் சிரமங்களிலிருந்து மீண்டு வர சிண்டா (Singapore Indian Development Association) போன்ற அமைப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.
பரதம், கர்நாடக இசை ஆகிய நூண்கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்குடன் செயல்படும் தனியார் பள்ளிகளான, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், ந்ருத்யாலயா ஈஸ்தெடிக்ஸ் சொஸைட்டி, டெம்பிள் ஆ·ப் ·பைன் ஆர்ட்ஸ், ஷ்யாமாஸ், ஆலாபனா போன்ற இசைப்பள்ளிகள் செவ்வனே இயங்கி வருகின்றன. மாணவர்களுக்குப் போட்டிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதன் மூலம் கலை வளர உதவுகின்றனர். சிங்கப்பூரின் கல்வி அமைச்சு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் சான்றிதழ்களை அங்கீகரிக்கிறது.
தமிழர்களிடையே பண்பாட்டுணர்வு இருந்தே வருகிறது எனலாம். இங்கு தமிழ்ப் பண்பாடு என்பது தைப்பூசம், தீபாவளி, தீபாவளியை முன்னிட்டு நடக்கும் தீமிதி போன்றவற்றினை அடையாளமாகக் கொண்டுள்ளது. தமிழ் மொழி இங்கு அரசாங்க மொழிகளுள் ஒன்று என்பதோடு, தீபாவளிக்கு இங்கு அரசு விடுமுறை. இன்னொரு நாள் அரசு விடுமுறை கிடைத்திருக்க வேண்டியது என்றும், தமிழர்களில் ஒருசிலர் தைப்பூசைத்தைத் தேர்ந்தெடுத்து, வேறு ஒரு குழு பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று கருத்து வேறுபட்டதால் ஒரே நாள் போதுமென்று அரசாங்கம் தீபாவளியினை மட்டும் அரசு விடுமுறையாக அறிவித்தது என்றும் மூத்த தலைமுறையினர் சொல்வதைக் கேட்கலாம்.
நாட்டின் பெரும்பான்மையிரான சீனர்களின் சிற்சில பழக்கவழக்கங்களை தமிழர்கள் எடுத்துக்கொள்வதையும் நாம் பார்க்கலாம். காட்டாக தீபாவளி என்பது ஆங்காங்கே கலை நிகழ்ச்சியாகவும், விருந்துகளாகவும் ஒரு மாதகாலத்திற்கு நீள்வதைச் சொல்லலாம். சேலைகட்டும் கலாசாரத்தினை வளர்த்தெடுக்கும் 'சேலை அழகு ராணி'ப் போட்டிகள் நடப்பதுண்டு. பொங்கலை ஒட்டி கோலம் ரங்கோலி வரையும் போட்டி போன்றவை ஆங்காங்கே சமூக நிலையங்களிலும், கோயில்களிலும் நடத்தப்படுவதைப் பார்க்கலாம்.
பொதுவாகவே தமிழர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு திரைப்படங்களில் அதிக ஆர்வம் இருக்கிறது. பாடல், கலைநிகழ்ச்சி. உடை, செய்திகள் என்று திரைப்படம் சார்ந்தவற்றில் எப்போதுமே கூடுதல் ஈடுபாடு தான். தமிழகத்தில் வெளியாகும் அன்றே திரைப்படங்கள் சிங்கப்பூரின் திரையரங்குகளில் திரையிடப் படுவதுண்டு. இளையர்கள் தமிழை மறந்துவிடாமல் இருப்பதற்கு திரைப்படங்கள் உதவுகின்றன என்றால் மிகையில்லை. சிங்கப்பூர் இளையர்களுக்கு மற்ற இளையர்களுக்கு இணையாகத் தங்களை எல்லாவிதத்திலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய சவால் இருக்கிறது. குறைந்தபட்சம் உருவ உடை விஷயத்திலாவது அவர்கள் மற்ற இனத்து இளையர்களைப் போல இருக்க நினைக்கிறார்கள். மற்றொரு புறம் திரைப்பட நாயகர்களும் அத்தகைய தாக்கங்களை இளையர்மீது திணிக்கிறார்கள்.
சிங்கப்பூரில் சுமார் 30 இந்துக் கோயில்கள் உண்டு. வழிபாட்டு முறைகள் எல்லாமே எவ்வகையிலும் தமிழகக் கோயில்களுக்கு குறைந்ததில்லை. சிறப்பு நிகழ்ச்சிகளான குடமுழுக்கு போன்ற வைபவங்களுக்கும், கோபுரத் திருப்பணிகளுக்கும் இந்தியாவிலிருந்து சிற்பிகள் மற்றும் ஆகம விதிகள் அறிந்த அறிஞர்கள் வரவழைக்கப் படுவதுண்டு. கோவில்களில் மாணவர்களுக்கு தேவார வகுப்புகள் போன்ற சில நடவடிக்கைகள் நடை பெறுகின்றன. சமூகசேவைகளிலும் கோயிலின் நிர்வாகத்தினர் ஈடுபடுவதைக் காணலாம். ஒவ்வொரு ஆண்டும் திருமுறை மாநாடு நடத்தப்பட்டு பக்தி இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்காகவென்று இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் வரவழைக்கப் படுகிறார்கள்.
'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் பேசும் சீன டாக்ஸி ஓட்டுனர்களைச் சந்திக்கவும் நேர்வதுண்டு. இந்து மதத்தைச் சாராத இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ தமிழர்களும் அவரவர் சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டபடி தானிருக்கின்றன. சமயம் தாண்டி தமிழ் மொழியின் மூலம் இணையவும் செய்கிறார்கள். பொதுவாக தமிழிலக்கிய ஆர்வம் சிங்கப்பூரில் குறைந்துவிடவில்லை எனலாம்.
சுமார் 4-5 வருடங்களாக கடற்கரைக் 'கவிமாலை' என்ற ஒரு கூட்டம் மாதமொருமுறை கூடுகிறது. சடங்குகளற்ற சிறு கூட்டம் இது. ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு எல்லோரும் கவிதை வடிப்பார்கள். உடனுக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் கொடுக்கப்படுகிறது. பிறகு, பரிசு பெற்ற மற்றும் எல்லாக் கவிதைகளுமே படைப்பாளிகளாலேயே படிக்கப் பட்டு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப் படுகின்றன. அனுபவம் வாய்ந்த கவிஞர்கள் வழிநடத்துகிறார்கள். ஊக்கங்களுக்கும் ஆக்கங்களுக்கும் குறைவில்லாத இடம். தனக்கும் படைப்புத் திறன் இருப்பதைக் கண்டறிந்தவர்களும், அத்தோடு நின்றுவிடாமல் மென்மேலும் வளர்த்துக்கொண்டவர்களும் பலர்.
இதே பாணியில் 'கவிச்சோலை' என்றொன்றும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பல பொருளாதாரச் சிக்கல்களுக்கிடையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்று இயங்கி வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்துகிறது. இது தவிர, 'முத்தமிழ் விழா' வையும் நடத்துகிறது. இதில் வருடாவருடம் சின்னஞ்சிறார்களுக்கு மாறுவேடப்போட்டி, சிறார்களுக்கு கதை சொல்லும் போட்டி, பேச்சுப்போட்டி, உயர் நிலை மாணவர்களுக்கு கட்டுரை/கதை எழுதும் போட்டி என்று ஏற்பாடு செய்து வருகிறது. பொதுப்பிரிவில் சிறுகதைப் போட்டியும் நடைபெறும்.
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தமிழ் நூல்கள் ஏராளமாய் இருக்கின்றன. வருடா வருடம் பெரிய தொகை ஒதுக்கப் படுகிறது தமிழ் நூல்களுக்கென்று. சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு ஆகப் பெரிய தொகையில் நூல்கள் வாங்குவது சிங்கப்பூர் தேசிய நூலகம் தான். அவ்வகையில் அரசாங்கம் தமிழ் வளரப் பெரிதும் உதவுகிறது என்றே சொல்லவேண்டும்.
மேலைநாட்டு நூலகங்களில் எங்குமே இல்லாத மிக மிக முக்கியமான ஒன்று சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் தமிழுக்கும் இடமிருப்பது தமிழர்களாகிய நாம் பேருவகைப் படக்கூடிய சிறப்பு. திரைப்பட வட்டுகள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் முதல் புத்தகங்கள் வரை ஒவ்வொரு பகுதியிலும் தமிழும் இருக்கும்.நூலகத்தின் தமிழ்த் துறைக்கென்று தொகை ஒதுக்கப் பட்டு வருகிறது. தமிழில் சமீபத்திய நூல்களைக் கூட இங்கே சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் காணலாம். இலக்கியம் குறித்த கூட்டங்களை நூலகங்கள் ஏற்பாடு செய்யவும், வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்கிறது.
நுலகக் கிளைகளில் தமிழ் நூல்கள் இரவல் பெறுவது எண்ணிக்கையில் குறையும் போது தமிழுக்கு என்று ஒதுக்கப்படும் தொகை குறைக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதுவே தமிழ் ஆர்வலர்களின் மிகபெரிய கவலை. நூல்களை இரவல் பெறவென்று ஒரு பெருங்கூட்டம் எப்போதுமே உண்டு. ஆனால், புதிய வாசகர்கள் தான் உருவாவதில்லை. பொது மக்களிடையே தமிழில் நூலகத்தில் வாசித்தலை ஊக்குவிக்கும் பொருட்டு 'கதையும் காட்சியும்' என்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் மாதம் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சி இலக்கியப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் அச்சிலிருந்து திரைக்குப் போன படைப்புக்களையும் படைப்பாளியையும் பற்றி அலசும். வட்டார நூலகக்கிளைகளில் இது நடக்கும். திரைப்படம் சில நிமிடங்களுக்கு மட்டுமே திரையிடப்பட்டு ஆய்வுரையும், கலந்துரையாடலும் முதன்மையாக நடக்கும்.
சமீபத்தில் துவங்கப் பட்டிருக்கும் சிங்கப்பூரின் தமிழ் 'வாசகர் வட்டம்' இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கிறது. ஒரு நூலைப் படித்துவிட்டு ஆய்வுக்கட்டுரை வாசிப்பார்கள் சிலர். பின்னர், நூலைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடல் நடை பெறும். இந்தக் கூட்டத்தின் நோக்கம் வாசிப்பு அனுபவத்தினைப் பகிர்ந்து வாசித்தலில் வளர்ச்சியடைதல்.
இத்தைகைய அனைந்து முயற்சிகள் மிகவும் பயனுள்ளவை. இருப்பினும், ஏற்கனவே பங்கேற்போரை மட்டுமே மீண்டும் மீண்டும் கூட்டங்களில் காணமுடிவது தான் ஏற்பாட்டாளர்களின் முயற்சி முழுப்பயனைக் கொடுக்கவில்லையோ என்று யோசிக்கச் செய்துவிடுகிறது. புதிய வாசகர்களோ ஆய்வாளர்களோ உருவானால் முயற்சிகளினால் ஏற்படக்கூடிய பலன் மிகவும் உவகையளிக்கும்.
தேசிய கலைகள் மன்றத்துடன் தேசிய நூலகமும் இணைந்து நடத்தும் எழுத்தாளர் வாரம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதில் உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்குகள் மற்றும் ஆய்வரங்குகளை முன்னின்று நடத்துவர். மற்ற மொழிகளைப்போலவே தமிழிலும் கவிதைக்கும் சிறுகதைக்கும் 'தங்க முனைப்பேனா விருது' வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் நடத்தப்படும் இப்போட்டிக்குப் பரிசுத்தொகை பெரியது. சிறந்த சிறுகதை, கவிதைகளுக்கு முதல் பரிசாக S$ 10,000 வெள்ளி வழங்கப் படுகிறது. ஆண்டுதோறும் தமிழில் வெளியிடப்படும் புத்தகங்களில் மேலான ஆக்கத்திற்கு 'சிங்கப்பூர் இலக்கியப் பரிசு' என்று S$10,000 பரிசளிக்கிறது. இது தவிர, புதிதாக நூல்களை வெளியிடவும் உதவித்தொகை வழங்குகிறது.
தமிழ் நூல் வெளியீட்டு விழாக்கள், நூலாய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கின்றன. பெரும்பாலும் இந்நிகழ்வுகளுக்கு அனுமதி இலவசம். இருந்தாலும், வருகையாளர்களின் எண்ணிக்கை மட்டும் பூரிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்பதுதான் கொஞ்சம் வருந்தக்கூடியது. எல்லாமே மீண்டும் மீண்டும் பார்த்த முகங்கள். அதையும் தாண்டி நிகழ்வுகள் நடந்தபடிதான் இருக்கின்றன.
வாசிக்கும் கலாசாரத்தினை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் 'வாசிப்போம் சிங்கப்பூர்' என்ற இயக்கம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடத்தப் படுகிறது. இதற்காக மற்ற மொழிகளைப்போலவே தமிழிலும் 3 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல், நூலாய்வுரைகள் என்று விதவிதமான நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. எல்லா வயதினரையும் கவரும் நல்ல படைப்புகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', சிவசங்கரியின் '47 நாட்கள்' மற்றும் உள்ளூர் படைப்பாளியான அமரர் நா. கோவிந்தசாமியின் 'தேவு' ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன.
இவ்வாண்டின் (2006) 'வாசிப்போம் சிங்கப்பூர்' நிகழ்விற்கு அசோகமித்ரனின் 'ஒற்றன்', திலகவதியின் 'கல் மரம்' மற்றும் புதுமை தாசனின் 'உதிரிகள்' ஆகிய மூன்று நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இத்தேர்வு 'தங்களையும் யதார்த்த உண்மை நிலையையும் புரிந்து கொள்ளத் தூண்டும் வாழ்வனுபவங்கள்' என்ற அடிப்படையில் நடந்துள்ளது. வாசிப்பு அனுபவத்தின் வழியாகவும் அனுபவப் பகிர்தலின் மூலமாகவும் வாசித்தலில் அதிக ஈடுபாட்டினை வளர்ப்பதே குறிக்கோள். தமிழில் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்துவதும் தான்.
'தமிழிலக்கியத்தைப் பற்றி பேசி, கலந்துரையாடி அதன் வழி தமிழின்பத்தைத் துய்த்தல்' எனும் ஒரே நோக்கத்தோடு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதமொரு முறை மிகச் சிறப்பாக இயங்கி வருவது இலக்கிய வட்டம். நிரந்தரமாய் பங்கெடுப்போர் பத்துபேரும், முடிந்தபோது வருவோர் பத்துபேரும் மட்டுமே கொண்ட இக்கூட்டத்தில் உள்ளூர் வெளியூர் தமிழறிஞர்கள் தமிழ் இலக்கியங்களைக் குறித்து உரையாற்றுவர். சமயம் சார்ந்த இலக்கிய வகையென்றாலும், அதனைத் தமிழிலக்கியமாக மட்டுமே ரசித்து வருகின்றனர். கலந்துரையாடலும் உண்டு. இங்கு வரும் இலக்கிய ஆர்வலர் ஏமார்ந்துபோனதாய் சரித்திரமே இல்லை. இவை தவிர மாதவி மன்றம், சிங்கை முரசு என பல்வேறு தமிழ் ஆர்வல அமைப்புகள் தமிழ் இலக்கியம் குறித்துப் பேசுகின்றன.
தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் வானொலி. சிங்கப்பூரிலில் தமிழின் அடையாளமாக விளங்கும் சில விஷயங்களாகும். ஒரே தமிழ் வானொலியில் படைப்பாளர்கள் நல்ல தமிழைக் கையாள்கிறார்கள்.தொலைக் காட்சியில் தமிழின் பங்கு கிட்டத் தட்ட சிங்கப்பூரின் தமிழுக்கு இணையாகவே உள்ளது. செய்தி வாசிப்பில் மட்டும் தமிழ் சிறப்பாயுள்ளது எனலாம்.
தமிழர்கள் மட்டுமின்றி, பாலிவுட்டில் பெரும் ஆர்வம் கொண்ட வட இந்தியர்களும் மலாய் சமூகத்தினரும் தொடர்ந்து வாங்கி வரும் பாலிவுட் கோலிவுட் செய்திகள், கவர்ச்சிப்புகைப் படங்கள், கிசுகிசுக்கள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றை உள்ளக்கிய 'இந்தியன் மூவி நியூஸ்' என்னும் ஒரே ஒரு மாத இதழ் (இரு மொழி / bilingual) மட்டும் பல வருடங்களாக தொடர்ந்து வெற்றியோடு நடந்து வருகிறது. சிங்கைச் சுடர் என்னும் மாத இதழ் (இரு மொழி/bilingual) சமாளித்துக் கொண்டிருக்கிறது.
எப்படி ஒரு ஆப்பிளை ஆரஞ்சோடு ஒப்பிட முடியாதோ அதுபோல தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியோடு சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை ஒப்பிடவே முடியாது. சிறிய நாட்டின் சிறுபான்மையினர் தமிழர். தமிழர்களிடையே நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வமோ ஈடுபாடோ கொண்டவர்கள் தான் குறைவுதான். இலக்கிய உலகில் ஒருவரை ஒருவர் நிராகரித்தல் என்னும் தமிழகத்தின் தமிழிலக்கியக் கலாசாரம் இங்கும் உண்டு. சிங்கப்பூர் எழுத்தாளர்களிலேயே கூட தமிழிலக்கியத்தின் நவீன போக்குகள் குறித்தும், உலக இலக்கிய போக்குகள் குறித்தும் விரிவான வாசிப்பு கொண்டவர்கள் குறைவு. முழுநேர எழுத்தாளர்கள் என்ற வர்க்கம் இங்கில்லை எனலாம். நாட்டின் எழுத்தாளர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதார வசதிகளுக்கென்று கடுமையாக உழைக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.
பத்திரிகைகள் ஆரம்பித்தவர்கள் கையைச் சுட்டுக்கொண்டு போய்விட்டார்கள். திரு. கோ.சாரங்கபாணி அவர்களால் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முரசு இன்றும் நிலைத்து நின்று வருகிறது. வார இறுதியில் விற்கப்படும் தமிழ் நாளிதழின் எண்ணிக்கைகூட வாரநாளில் கிடையாதாம். இதனை வாங்குவோர் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளிகள்.
ஞாயிறுகளில் பதினாறு பக்கங்களும் மற்ற நாட்களில் சுமார் பத்து பக்கங்களும் கொண்ட நாளிதழில் கொஞ்சம் உள்ளூர் செய்திகள் தவிர மற்ற எல்லாமே முதல் நாள் சூரிய தொலைக்காட்சியில் வந்த தலைப்புச் செய்திகள் தான் இடம் பெறும். பெரும்பாலும் சிங்கப்பூரில் தமிழ்ப் படைப்பாளிகள் இந்த ஒரே நாளிதழான தமிழ் முரசை நம்பியே எழுதத் துவங்குகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் ஒதுக்க முடியாத நிலையில், வேறு களமில்லாததால் படைப்பாளிகளின் எழுத்து வேகம் குறைகிறது. விடாமுயற்சியுடன் எழுதி மலேசிய மற்றும் தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதுபவர்கள் மிகச் சிலரே. மிகச் சிலர் சிறுபத்திரிக்கைகள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள் என்று வேறு மாற்று ஊடகங்களுக்குச் செல்கிறார்கள்.
மற்ற இனத்தாரோடு குடிமக்களுக்கு இருக்கும் நட்புறவு தமிழ் எழுத்தாளர்களுக்கு மற்ற இன எழுத்தாளர்களுடன் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. அதாவது எந்தவிதக் கருத்துப்பரிமாற்றமோ மொழி பெயர்க்கும் முயற்சிகளோ பெரும்பாலும் இருப்பதில்லை. தவிர சிங்கப்பூரின் தமிழிலக்கியம் குறித்து கவனத்தோடும் பொறுப்போடும், விருப்பு வெறுப்புகளற்று ஆய்வு செய்தவரில்லை என்பது ஒரு குறையே.
சிங்கப்பூரில் தமிழிலக்கியம் பெரும்பாலும் அமைப்புகள் சார்ந்து குழுக்களாகவே இயங்கி வருகிறது. குழுக்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும் வெளிப்படையான உரசல்களோ ஆரோக்கியமான இலக்கிய சர்ச்சைகளோ பெரும்பாலும் இருப்பதில்லை. இலைமறைக்காயாய் சில சில்லறைப் பூசல்கள் உண்டு. தொடர்ந்து எழுதாமல் 'ஒருகாலத்தில் எழுதியதால்' எழுத்தாளர்கள் என்றறியப் படுபவர்களும் இங்கு உண்டு. பெரும்பான்மையான படைப்பாளிகள் சிறுபத்திரிக்கை, இணையம் என்று தங்களை விரிவு படுத்திக் கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள்.
இங்கு மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக மட்டுமே பார்க்கிறார்கள். பல்லினக்கலாசார சமூகத்தில் ஆங்கிலமே அதிகம் பாவிக்கப் படுகிறது. வீட்டிலும் ஆங்கிலம் பேசும் தமிழ்க்குடும்பங்கள் தான் அதிகம். அத்தகைய மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் மிகவும் கடினம். வீட்டில் தமிழ் பேசும் மாணவர்கள் மிகக்குறைவு. இவர்களுக்கும் பாடத்திற்குத் தேவையான மொழிவளம் அமையப்பெறுவதில்லை.
பேச்சுத் தமிழை வளர்க்க கல்வி அமைச்சு பள்ளிகளில் தமிழ்மொழியில் வாய்மொழிப் பாடத்தின் (oral) மதிப்பெண்களை சமீபத்தில் கூட்டியுள்ளது. கொடுக்கப்படும் தலைப்பில் பேசவேண்டும் / கலந்துரையாட வேண்டும் எனும் போது நேரத்தில் எழுத்துத் தமிழைப் பயன் படுத்தவேண்டியதில்லை, பேச்சுத் தமிழே போதுமானது என்று தளர்த்தியுள்ளது. வருடந்தோறும் தமிழ் மொழிபண்பாட்டுக் கழகம் 'சொற்களம்' என்று ஒரு போட்டியினை மாணவர்களுக்கென்று அதிக உழைப்புடன் நடத்துகிறது. பள்ளியைப் பிரதினிதித்து உயர்நிலை மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒட்டியோ வெட்டியோ பேசுவர். சுமார் ஐம்பது பள்ளிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி பல சுற்றுகள் கடந்து வரும். இறுதிச் சுற்றுகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப் படும். வருடத்தின் ஆரம்பத்திலேயே துவங்கி இறுதியில் முடிகிறது. திறமையான மாணவ பேச்சாளர்கள் உருவாகவோ இனம் காணப் படவோ செய்கிறார்கள். இருப்பினும், விவாதமேடையைத் தாண்டி மாணவர்கள் தங்களின் தமிழறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பதோ ஆசைப்படுவதோ இல்லை என்பதே உண்மை.
பொதுவாக தங்கள் கருத்தே சிறந்தது, தங்களின் அறிதலே உயர்ந்தது என்று நினைக்கும் / நம்பும் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இங்கிருக்கிறார்கள். பெரும்பாலோர் குறுகிய வட்டத்தைத் தாண்டி சிந்திப்பதில்லை. இலக்கிய உலகின் மாற்றங்களைக் கண்டறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள நினைக்கும் போக்கு குறைவாகக் காணப்படுவது கொஞ்சம் வருந்தத்தக்கது தான். சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகள் மற்றும் படைபாளிகள் இதுவரை உலகத் தமிழிலக்கியத்தின் கவனத்தைப் பெறத் தவறியதற்கு இதுவும் முக்கியக் காரணமாகவே படுகிறது. நோக்கங்கள் ஏதுமின்றி வாசிப்பதும், வாசித்தலில் உள்ள பரவசத்தை உணரவும் பெறவும் நினைக்கும் மாணவர்களே பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் இளைய தலை முறையினரைத் தமிழ் இலக்கியத்தின் பக்கம் இழுப்பது. இலக்கியத்தின் வழி இளையர்களது உலத்தினுள் இவர்கள் நுழைவது என்பது சாத்தியமாகும் போது அதுவும் சாத்தியமாகலாம்.
(முற்றும்)
-----ஜெயந்தி சங்கர்
நன்றி : சி·பி டாட் காம்
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.

3 Comments:
Nice and meaningfull and informative entry. Keep it up. You blog entry is mentioned in the OSAI project, tamil's first Audio Blog at http://www.osai.wordpress.com . Congrats
Nice and meaningfull and informative entry. Keep it up. You blog entry is mentioned in OSAI PROJECT, the first audio blogging project in native Tamil . Congrats
நல்ல பதிவு ஜெயந்தி.
///பொதுவாக தங்கள் கருத்தே சிறந்தது, தங்களின் அறிதலே உயர்ந்தது என்று நினைக்கும் / நம்பும் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இங்கிருக்கிறார்கள்.///
எங்கும் இருக்கிறார்கள்:))
///திறமையான மாணவ பேச்சாளர்கள் உருவாகவோ இனம் காணப் படவோ செய்கிறார்கள். இருப்பினும், விவாதமேடையைத் தாண்டி மாணவர்கள் தங்களின் தமிழறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பதோ ஆசைப்படுவதோ இல்லை என்பதே உண்மை///
இது சிங்கப்பூரில் மட்டுமில்லை. தமிழகத்திலும் இலக்கியம் அறியும் ஆர்வத்தை, இலக்கியத்தை மானுடம் சார்ந்த பார்வையோடு அணுகும் ஆர்வத்தை, அதிலிருந்து புதிய சிந்தனைகள் துளிர்விடும் பக்குவத்தை வளர்க்கும்படியான சூழல் இல்லை.
என் மகன்/மகள் மிக அருமையாகப் பேசி முதல் பரிசு வாங்கிவிட்டான் என்கிற பெருமிதத்தோடு மட்டும் பார்ப்பவர்களே அதிகம். அவையும் எழுதிக்கொடுக்கப்பட்டு மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கூத்தாகவும் பெரும்பாலும் இருப்பது இளம் தலைமுறைக்குச் சுயசிந்தனை வளர்ப்பதில் நமக்குள்ள பங்கை வெளிச்சமிட்டுக் காட்டும். கல்லூரி வந்தபிறகும்கூட போட்டி தொடங்கும் முன் வெளியில் காகிதங்களை உருப்போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வைக்கப்பட்டவர்களுக்கு பிற்காலத்தில் சமூகம்சார்ந்த சுயமான புரிதல்கள், தேடல்கள் ஏற்படுவது குறைவு:((
Post a Comment
<< Home